Published:Updated:

`எங்க சண்டை வீதிக்கு வராது!' - 50 வருட இல்லறவாழ்வு ரகசியம் பகிரும் காளியப்பன்-பாப்பாயி #NoMoreStress

Kaaliappan - Paapayi

"கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்!"

`எங்க சண்டை வீதிக்கு வராது!' - 50 வருட இல்லறவாழ்வு ரகசியம் பகிரும் காளியப்பன்-பாப்பாயி #NoMoreStress

"கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்!"

Published:Updated:
Kaaliappan - Paapayi

தம்பதியருக்குள் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டால்கூட விவாகரத்து பத்திரம் வாசிப்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. ஏன், திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குள்ளேயே தம்பதிக்குள் ஒத்துப்போகாவிட்டால் பிரிந்துவிடுவது என்று பரஸ்பரம் பேசி முடிவு செய்வதும் அதிகரித்து வருகிறது.

Kaaliappan - Paapayi
Kaaliappan - Paapayi

தம்பதிக்குள் பெருக்கெடுக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், நேசம், புரிந்து கொள்ளும் பக்குவம், வெளிப்படுத்தவேண்டிய அந்நியோன்யம், விட்டுக்கொடுக்கும் பண்பு குறித்த அக்கறை இல்லாததால் இனிக்க வேண்டிய இல்லறம் விவாகரத்தில் முடிகிறது. வெளிநாட்டினர் எல்லாம் பார்த்து வியந்த நம் நாட்டின் `குடும்பம்' என்கிற பந்தம், கலாசார மாற்றத்தின் காரணமாக மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியிருக்கிறது என்பது கவலையளிக்கும் உண்மை. ஆனால், என்னதான் நாகரிக மாற்றம் ஏற்பட்டாலும் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைப் பெரிதுபடுத்தாமல் சிறு பிணக்குகள்கூட இல்லாமல் 90 வயதைக் கடந்த காளியப்பன் - பாப்பாயி தம்பதி சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மணமாகி 50 ஆண்டுகளைக் கடந்தாலும் புதுமணத் தம்பதிகளைப்போன்று அன்புடனும் நேசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொன்விழா கண்ட மகிழ்ச்சியில் இருந்த காளியப்பன், "நாங்களும் மத்தவங்கமாதிரி ரத்தமும் சதையும் உள்ள சாதாரண மனுஷங்கதான். எங்களுக்குள்ளும் சண்டை, சச்சரவு வரத்தான் செய்யும். ஆனா, எங்க சண்டை வீதிக்கு வராது. எங்க சண்டை மத்தவங்க காதுக்குப் போறதில்ல, நாலு சுவத்துக்குள்ளேயே முடிஞ்சுபோயிடும். எங்களுக்குள் சச்சரவு ஏற்பட்டா, 'என் மனைவிதானே என்னை திட்டுனா'னு நான் சமாதானம் ஆயிடுவேன்" என்று ஐம்பது வருட தாம்பத்யம் உடையாமல் தொடரும் சூட்சமம் பற்றி விளக்கினார்.

Couples
Couples
pixabay.com

பாப்பாயி பேசும்போது, "என் கணவரைப் பத்தி வேற யாராச்சும் தப்பா பேசினா அவங்களை திட்டிவிட்டுடுவேன். அதேபோல என்னைப்பத்தி யாராச்சும் குறை சொன்னா என் கணவர் சம்பந்தப்பட்டவங்ககிட்ட சண்டைபிடிச்சு உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார். நான் இவருக்கு வாக்கப்பட்டு வந்து அம்பது வருஷம் ஆகுது. ஆனா, ஒருதடவைகூட இவரோட பேரை யார்கிட்டயும் சொன்னதில்லை" என்று வெட்கப்பட்டார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, இந்தத் தம்பதியைச் சந்தித்தபோது அவர்களிடையே இருக்கும் பாசப்பிணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. தண்ணீர்காட்டுவதற்காக பாப்பாயி மாடுகளை அவிழ்க்கப் போனபோது, ஒரு மாடு லேசாக கொம்புகளைச் சிலுப்பியது. அதைப்பார்த்துப் பதறிய காளியப்பன், `இருபுள்ள, நான் வந்து மாட்டை புடிச்சுத் தண்ணிகாட்டுறேன்' என வேகமாகச் சென்று மாடுகளைப் பிடித்தார். கணவரின் பாசத்தில் உருகிய பாப்பாயி, 'உங்களுக்குப் புடிச்ச பருப்புக் குழம்பு வெச்சுருக்கேன். சாப்பிட வாங்க' எனப் பாசமாக அழைத்தது அவர்களது அந்நியோன்யத்தைக் காட்டியது.

Kaaliappan - Paapayi
Kaaliappan - Paapayi

அந்தத் தம்பதியிடம், 'உங்களுக்கிடையே தொடர்ந்து நேசப் பிணைப்பு தொடர்வதன் மர்மம் என்ன' எனக் கேட்க நம்மிடம் பேசிய காளியப்பன், "என் பொஞ்சாதிக்குச் சொந்த ஊர் பக்கத்துலதான் இருக்கு. அம்பது வருஷத்துக்கு முன்னாடி எங்க கல்யாணம் நடந்துச்சு. நானும், அவளும் அதிகம் படிக்கலை. ஆனா எங்கப்பாவும், அம்மாவும், `தம்பதிங்க எப்படி மூணாவது மனுஷன் சிரிக்கிற மாதிரி இல்லாம ஒத்துமையா வாழ்றது'ங்கிற விசயத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தாங்க. என் பொஞ்சாதிக்கும் அவ வீட்டுல சொல்லிக்கொடுத்து வளர்த்ததால, எங்க தாம்பத்ய வாழ்க்கை, எந்தச் சிக்கலும் இல்லாம அம்பது வருஷத்தைக் கடந்தும் தொடருது. அதுக்காக எங்களுக்குள்ள சண்டையே வராதுன்னு நினைச்சிடாதீங்க. சண்டை, சச்சரவுகள் அப்பப்ப வரத்தான் செய்யும். ஆனா அந்தச் சண்டைகளை கானல் நீராக்கி அப்பப்ப சரிபண்ணிக்குவோம். அவ கொஞ்சம் கோபமானா, நான் தாழ்ந்துபோவேன். நான் புடிச்ச முயலுக்கு மூணுகாலுனு நான் முரண்டுபுடிச்சா, அவ தாழ்ந்துபோவா. எம்பொண்டாட்டி எதாவது பேசுனா, `பொண்டாட்டிதானே நம்மகிட்ட கோபப்படுறா. ரோட்டுல போற பொம்பளையா கோபப்படுறா'னு நினைப்பேன். அதுக்குப்பிறகு, அவமேல பொங்கிவந்த கோபம் பொசுக்குன்னு அழிஞ்சுபோயிரும்.

நான் கோபத்துல பேசாம இருந்தா, நீங்க இவ்வளவு அழுத்தக்காரரா. பேசவே மாட்டேங்கறீங்க'னு சொல்வா. அதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள ஒரு மாமாங்கத்துக்கு சண்டை, சச்சரவு எதுவும் வராது. நமக்குள்ள மனசு விட்டுப் பேசுனாலே கோடாங்கிச் சாட்டையடிபட்டு இறங்குற பேய்மாதிரி சண்டையெல்லாம் வந்தசுவடு தெரியாமப் போயிரும். பொண்ணுங்களும் ஒரு உசிருதானே, அவங்களுக்கும் உணர்ச்சி இருக்கு, அவங்க சொல்லையும் காது கொடுத்துக் கேட்கணும். கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்..." என்று மிடுக்காகச் சொல்லி முடித்தார் காளியப்பன்.

Depression
Depression

தொடர்ந்து பேசிய, பாப்பாயி, "புருஷனை நம்பி வந்துட்டோம். அவர்தான் நமக்கு எல்லாம்னு நினைச்சதால, எங்களுக்குள்ள இதுவரை பிரிவினையே வரலை. அதுக்காக அவர் சொல்ற எல்லாத்தையும் வேதவாக்கா எடுத்துக்கமாட்டேன். நல்லதைச் சொன்னா ஏத்துக்குவேன். கோபப்படுத்துறமாதிரி பேசினா, அவரோட சண்டை போடுவேன். ஆனா, அந்தச் சண்டையில எங்க கணவன், மனைவிங்கிற பந்தம் உடையாமப் பார்த்துக்குவேன். அவரு செத்தநாழி ஒடம்புக்கு சுகமில்லைனு படுத்தாக்கூட நான் பதறிப்போயிருவேன். அவருக்கு தைலம் தேய்ச்சுவிட்டு, பணிவிடை பண்ணுவேன். அதேபோல, எனக்கு ஒடம்புக்கு ஒண்ணுனா, அவர் துடிச்சுப்போயிருவார். வெளியில வேலையா போயிருந்தாக்கூட, என் நினைப்பாவே இருப்பார். கணவனை மனைவியும், மனைவியை கணவனும் முழுசா புரிஞ்சு வாழணும். இப்ப உள்ள பசங்ககிட்ட அது இல்லை. மத்தவங்க கருத்தைக் கேட்கிற பொறுமையும், அடுத்தவங்களை மதிக்கிற பக்குவமும் சுத்தமா இல்லை.

கூட்டுக்குடும்பமா வாழ்ந்த எங்களுக்கு அந்த மனப்பக்குவம் நிறைய உறவுகள் மூலமா கிடைச்சது. ஆனா, இப்போ உள்ள பசங்க, அவங்களுக்கான துணையை அவங்களே தேடிக்கிறாங்க; கொஞ்ச காலத்திலேயே பிரிஞ்சிவாழ்ற சோகமான முடிவையும் அவங்களே எடுக்கிறாங்க. ஆனா, நான் அப்பிடி இல்லை. கட்டுக்கோப்பா வாழ்ந்ததால அம்பது வருஷ தாம்பத்ய வாழ்க்கையை ஒத்துமையா வாழ்ந்துட்டோம்.

Kaaliappan - Paapayi
Kaaliappan - Paapayi

எங்க பிள்ளைங்களையும் அவங்களோட துணைகிட்ட அனுசரிச்சுப் போறமாதிரிதான் வளர்த்தோம். அவங்களும் சண்டை, சச்சரவில்லாம ஒத்துமையா வாழ்றாங்க. அவர் மடியில என் உயிர் போகணும், அதுதான் தினமும் நான் மகமாயியை வேண்டுற வேண்டுதல். அந்தக் கொடுப்பினை மட்டும் கிடைச்சா, நான் முழுவாழ்க்கை வாழ்ந்த திருப்தியோட போய்ச் சேருவேன்" என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.

பாசத் தம்பதியிடம் பேசிய பிறகு மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.