Published:Updated:

"நாய்களுக்காகவே கல்யாணம் பண்ணிக்கலை; இனியும் என் வாழ்க்கை..." -நாய்களின் அன்புத்தாய் மீனாட்சி

மீனாட்சி

"தினமும் சிக்கன் வாங்கவே 200 ரூவா செலவாகிடும். கடந்த 20 வருஷங்கள்ல ஒருநாள்கூட இதுங்களுக்கு சிக்கன் கொடுக்க நான் தவறினதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் எல்லாத்துக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பேன். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்தும், இதுங்களுக்கு நான் குறையேதும் வெச்சதில்லை."

"நாய்களுக்காகவே கல்யாணம் பண்ணிக்கலை; இனியும் என் வாழ்க்கை..." -நாய்களின் அன்புத்தாய் மீனாட்சி

"தினமும் சிக்கன் வாங்கவே 200 ரூவா செலவாகிடும். கடந்த 20 வருஷங்கள்ல ஒருநாள்கூட இதுங்களுக்கு சிக்கன் கொடுக்க நான் தவறினதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் எல்லாத்துக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பேன். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்தும், இதுங்களுக்கு நான் குறையேதும் வெச்சதில்லை."

Published:Updated:
மீனாட்சி

மயிலாப்பூர்... பக்திக்கும் பரபரப்புக்கும் பெயர் போன சென்னையின் மையப்பகுதி. அங்குள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலிருக்கும் லாலா தோட்டம் குடியிருப்பில், நாய் வளர்க்கும் மீனாட்சியின் வீட்டுக்கு வழி கேட்டால், குழந்தைகள்கூட திசைகாட்டுகிறார்கள். தீப்பெட்டியை அடுக்கி வைத்ததுபோல அணிவகுக்கும் ஒண்டுக்குடித்தன வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்கள், பிறந்த மேனியாய் விளையாடும் குழந்தைகள் என சிங்காரச் சென்னையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கிறது அந்தக் குடிசைப்பகுதி.

மீனாட்சி
மீனாட்சி

மிகக் குறுகலான சந்துக்குள் நுழைந்து சென்றால், நாய்கள் புடைசூழ, பாவாடை தாவணி உடையில் சிரித்த முகமாக வரவேற்கிறார் மீனாட்சி. மயிலாப்பூர் பகுதியில், ஆதரவற்ற நாய்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்புத்தாய் இவர். வீட்டு வேலைக்குச் செல்லும் மீனாட்சி, தன் வீட்டில் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்க்கிறார். அவைதான் மீனாட்சிக்கு உயிர், உறவு எல்லாமே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"உள்ள போங்கடா!" -வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சில நாய்களிடம் உரிமையாகக் கூறியவர், அவரின் வீட்டுக்குள் நம்மை அழைத்துச் சென்றார். ஆள் நடமாட்டத்தை அறிந்ததும், வீட்டுக்குள் இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்கள், பாய்ந்துகொண்டு வெளியே வந்தன. "நம்ம வீட்டுக்கு வந்தவங்கள பயமுறுத்தாதீங்கடா" என்று சிரித்தபடியே, நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு, நாய்கள் மீதான தனது நேசத்தைப் பகிர்ந்தார்.

மீனாட்சி
மீனாட்சி

"நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இதே ஏரியாதான். என்கூடப் பிறந்தவங்க மொத்தம் பத்து பேர். சின்ன வயசுல நல்ல சாப்பாடு, துணிமணி கிடைக்காம நான் வருத்தப்பட்ட காலம் நிறைய உண்டு. ஏழாப்பு வரைதான் படிச்சேன். அப்புறமா, வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேேன். சின்ன வயசுல ஆசையா ஒரு நாயை வளர்த்தேன். உடம்பு சரியில்லாம திடீர்னு அவன் இறந்துட்டான். அவனோடு பழக்கத்திலிருந்த ஒரு தெரு நாய், ஏழு குட்டிகளுடன் கவனிப்பாரின்றி இருந்துச்சு. அந்த எல்லா நாய்களையும் வீட்டுக்குக் கொண்டுவந்து வளர்த்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் போட்டுகிட்டிருந்த தங்கக் கம்மலை வித்து, நாய்களுக்குத் தடுப்பூசி போட்டேன். 'நாம திங்கவே சோறில்லை. இந்த லட்சணத்துல நாய்களுக்கு இந்தக் கவனிப்பெல்லாம் தேவையா?'னு வீட்டுல என்னைச் சகட்டுமேனிக்குத் திட்டினாங்க. நாய்களின் குணாதிசயங்களை என் குடும்பத்தினரால புரிஞ்சுக்க முடியலை. அதனால, குடும்பத்துல அடிக்கடி சண்டைதான். கேட்கக் கூடாத பேச்சையெல்லாம் கேட்டேன். அதனால, இனி சொந்தபந்தங்களோடு சேர்ந்து வாழுறது சரிவராதனு என் நாய்களுடன் தனியா வாழ ஆரம்பிச்சேன்" நாய்களையே நிரந்தர உறவாக்கிக்கொண்ட மீனாட்சி, தன் பூர்வீக வீட்டில் வசித்துவருகிறார்.

மீனாட்சி
மீனாட்சி

மிகச் சிறிய அந்த வீட்டில், செளகர்யமாக ஒருவர் உறங்குவதே சிரமம். ஆனால், அந்த வீட்டில்தான், தன் நாய்களுடன் சேர்ந்து மீனாட்சி தினமும் உறங்குகிறார்; உணவு உண்கிறார்; உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கிறார். மழை நாள்களில் மீனாட்சி மற்றும் அவர் வளர்க்கும் நாய்களின் பாடு பெரும் திண்டாட்டம்தான். ஆனாலும், இயலாமையை நினைத்து மீனாட்சி குறைபட்டுக்கொள்வதில்லை.

"வீட்டு வேலையில மாசத்துக்கு ஏழாயிரம் ரூவா சம்பளம் கிடைக்குது. அது, என் நாய்களை வளர்க்கவே பத்த மாட்டேங்குது. வாடகை செலவு இல்லைங்கிறதால, சிரமம் பார்க்காம இந்த வீட்டுல வசிக்கிறேன். எனக்குனு ஆசைப்பட்டு பெரிசா எதையுமே வாங்க மாட்டேன். நான் வேலைக்குப் போற வீடுகள்ல, பண்டிகை தினத்துல புதுத்துணி கொடுப்பாங்க. அதனால, கூடுமானவரைக்கும் செலவுகளைத் தவிர்த்துட்டு, சம்பளத்தைப் பத்திரப்படுத்தி, என் பிள்ளைகளுக்கான சாப்பாடு, ஸ்நாக்ஸ், தடுப்பூசி செலவுகளைச் சமாளிச்சுக்குவேன். இவங்களுக்குத் தினமும் சிக்கன் வாங்கவே 200 ரூவா செலவாகிடும். கடந்த 20 வருஷங்கள்ல ஒருநாள்கூட இதுங்களுக்கு சிக்கன் கொடுக்க நான் தவறினதில்லை.

மீனாட்சி
மீனாட்சி

ஒருநாள் விட்டு ஒருநாள் எல்லாத்துக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பேன். எத்தனையோ நாள்கள் சரியான தூக்கம், சாப்பாடு இல்லாம நான் தவிச்சிருந்தாலும், முடிஞ்ச வரைக்கும் இவங்களுக்கு நான் குறையேதும் வெச்சதில்லை. பெரிசா கவனிப்பில்லாம, நிலையான வாழ்நாள் இல்லாத இந்த நாய்களை, என்கிட்ட வாழுற வரைக்குமாச்சும் நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். அதனாலதான் என் சக்திக்கு மீறி செலவு பண்றேன். நிலாவைக் காட்டியெல்லாம் இதுங்களுக்குச் சாப்பாடு ஊட்டியிருக்கேன். இதுங்களையெல்லாம் என் குழந்தைங்களா நினைச்சுத்தான் வளர்க்கிறேன்" கண்கள் கசியக் கூறும் மீனாட்சி, நாய்களின் நலனுக்காகவே திருமணம் உள்ளிட்ட தனக்கான சுகங்கள் பலவற்றையும் தியாகம் செய்திருக்கிறார்.

பெண் நாய் ஒன்று, மீனாட்சியின் கால்களையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அதனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டவர், "இவ பேரு க்யூட்டி. ரோட்டுல ஆதரவில்லாம அடிப்பட்டுக்கிடந்த இவளை ஆறு மாதங்களா வளர்த்துகிட்டிருக்கேன். என்கிட்ட வளர்ற ஒவ்வொரு நாய்க்கும் இப்படி வெவ்வேறு கதைகள் இருக்கு. இதுங்களுக்கு உடம்பு சரியில்லைனா, வைத்தியம் பார்க்க ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடுவேன். இவங்கள்ல யாராச்சும் இறந்துட்டா, மயானத்துக்குக் கொண்டுபோய் முறையா காரியம் பண்ணிடுவேன்.

க்யூட்டியுடன் மீனாட்சி
க்யூட்டியுடன் மீனாட்சி

தவறுதலா நாய்கள் என்னைக் கடிக்கிறது ரொம்பவே வாடிக்கை. வருஷத்துல சில முறையாச்சும் கடி வாங்கி, நானும் தடுப்பூசி போட்டுக்க வேண்டிய நிலை வரும். தினமும் காலையில எல்லா நாய்களுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு வேலைக்குப் போவேன். அப்புறமா பதினொரு மணிவாக்குல வீட்டுக்கு வந்து எல்லோரும் அமைதியா இருக்காங்களான்னு கவனிப்பேன். வேலை முடிஞ்சு சாயந்திரம் நாலு மணிக்கு வீட்டுக்கு வந்தா, நள்ளிரவு வரைக்கும் நாய்களுக்கான தேவைகளைக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும். எனக்கு எவ்ளோ கஷ்டம் வந்தாலும், உடம்பு சரியில்லாம இருந்தாலும், இவங்களையெல்லாம் வளர்க்க நான் எந்தச் சிரமமும் பார்த்ததில்லை" பரிவும் பாசமுமாகக் கூறுபவருக்கு வயது 40.

"இவங்களைக் கவனிச்சுக்கணும்னு எங்கயுமே நான் போக மாட்டேன். நடந்துபோகிற தூரத்திலேருக்கிற கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போகவே, எப்பயாச்சும்தான் நேரம் கிடைக்கும். மத்தபடி, என் நாய்களைத் தாண்டி, வெளியுலகமே எனக்குப் பெரிசா தெரியாது. நான் இருக்கிற வரைக்குமாச்சும் என் நாய்களை நல்லபடியா பார்த்துக்க ஆசைப்படுறேன். ஆனா, வறுமை அதுக்குப் பெரிய சவாலா இருக்குது. எனக்குத் தெரிஞ்ச சிலரும் நாய் வளர்ப்புக்கு முடிஞ்ச உதவிகளைச் செய்யுறாங்க.

நாயுடன் மீனாட்சி
நாயுடன் மீனாட்சி

இப்போதைய கஷ்ட ஜீவனத்தை நினைச்சு எந்த வகையிலயும் நான் குறைப்பட்டுக்கலை. ஆனா, இதைவிட நல்லதா எனக்கு ஒரு வீடு இருந்துச்சுன்னா, என் நாய்களை இன்னும்கூட செளகர்யமா என்னால வளர்க்க முடியும். ஆண்டவன் (கபாலீஸ்வரர்) என்ன கணக்குப் போட்டு வெச்சிருக்கான்னு தெரியலை. எதுன்னாலும், சந்தோஷமா ஏத்துப்பேன்" க்யூட்டியை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தவாறே கூறும் மீனாட்சி, நம்மை வழியனுப்பிவிட்டு, வீட்டுக்குள் இருக்கும் நாய்களைக் கவனிக்கச் சென்றார்.

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism