Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!

ஆண்களைப் புரிந்துகொள்வோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்

நான் இவளைவிட உயர்ந்தவன். இவளை அடிக்க எனக்கு அதிகாரமிருக்கிறது. இவள் எனக்கு உரிமைப்பட்ட பொருள்(?!) இவளை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!

நான் இவளைவிட உயர்ந்தவன். இவளை அடிக்க எனக்கு அதிகாரமிருக்கிறது. இவள் எனக்கு உரிமைப்பட்ட பொருள்(?!) இவளை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’

Published:Updated:
ஆண்களைப் புரிந்துகொள்வோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்
பெண் தன்னை கை ஓங்குவதை வாழ்நாள் அவமானமாக நினைக்கிற ஆண், தன் மனைவி என்ற ஒரே உரிமையை வைத்துக்கொண்டு பெண்ணை அடிக்கிறான். இதுதொடர்பாக, ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே’ (2015-16) வெளியிட்ட டேட்டா ஒன்றில், ‘கணவரின் அனுமதியில்லாமல் வெளியே சென்றது’, ‘வீட்டையும் குழந்தைகளையும் சரியாகப் பார்த்துக்கொள்ளாதது’, ‘எதிர்த்துப் பேசியது’, ‘செக்ஸுக்கு மறுத்தது’, ‘சரியாகச் சமைக்காதது’, ‘கணவன் வீட்டாருக்கு மரியாதை தராதது’ ஆகிய காரணங்களுக்காகக் கணவன் தங்களை அடித்தது நியாயம்தான் என்று 52 சத விகிதப் பெண்கள் பேசியிருந்தார்கள். நம் சமூகம் பெண்களை எந்தளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. அதே நேரம், இந்த அநாகரிகத்துக்கு எதிராகச் சில சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, சில மாதங்களுக்கு முன்பு, அம்மாவை கை ஓங்கிய ஐ.பி.எஸ் அப்பாவை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் உலவவிட்டான் மகன். விளைவு அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது. இது நடந்தது மத்தியப்பிரதேசத்தில்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘சட்டத்தைப் பொறுத்தவரை மனைவியை அடிப்பது தண்டனைக்குரிய குற்றம். அவளைக் காயப்படுத்தினால் 323-ன் கீழ் ஓர் ஆண்டும், ஆயுதங்களால் அடித்தால் 324-ன் கீழ் 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக் கப்படும். மரணம் ஏற் படுத்தும் அளவுக்கு கொடுங் காயங்கள் ஏற்படுத்தினால் 326-ன் கீழ் 10 வருட சிறைத்தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும். தவிர, கணவரோ, அவரின் குடும்பத்தினரோ சம்பந்தப் பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்குக் கொடுமைப்படுத்தினாலோ, தற்கொலைக்குத் தூண்டுகிற அளவுக்கு மன உளைச்சல் தந்தாலோ, அவர்களுக்கு 498ஏ-ன்கீழ் மூன்று வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’’

- சட்டத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வழக்கறிஞர் சுமதி, ‘`அடிக்கிற கணவன் மீது மனைவி புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குச் சென்றால், ‘இது எல்லார் வீட்டிலும்தானே நடக்குது’ என்ற கமென்ட்டை தான் முதலில் சந்திக்க வேண்டி வரும். ‘புகார் கொடுத்தே ஆக வேண்டும்’ என்று மனைவி வற்புறுத்தினால், புகார் ஏற்பு ரசீதில் குடும்பத்தகராறு என்று பொதுவாக எழுதுவார்களே ஒழிய, ‘கணவன் பெல்ட்டால் அடித்தான்’, ‘செல்போனை எடுத்து முகத்தின் மேல் வீசினான்’ என்று நடந்ததை மிகச் சரியாக எழுத மாட்டார்கள். கணவன் கை ஓங்கியதற்காக விவாகரத்து கேட்ட ‘தப்பட்’ படத்தின் கதாநாயகியே வந்தாலும் நம்ம ஊர் காவல்நிலையங்களில் இதுதான் நிலைமை’’ என்று ஆதங்கப்படுகிறார்.

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!

உளவியல் ஆலோசகரும் பேராசிரியருமான கருணாநிதி ‘கை ஓங்குதல்’ பற்றிப் பேசுகையில், ‘`ஓர் ஆண் தன் மனைவியை அடிக்க காரணம், ‘நான் இவளைவிட உயர்ந்தவன். இவளை அடிக்க எனக்கு அதிகாரமிருக்கிறது. இவள் எனக்கு உரிமைப்பட்ட பொருள்(?!) இவளை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்ற ஆதிக்க உணர்வுதான். குழந்தைப் பருவத்திலிருந்தே இது ஆணுக்குக் கற்பிக்கப்படுகிறது. ‘சாப்பிட்ட தட்டை கையோட கழுவி வை’ என்று பெண் குழந்தைக்கு போதிக்கிற பெற்றோர்கள், ஆண் குழந்தைக்கு `தட்டை அப்படியே வெச்சிட்டு எழுந்திரு’ என்று, அவர்கள் அறியாமலே ஆணாதிக்கத்தைச் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள். நம் வீடுகளுக்குள் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் சரிசமமாக நடத்தியிருந்தால், இப்படியோர் அநாகரிகம் நம் சமூகத்தில் இருந்திருக்காது.

குழந்தைகளைச் சரிசமமாக வளர்ப்பது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வு. கோபத்தைக் குறைப்பதற்கு என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் ‘மனைவியை கை ஓங்குகிற இயல்பை’ அதிகமாகப் பார்க்கிறேன். ‘மனைவியை அடிப்பீர்களா...’ என்றால், ‘அவ தப்பு பண்ணா அடிப்பேன்’ என்பார்கள். ‘நீங்க தப்பு பண்ணா உங்க மனைவி உங்களை அடிக்கலாமா’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டால், ‘ஒரு பொம்பளை ஆம்பளையை அடிக்கலாமா’ என்று பதில் கேள்வி கேட்பார்கள். இவர்களைச் சரிசெய்ய வேண்டுமென்றால், மனைவியை கை ஓங்குகிறபோது இவர்களுடைய முகம், உடல்மொழி, இயல்பு ஆகியவை எப்படி மாறுகின்றன என்பதை வீடியோ எடுத்துக்காட்ட வேண்டும். இதைச் சம்பந்தப்பட்ட மனைவி செய்ய முடியாது. கணவர் குடும்பத்தைச் சேர்ந்த நபர் செய்தால் நல்லது. தீர்வுக்கான முதல் வழி இது.

வழக்கறிஞர் சுமதி - உளவியல் ஆலோசகர் கருணாநிதி
வழக்கறிஞர் சுமதி - உளவியல் ஆலோசகர் கருணாநிதி

மனைவியை அடிக்கிற பழக்கமென்பது தாத்தாவிடமிருந்து, அப்பாவிடமிருந்து என்று ஓர் ஆண் பார்த்துக் கற்றுக்கொண்டதுதான். ‘கற்றுக்கொண்ட தவறான எந்த இயல்பை’யும் தொடர்ந்து 21 நாள்கள் கவனமாகக் கட்டுப்படுத்தி வந்தால், அதிலிருந்து மீள முடியும் என்பதுதான் உளவியல் நிஜம். இதை நாங்கள் ‘மென்டல் டிரெயினிங்’ என்போம். மனைவியை கை ஓங்கும் எண்ணம் வரும்போதெல்லாம் ‘என் அம்மாவையோ, என் மேலதிகாரியையோ கை ஓங்க முடியாதல்லவா’; ‘அதேபோல சக மனுஷியான மனைவியையும் அடிக்கக் கூடாது’ என்று புரிய வைப்போம். இது இரண்டாவது வழி.

மூன்றாவதாக, மனைவியின் இடத்தி லிருந்து அவள் படுகிற அவமானத்தைப் புரியவைக்கும் `எம்பதி' முறை சிகிச்சை. நான்காவதாக மனைவியிடம் மிருகத் தனமாக நடந்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வை அவனுக்கு ஏற்படுத்துவோம். ‘எமோஷன்ல அடிச் சிட்டேன் டாக்டர்’ என்று தப்பிக்க முயற்சி செய்பவர்களிடம், ‘உங்கள் மகளை எமோஷனில் உங்கள் மருமகன் அடித்தால் ஏற்றுக்கொள்வீர்களா’ என்று ஆணுடைய பாசிட்டிவ் எமோஷனை தூண்டிவிடுவோம். இது ஐந்தாவது வழி. ஆறாவதாக, ‘எங்கேயோ பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி உங்கள்மீது பாசமாக இருக்கிறார். ஆனால், நீங்கள் அவரை கை ஓங்குகிறீர்களே’ என்று மனசாட்சியைத் தட்டியெழுப்புவோம். இவற்றையெல்லாம் செய்துபார்க்க வேண்டுமென்றால், இப்படிப்பட்ட ஆண்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வர வேண்டும். கணவன் முதன்முறை கை ஓங்கும்போதே மனைவி அதை எந்த வகையிலாவது தடுத்துவிட வேண்டும். பெண்ணை அடித்துப் பழக்கப் பட்ட ஆணுக்கு, ‘இனி பெண்ணை அடிக்கக் கூடாது; அடிக்க முடியாது’ என்பதை இந்தத் தலைமுறை பெண்கள் புரியவைத்தால்தான், வரும் தலைமுறை பெண்கள் இந்த அவமானமில்லாமல் வாழ முடியும்’’ என்கிறார் கருணாநிதி.

கணவரின் நண்பர்களை மனைவிக்குப் பிடிப்பதில்லையே ஏன்?

அடுத்த இதழில்...

***

அதிகாரம் செலுத்துவதைவிட அன்பு செலுத்துவதே சரி! - ‘நீயா நானா’ கோபிநாத்

``பெண்களைக் கை ஓங்குவது மாபெரும் வன்முறை என்பது தெரியாமலே பல தலைமுறைகள் கடந்துவிட்டன. ஆண் என்றாலே உடல் சார்ந்த வீரமும் அதிகாரமும்தான் என்று இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிறது. ஆனால், தனக்கான அதிகாரத்தை ஓர் ஆண் உருவாக்க நினைத்தால். அவன் ஏதோ ஒரு துறையில் ‘தி பெஸ்ட்’டாக இருக்க வேண்டும். இது எல்லா ஆணுக்கும் சாத்தியமில்லை. சிலர் குடும்பம், குழந்தை என்று இருந்தாலும் வேலையில்லாமலோ பொறுப்பில்லாமலோ சுற்றிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை சமூகம் தோல்வியின் அடையாளமாகத்தான் பார்க்கிறது. ஒருபக்கம் இயலாமை, இன்னொரு பக்கம் தனக்கான அதிகாரத்தை உருவாக்க முடியாமை இரண்டும் சேர்ந்துகொள்ள... சொந்த வீட்டுக்குள், குறிப்பாக தனக்கு எளிமையான டார்கெட்டான மனைவி மீது அதிகாரத்தைக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். பெண்களின் உழைப்பை உதாசீனம் செய்பவர்களும் மனைவியை கை ஓங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!

இங்கே பல ஆண்கள், அம்மாவை அப்பா அடிப்பதைப் பார்த்து வளர்ந்தவர்கள். அதனால், இந்தக் கால ஆண்களிடம் மனைவியை அடிக்கிற வன்முறை குறைந்திருக்கிறது என்றாலும் அது முற்றிலும் குறையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அம்மா மீது அப்பா கை ஓங்குவதையோ, தன் மகள் மீது மருமகன் கை ஓங்குவதையோ தாங்கிக்கொள்ளாத ஆண், தான் தன் மனைவிமீது கை ஓங்கும்போது கல்நெஞ்சக்காரனாக மாறுகிறான். பெற்ற குழந்தையைத் தூக்குவதையே கௌரவக் குறைவாக நினைத்தார்கள் கடந்த தலைமுறை ஆண்கள்.

இன்று குழந்தையுடன் மனைவியின் ஹேண்ட் பேக்கையும் தூக்கியபடி ஷாப்பிங் செய்கிறார்கள். மனைவியை பியூட்டி பார்லர் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறார்கள். பெண்மீது அதிகாரம் செலுத்துவதைவிட அன்பு செலுத்துவதே சரி என்பதை பெரும்பாலான ஆண்கள் உணரத் தொடங்கியிருந்தாலும், குடும்ப வன்முறைகள் முழுமையாக நீங்கும்வரை இந்த மாற்றத்தைக் கொண்டாட முடியாது.

கணவர்களை அடிக்கும் மனைவிகள் பற்றி சமீபத்தில் ஒரு ஷோ செய்தேன். வன்முறை இல்லாத அந்தச் செல்லத் தட்டலே கொஞ்சம் வலுவாகத்தான் ஆணின் முதுகில் விழுகிறது. கடந்த 25 வருடங்களில், கணவனுக்கு உதவியாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பெண், ஆண் செய்து வந்த பல வேலைகளையும் செய்ய ஆரம்பித்திருக்கிறாள். வேலைகளின் அழுத்தத்தால் பெண் வடிகால் இல்லாமல் தவிக்கிறாளோ என்று தோன்றுகிறது. ஆண் மட்டுமே குடும்பத்தைச் சுமந்துகொண்டிருந்த காலத்தில் அவன் கை ஓங்கிக்கொண்டிருந்தான். இப்போது, ஆணின் வேலைகளையும் சேர்த்துச் செய்துகொண்டிருக்கிற பெண் செல்லமாக, அதே நேரம் வலுவாக கை ஓங்க ஆரம்பித்திருப்பதை ஒரு குறியீடாகவே நான் பார்க்கிறேன். பார்ப்போம் காலம் என்ன செய்கிறது என்று...’’