Published:Updated:

டேட்டிங் ஆப்கள் எப்படித் தூண்டுகின்றன? பிரச்னைகள், தீர்வுகள் என்னென்ன?

டேட்டிங்
டேட்டிங்

"மற்றவர்களின் ஆலோசனையில்லாமல் ஒரு விஷயத்தை சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துங்கள்" - வரையறை சொல்லும் நிபுணர்!

'லவ் எல்லாம் இல்ல, ஒன்லி டேட்டிங். பழகிப் பார்ப்போம். பிடிச்சா அடுத்த கட்டத்துக்குப் போறது பத்தி யோசிக்கலாம். இல்லைனா பை-பை' என்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாக இந்தக் காலத்து இளைஞர்களின் மத்தியில் கேட்க முடிகிறது. இன்னொரு பக்கம், 'நம்ம கலாசாரம் என்ன? பாரம்பர்யம் என்ன? இப்படி யோசிக்கிறதே தப்பு...' என்று பதறுகின்றன குடும்பங்கள்.

Dating is a Fantasy
Dating is a Fantasy

'டேட்டிங் இஸ் எ ஃபேன்டஸி' என்று நுனிநாக்கில் வராத ஆங்கிலத்தில் பேசி பீட்டர் விட்டு, அந்நிய நபர்களைச் சந்தித்துப் பேசுவது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் சாதாரண விஷயம். மக்களிடையே எளிதாகப் பரவிவரும் இந்த டேட்டிங் கலாசாரத்திற்கு உறுதுணையாக, ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன.

இதுபோன்ற செயலிகளால், நம்மை சாதாரணமாகக் கடந்து போகிறவர்களின் முகவரிகளைக்கூட எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அந்த அளவுக்கு பிரைவஸி இல்லாமல் போயிருக்கும் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில், நமக்கான பாதுகாப்பை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற குறிப்போடு, டேட்டிங் செயலிகளின் தாக்கம் மற்றும் அவற்றை எப்படிப் பாதுகாப்பாக உபயோகிக்கலாம் என்பதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார், மனநல ஆலோசகர் சுசித்ரா.

Doctor Suchithra
Doctor Suchithra

டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தத் தூண்டுவது எது?

இந்தக் காலத்தில், மனிதனின் மன இணைப்பைவிட ஃபேஸ்புக்கின் முக இணைப்புதான் அதிகம். குடும்ப உறவுகளுக்குள் மனம்விட்டுப் பேசுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. குடும்பத்தின் அரவணைப்பு சரியாக இருந்தால் நிச்சயம் பகிர்தல் இருக்கும். இதனால், அவர்களுக்கு வேறொரு நபரின் ஆறுதலோ, அதற்கான தேடலோ பெரும்பாலும் தேவைப்படாது.

Dating apps
Dating apps

இப்படிப் பகிர்ந்துகொள்ள முடியாத தருணங்களில், அதிலும் பதின்பருவத்தில் இருப்பவர்கள், தங்களின் எண்ண ஓட்டத்தில் இணையும் வேறொரு நபரைத் தேடுகின்றனர். இந்தத் தேடுதலை ஏராளமான சமூக வலைதள செயலிகள் சாத்தியப்படுத்தித் தருகின்றன. இப்படித்தான் வலைதளங்களில் முகம் தெரியாத நபர் என்றாலும் தங்களுக்குப் பிடித்த பார்ட்னரைத் தேர்ந்தெடுத்து நட்பில் இணைகின்றனர்.

செயலிகள் மூலம் கிடைக்கும் நட்போடு தங்களின் எண்ணங்களைப் பகிர்வதால், அவர்களுக்கான தேடல் நீங்கி நிம்மதி கிடைக்கிறதா?

டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துபவர்களின் தேவை எமோஷனல் ஃபுல்ஃபில்மென்ட்(emotional fulfilment) மட்டுமே. நம் ஒவ்வொருவருக்குள்ளும் எமோஷனல் கப் இருக்கும். அந்தக் கோப்பையை முழுமையடையச் செய்வது, முழுக்க முழுக்க நம்முடைய பொறுப்பு. சந்தோஷம் முதல் வருத்தம் வரை, நமக்குள் ஏற்படும் அத்தனை விதமான உணர்வுகளுக்கும் நாம்தான் முதன்மைக் காரணம். இதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

Couple
Couple

ஆனால், பெரும்பாலான மக்கள் அப்படி நினைப்பதேயில்லை. நமக்கான சந்தோஷம் நாம் பழகும் நபரிடம்தான் இருக்கிறது என்று நம்புகின்றனர். இந்தத் தவறான நம்பிக்கையே மற்றவர்களை தேடிச் செல்லவைக்கிறது; அவர்கள் என்றும் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்ற மனநிலையை உருவாக்குகிறது. இது, ஏராளமான மனப் பிரச்னைகளுக்கு வழிவகுக்குமே தவிர, நிம்மதி கொடுக்காது. அப்படியே நிம்மதி கொடுத்தாலும், அது தற்காலிகமானதே.

இதனால் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

சமூக வலைதள செயலிகளைப் பாதுகாப்போடு உபயோகித்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வேறொரு பிரச்னையைச் சரிசெய்வதற்காகவோ, அதிலிருந்து மீண்டு வருவதற்காகவோ இதுபோன்ற செயலிகளை உபயோகிப்பது, எதிர்பாராத மனஅழுத்தத்தைக் கொடுக்கும். இந்தச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போதே, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தோன்றும்.

Online Dating
Online Dating

அவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டவர்களுக்கும், தங்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி யோசிப்பவர்களுக்கும் பெரும்பாலும் இந்தச் செயலிகளால் சிக்கல் இல்லை. சென்சிட்டிவ் மனநிலையில் இருப்பவர்களுக்குத்தான் பிரச்னையே. கவனமே மருந்து.

யாரெல்லாம் இந்தச் செயலியைப் பயன்படுத்தவே கூடாது?

தனிமையில் இருப்பவர்கள் மற்றும் தங்களைத் தாழ்வாக உணர்வோர் இதுபோன்ற செயலிகளை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. 'யார்கூடவாவது பேசியே ஆகணும்' என்று நினைத்துப் பயன்படுத்துபவர்கள், ஜாக்கிரதை. ஏனென்றால், எதிர்முனையில் இருப்பவர்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது.

``உங்கள் பிரைவெட் தகவல்களைப் பகிர்கின்றனவா டேட்டிங் ஆப்கள்?"  -சர்வேயில் அதிர்ச்சித் தகவல்

இதுபோன்ற மேற்கத்திய கலாசார முறைகளைப் பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

டேட்டிங்கைப் பொறுத்தவரை, அவர்களின் உறவின் தொடக்கத்திலேயே எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடுவது நல்லது. சாதாரண டேட்டிங்கில் ஆரம்பித்து திருமணத்தில் முடிந்த ஜோடிகளும் ஏராளம். எல்லாமே அவரவர்களின் புரிந்துணர்வுகளில்தான் உள்ளன. நமக்கான எல்லைகளை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வில் ஒருவருக்கு எதுவரை இடம் கொடுக்க வேண்டும் என்ற எல்லைக்கோட்டை தனிநபராக நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

Woman
Woman

வேறொருவரின் வற்புறுத்தல்களால் எடுக்கும் முடிவுகள் தவறாக முடியும். குறிப்பாக, பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்தது. தங்களை நெருங்கும் ஆண்களிடம், தங்கள் வாழ்க்கையில் அந்த ஆணுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள இடம் எது என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்லிப் புரியவைப்பது அவசியம். மற்றவர்களின் ஆலோசனையில்லாமல் ஒரு விஷயத்தைச் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தவும்.

அடுத்த கட்டுரைக்கு