கட்டுரைகள்
Published:Updated:

கணவருடன் விவாகரத்து, அப்பாவின் ஓவர் செல்லத்தால் பாழாகும் மகன்; புரியவைப்பது எப்படி?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். கணவர் தொழில் செய்கிறார். எங்களுக்கு ஒரு பையன். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பின், எனக்கும் அவருக்கும் இடையே நிறைய பிரச்னைகள் வர ஆரம்பித்தன. அல்லது, அதற்கு மேல் என் சகிப்புத்தன்மை தீர்ந்து போய்விட்டிருந்தது.

கணவர் ஓர் ஆணாதிக்கவாதி. காதலித்தபோது, அதை நான் உணரவில்லை. திருமணத்துக்குப் பிறகுதான் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார். பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்று நம்புவது, வேலைக்குச் செல்லும் பெண்களை இழிவாகப் பேசுவது, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆண்களைக் கேலி செய்வது என... அவர் குணம் இதுதான். வீட்டில் தினசரி சமையலில் இருந்து எல்லாம் அவர் முடிவுதான். அவர் முடிவு மட்டும்தான். என்னை ஓர் அடிமையாக வைத்திருந்தார்.

கணவருடன் விவாகரத்து, அப்பாவின் ஓவர் செல்லத்தால் பாழாகும் மகன்; புரியவைப்பது எப்படி?

10 ரூபாய்க்குக்கூட அவரிடம் போய் நிற்கும் நிலைமையில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள, என் மகனுக்கு எட்டு வயதானபோது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளம் தந்த சந்தோஷம் தனி. அந்த வீட்டில் மூச்சு முட்டிக்கொண்டிருந்த எனக்கு, வேலைக்குச் சென்றுவருவது ஆசுவாசமாகவும் இருந்தது. ஆனால், இவையே என் கணவருக்குப் பிரச்னையாகவும் இருந்தன. வேலையை விடச் சொல்லிக் கொடுமைப்படுத்தினார். அவருக்குப் பிரச்னை நான் வேலை செய்வது அல்ல; என்னை அடிமையாக வைத்திருக்க முடியவில்லை என்ற கவலைதான். இதைப் புரிந்துகொண்டு, நான் வேலையை விட மறுத்துவிட்டேன். அடுத்து அவர் அடிப்பது, துன்புறுத்துவது எனக் குடும்ப வன்முறையை ஆரம்பிக்க, விவாகரத்தில் முடித்துக்கொண்டேன் அவர் உறவை.

நீதிமன்றத்தில், எங்கள் மகன் என் பராமரிப்பில் வளர அனுமதி வழங்கப்பட்டது. என் வருமானத்தில் வைராக்கியத்துடன் என் மகனை வளர்த்தேன். குறிப்பாக, என் முன்னாள் கணவரைப் போல அவனும் குணக்கேடான மனிதனாக வளர்ந்துவிடக் கூடாது என்பதால், கண்டிப்புடன் இருந்தேன். ஆனால், என் முன்னாள் கணவர் அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குத் தேவைக்கும் அதிகமாகப் பொருள்கள் வாங்கிக்கொடுப்பது, பாக்கெட் மணி எனக் கையில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பது, அவன் படிப்பைப் பற்றி நல்லபுத்தி கூறாமல், ‘நீ ஃபெயிலானாலும் அப்பாவோட சொத்து இருக்கு’ என்று சொல்வது என... ஒரு பொறுப்பற்ற தந்தையாக நடந்துகொண்டார். குறிப்பாக, மகன் என்னைவிட அவரிடம் பாசமாக இருக்க வேண்டும், இன்னும் ஒரு படி மேலே போய், என்னை வெறுக்க வேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்தது.

அவர் நினைத்தது நடந்தது. என் கண்டிப்பால் என்னிடமிருந்து விலக ஆரம்பித்த மகன், தன் அப்பாவிடம் சரணடைந்தான். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்தபோதே பைக், இரண்டாம் வருடத்தில் கார், பார்ட்டி, பப் பழக்கங்களுக்குப் பணம் என அவன் கேட்டதையும் கேட்காததையும் செய்துகொடுத்து அவனைப் பாழாக்கினார். படிப்பில் அத்தனை அரியர்கள். அதை க்ளியர் செய்ய முயற்சிகூட எடுக்கவில்லை. வேலைக்குச் செல்லவும் இல்லை. மாதாமாதம் அப்பாவிடம் செலவுக்குப் பணம் பெற்றுக்கொள்வது, அதை நண்பர்களுடன் கொண்டாடிச் செலவழிப்பது என்று திரிந்துகொண்டிருக்கிறான்.

கணவருடன் விவாகரத்து, அப்பாவின் ஓவர் செல்லத்தால் பாழாகும் மகன்; புரியவைப்பது எப்படி?

இது செல்லம், பணம் சம்பந்தப்பட்ட பிரச்னையாக மட்டும் இல்லை. சிகரெட், குடி என்று கெட்ட பழக்கங்களையும் பழகி யிருக்கிறான். அவன் அப்பா அதையும்கூடக் கண்டிப்பதில்லை. ‘ஆம்பளைன்னா அப்படித்தான்டா’ என்று தட்டிக்கொடுக்கிறார். எல்லாவற்றையும்விட என் மனதை அறுக்கும் ஒரு விஷயம்... என் மகனும் அவன் அப்பாவைப் போலவே, பெண்களை மதிக்காத, பெண்களை அடிமையென நினைக்கும் ஆணாதிக்கவாதியாக இருக்கிறான். எந்தக் காரணத்துக்காக நான் என் கணவரை விட்டு வெளியேறினேனோ, அப்படியே என் பிள்ளையும் இன்று வளர்ந்து நிற்பதை என்னால் சகிக்கவே முடியவில்லை.

என் முன்னாள் கணவருக்கும் எனக்கும், பிள்ளையைச் செல்லம் கொடுத்துக் கெடுப்பது தொடர்பாகப் பலமுறை சண்டை வந்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் உணர்வது ஒன்றுதான். மகனை தன்னை நாடி வரவைத்ததன் மூலம் என்னை வென்றுவிட்டதாக, அவர் ஈகோவை அவர் திருப்திப்படுத்திக்கொள்கிறார். தந்தைப் பாசமெல்லாம் அதற்குப் பிறகுதான்.

என் மகனை நல்வழிப்படுத்த நான் என்ன செய்வது? என்னுடன் போட்டிபோடுவதாக நினைத்து என் கணவர் செய்யும் செயலால் என் மகனின் எதிர்காலம் பாழாகிறது என்பதை எப்படி அவருக்குப் புரியவைப்பது?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)