Published:Updated:

“கைகள் கேட்டேன்... காதல் தந்தனை...” - இது கேரள தம்பதியின் சினேஹ கதா

 ஸ்ரீஜா - மனு
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீஜா - மனு

இணைந்த கைகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட மனுவுக்கு அந்த விபத்தில் கைகள் நசுங்கின. கைமாற்று அறுவைசிகிச்சைக்குச் சென்ற மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய ஸ்ரீஜா, வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை மனுவுக்குப் புரிய வைத்திருக்கிறார். சிகிச்சை முடிவில் மனுவுக்குக் கைகளுடன் காதலும் கூடியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த இவர்கள் தற்போது ஆதர்ச தம்பதியர். தங்கள் காதல் திருமண வாழ்க்கையைப் பகிரும் இருவரின் முகங்களிலும் அன்பு ஆர்ப்பரிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“டிப்ளோமா முடிச்சுட்டு தனியார் வேலையில் இருந்தேன். 2013-ல் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரயில்ல போயிட்டிருந்தேன். நான் பயணிச்ச பெட்டியில சில இளைஞர்கள் சிகரெட் பிடிச்சுட்டிருந்தாங்க. ‘ஓடுற ரயில்ல புகை பிடிக்கிறது ஆபத்தானது’ன்னு நான் உட்பட பயணிகள் பலரும் பலமுறை சொன்னோம். அந்த இளைஞர்கள் கண்டுக்கவேயில்லை. ரயில்வே போலீஸார் கிட்ட புகார் செய்தேன். அது அந்த இளைஞர்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. நள்ளிரவு 1 மணி. நான் படிக்கட்டுப் பக்கம் வந்தபோது ரயிலில் இருந்து என்னைத் தள்ளிவிட்டுட்டாங்க. சக்கரங்கள் ஏறியதால் கைகள் நசுங்கி, கால்கள் உடைந்த நிலையில் அடர்ந்த காட்டுக்குள் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராட்டிருந்தேன். அந்த வழியே வந்த மீனவர்கள், போலீஸுக்கு தகவல் தெரிவிக்க உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். சில தினங்களுக்குப் பின்னர் கண் முழிச்சேன். ரெண்டு கைகளும் துண்டிக்கப்பட்டதை உணர்ந்து துடிச்சேன். தற்கொலையைக்கூட சுயமா செய்துக்க முடியாத நிலை. ஆறு மாச சிகிச்சைக்குப் பிறகு, வீடு திரும்பினேன். வாழ்க்கை மீதான பிடிப்பே இல்லாமதான் இருந்தேன்”

- கசப்பான நினைவுகளைப் பகிரும் மனுவின் குரல் தளர்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து எர்ணாகுளத்திலுள்ள அமிர்தா மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மனு. அதே வார்டில் செவிலியராகப் பணியாற்றிய ஸ்ரீஜாவைச் சந்தித்த பிறகு, இவரது வாழ்க்கையே நேர்மறை எண்ணங்களுடன் திசைமாறியிருக்கிறது. அப்போது மலர்ந்த தங்கள் காதல் அத்தியாயத்தை விவரிக்கும் ஸ்ரீஜாவின் முகத்தில் வெட்கம் படர்கிறது.

 ஸ்ரீஜா - மனு
ஸ்ரீஜா - மனு

“மூளைச்சாவு ஏற்பட்ட ஓர் ஆணின் கைகளைத் தானமாகப் பெற்று இவருக்குப் பொருத்தினாங்க. இது மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சை. எனவே, ஆஸ்பத்திரியில் ஓராண்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். இவருடைய மருத்துவ தேவைகளை நான்தான் கவனிச்சுக்கிட்டேன். நிறைய பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துப்போம். ஒருகட்டத்தில் எங்களுடைய நட்பு காதலானது. சிங்கிள் பேரன்ட்டான என் அப்பாவும், இவர் குடும்பத்திலும் எங்கக் காதலை ஏத்துகிட்டாங்க.

ஓராண்டு மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு, ‘இன்னும் ஒரு வருஷம் இவரின் உடல்நிலை மாற்றங் களைக் கண்காணிக்கணும். அதுக்குப் பிறகு, கல்யாணம் செய்துக்கிறது சரியானது’ன்னு மருத்துவர்கள் சொன்னாங்க. ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் எங்க காதல் தெரியவே, இவர் வெளியிடத்தில் வேலை தேடி சிரமப்பட வேண்டாம்னு நினைச்சாங்க. மருத்துவமனை நிர்வாகியான மாதா அமிர்தானந்தமயி அம்மா, இவரை அழைச்சு வாழ்த்துச் சொல்லி இதே ஆஸ்பத்திரியிலேயே வேலை கொடுத்தாங்க. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வர்றவங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் கவுன்சலிங் ஆலோசகரா வேலை செய்யறார்” என்று புன்னகையுடன் கூறுகிறார் ஸ்ரீஜா.

இருவருக்கும் 2017-ல் திருமண மாகியுள்ளது. இரண்டு வயதில் மகன் இருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் ஸ்ரீஜாவுக்கு இரண்டாவது பிரசவம் நடைபெறவுள்ளது.

“நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்பதால அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு இவர் போகக் கூடாது. வாழ்நாள் முழுக்க மாத்திரைகள் எடுத்துக்கணும். மத்தபடி எந்தச் சிக்கலும் இல்லை. தனக்கான தேவை களைச் சுயமா செய்துப்பார். வாகனம் ஓட்டுவார், விவசாய வேலைகள் செய்வார், சூப்பரா சமைப்பார், வீட்டு வேலைகளில் உதவுவார். ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலேயே வாடகை வீட்டில் வசிக்கிறோம். சந்தோஷமா இருக்கோம்”

- ஸ்ரீஜாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

“கைகள் இல்லாத நிலையில் நல்ல வாழ்க்கைத்துணை கிடைப்பாங் களான்னு வருத்தப்பட்டேன். ஸ்ரீஜா மாதிரி நல்ல மனைவி கிடைக்கத்தான், அந்த விபத்தே நடந்ததோன்னு பாசிட்டிவ்வா நினைச்சுப்பேன். ‘வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்’னு யாரும் எதுக்கும் கலங்காதீங்க. எல்லாம் நன்மைக்கேனு எடுத்துப்போம். நல்லது நிச்சயம் கைகூடும்”

- நம்பிக்கை வார்த்தைகள் கூறும் மனு, மனைவியின் கரம் பற்றிச் சிரிக்கிறார்.