லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 5 - வளராத மீசை... வளரும் தாழ்வு மனப்பான்மை...

ஆண்களைப் புரிந்துகொள்வோம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்களைப் புரிந்துகொள்வோம்

மீட்டெடுக்க பெண்களால் முடியும்!

பெண்களைப்போல ஆண்களும் உருவ கேலிக்கு ஆளாகிறார்கள். முன்நெற்றியில் முடிகொட்டிப் போனால், பரந்த மார்பு இல்லையென்றால், போதுமான உயரம் இல்லையென் றால், ஏன் அவர்களுடைய நிறத்தை வைத்துக்கூட சில நேரங்களில் கேலி செய்யப்படுகிறார்கள்.

இது ஆணின் தன்னம்பிக்கையைத் தகர்த்துத் தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளிவிடும். இதை அவள் விகடனில் பேசுவதால், ஆணுக்கெதிரான உருவகேலியை பெண்கள்தாம் செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். ‘மொத்தமா கொட்டிப் போறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணித்தொலைடா’ என்கிற நண்பர்களின் அக்கறையால் கூட ஆண் உருவகேலிக்கு ஆளா கிறான். காலாகாலத்தில் மகன் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறானே என்கிற வேதனையில் பெற்ற அம்மாகூட இதே வார்த்தை யால் மகனைப் புண்படுத்திவிடலாம். நெருக்கமானவர்களிடம்கூட ஆண்களால் பகிர்ந்துகொள்ள முடியாத மற்றொரு பிரச்னை அவன் ஆணுறுப்பு அளவு தொடர்பானது. இந்தத் தாழ்வு மனப்பான்மை உள்ள ஆண்கள் திருமணப் பேச்சுக்கு பிடிகொடுக்க மாட்டார்கள். ஆணின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க அவனைச் சேர்ந்த பெண்கள் எப்படியெல்லாம் உதவலாம் என்பதைத்தான் இப்போது பேசவிருக்கிறோம்.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

``இந்தச் சமூகம் ‘அவனுக்கென்ன ஆம்பளை’ என்ற பார்வையுடனே ஆணை அணுகுவதால், அவனுடைய தாழ்வு மனப்பான்மை பெரும்பாலும் வெளித்தெரிவதில்லை’’ என்கிற செக்ஸாலஜிஸ்ட் கார்த்திக் குணசேகரன், ``ஆணுலகத்தின் முதல் தாழ்வு மனப்பான்மை `மீசை, தாடி வளரலை. உடம்புல சதை போடல’ என்பதுதான். இந்த எண்ணம் அவனது பள்ளிக்காலத்திலேயே ஏற்பட்டுவிடுகிறது. ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருந்தாலும் மாதங் களின் வேறுபாட்டால் ஒருவனுக்கு மீசை, தாடி வளர்ச்சி அதிகமாகவும், இன்னொருவனுக்கு அது அறவே இல்லாமலும் இருக்கலாம். இந்த யதார்த்தத்தை அம்மாக்கள்தான் புரியவைக்க வேண்டும்’’ என்கிறார்.

``டீன் ஏஜ் தாண்டியும் மீசை, தாடி வளர்ச்சியில்லாமல் இருந்தால், அவர்களுக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கும். இவர்களுக்கு தசை வளர்ச்சியும் இருக்காது. மகனுக்கு இந்தப் பிரச்னை இருந்தால், சிகிச்சை மூலம் மீசை, தாடியை வளர வைக்க முடியும். ஆனால், உடல் வளர்ச்சி குறைவாக இருந்தால், வேறு திறமைகளில் அவர்களை மேம் படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு.

அடுத்த பிரச்னை திருமண வயதில் முன்னந்தலையில் முடிகொட்டுவது. சிலருக்கு ஹார்மோன் குறைபாட்டால், பலருக்கு பரம்பரைத்தன்மையால் முடி கொட்டும். முடி மாற்று அறுவைசிகிச்சை இதற்கொரு தீர்வு. கூடவே, காதலியோ, மனைவியோ ‘இது சகஜம் தான்’ என்று இருந்துவிட்டாலோ, அடர்த்தி யான தலைமுடி கொண்ட ஆண்களுடன் தன்னவரை ஒப்பிடாமல் இருந்தாலோ, ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருவதற்கு வாய்ப்பேயில்லை.

சில வருடங்களுக்கு முன்னால் வெளிநாடு ஒன்றில், ஆணுறுப்பின் அளவு தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், `எத்தனை பேர் உங்களுடைய ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாக நினைக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்ட 80 சதவிகிதம் பேர் தாங்கள் அப்படி நினைப்பதாகப் பதில் எழுதி இருந்தார்கள். உண்மையில் பெரிது, சிறிது என்றெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை. உடல்வாகைப் பொறுத்துதான் அதன் அளவு அமையும். ஆக, இல்லாத பிரச்னையை இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆண்கள். இதைச் சில மருத்துவர்கள் பணமாக்கிக் கொண்டிருக் கிறார்கள்’’ என்று வருத்தப்படுகிற கார்த்திக் குணசேகரன், ஆண்களுக்கு இந்த எண்ணம் வருவதற்கான காரணம், தீர்வுகள், இதிலிருந்து அவனை மீட்க, அம்மா மற்றும் மனைவியின் பங்கு பற்றியும் சொல்கிறார்.

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 5 - வளராத மீசை... வளரும் தாழ்வு மனப்பான்மை...

‘‘பள்ளிப்பருவத்தில் ஒன்றாக சிறுநீர் கழிக்கும்போது ‘எனக்கு பெருசாயிருக்கு, உனக்கு ஏன் சின்னதாயிருக்கு’ என்று விளை யாட்டாகப் பேசிக்கொள்வதுதான், பின்னாளில் வினையாகிவிடுகிறது. ஒரு சில பையன்களுக்கு நார்மலாகவே பெரிதாக இருக்கும். சில பையன்களுக்கோ விறைப்புத் தன்மை வந்தால் பெரிதாகிவிடும். இந்த உடலியல் விஷயங்களெல்லாம் அந்த வயதில் அவர்களுக்குத் தெரியாது. வளர்ந்த பிறகு போர்ன் படங்களைப் பார்த்துவிட்டு இன்னும் குழப்பிக்கொள்வார்கள். விளைவு, திருமணத் தைத் தவிர்ப்பார்கள். திருமணம் செய்து கொண்டாலும், தாழ்வு மனப்பான்மையுடனே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அபூர்வமாகச் சில ஆண் குழந்தைகளுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக ஆணுறுப்பு வளர்ச்சி குறைவாக இருக்கும். இதை 10 வயதுக்குள்ளேயே கண்டுபிடித்துவிட்டால், ஹார்மோன் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், ‘என் உறுப்பு சின்னதா இருக்கு’ என்று கணவனே மனைவியிடம் சொன்னால் ஒழிய, பெரும் பாலான மனைவிகளுக்குக் கணவரின் ஆணுறுப்பு அளவு குறித்த விஷயங்கள் தெரிவ தில்லை. உங்கள் கணவர் இப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தால், அவரை செக்ஸாலஜிஸ்ட்டிடம் அழைத்துச் செல்லுங்கள்.

இதே சிக்கல் உங்கள் மகன் அல்லது காதலனுக்கு இருந்தால், அவர்கள் அதை உங்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், காரணமே இல்லாமல் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருவார்கள். இவர்களையும் செக்ஸாலஜிஸ்ட்டிடம் அழைத்துச் செல்வதுதான் தீர்வுக்கான வழி. அங்கு ஆணுறுப்பின் நீளத்தை எப்படி அளப்பது என்பதைச் சொல்லித் தருவார்கள். இதன் மூலம் உறுப்பின் அளவு குறித்த ஆணின் தாழ்வு மனப்பான்மையை நிரந்தரமாகப் போக்கிவிடலாம்.

உங்கள் கணவருக்கு உறுப்பு குறித்த கவலை இருக்கிறது என்றால், எப்படிப்பட்ட சண்டை யிலும் அதைச் சுட்டிக்காட்டி கேலி செய்து விடாதீர்கள். செய்தால், உங்கள் வீட்டு ஆணின் தன்னம்பிக்கை சுக்குநூறாக உடைந்து விடும் கவனம்’’ என்றார் முடிவாக.

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்... அடுத்த இதழில்,

ஜீவிதாவாலதான் தாழ்வு மனப்பான்மையில இருந்து மீண்டேன்!

நடிகர் டாக்டர் ராஜசேகர்

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 5 - வளராத மீசை... வளரும் தாழ்வு மனப்பான்மை...

‘‘ஆணோட தாழ்வு மனப்பான்மையைப்பத்தி ரொம்ப சரியான நபர்கிட்ட கேட்டிருக்கீங்க. நான் பார்க்க வாட்ட சாட்டமா இருந்தாலும் வேறவிதமான தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. மெடிசன் படிச்சிட்டிருந்தப்போ சரளமா இங்கிலீஷ் பேசத் தெரியாது. கூடவே திக்குவாய் வேற. எங்க வீடு வைஷ்ணவா காலேஜ் பக்கத்துல இருந்துச்சு. அந்த காலேஜ் பேரை சொல்லி டிக்கெட் கேட்க முடியாது. எக்ஸ்ட்ரா காசு கொடுத்து டெர்மினஸ்க்கு டிக்கெட் எடுத்துட்டு நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்ல இறங்குவேன். சினிமாவுல நடிக்கிறதுக்கு முயற்சி பண்ணதைக்கூட ஃபிரெண்ட்ஸ்கிட்ட சொன்ன தில்ல. சரியா பேசவே வராத நீ சினிமாவுல ஹீரோவா நடிக்கப்போறியான்னு கிண்டல் பண்ணிடுவாங்க ளோன்னு பயம்.

ஜீவிதா என் வாழ்க்கையில வந்ததுக்கப்புறம் எல்லாமே மாறுச்சு. அவளைத் தவிர, வேற யாரை கல்யாணம் பண்ணியிருந்தாலும் இந்நேரம் விவாகரத்து ஆகியிருக்கும். மனைவி நினைச்சா தாழ்வு மனப்பான்மையில இருக்கிற கணவனை அதுல இருந்து மீட்டு, அவனை சமூகத்துல பெரிய ஆளா உயர்த்தவும் முடியும்கிறதுக்கு நானே உதாரணம்.

நம்ம ஊர்ல தலையில முடி யில்லாதவங்களை பெரியவங்களே `சொட்டை’ன்னு பாடி ஷேமிங் செய்வாங்க. மீசை, தாடி வளர்ச்சி யில்லாத, வாட்டசாட்டமான உடம்பு வாகில்லாத ஆண்களும் பாடி ஷேமிங்கை சந்திப்பாங்க. இதே கேலியை மனைவி விளையாட்டா செய்தாகூட கணவனுக்கு வாழ்க்கையே வெறுத்துடும். வொர்க் டென்ஷன், ஹார்மோனல் இம்பேலன்ஸ் காரணமாத்தான் ஆண்களுக்கு வழுக்கை விழுதுங்கிறதை இந்தக் காலப் பெண்கள் நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காங்க. அந்த வகையில இந்தக் காலத்து ஆண்கள் லக்கி. கூடவே, விக் வாங்கித் தர்றது, மேன்லியா தெரியறதுக்கான டிரஸ்ஸிங் டிப்ஸ் கொடுக்கிறதுன்னு உதவியும் பண்ணலாம். ஆண் உறுப்பு அளவு பத்தின விஷயத்துக்கு செக்ஸ் கல்வி மட்டும்தாங்க தீர்வு. அதை முறைப்படி கொடுத்துட்டா, அந்தரங்க விஷயங்கள்ல கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ நிச்சயம் பாடிஷேமிங் செய்ய மாட்டாங்க.’’