Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...

ஆண்களைப் புரிந்துகொள்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

ஆனாலும் இன்னொரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏன்?

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...

ஆனாலும் இன்னொரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏன்?

Published:Updated:
ஆண்களைப் புரிந்துகொள்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்!
பார்ப்பதற்கு ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஆகத் தெரிவார்கள். ‘ஆஹா, எவ்வளவு அந்நியோன்யமான தம்பதி’ என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு இருப் பார்கள். ஏதோவொரு கட்டத்தில், அந்த ஆண் இன்னொரு பெண்ணிடம் காதல்வயப் பட்டிருக்கிறார் என்பது தெரியும் போது ‘அந்த மனிதரா இப்படி...’ என்று ஆச்சர்யப்பட்டுப் போவோம்.

மனைவியுடன் நிறைவான திருமண வாழ்க்கை யில் இருந்தாலும் சில ஆண்கள் ஏன் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்கள்... விளக்கம் தருகிறார் உளவியல் ஆலோசகர் சீனிவாசன் செயராமன்.

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...

‘`மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போதே இன்னொரு பெண்மீது கணவருக்கு ஈர்ப்பு வருகிறது என்றால், அதற்கு முதல் மற்றும் முக்கியமான காரணம் தாம்பத்திய உறவில் ஆணுக்குத் திருப்தி கிடைக்காததுதான். ஏன் திருப்தி கிடைப்பதில்லை என்று பார்த்தால், போர்ன் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அவற்றில் நடந்ததெல்லாம் தனக்கும் நிகழ வேண்டுமென்று சில ஆண்கள் மனைவியிடம் எதிர்பார்ப்பார்கள். மனைவி அதற்கு மறுக்கும்போது வெளியில் தேட ஆரம்பிப்பார்கள்.

சில குடும்பங்களில் ‘இவளுக்கு இதெல்லாம் புரியாது’ என்று மனைவியிடம் எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டார் கணவர். ‘வீட்டைப் பார்த்துக்கொள்வது மட்டுமே தன் கடமை’ என்று இருப்பார் மனைவி. ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தை குறையும். இடைவெளி அதிக மாகும். இது திருமணம் தாண்டிய உறவிலும் முடியலாம்.

திருமணத்துக்கு முன்னால் தனக்கு வரப் போகிற மனைவி இந்த நிறத்தில், இந்த உடல்வாகில் இருக்க வேண்டும் என்று ஒவ்வோர் ஆணுக்கும் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவு நிறைவேறாதபோது, அவனுடைய கனவில் கொஞ்சமே கொஞ்சம் சரியாக வரும் பெண்ணைப் பார்த்தாலும் சலனமடைவான். பெரும்பாலான ஆண்களுக்குத் தன்னை மோட்டிவேட் செய்கிற பெண்களைப் பிடிக் கும். அப்படியொரு பெண்ணை வெளியில் சந்திக்கும்போது அவர்மீது ஈர்ப்பு வரலாம். அது ஒருதலைக் காதலாகவும் மாறலாம். இதேபோல, வேலையில் தனக்கு வழிகாட்டுகிற பெண்ணையும் சில ஆண்கள் நேசிக்கலாம். இவை பெரும்பாலும் குடும்பத்தைச் சிதைக்கிற அளவுக்குப் போகாது.

சீனிவாசன் செயராமன், நாகசைலா
சீனிவாசன் செயராமன், நாகசைலா

நாமெல்லாருமே ‘சிந்து பைரவி’ படம் பார்த் திருப்போம். அதில் சிவகுமார் இனிமையான இல்லற வாழ்க்கையைத்தான் சுலக்‌ஷனாவுடன் அனுபவித்துக்கொண்டிருப்பார். ஆனால், தன்னுடைய துறை சார்ந்த அறிவுடன் இருக் கிற சுஹாசினியுடன் பழகியதும் அவர்மீது காதல் கொள்வார். இந்த வகை ஈர்ப்பை ‘தவறு’ என்று கைவிடாமல், தன்னை ஈர்த்த பெண்ணை அடைந்தே ஆக வேண்டும் என்கிற வெறி உணர்வுடன் கணவன் நடந்துகொள்ள ஆரம்பித்தால், அந்தக் குடும்பமே அழிந்து விடும். ஆண்களின் இப்படிப்பட்ட சபலத்தால் சீரழிந்த குடும்பங்கள் நம் சமூகத்தில் எத்தனை எத்தனையோ...

சில மனைவிகள் தன்னுடைய அழகையும் ஆளுமையையும் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பார்கள். பிரகாசமான கண்கள் இருக்கும்; மை தீட்ட மாட்டார்கள். நீளமான விரல்கள் இருக்கும்; மெனிக்யூர் செய்து நெயில் பாலிஷ் போடுவது பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருப்பார்கள். இப்படிப் பட்ட பெண்களின் கணவர்களில் சிலர், தன்னை அழகாக, ஆளுமையாக வெளிப் படுத்த தெரிந்த பிற பெண்ணைச் சந்திக்கும் போது அந்தப் பெண்ணை ரசிப்பார்கள். தன் மனைவி இப்படி இல்லையே என்று ஏங்குவார்கள். இதோடு நின்றுவிட்டால் பிரச்னையில்லை. இதைத் தாண்டி சம்பந்தப் பட்ட பெண்ணிடமே அவருடைய அழகைப் பாராட்ட ஆரம்பிப்பார்கள் சில ஆண்கள். மன முதிர்ச்சியான பெண்கள் இதை காம்ப்ளிமென்ட்டாக எடுத்துக்கொண்டு கடந்து விடுவார்கள். இப்படிப்பட்ட பாராட்டுகள் தன் கணவனிடம் கிடைக்காம லும், இதை எளிதாக எடுத்துக் கொள்ளத் தெரியாமலும் இருக்கிற பெண்கள் சிக்கிக் கொள்வார்கள். விளைவு இரண்டு குடும்பங்களிலுமே பிரச்னைகள் வெடிக்க ஆரம் பிக்கும்.

இதுவரை நான் சொன்ன தெல்லாம், ஆண் அவனை மீறிச் செய்கிற விஷயங்கள் தாம். மனைவி தாண்டி இன்னொரு பெண் மீது ஈர்ப்பு வந்தாலும் குடும்பம், குழந்தைகள், என் மனைவி எனக்காக எவ்வளவு செய் திருக்கிறாள் என்பது போன்ற எண்ணங்கள், அவனை பெரும்பாலும் தவறு செய்ய விடாது. ஆனால், ஆணுக்கு ‘பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டர்’ இருந்தால், அவன் தடம் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் த்ரில்லுக்காக புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பார்கள், பெண்கள் விஷயத்தை யும் சேர்த்து. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், இவர்களுக்கு அன்பான குடும்பம் இருக்கும். ஆனால், ரிலேஷன்ஷிப் ஆப்பில் வேறொரு பெண்ணுக்கு ரூட் போட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களால் உறவைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. இந்தப் பிரச்னை இருக்கிற சில ஆண்களுக்கு தனக்கு இப்படியொரு பண்பு இருப்பது தெரியும். அப்படிப்பட்டவர்கள், ஒருகட்டத்தில் மனைவிக்குத் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள்.

இதுவே நோயாக இருந்தால், அந்த ஆண்கள் இன்னொரு பெண், வேறொரு பெண் என்று முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அதே நேரம் மனைவியிடமும் ‘மானே தேனே’ என்று காதலைப் பொழிந்துகொண்டிருப் பார்கள். வெளிநாடுகளில் பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டரை காரணமாகக் குறிப்பிட்டு விவாகரத்துகூட செய்வார்கள்’’ என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் நாகசைலா பேசுகையில், “கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதென்பது ஒரு சமூக பிரச்னை. சட்டப்படி குற்றம் கிடையாது. ‘என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அவரை மீட்டுக்கொடுங்கள்’ என்று காவல்துறையில் புகார் அளிக்க முடியாது. ஒருவேளை அந்த இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற் காக மனைவியைக் கொடுமைப்படுத்தினான் என்றால், அந்தக் கணவன்மீது மனைவி காவல்துறையில் புகார் அளிக்கலாம். தவிர, வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதால் குடும்பம் நடத்த மனைவிக்குப் பணம் தராமலிருப்பது, அடிப்பது, மனைவிக்கு தாம்பத்திய உறவை மறுப்பது போன்ற கொடுமைகளைச் செய்துவந்தால், இவற்றை காரணம் காட்டி அந்தக் கணவனிடமிருந்து மனைவி விவாகரத்து கேட்கலாம்’’ என்கிறார்.

ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை; ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்னென்ன... ஏன்? அடுத்த இதழில்...

ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம்!

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...

``ஒரு பெண்ணுடன் நிறைவான தாம்பத்தியத்தில் இருக்கும்போதும் என்பதில், எது நிறைவு என்ற கேள்வி வருகிறது. அது மனரீதியானதா அல்லது உடல்ரீதியானதா... அல்லது இந்த இரண்டையும் தாண்டி இன்னும் வேறு ஏதேனும் தேவைப்படுகிறதா என்பதையும் யோசிக்க வேண்டும். நிறைவான தாம்பத்தியத் துக்கு ஒருவருக்கு சில விஷயங்கள் தேவைப் படலாம். இன்னொருவருக்கு அந்தத் தேவைகள் மாறுபடலாம். நிறைவான தாம்பத்தியம் என்பது அவரவர் மனதைப் பொறுத்ததும்கூட...

மனைவியுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் இருக்கும்போதே சில ஆண் களுக்கு இன்னொரு பெண் மீது ஈடுபாடு வருவதென்பது, ஏதோ சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டதல்ல. இந்த ஈர்ப்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்கிறது. அதனால்தான், வள்ளுவர் ‘பிறனில் விழையாமை’யை ஆணுக்கு ஓர் அதிகாரமாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஒரு காலம் வரை நம் சமூகம் 100 சதவிகிதம் ஆணாதிக்க சமுதாயமாகவே இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. சிலருக்கு அது 75 சதவிகிதம் இருக்கலாம். சிலருக்கு 10 சத விகிதம் இருக்கலாம். ஆனால், எல்லோருக் குமே இருக்கிறது. அதனால்தான் நம் சமூகத்தில் சில ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், திருமணம் தாண்டிய உறவுக்கு `வைப்பாட்டி' என்று பெயரிட்டு வாழ்ந்ததும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது. அந்த மனப்பான்மையின் மிச்சம்தான் சில ஆண்களை இப்போதும் மனைவியைத்தாண்டி வெளியிலும் உறவைத் தேடச் செய்கிறது.

அடிப்படையில் ஆண் மனது கலப்படத் துடன்தான் இருக்கிறது. நிறைவான ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் வாய்ப்பும் தூண்டுதலும் கிடைத்தால், சில ஆண்கள் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்படவே செய்வார்கள். இதெல்லாம் தவறு கிடையாது என்ற ஆணாதிக்க மனப்பான்மைதான் இதற்கு காரணம்.’’