Published:Updated:

``விருது நிகழ்ச்சிக்கு என் மனைவியையும் அழைத்து வரலாமா?" - நிருபரிடம் அனுமதி கேட்ட இர்ஃபான் கான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடிகர் இர்ஃபான் கான்
நடிகர் இர்ஃபான் கான் ( facebook.com/irrfanofficial )

இர்ஃபானின் மறைவுக்குப் பிறகு சுதபா வெளியிட்டிருக்கும் கண்ணீர் சிதறிய அறிக்கை பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அதற்குப் பின் உள்ள அவர்களின் நேசம்... ஒரு காவியம்.

உலகமே ஒரே சக்கரத்தில் சுழன்றுகொண்டிருக்க, தனக்கான தனி பாதைகளை உருவாக்குவதில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் கலைஞன், இர்ஃபான் கான். இவருடைய வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் வலுவான தூணாக நின்று, இவரை உற்சாகப்படுத்தியவர் இர்ஃபானின் மனைவி சுதபா சிக்தர். இவர்களுடைய காதல் பற்றி வெளியே பரவலாகப் பேசப்படாமல் இருந்தாலும், இவர்களுக்குள் இருந்த அன்பே இறுதி மூச்சுவரை இர்ஃபானை நம்பிக்கையுடன் போராட வைத்தது. இர்ஃபானின் மறைவுக்குப் பிறகு சுதபா வெளியிட்டிருக்கும் கண்ணீர் சிதறிய அறிக்கை பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அதற்குப் பின் உள்ள அவர்களின் நேசம்... ஒரு காவியம்.

Irfan Khan
Irfan Khan
Instagram

பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இர்ஃபான் கான். தங்களிடமிருக்கும் சொத்துகளை மேலும் எப்படியெல்லாம் வளர்ச்சியடைய வைக்கலாம் என்பதை நோக்கி இர்ஃபானின் குடும்பத்தினர் ஓடிக்கொண்டிருக்க, தன்னுடைய கலைக் கனவை ரசித்துச் செதுக்குவதில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் இர்ஃபான். முதுகலைப் பட்டம் பெறத் தயாரானபோது, புது டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியின் ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டார். அதுதான் அவருக்கான உலகம் என்பதில் உறுதியாக இருந்தவர், ஆடிஷனுக்குச் சென்று தேர்ச்சியும் பெற்றார். அந்தப் பள்ளியில்தான் சுதபா சிக்தரை சந்தித்தார் இர்ஃபான்.

இர்ஃபானின் திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, தன் அன்பு மனைவி சுதபாவுடனான காதல் வாழ்க்கையும் அனைவரையும் நெகிழவே வைக்கும். இர்ஃபான் கான் மற்றும் சுதபா சிக்தர் இருவரும் புதுடெல்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளியில் (National School of Drama) ஒன்றாகப் பயிற்சியை மேற்கொண்டனர்.

ஒரு நாள், நடிப்புக்கான ஒத்திகையைப் பார்த்துக்கொண்டிருந்த சுதபாவிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட இர்ஃபான், நாளடைவில் சுதபாவின் நெருங்கிய நண்பரானார். இருவரின் எண்ணங்களும் ஒரே பாதையில் பயணிக்க, நட்பு காதலாக மாறியது. இருவரும் அவரவர்களின் துறைகளில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பியதால், தங்கள் திருமணத் திட்டங்களை சில ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தனர். பிறகு, 1995-ம் ஆண்டு மிகவும் எளிமையாக, நீதிமன்ற வளாகத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``என்னுடைய மிகப்பெரிய ரசிகையும் விமர்சகரும் என் மனைவிதான். அப்படித்தான் நானும் அவருக்கு" என்பதைப் பல இடங்களில் இர்ஃபான் பகிர்ந்திருக்கிறார். சரியோ, தவறோ எதுவாக இருந்தாலும், எல்லாவற்றையும் நேரடியாகக் கூறி பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கைத்துணை அமைந்தால், அவர்களைவிட அதிர்ஷ்டசாலி யாருமில்லை. அந்த வகையில் இர்ஃபான் மற்றும் சுதபா இருவரும் லக்கி கபுள்.

Irfan and Sutapa
Irfan and Sutapa

ஆரம்பக்காலத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். மனைவியின் திரைக்கதையில் ஒரு கதாபாத்திரமாக மாறினார் இர்ஃபான். சுதபாவின் வழிகாட்டுதலில் மாபெரும் நடிகன் உருவாகிய தருணங்கள் அவை. தன் செயல்திறனை மேம்படுத்தியதில் தன்னுடைய மனைவிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று பலமுறை இர்ஃபான் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், `என் மனைவி என்னைவிடப் பல விஷயங்களைப் பற்றி நன்கு புரிந்துகொண்டிருப்பவர். ஒரு கதையை அழகான திரைப்படமாக உருமாற்றம் செய்யும் அவருடைய படைப்பாற்றலைக் கண்டு பலமுறை நான் வியந்திருக்கிறேன்' என்று தன் மனைவியைப் பற்றி இர்ஃபான் உருகாத நேர்காணல் இல்லை.

தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை நல்ல நண்பராக இருக்க வேண்டும் என்பது நம்மில் பலருடைய ஆசை என்றே சொல்லலாம். நட்பில் தொடங்கி அன்பில் இணைந்து காதலில் கலந்து திருமணத்தில் திசைமாறி இறுதியில் விவாகரத்துக்காக நீதிமன்ற படிகள் ஏறும் எத்தனையோ ஜோடிகளின் கதைகளை நாம் அன்றாடம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், சுதபாவின் நட்பு ஒன்றே இர்ஃபானின் இறுதி நாள்வரை அவருக்குக் கைகொடுத்திருக்கிறது. திருமணமான பிறகுதான் இர்ஃபான் கான் பாலிவுட் திரையுலகின் பெரும் பகுதியானார். அவருடைய வெற்றிக்கு மிகப் பெரிய சக்தியாக இருந்தது சுதபா. அதற்குக் காரணம், அவர்களிடையே மேலோங்கி நின்ற நட்பு உணர்வு மட்டுமே. அவர்களின் உறவு அன்பாலும் பொறுமையாலும் வளர்ச்சிபெற்றது. இவர்களின் அன்புக்கு பரிசாக பாபில் மற்றும் அயான் என இரண்டு திறமையான மகன்கள் பிறந்தனர்.

``இர்ஃபான் மற்ற தந்தைகளைப்போல் இல்லை. மகன்கள் என்றாலும், அவர் அவர்களைப் புரிந்துகொள்ளும் விதம், எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். குழந்தைகளின் மனநிலை மாற்றங்கள் மற்றும் பிற விஷயங்கள் என அவர்களுடைய உலகத்துக்கே சென்று அவர்களுக்கு ஏற்றபடி அறிவுரைகளைக் கூறுவார்" என தன் குழந்தைகளுடனான உறவு பற்றி சில வருடங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார் சுதபா.

`ஜுராசிக் பார்க்' பார்க்க காசில்லாதவர், `ஜுராசிக் வேர்ல்டு'-ல் நடித்த சாதனை! இர்ஃபான் கானுக்கு அஞ்சலி #RIP

ஒவ்வொரு நொடியையும் அழகாகச் செதுக்கி தன்னம்பிக்கையோடு வாழ்ந்தவர் இர்ஃபான். எத்தனை முறை கீழே தள்ளிவிட்டாலும் தளராமல் வளர்ந்துகொண்டே இருக்கிறாரே என்று பொறாமைகொண்ட விதி, அவருக்கு மீளா பரீட்சை வைத்தது. 2018-ம் ஆண்டு, சுதபா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தன் கணவர் நியூரோ எண்டோகிரைன் கட்டி எனும் அரிய வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அன்றிலிருந்து தன் முழு நேரத்தையும் இர்ஃபானுக்காகவே அர்ப்பணித்தார் சுதபா. ``சுதபாவைப் பற்றி என்ன சொல்வது? 24 மணிநேரமும் என்னுடனே இருக்கிறாள். நிறைய சிரிப்பு, கொஞ்சம் அழுகை என எங்களுடைய நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. நான் இனியும் வாழவிரும்பினால் அது நிச்சயம் என் சுதபாவுக்காக மட்டும்தான்" என்று இறுதியாக மும்பை மிரர் பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோதும் தன் மனைவியைப் பற்றிப் பகிர்ந்திருந்தார் இர்ஃபான்.

Irfan
Irfan
Instagram

NDTV பத்திரிகையாளர் ஒருவர் தங்களுடைய விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இர்ஃபானை அணுகியபோது, ``என் மனைவியையும் அழைத்து வரலாமா?" என்று கோரிக்கைவிடுத்தவர் இர்ஃபான். `முதல் வகுப்பில் விமான டிக்கெட் வேண்டும் என்று ஆர்டர் போடும் மற்ற திரைத்துறை பிரபலங்களுக்கு மத்தியில், அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது வாங்கவிருந்த வெற்றியாளர் இப்படிப் பணிவாகக் கேட்பதைக் கண்டு வியந்துபோனேன்" என்று கூறி பதியப்பட்டிருக்கும் இந்தப் பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் மனைவி மீதான காதலை வெளிப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்.

காதல் மனைவி, பொறுப்பான மகன்கள், அன்பான ரசிகர்கள் என விலை மதிக்கமுடியாத சொத்துகளை சேமித்து வைத்திருப்பவரை யாருக்குத்தான் பிடிக்காது. இதில் இறைவனும் விதிவிலக்கல்ல. அன்பு சூழ் உலகில் எதுவும் இழப்பதற்கில்லை. அந்த வகையில், சுதபாவின் அன்பு என்றைக்கும் இர்ஃபானை வாழவைத்துக்கொண்டுதான் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு