Published:Updated:

`தன்பாலின திருமணங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும்!' - LGBTQ+ மக்களின் கோரிக்கையும் வரலாற்று தீர்ப்பும்

LGBT ( Photo by daniel james on Unsplash )

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதுவும் எந்தவித மதச் சடங்குகளுக்கு உட்பட்டும் இதைக் கொண்டுவராமல், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இதை அங்கீகரிக்க வேண்டும்.

`தன்பாலின திருமணங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும்!' - LGBTQ+ மக்களின் கோரிக்கையும் வரலாற்று தீர்ப்பும்

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதுவும் எந்தவித மதச் சடங்குகளுக்கு உட்பட்டும் இதைக் கொண்டுவராமல், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இதை அங்கீகரிக்க வேண்டும்.

Published:Updated:
LGBT ( Photo by daniel james on Unsplash )

கடந்த ஜூன் 7-ம் தேதியன்று, சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரின் உரிமைகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உத்தரவை வழங்கியது. மேலும், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினருக்கு பாதுகாப்பான சுற்றத்தை உருவாக்குவதற்கும் காவல்துறையிடம் விசாரணைக்காகச் செல்லும் அவர்களிடமோ அவர்களுடைய பெற்றோர்களிடமோ காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மோசமாக நடந்துகொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

LGBTQ+
LGBTQ+

மதுரையைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரண்டு பெண்கள், தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்துள்ளனர். அவர்களுடைய பெற்றோர், தங்கள் பெண்களைக் காணவில்லை எனக் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின்போது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மற்றுமொரு மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவரையும் காவல்துறையினர் மோசமாக நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த இரண்டு பெண்களும் காவல்துறையினரின் மோசமான நடவடிக்கைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் அவர்களுடைய பெற்றோர் மூலமாக எந்தவித ஆபத்தும் ஏற்படாமலிருக்கவும் பாதுகாப்பு வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, மத்திய சமூக நீதி அமைச்சகத்துக்கு, முக்கியமான சில உத்தரவுகளை வழங்கியுள்ளார். மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்களுக்கு உதவக்கூடிய தன்னார்வ அமைப்புகளின் முகவரி, தொடர்பு எண் ஆகிய விவரங்கள் உள்ளடங்கிய பட்டியலை அடுத்த 8 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். மேலும், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தில் ஏதேனும் பிரச்னைகளை அவர்களின் பாலினத் தேர்வு காரணமாகச் சந்தித்தால், அந்தப் பட்டியலிலுள்ள தன்னார்வ அமைப்புகளை அணுகலாம். அந்த அமைப்புகள் இவர்களுக்கான உதவிகளைச் செய்வதோடு, அவர்களைப் பற்றிய தகவல்களையும் ரகசியமாக வைக்கவேண்டும். அதுமட்டுமன்றி, இந்த மக்களுக்கு அந்தத் தன்னார்வ அமைப்புகள் செய்யும் உதவிகள் பற்றிய தரவுகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சமூக நீதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட யார் வேண்டுமானாலும் தங்கும் வகையில் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய கட்டுமான வசதிகளை மத்திய அரசு அடுத்த 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு, மாவட்ட மற்றும் மாநில அளவிலான நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெற்றோர்களுக்கு, மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்டவர்களைப் புரிந்துகொள்ள, அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவைபோக, மருத்துவரீதியாக மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்டவர்களைக் குணப்படுத்தப் போவதாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், பெற்றோர், யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Pride Month
Pride Month

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓர் உளவியலாளரை நியமித்து, மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள் பற்றியும் அவர்களுடைய உணர்வுகள் குறித்தும் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதுகுறித்தும் பேசிய நீதிபதி, ``தன்பாலின் ஈர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத பெரும்பான்மையான நபர்களில் நானும் ஒருவனாகத்தான் இருக்கிறேன். ஆனால், அறியாமை மற்றும் விருப்பமில்லாமையால் அவர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதையும் மோசமாக நடத்துவதையும் நியாயப்படுத்த முடியாது. ஆகவே, முறையான நீதியை அனைத்து வகையிலும் எவ்வித முன்முடிவும் இல்லாமல் வழங்குவதை என் கடமையாக, என் பொறுப்பாக எடுத்துக்கொண்டேன். அதற்காக, மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்களைப் பற்றிய புரிந்துணர்வை எனக்குள் வளர்த்துக்கொள்ள முயன்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``மனுதாரர்களோடு நான் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தையில், அவர்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளை எடுப்பதோடு அவர்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டியது நான்தானே தவிர, நம்முடைய சமூக அறநெறி மற்றும் பாரம்பர்யத்திற்காக அவர்கள் தங்கள் உண்மையான நிலையை மாற்றிக்கொள்ளக் கூடாது" என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகள் குறித்த ஆவணப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஆவணப்பட இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான திவ்ய பாரதியிடம் இந்த வழக்கு குறித்துப் பேசியபோது, ``இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து புரிந்துகொண்டு இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தத் தீர்ப்பை எழுதியுள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இதைக் கையாண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள்
மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள்

இந்தத் தீர்ப்பு எந்த வகையில் உதவும் என்று பார்த்தால், உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு நிறைவேற்றலாம், நிறைவேற்றாமலும் போகலாம். ஆனால், எதிர்காலத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களோ, திருநர்களோ, திருநங்கைகளோ இவர்களைப் போல் முன்வரும்போது, அடைக்கலம் தேடும்போது, அது காதல் இல்லை, கடத்தல் என்ற புகார் காவல்துறையிடம் வரும்போது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கும் முன்பே, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டு அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தேவையற்ற பிரச்னைகளையும் மன உளைச்சல்களையும் தவிர்க்க முடியும். இது பலருக்கும், தங்கள் விருப்பத்தின்பேரில் வாழ்வைத் தொடர்வதற்கான தைரியத்தை வழங்கும். மேலும், இனி வரும் இத்தகைய வழக்குகளில் இந்த உத்தரவுகள் முக்கியப் பங்கு வகிக்கும். சக நீதிபதிகளுக்கு இது ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்" என்று கூறினார்.

இதுகுறித்துப் பேசிய மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்களுக்காகக் கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ஸ்ரீஜித் சுந்தரம், ``உலக அளவில் இருக்கக்கூடிய பாலினமற்ற பால் ஈர்ப்பு கொண்ட மக்களின் மாதமாக இந்த ஜூன் மாதம் இருக்கிறது. இதை சுயமரியாதை மாதம் என்று அழைப்போம். இந்த நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதேநேரம், இதுபோல் பாலினமற்ற பால் ஈர்ப்புடையவர்கள் தைரியமாக முன்வரும்போது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, பாதுகாக்கும், அவர்களுக்காகப் பேசும் செயல்பாட்டாளர்களுக்கே இங்கு பாதுகாப்பு கிடையாது. இந்தப் பிரச்னையிலும் அப்படியொரு நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் நீதிமன்றத்துக்கே சென்றது.

LGBTQ+
LGBTQ+

இதுபோன்ற வழக்குகளை எப்படி நடத்த வேண்டும் என்பதே காவல்துறையினர், பெரும்பான்மையான வழக்கறிஞர்களுக்குத் தெரியாது. இந்த வழக்கு இனி அதற்கானதொரு முன்மாதிரியாகத் திகழும். அதற்கு, இந்த வழக்கை முன்னெடுத்த வழக்கறிஞர்களின் புரிந்துணர்வு முதன்மையான பங்கு வகித்துள்ளது. இதன்மூலம், இந்தச் சட்டம் பாலினமற்ற பால் ஈர்ப்பு கொண்ட சமூகத்தினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கும். ஆனால், இதோடு நின்றுவிடாமல், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆணும் இன்னோர் ஆணும், ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

அதுவும் எந்தவித மதச் சடங்குகளுக்கு உட்பட்டும் இதைக் கொண்டுவராமல், சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் இதை அங்கீகரிக்க வேண்டும். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதில் என்னைப்போல் சிலருக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பினும், சொத்துரிமை, குழந்தையைத் தத்தெடுத்தல் என்று பல உரிமைகள் திருமண பந்தத்தின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது. ஆகவே, திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கான உரிமையை, குறிப்பாக சிறப்புத் திருமணச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது" என்று கூறினார்.

இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி, ``இந்தத் தீர்ப்பு இன்றுள்ள சமூக நிலையை மாற்றிவிடுமா என்றால், மாற்றம் உடனடியாக வராது. ஆனால், நம் சமூகத்தில் மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள் மீதான பார்வையையும் அணுகுமுறையையும் மாற்றுவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும். ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்வில் தலையிடுவதற்கு, பெற்றோர்களாகவே இருந்தாலும் யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை இது பறைசாற்றுகிறது.

திருநங்கைகளின் சுய அடையாளம் மற்றும் உரிமைகளை அங்கீகரித்த நால்சா தீர்ப்பைப் போலவே, மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்குமே இந்தத் தீர்ப்பு, எதிர்கால வழக்குகளின்போது மேற்கோள் காட்டும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதுபோன்ற வழக்குகள் மீண்டும் வரும்போது, இந்த உத்தரவை மேற்கோள் காட்டி இதுபோன்றவர்களின் நலனைப் பாதுகாக்க முடியும்" என்று கூறினார்.

சுயமரியாதை மாதம்
சுயமரியாதை மாதம்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை கையாண்ட விதம் மற்ற அனைத்து நீதிபதிகளுக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதுபோன்ற அணுகுமுறைகள், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தைச் சேர்ந்தோர் எதிர்காலத்தில் தைரியமாகத் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள நீதிமன்றங்களை நாடுவது ஊக்கப்படுத்தப்படும்.

அதேநேரம், இதை இயற்கைக்கு விரோதமான உறவுமுறையாகக் கருதும் போக்கு சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால், மனித வரலாறு நெடுகவே, இதுவோர் உடலியல் அமைப்புதானே தவிர இது குறைபாடல்ல என்பது தெளிவாக இருக்கிறது. தற்போது இதை உணர்ந்து, மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நீதித்துறை தீர்ப்பு வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது. அதேநேரம், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்களும் அனைவரைப் போலவும் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பமாக வாழ்வதற்கான உரிமைகளைச் சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும். அது, அவர்களைக் குடும்ப அமைப்புகளில் உறவுகளோடு வாழ வழிவகுப்பதோடு, மற்ற பல்வேறு உரிமைகளைப் பெறுவதற்கும் அவர்களுக்கு உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism