Published:Updated:

“அதையும் தாண்டி புனிதமானது...” - கேரள தம்பதியின் சினேக கதா!

ஸ்ருதி - பாதுஷா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ருதி - பாதுஷா

காதலர் தின ஸ்பெஷல்

“அதையும் தாண்டி புனிதமானது...” - கேரள தம்பதியின் சினேக கதா!

காதலர் தின ஸ்பெஷல்

Published:Updated:
ஸ்ருதி - பாதுஷா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ருதி - பாதுஷா

“குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இவரை நான் கரம்பிடிச்சப்போ, ‘எங்க மகளை உன்னால சந்தோஷமா பார்த்துக்க முடியாது’னு என் பெற்றோர் இவரைத் திட்டினாங்க. கல்யாண வாழ்க்கையில அடியெடுத்து வெச்சதிலேருந்து நாங்க சந்திச்ச பெரிய போராட்டங்களையெல்லாம் இலகுவா கடக்க உதவின இவரோட காதலும் அன்பும்தான், ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்கான நிறைவைக் கொடுத்திருக்கு. இப்போ என் பெற்றோருக்கு, என்னைவிடவும் இவரைத்தான் ரொம்ப பிடிக்கும்...” கணவர்மீதான அன்பில் கசிந்துருகுகிறார் ஸ்ருதி. புன்னகையின் வழியே காதலைக் கடத்துகிறார், ராணுவ வீரரான கணவர் பாதுஷா.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், இருவீட்டுப் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். ஸ்ருதிக்கு ஏற்பட்ட புற்று நோய் பாதிப்பால், இவர்களின் இல்லறத்தில், வருத்தம் சூழாமல் தடுத்திருக்கிறது பாதுஷாவின் அரவணைப்பு. சிகிச்சை முடியும்வரை மனைவி யுடன் தானும் தன் தலைமுடியை ஷேவ் செய்துகொண்ட இவரின் நேசம் பலரையும் நெகிழ வைத்தது. கேரளா மற்றும் காஷ்மீரிலிருக் கும் இருவரிடமும் வீடியோகாலில் பேசினோம்.

“காலேஜ் வரைக்குமே நான் பெரிய சிரமம் ஏதுமில்லாம வளர்ந்தேன். ஆனா, பல வேலைகளுக்குப் போய் சின்ன வயசுலேருந்தே இவர் குடும்ப பாரத்தைச் சுமந்தார். இவரும் நானும் காலேஜ்ல கிளாஸ்மேட்ஸ். அடிக்கடி லீவ் எடுத்துகிட்டு வெளிவேலைக்குப் போயிடுவார். அதனால, நோட்ஸ் கொடுத்துப் பாடமும் சொல்லிக்கொடுப்பேன். இதனால, எங்க நட்பு பலமாச்சு, அப்புறம் காதலாச்சு” என்று ஸ்ருதி நிறுத்த, காதலால் எதிர்ப்புகள் வலுத்த அத்தியாயத்தைப் பகிர்ந்தார் பாதுஷா.

“முதல் வருஷத்தோடு படிப்பைத் தொடர முடியாம வேலைக்குப் போனேன். கூடவே, ராணுவத்துல சேரும் என் கனவுக்காகவும் தயாரானேன். அதுக்கான தேர்வுக்கும், ஸ்ருதி தான் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பாங்க. பி.காம் முடிக்கும்போது ஸ்ருதி வீட்டுல எங்க காதல் தெரிஞ்சு பெரிய பிரச்னையாகிடுச்சு. என்னைச் சந்திக்க முடியாதபடி இவங்க வீட்டுல நிறைய கட்டுப்பாடுகள். 2016-ல் ராணுவ வேலைக்குத் தேர்வானதும், ஸ்ருதி வீட்டுக்குப் போய் பொண்ணு கேட்டேன். நான் முஸ்லிம். ஸ்ருதி இந்து. அதனால, எங்க காதலுக்கு அவங்க வீட்டுல பலத்த எதிர்ப்பு. செகந்திராபாத்துல நான் ராணுவப் பயிற்சியில இருந்தப்போ, போன் வழியே யாருக்கும் தெரியாம ரகசியமா காதலை வளர்த்தோம். இந்த நிலையில ஸ்ருதிக்கு அவங்க வீட்டுல தீவிரமா வரன் தேடிட்டிருந்தாங்க. எங்க காதல் விவகாரம் பெரிசாகி போலீஸ் ஸ்டேஷன்வரை போயிடுச்சு. கலப்புத் திருமணத்துக்கு எங்க வீட்டுலயும் எதிர்ப்புதான். அவங்கவங்க மதத்திலிருந்து மாறவே கூடாதுனு நாங்க உறுதியா இருந்ததால, வீட்டைவிட்டு வெளி யேறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...’’ என்கிற பாதுஷா, மகிழ்ச்சியுடன் மண வாழ்க்கையை ஆரம்பித்த ஒரே மாதத்தில், புற்றுநோய் பாதித்து உடைந்துபோன ஸ்ருதிக்கு, எல்லாமாக இருந்திருக்கிறார்.

“எனக்கு நிணநீர் சுரப்பியில (Lymphoma) நாலாவது ஸ்டேஜ் கேன்சர் இருந்துச்சு. கீமோதெரபி சிகிச்சையால் ஏற்படுற ரணத்தை இப்ப நினைச்சாலும் வேதனைதான். சிகிச்சை எடுக்க மனசில்லாம வீட்டுல முடங்கினப்போ, கேன்சர் பத்தி எனக்கு முழுமையா புரிய வெச்சார் என் கணவர். யார் என்ன நினைச் சாலும், தலைமுடி இல்லாட்டியும் இயல்பாவும் சந்தோஷமாவும் வாழும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். சிகிச்சை முடியும்வரை , தன் தலைமுடியையும் ஒரு வருஷத்துக்குத் தொடர்ந்து ஷேவ் பண்ணிகிட்டார். வெளித் தோற்றம் எப்படியிருந்தாலும் மனசுதான் எல்லாத்தையும்விட உயர்வானதுனு எனக்கு உணர்த்தினார்.

“அதையும் தாண்டி புனிதமானது...” - கேரள தம்பதியின் சினேக கதா!

எனக்கான எல்லா பணிவிடைகளையும் கூச்சம் பார்க்காம செஞ்சார். கேன்சர்லேருந்து குணமான நிலையில, வெளியூர்களுக்குக் கூட்டிட்டுப்போய் மன பாரம் மொத்தத்தையும் போக்கினார். இதுக்கிடையே எங்களோட பாசத்தைப் புரிஞ்சுகிட்டு ரெண்டு வீட்டாரும் எங்களை முழுமனசோடு ஏத்துகிட்டாங்க” என்கிற ஸ்ருதியின் உற்சாகத்தில் இவர் களுடைய இல்லற வாழ்க்கையின் இனிமை பிரதிபலிக்கிறது.

“கேன்சர் வந்தா வாழ்க்கையே முடிஞ்சுடுச் சுங்கிற எண்ணம் இன்னும்கூட பலருக்கும் இருக்கு. குறிப்பா, சிகிச்சையின்போது முடி இழப்பை பெரும்பாலான பெண்கள் ஏத்துக்க சிரமப்படுறாங்க. மத்தவங்க கேலிகிண்டலுக்காக விக் வெச்சுக்கிட்டாலும், அதுலயும் ஒருவித வருத்தத்தை உணர்வாங்க. முடியில்லாத தோற்றத்தை நாம முழுசா ஏத்துக்கிட்டா, எந்தச் சூழல்லயும் நமக்கு வருத்தம் ஏற்படாது”

- தன் பாசிட்டிவிட்டியை மனைவிக்கும் கடத்திய பாதுஷா, ஜம்மு காஷ்மீரில் பொதுப் பிரிவு ராணுவ அதிகாரியாகப் பணியாற்றுகிறார். ஸ்ருதி, அரசுப் பணிக்குத் தயாராகிறார்.

“ஏழு மாச கர்ப்பத்துலயே எனக்குக் குறைப்பிரசவமாயிடுச்சு. ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில, போன வருஷம் பொண்ணு பிறந்து இப்போ நல்லாருக்கா. கல்யாணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒருத்தர்மேல ஒருத்தர் காட்டுற அன்புலதான் உண்மையான காதல் இருக்குங் கிறதை ஆழமா எனக்குப் புரிய வெச்சிருக்கார் என் கணவர்” - ஸ்ருதியின் குரலில் பெருமிதம் இழையோட, பாதுஷாவின் முகமெல்லாம் பூரிப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism