Published:Updated:

`தீபாவளியைவிட எங்க கல்யாணத்தைக் கொண்டாட மனநலக் காப்பகமே காத்துட்டு இருக்கு!'- மகேந்திரன் - தீபா!

மகேந்திரன் - தீபா

42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் காதலித்து வருகிற வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். அதிலென்ன புதுமை என்கிறீர்களா? கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இருவரும் சிகிச்சை பெற்று குணமாகி அங்கேயே பணி செய்து வருகிறார்கள்.

`தீபாவளியைவிட எங்க கல்யாணத்தைக் கொண்டாட மனநலக் காப்பகமே காத்துட்டு இருக்கு!'- மகேந்திரன் - தீபா!

42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் காதலித்து வருகிற வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். அதிலென்ன புதுமை என்கிறீர்களா? கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இருவரும் சிகிச்சை பெற்று குணமாகி அங்கேயே பணி செய்து வருகிறார்கள்.

Published:Updated:
மகேந்திரன் - தீபா
`வயது கடந்து அதே துள்ளலோடு உள்ளத்தை இறுகப் பற்றிக் கொள்ளும் ஆற்றல் காதலுக்கு உண்டு!' அப்படித்தான் அந்தக் காதல் மகேந்திரனையும், தீபாவையும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. 42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் காதலித்து வருகிற வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அதிலென்ன புதுமை என்கிறீர்களா?

கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இருவரும் சிகிச்சை பெற்று குணமாகி அங்கேயே பணி செய்து வருகின்றனர். நம்மைப் போல இயல்பான வாழ்க்கையை அவர்களால் வாழ்ந்திட முடியாது என்ற சமூகத்தின் பொதுபுத்தியை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் மகேந்திரன், தீபாவைச் சந்தித்தோம்.

மகேந்திரன் - தீபா
மகேந்திரன் - தீபா

`என்னோட அம்மாவின் சாயலை நான் தீபாவிடம் பார்த்தேன். அவங்களைப் பார்த்த நொடியே இவங்க தான் இனி என் வழித்துணை என்கிற முடிவை எடுத்துட்டேன்!' என்றவாறு பேசத் தொடங்கினார் மகேந்திரன்.

``என்னோட சொந்த ஊர் சென்னை. நான் பி.காம் எம்பிஇ, எம்பில், பிஜிடிசிஏ முடிச்சிருக்கேன். அதிகப்படியான கோபம், மனஅழுத்தம் காரணமா கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் ரெண்டு வருஷமா ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். எனக்கு அம்மா, அப்பா, கூடப் பொறந்தவங்கன்னு யாருமில்லை. சொந்த பந்தங்களும் என் கோபத்துனால என்னை சேர்த்துக்கத் தயாராக இல்லை. அதனால, ட்ரீட்மென்ட் எடுத்துட்டு குணமாகிட்டு இங்கேயே டேகேரில் ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசராக ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். நான் டே கேரில் இருந்தப்ப ட்ரீட்மென்ட்டிற்காக தீபா வந்தாங்க. அவங்களைப் பார்த்ததுமே எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துடுச்சு. ஏன்னா, தீபா டீச்சர். என் அம்மாவும் பிரின்சிபலாக இருந்தவங்கதான்! அதனால அப்பவே அவங்களை எனக்குப் பிடிச்சிருந்தது. என் ஃபோன் நம்பரை எழுதி அவங்ககிட்ட கொடுத்தேன். அவங்க மறுநாள் ஃபோன் பண்ணியிருந்துருப்பாங்க போல என் நம்பர் ஸ்விட்ச் ஆஃப்னு வரவும், `ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க!'ன்னு கேட்டாங்க. அப்பவே அவங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு எனக்குப் புரிஞ்சது" என்றதும் தீபா தொடர்ந்தார்.

``நான் எம்ஏ, பிஎட் முடிச்சிட்டு டீச்சராக ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். என் அப்பா இறந்த செய்தி கேட்டு மன அழுத்தத்துக்குள்ளே போயிட்டேன். அப்புறமா இங்க ரெண்டு வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்து குணமாகி இங்கேயே cafe r'vive-ல் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். குணமாகி வீட்டுக்குப் போனேன். ஆனா, அங்க இருக்க முடியல. வேலை காரணமா மறுபடியும் இங்கேயே வந்துட்டேன். இவரை முதன்முறை சந்திச்சப்பவே இவர் என்கிட்ட லவ் யூன்னுலாம் சொல்லலை. நேரடியா, `நாம கல்யாணம் பண்ணிக்கலாமா!'ன்னு தான் கேட்டார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சில பர்சனல் காரணங்களால் என்னால உடனே ஓகே சொல்ல முடியல. ஒரு ஆறு மாசம் கழிச்சு அவருக்கு ஓகே சொன்னேன்" என்றதும் மகேந்திரன் தொடர்ந்தார்.

மகேந்திரன் - தீபா
மகேந்திரன் - தீபா

``நாங்க காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம்னு மனநல காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா மேடம்கிட்ட சொன்னதும் அவங்க எங்களுக்குள்ள என்னென்ன விஷயத்தில் சண்டை வரும். அதை நாங்க எப்படி பாசிட்டிவ் ஆக எடுத்துட்டு போகணும்னு எல்லாமே சொல்லி அட்வைஸ் பண்ணினாங்க. எங்க ரெண்டு பேருடைய வீட்டிலும் பேசி IMH சார்பாக திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தாங்க. நாங்களும் எல்லார் மாதிரியுமான ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம். எங்களுடைய கோபத்தை விடவும் எங்கள் காதலுக்கு வீரியம் அதிகம்" என நிரூபித்துக் காட்டுவோம் எனப் புன்னகைக்க தீபா தொடர்ந்தார்.

``சாகுற வரைக்கும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்... சாகுறப்ப கூட சேர்ந்தே சாகணும் அதுதான் எங்க கனவு. நாங்க நல்லா வாழ்ந்து காட்டி எல்லாருக்கும் முன்னுதாரணமா இருக்கணும்னு ஆசைப்படுறோம். தீபாவளியை விட எங்க கல்யாணத்தை சிறப்பா செலிபரேட் பண்ண இந்த மருத்துவமனையிலுள்ள எல்லாரும் ஆவலா இருக்காங்க.. நாங்களும்தான்!" என்றதும் அவருக்காக `எனக்கொரு ஆசை' பாடலை மகேந்திரன் பாட மேகம் குளிர்ந்து மழைக்காற்று வீசத் தொடங்கியது.

இது குறித்து அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம்.

பூர்ண சந்திரிகா
பூர்ண சந்திரிகா

``எல்லார் மாதிரியும் எங்களுக்கும் இது ரொம்பவே ஸ்பெஷல்! நாங்க யாருமே இதை எதிர்பார்க்கவும் இல்ல. மகேந்திரன், தீபா ரெண்டு பேரும் இங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இங்கேயே ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. ஒருநாள் ரெண்டு பேரும் லேட்டா வராங்க.. வெளியே போறாங்கன்னு கேட்டதும் நானும் கூப்பிட்டு வார்ன் பண்ணி அனுப்பிட்டேன். அடுத்து மூணு நாள் கழிச்சு அவங்க கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்றாங்கன்னு சொன்னாங்க. சரின்னு அவங்களை கூப்பிட்டு பேசினேன். தீபா ரொம்பத் தெளிவா, `இவர் எனக்குப் பொறுத்தமானவர் கடைசி வரைக்கும் என்னை நல்லா பார்த்துப்பார்னு நம்புறேன்னு!' என்கிட்ட சொன்னா. அதுக்கப்புறமாகத்தான் நாம இவங்களுக்கு சப்போர்ட் பண்ணாம யார் பண்ணுவாங்கன்னு ரெண்டு பேருடைய வீட்டிலும் பேசி திருமண ஏற்பாடு பண்ணினோம். எங்க மருத்துவமனையிலுள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்யலாம்னும் எம்எல்ஏ வெற்றி அழகன் தலைமையில் கல்யாணம் பண்ணலாம்னும் முடிவெடுத்தோம். IMH எல்லாரும் தீபாவளியை விட இந்த கல்யாணத்துக்கு ரொம்பவே ஆர்வமா இருக்காங்க. ஒவ்வொருத்தரும் நான் இது வாங்கிக் கொடுக்கிறேன், அது வாங்கிக் கொடுக்கிறேன்னு நம்ம வீட்டு விஷேசம்னு ரொம்ப ஆர்வமா பல விஷயங்கள் பண்ணிட்டு இருக்காங்க. பல நல்ல உள்ளங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்த்தப் போறோம்.. அதே மாதிரி நீங்களும் சேர்ந்து வாழ்த்துவீங்க என்கிற நம்பிக்கையில் நாங்க!" என்றார்.

அன்பு வாழ்த்துகள் மகேந்திரன் - தீபா; இருவரின் கதையை வீடியோ வடிவில் காண - லிங்க்