Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 8 - ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?

ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?

நம் சமூகத்தில் பெண்களை வீட்டு வேலை செய்வதற்கான ஆட்களாகத்தான் பார்க்கிறார்கள்

நாள் முழுக்க வேலை செய்தாலும், ‘வீட்ல சும்மாதானே இருக்க’ என்கிற ஒற்றை வரியில் குடும்பத்தலைவிகளின் உழைப்பு மட்டம் தட்டப்படும். வேலைபார்க்கும் பெண்களுக்கு சில கணவர்கள் வீட்டு வேலைகள் செய்கிறார்கள் என்றாலும், அதை உதவியாகத்தான் செய்கிறார்களே தவிர, தினசரி கடமையாகச் செய்வதில்லை. பெரும்பான்மை ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆண்கள் ஏன் வீட்டு வேலைகளைத் தங்கள் கடமையாக நினைப்பதில்லை... இல்லத்தரசிகளின் உழைப்பை ஏன் அவர்கள் மதிப்பதில்லை... ஊதியம் கிடைக்காத உழைப்பில் ஆண் களுக்கு ஆர்வம் இருப்பதில்லையா... கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர் இராஜவர்மன் விளக்குகிறார்.

இராஜவர்மன்
இராஜவர்மன்

``நம் சமூகத்தில் பெண்களை வீட்டு வேலை செய்வதற்கான ஆட்களாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான், பெண்பார்க்கும் படலத்தின்போதே `உனக்கு சமைக்கத் தெரியுமா’ என்ற கேள்வியை இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 24 X 7 வேலைபார்க்கிற இந்தக் காலப் பெண்கள்கூட திருமணம் நிச்சயமானவுடனே யூடியூப் பார்த்து சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். விளைவு, திருமணம் முடிந்தவுடன் வீட்டு வேலைகள் செய் வதில் முன் அனுபவமுள்ள பெண்ணின் கையில் கரண்டியும் துடைப்பமும் ஒப்படைக்கப்படுகின்றன.

ஒரே பாலின தம்பதியர் வீட்டுவேலை களையும், குழந்தைகளைப் பராமரிக்கிற வேலைகளையும் சரிசமமாகச் செய்கிறார்கள் என்கின்றன சில வெளிநாட்டு ஆராய்ச்சிகள். அதாவது, இரண்டு பாலினம் ஒரு வீட்டுக்குள் இருக்கும்போதுதான் ஒரு பாலினத்தை இன்னொரு பாலினம் வேலை வாங்குகிற பிரச்னை வருகிறதாம். இதில் வேலைபார்க்காத பெண், வேலைபார்க்கிற பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. முழுக்க முழுக்க பாலினம் சார்ந்த ஆதிக்க உணர்வு மட்டுமே இருக்கிறது என்கின்றன அந்த ஆராய்ச்சி முடிவுகள். இது உலகம் முழுக்க பொருந்துகிற உளவியல்தான். அதனால்தான், நம் நாட்டில் பெண் தேடும்போதே, வேலைக்குச் செல்கிற பெண் வேண்டும். அதே நேரம், தான் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாக அவள் தன்னைவிடக் குறைவாக சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

வேலைக்குப் போகாத பெண் என்றால், அவள்தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு இரண்டாம் கருத்தே கிடையாது. `அவ சமைக்கிற பாத்திரமும் அதைத் தேய்க்கிற நாரும் நான் வாங்கிக் கொடுத்தது. ஸோ, என்னோட பங்கு முடிஞ்சிடுச்சு. இதுல சமைக்கிறது உன்னோட பங்கு. நான் பொருள் வாங்கிக் கொடுத்தாதான் உன்னால சமைக்கவே முடியும். அதனால நீ செய்ற வீட்டு வேலைகளுக்கு நான் எதுக்கு மரியாதை கொடுக்கணும்’ - இப்படித்தான் இல்லத்தரசிகளின் உழைப்பு பார்க்கப்படுகிறது. இதில், காதல் திருமணம் செய்த கணவன் சரிசமமாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறான் என்பதற்கு இங்கே போதிய ஆதாரங்கள் இல்லை.

 வீட்டுக்குள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட மனைவியின் மீது எல்லா வேலைகளையும் சுமத்துவது, சோம்பேறித்தனம், வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லாமல் இருப்பது, யாராவது நம்மைக் கிண்டலடித்து விடுவார்களோ என்று தயங்குவது போன்ற தனிநபர் குணங்களும் வீட்டு வேலைகளைப் பெண்களுடைய ஏரியா என்றே முடிவு கட்டி வைத்திருக்கின்றன.

சமூக வலைதளங்களில் மனைவிக்கு உதவி செய்வதாகப் புகைப்படம் பகிர்வது இப்போது டிரெண்டாகிவிட்டது. இவர்கள் எல்லாம் உண்மையிலேயே மனைவியின் வேலையில் பங்கெடுத்துக்கொள்கிறார்களா அல்லது வெறும் டீ போட்டுக் கொடுத்து புகைப்படம் பகிர்கிறார்களா என்பது தெரியவில்லை. பெண்கள் வேலைபார்ப்பது அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில், ஆண்களும் வீட்டு வேலைகளில் சரிபாதி பங்கெடுத்துக் கொள்வதுதான் வளர்ந்த சமூகத்துக்கான அடையாளமாக இருக்க முடியும்’’ என்றவர், எப்படிப்பட்ட ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது பற்றியும் பேசுகிறார்.  

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 8 - ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?

‘‘மனைவியுடன் இணக்கமான உறவில் இருப்பவர்களும், இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும்தான் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்கள் வளர்ப்பால் உருவானவர்கள். இப்போது பல வீடுகளிலும் ஒற்றைப் பிள்ளைகள் இருப்பதால், அம்மாவுக்கு உதவி செய்கிற பிள்ளைகள் வருங்காலத்தில் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பங்கு போட்டுக்கொள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அம்மாவை வீட்டு வேலைக்காரியாக நடத்திய அப்பாவை ரோல்மாடலாகக் கொண்டு வளர்ந்தார்கள் என்றால், வருங்காலத்தில் மனைவியையும் அதேபோல் நடத்த முயன்று குடும்ப வாழ்க்கையில் தோல்வி அடைவார்கள்.

பெண்கள்தான் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்ற நிலைமை அடுத்த 30 வருடங்களில் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம். ஆணுக்கு `பேட்டர்னிட்டி விடுமுறை' கொடுத்தாலும், 30 வருடங்கள் கழித்தும் பெண்கள்தான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறார்கள். அவர்கள்தான் குழந்தையைப் பராமரிக்கப் போகிறார்கள். அதனால், வழக்கம்போல வீட்டு வேலைகள் பெண்கள் தலையில் விழுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

வயக்காடு, வீடு, குழந்தைகள் பராமரிப்பு என்று ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அந்தக்காலப் பெண்களை ‘மாங்கு மாங்குன்னு வேலை பார்க்கிறா’ என்று பாராட்டினார்கள். அலுவலகம், வீடு, குழந்தைகள் படிப்பு, பராமரிப்பு என்று சுழன்றுகொண்டிருக்கிற இந்தக்காலப் பெண்களை ‘மல்ட்டி டாஸ்க்கர்’ என்று புகழ்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது, போற்றுதலின் மறைவில் அவள் தலைமீது அத்தனை வேலைகளையும் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.

நான் சொன்னதையெல்லாம் வைத்து, சம்பளம் கிடைக்காத வீட்டு வேலைகளில் ஆண்களுக்கு விருப்பம் இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். செய்துதான் ஆக வேண்டும் என்கிற நிலைமையில் ஆண், வீட்டு வேலைகளையும் செய்வான். தண்ணீர்ப்பஞ்சம் வந்தால், பைக்கில் கயிறுகட்டி தண்ணீர்க்குடங்களை எடுத்துச் செல்கிற ஆண்கள்தாம் இதற்கு உதாரணம்.

வாழ்க்கைத்துணைக்குச் சமமான மரியாதை கொடுக்கவில்லை என்றால், குடும்ப அமைப்பு சிதறும் என்கிற பயம் வரும்போது ஆண் தானாக மாறுவான். பெண்களின் பொருளாதார சுதந்திரம் மட்டுமே ஆணுக்கு அந்த பயத்தை ஏற்படுத்தும்.’’

பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது...

அடுத்த இதழில்...

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 8 - ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?

அறிவான மனைவி... அவரை சமையலறையில முடக்கலை!

- இயக்குநர் பி.வாசு

‘`ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வ தென்பது அவங்களுடைய வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப மாறும் என்கிறது என்னோட கருத்து. 40 பேர் இருந்த கூட்டுக்குடும்பத்துல பிறந்தவன் நான். அத்தனை பேருக்கும் பெண்களால சமைக்க முடியாதுன்னு வேலைக்கு ஆள் வெச்சார் அப்பா. அம்மாவை ‘ங்க’ போட்டுத்தான் பேசுவார். கோபப்படுறப்போகூட ‘என்ன நீங்க இப்படிப் பண்ணிட்டீங்களே’ன்னு சொல்வார். அப்பாவைப் பார்த்து வளர்ந்ததால, கல்யாணமாகி இந்த 35 வருஷத்துல என் மனைவியை நான் ‘டி’ போட்டுப் பேசினதில்ல.

எனக்கு அமைஞ்சவங்க ரொம்ப அறிவான மனைவி. என்னுடைய ‘மெல்லப் பேசுங்கள்’ படம் வெளியானப்போ எங்களுக்குக் கல்யாணமாகி சில மாசங்கள்தான் ஆகியிருந் துச்சு. புரொஜெக்‌ஷன் பார்த்துட்டு ‘நாயகியின் பாவாடை புடவையைத்தாண்டி வெளியே தெரியுது. இதைக்கூட கவனிக்காம என்ன டைரக்டர் நீங்க? பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன் போன்ற இயக்குநர்களுக்கு மத்தியில படம் பண்ணியிருக்கீங்க. அவங்க அளவுக்கு பண்ணலைன்னாலும், நல்லா பண்ணியிருக்கலாமே. இனிமே நீங்க டைரக்ட் பண்ண வேண்டாம்’னு சொன்னாங்க. அந்தளவுக்கு அறிவான, தைரியமான மனைவி. அதுக்கப்புறம் 10 வருஷங்கள் கழிச்சு ‘சின்னதம்பி’ படம் பார்த்துட்டு ‘ஐயம் யுவர் ஃபேன்’ன்னு சொன்னாங்க. அவங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியும். ஆனா, எங்கப்பாவைப் பார்த்த வழக்கத் துல அவங்களோட எனர்ஜியை சமையற்கட்டுல மட்டுமே நான் முடக்கலை.

‘மலபார் போலீஸ்’ படப்பிடிப்பு அப்போ அவங்க சமைச்ச ‘மாம்பழ மோர்க்குழம்பை’ என்கிட்ட நம்பர் வாங்கிப் பாராட்டினார் நடிகர் ஜெய்கணேஷ். அன்னிக்கு, நான் வீட்டுக்கு வந்தப்போ அவங்க முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. சமையலும் உழைப்புதான். அதுக்கான அங்கீகாரம் அவங்களுக்கு அன்னிக்கு கிடைச்சது இல்லையா... என்னோட மகன் சக்தி நல்லா சமைப்பான். மாசத்துக்கு ரெண்டு ஞாயிற்றுக்கிழமை வீட்ல அவனோட சமையல்தான்.

சமையலுக்கு ஆள் வெக்கிறது எல்லா கணவருக்கும் சாத்தியமில்ல. முடிஞ்சவங்க வைக்கலாம். முடியாதவங்க வீட்டு வேலைகள்ல பங்கெடுத்துக்கலாம். அதுவும் முடியலைன்னா, காமெடிக்குகூட மனைவியோட சமையலை கேலி செய்யாம இருக்கலாம்.’’