Published:Updated:

`கிறிஸ்துமஸ் அன்று எங்களுக்கு சாப்பிட உணவு கிடைக்குமா?' - வைரலாகும் லண்டன் சிறுமியின் வேதனை

தனக்கு பொம்மை வாங்கித் தருகிற அளவுக்கு தன் பெற்றோரிடம் பணமில்லை என்று ஒரு குழந்தைக்குத் தெரிவது எத்தனை வேதனை?

சிறுமியின் கடிதம்
சிறுமியின் கடிதம் ( twitter.com/L6Centre )

சில கடிதங்கள் நம் கண்களுடன் சேர்த்து இதயத்தையும் கலங்கவைத்துவிடும். குழந்தைமை நிறைந்த கர்சீவ் ரைட்டிங்கில், `டியர் ஃபாதர் கிறிஸ்துமஸ்' என்று விளித்து எழுதப்பட்ட அந்தக் கடிதம், அப்படியோர் உணர்வைத்தான் படிப்பவர்களின் மனங்களுக்குள் கடத்தியபடி வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் லண்டன், லிவர்பூலைச் சேர்ந்த 7 வயது சிறுமி.

சிறுமியின் வேதனை
சிறுமியின் வேதனை
representational image

கிறிஸ்துமஸ் வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதமே இருக்கிற நிலையில், லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் கலர்ஃபுல்லாக ஆரம்பித்துவிட்டன.  அதில் ஒன்றாக, அங்கிருக்கும் கம்யூனிட்டி சென்டர் ஒன்றில், கிறிஸ்துமஸ் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெட்டிக்குள், குழந்தைகள் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை எழுதிப் போடலாம். அல்லது 'எனக்கு பெரிய்ய்ய... டெடி வேணும் சாண்டா' என்பதுபோல தங்கள் ஆசைகளையும் எழுதிப் போடலாம்.

அழகழகான வாழ்த்துச் செய்திகளுக்கு இடையே, லிவர்பூலைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் கடிதம் மட்டும், 'அன்புள்ள சாண்டா, இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று எங்களுக்கு வீடு கிடைக்குமா, எங்களுக்கு சாப்பிட கொஞ்சம் உணவு தர முடியுமா, எனக்கு அழகான பொம்மை மட்டும் போதும்' என துயரம் நிரம்பிய வார்த்தைகளுடன் இருந்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் தீவில் சிறை; இலங்கை அச்சுறுத்தல்! 
- ஆஸ்திரேலிய அரசால் அல்லல்படும் தமிழ்க் குடும்பம்

கிறிஸ்துமஸ் பெட்டியைத் திறந்த அந்தப் பகுதியின் மேயர், ''அந்தக் கடிதத்தைப் படித்ததும் என் மனம் கனத்துப்போய்விட்டது. உணவுக்கும் தங்கும் இடத்துக்கும் ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு வேதனையான உண்மை.  தனக்கு பொம்மை வாங்கித் தருகிற அளவுக்கு தன் பெற்றோரிடம் பணமில்லை என்று ஒரு குழந்தைக்குத் தெரிவது என் வேதனையை இன்னும் அதிகப்படுத்துகிறது. உலகமே மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, 7 வயது குழந்தை வருத்தமாக இருப்பது நல்ல விஷயம் கிடையாது'' என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்ததோடு, சிறுமியின் கடிதத்தைத் தன் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார். கடிதம் வைரலாக, தற்போது அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கு உதவிகள் குவிந்துவருகின்றன.