Published:Updated:

மேடம் ஷகிலா - 40: மனைவிக்கு திருமண வரன் தேடும் கணவன்... இந்தப் பழிவாங்கல்களின் பின்னணி என்ன?

கணவன் - மனைவி

ஆண்-பெண் இடையே காலம் முழுவதும் தொடரும் இந்த சிறு சண்டைகளுக்கு அடிப்படைக் காரணம் ’ஈகோ’. ”நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது” எனும் மனநிலை.

மேடம் ஷகிலா - 40: மனைவிக்கு திருமண வரன் தேடும் கணவன்... இந்தப் பழிவாங்கல்களின் பின்னணி என்ன?

ஆண்-பெண் இடையே காலம் முழுவதும் தொடரும் இந்த சிறு சண்டைகளுக்கு அடிப்படைக் காரணம் ’ஈகோ’. ”நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது” எனும் மனநிலை.

Published:Updated:
கணவன் - மனைவி
மனைவிக்கு திருமண வரன் வேண்டி விளம்பரம் செய்த கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! சமீபத்திய் சமூக வலைதள ட்ரெண்டிங் இது. அடடே... நல்ல விஷயம்தானே, இதற்கு ஏன் கைது செய்ய வேண்டும் என தோன்றுகிறதல்லவா?

திருவள்ளூரை சேர்ந்த ஒருவர் தன் மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து இருக்கிறார். மனைவியை பழிவாங்க அவருக்குத் திருமண வரன் தேவை என மேட்ரிமோனியல் தளத்தில் விளம்பரம் செய்து மனைவியின் தந்தை செல்போன் எண்ணை பகிர்ந்திருக்கிறார். இந்தச் செய்தியை விளையாட்டாக சிரித்துக் கடந்து போகிறோம். ஆனால் இதுபோன்று நூதனமாக பழிவாங்குதலின் பின்னால் இருக்கும் தவிப்பு ஏன்?

‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் முதல் காட்சியில் கணவன் - மனைவி கதாபாத்திரத்தில் ரகுவரன் மற்றும் சாந்தி கிருஷ்ணா சண்டையிட்டுக் கொள்வார்கள். முதல் கேள்வியாக ரகுவரன் சாந்தியிடம், “நாம் இருவரும் எப்போது சேர்ந்து சந்தோஷமாக ஒரு காரியத்தை செய்தோம்?” என்று கேட்பார். அது சிறிது சிறிதாக சண்டையாக மாறும். பள்ளி வயதில் இந்தச் சண்டையை பார்த்தபோது இதற்கெல்லாம் சண்டை வருமா என்று முதலில் ஆச்சர்யமாக இருந்தது. ஏதாவது கோபமாக பேசினால் அப்பாவிடம் எதிர்த்து பேசாத, அமைதியாக போகக் கூடிய அம்மாவை பார்த்து பழகியிருந்த எனக்கு, ஒரு பெண் தன் கணவனை எதிர்த்து பேசுவது புதிதாக இருந்தது. அதில் சாந்தி பேசும் முறையை ”கூடக்கூட பேசுவது” என்று நம் வீடுகளில் சொல்வார்கள். அதாவது விதண்டாவாதமாக பேசுவது.

கணவன் - மனைவி சண்டை
கணவன் - மனைவி சண்டை

கணவனை கோபித்துக் கொள்வது, வீட்டை விட்டுச் செல்வது எல்லாம் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட காலம் அது. படத்தில் ரகுவரனை விட்டு சாந்தி பிரிந்து செல்வதற்கான காரணம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டார் என்பது. அந்த வயதில் இது புரியாததால் இந்த சின்ன சண்டைக்கு பிரிந்து செல்வார்களா என்பது மட்டுமே மனதில் பதிந்திருந்தது. அதுபோக அந்த சமயத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வேலைக்குச் செல்லும் மனைவி கணவனை எதிர்த்துப் பேசுவாள், மதிக்க மாட்டாள் என்கிற ரீதியில் இருக்கும். அதன் அடிப்படையில் ‘நேருக்கு நேர்’ படத்தின் முதல் காட்சி ரகுவரன் மீது தவறு இல்லை எனும் புரிதலை அப்போது ஏற்படுத்தியது.

ஓர் ஆண் காதல் அல்லது திருமணத்திற்கு முன்பு அதிகபட்சமாக அம்மா மற்றும் உடன் பிறந்த பெண்களை நெருக்கமாக பார்த்து வளர்ந்திருப்பான். தங்கள் கணவரின் பேச்சைக் கேட்டு நடக்கும் அம்மாக்களே இங்கு அதிகம். சுயவருமானம் இல்லாத, அல்லது வேலைக்கு சென்றாலும் வீட்டு வேலைகள், பிள்ளைகள் என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டவர்கள் இன்று அறுபதுகளில் இருக்கும் பெண்கள். அவர்களைப் பார்த்து வளரும் ஒரு ஆணுக்கு திருமணம் ஆன முதல்நாளே தன் அம்மா செய்தது போலவே தன்னை கவனித்துக் கொள்வது மனைவி என்பவளின் ’ரெஸ்பான்சிபிளிட்டி’ என்கிற எண்ணம் ஆழப் பதிந்திருக்கும்.

மறுபக்கம் இந்தத் தலைமுறைப் பெண்கள் கல்வி, வேலை என ஆண்களைப் போல பொருளாதார சுதந்திரம் உடையவர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு பெற்றோர் வீட்டில் பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகள் செய்ய தேவை இல்லை. இப்படி வளரும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு அதேபோல் தான் வாழ்க்கை இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் வருவார்கள். இரண்டு எதிர் திசையில் இருக்கும் எதிர்பார்ப்புகள் இணையும்போது, எதிர்பார்த்த எதுவும் நடக்காமல் இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இருவரும் சண்டையிடுகிறார்கள்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி
கணவன் - மனைவி இடையில் சில வருடங்கள் கழித்து ஈர்ப்பு குறைவதும், ஒருவரிடத்தில் இன்னொருவருக்கு இருந்த தேடல் கரைந்து போவதும் இயல்பு. ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் முதல் காட்சியில் இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடலின் பின்னணியில் இருப்பது இதுதான். அந்த ஈர்ப்பை புதுப்பித்துக் கொள்ள, தேடலை தக்க வைத்துக்கொள்ள நிச்சயமாக இருவரும் சில முயற்சிகள் செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கிறார்கள். அல்லது ஒருவர் வேலை பார்க்கும் குடும்பத்தில் இன்னொருவர் குடும்பம், குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் நாள் முழுவதும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. வருமானம் ஈட்டுவது ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை ஆக்ரமித்துக் கொள்ள, வீட்டில் இருக்கும் நேரம் சோர்வாகவும், ஓய்வெடுக்கவும் இருவருக்கும் தோன்றுகிறது.

தொடர்ந்து ஒரே வேலையை செய்வதனால் ஏற்படும் சலிப்பு, அலுவல் இடத்திற்கு பயணம் செய்வதில் ஏற்படும் களைப்பு, உடன் பணிபுரிபவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாடு, தொழிலில் நஷ்டம் என பல்வேறு பிரச்னைகள் வீட்டுக்கு வந்ததும் குடும்ப விஷயங்களில் கவனத்தை செலுத்தலாம் என்பதை கடந்து ஓய்வெடுக்க மட்டுமே மனம் சிந்திக்கிறது. இதில் கணவனிடம் பேச ஆசைப்படும் மனைவியை போன்று, ரகுவரனை போல மனைவியிடம் சந்தோஷமாக பேச நேரம் எதிர்பார்த்து காத்திருக்கும் கணவன்களும் உண்டு.

குடிகார கணவன் தன் மனைவியை அடிப்பது, தகாத வார்த்தைகளால் பேசுவது, படிப்பு – வேலை - வருமானம் என எல்லாம் இருந்தும் காரணமே இல்லாமல் மனைவியை, பிள்ளைகளை கொடுமைப்படுத்தும் சைக்கோ கணவன்கள், கணவனின் உருவம் அல்லது பொருளாதார நிலையை மற்றவர்களோடு ஒப்பீடு செய்து சண்டையிடும் மனைவி என கணவன் - மனைவி சண்டை என்றதும் இப்படி குறிப்பிட்ட சில டெம்ப்ளேட் சண்டைகள் மட்டுமே நம் நினைவில் வரும்.

கணவன் - மனைவி பிரச்னை
கணவன் - மனைவி பிரச்னை

பெரும்பாலும் இது போன்ற சண்டைகளே விவாகரத்து வரைச் செல்லும். வீட்டைவிட்டு ஓடிப்போவது, கொலை, தற்கொலை வரை செல்வதும் உண்டு. இது போன்ற பெரிய பிரச்னைகள் இல்லாமல் தினமும் சண்டையிட்டுக் கொள்ளும் குடும்பங்கள் ஏராளம். அந்த சண்டைகளை தீர்ப்பது பற்றியோ குறைத்துக் கொள்வது பற்றியோ பேசும்போதெல்லாம், ‘‘குடும்பம் என்று இருந்தால் இது போன்ற சின்ன சின்ன சண்டைகள் இருக்கும், அதை கடந்து அனுசரித்துதான் செல்ல வேண்டும்’’ என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

குடும்ப அமைப்பு உடைந்துவிட்டால் பெண்கள் கைமீறி சென்று விடுவார்கள் அல்லது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனும் காரணங்கள் அதன் பின்னணியில் இருக்கின்றன. அதனாலேயே பெரும்பாலும் சின்ன சின்ன சண்டைகள் வரும்போது அதை அனுசரித்து செல்லுமாறு பெரும்பாலும் பெண்களுக்கு அறிவுரை சொல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் பெண்கள் தங்கள் கோபங்களை மனதுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு மன உளைச்சலுடன் இருப்பார்கள்.

ஒருகட்டத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக போர்த்தப்பட்ட கோபங்கள் மலைபோல் வளர்ந்து எரிமலையாக வெடிக்கும் நாளில் குடும்பம் சிதறிவிடும். பலரும் கனன்று கொண்டிருக்கும் தீயை அவ்வப்போது அணைத்து எரிமலை ஆகாமல் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு மிகப்பெரிய பொறுமையும் சகிப்புத்தன்மையும் குறைந்தபட்சம் சுயநலமும் தேவை.
ஆண்-பெண் இடையே காலம் முழுவதும் தொடரும் இந்த சிறு சண்டைகளுக்கு அடிப்படைக் காரணம் ’ஈகோ’. ”நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது” எனும் மனநிலை.

நாம் எப்போதும் மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நமக்கு தோல்வி ஏற்படும்போது, நாம் ஒதுக்கப்படுவதாக உணரும்போது, எந்த நேரமும் கண்ணில் எண்ணெய் விட்டதை போல மற்றவர்கள் பேசும் சிறுசிறு வார்த்தைகளிலும் சுயமரியாதையை தேடிக் கொண்டே இருக்கிறோம். அந்த சந்தர்ப்பங்களில் நம்மீது சொல்லப்படும் சிறு குறைகளையும் குற்றம் சொல்வதாக புரிந்து கொள்கிறோம். அந்த தாழ்வுமனப்பான்மை உண்டாக்கிய கோபம் வெளிப்படும்போது அது ஈகோவாக இருக்கிறது.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

எல்லோருக்கும் ஈகோ உண்டு என்றாலும் ஈகோவின் பின்னால் இருக்கும் காரணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகின்றன. ஆண் தன் ஈகோவை கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி விடுகிறான். பெண் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறாள். அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தாலும் பல சமயங்களில் தன்னுடைய Survival-க்காக ஈகோவை அடக்கிக் கொள்கிறாள்.

ஈகோவினால் போடும் சண்டைகளுக்கு ’பேரன்பில்’ செய்வது, ’உரிமை’ என்றெல்லாம் விளக்கம் கொடுக்கப்படுகிறது. ”உரையாடும் சூழ்நிலையில் நான் இப்போது இல்லை” என்று சொன்னால், சொல்பவரின் நிலையை உணராது தான் சொல்லவேண்டியதை சொல்லிக் கொண்டே இருப்பது ஈகோவினால் அன்றி உரிமையின் அடிப்படையில் இல்லை. அதேபோல் தான் பேசியவை சரி என நிரூபித்தே ஆக வேண்டிய மனோபாவத்தில் சாதாரண விஷயங்களுக்கு கூட ராக்கெட் சயின்ஸ் அளவுக்கு ஆராய்ச்சி செய்து ஆதாரங்களை திரட்டுவது, திரட்டிய ஆதாரங்களை எதிர்தரப்பினரிடம் திணிப்பது எல்லாம் பேரன்பில் சேராது. ’’சைக்கோ மாதிரி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி சண்டையிடுகிறார்கள்’’ என சிலரை குறிப்பிடுவதுண்டு. அந்த வார்த்தை சொல்லி ஒருவரை குறிப்பிடுவது தவறு. ஆனால் அப்படி நடந்துகொள்வதற்கு காரணம் ஈகோ!

ஈகோவை தீர்மானிக்கும் முதன்மை காரணியாக நம் சமூகத்தில் பணம் இருக்கிறது. பொதுவாகவே பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் ஆணின் ஒற்றை வருமானத்தை நம்பி இருக்கின்றன. வருமானமும், சமூகத்தில் ஆண் ஆதிக்கம் உடையவனாக இருப்பதும் ஆணின் ஈகோவை ஊட்டி வளர்க்கும் காரணிகள். பெண்கள் தங்கள் ஈகோவை காட்ட அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவைப்படுகிறது. தனக்கு ஒரு வேலை, தொழில் அல்லது பெற்றோர் வழியில் சொத்து, வருமானம் என்று இருக்கும் பெண்கள் மட்டுமே தங்கள் ஈகோவை வெளிப்படுத்த முடியும். இது சம்பாதிக்காமல் அல்லது மனைவியை விட குறைவாக சம்பாதிக்கும் ஆணுக்கும் பொருந்தும்.

ஏமாற்றம், ஈகோ சண்டையுடன் பணமும் பிரச்னையாக இருந்தால் அந்தத் திருமணம் பிரிவில் முடிகிறது. ஏற்கெனவே சொன்னதுபோல திருமணம் விவாகரத்தில் முடிந்தால் மட்டும்தான் வெளி உலகிற்கு தெரிய வரும். ஆனால் ஈகோவை உள்ளே வைத்துக்கொண்டு தினமும் சண்டையிட்டே கடைசிவரை வாழ்ந்து முடித்துவிடுபவர்களும் உண்டு.
குடும்பம்
குடும்பம்

கணவன்-மனைவி உறவை குடும்பம் என்று சொன்னாலும் ஒருவரிடம் ஒருவர் கௌரவம் பார்த்து ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. திருமணம் தாண்டிய காதல் உறவு பற்றி மறைக்க நினைப்பதைகூட புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பல வீடுகளிலும் கணவனும் மனைவியும் அவரவர் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் பற்றிய விசயங்களை வாழ்க்கை துணையிடம் மறைத்து வைக்கும் பழக்கம் உள்ளது. இதுபோன்ற தனிப்பட்ட விசயங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது பிற்சமயத்தில் எப்போதாவது சண்டையில் அவமானப்படுத்தும் நோக்கில் சொல்லி காட்டப்படும் என்பதால் அவற்றை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது.

உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாராக இருந்தாலும் சண்டையின்போது அடுத்தவர் ரகசியங்களைச் சொல்லிக் காட்டும் பழக்கம் இருந்தாலும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ள தயக்கம் இருப்பதில்லை. அப்படி இருக்க வாழ்க்கைத் துணையிடம் மட்டும் ஏன் இது போன்ற மன சிக்கல்கள் ஏற்படுகின்றன?

பத்தாம் வகுப்பில் எங்கள் ’சமூக அறிவியல்’ ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். அவர் சொல்லும் வார்த்தை / விசயங்களுக்கு நாங்கள் எதிர்பதம் சொல்ல வேண்டும். அவர் இரவு என்று சொன்னால் நாங்கள் பகல் என்று சொல்ல வேண்டும். அப்படி சொல்லிக் கொண்டே வருகையில் அவர் ’கணவன்’ என்றதும் மொத்த வகுப்பும் ஒன்றாக ’மனைவி’ என்றது. ஆசிரியர், ”கணவனுக்கு எதிரில் மனைவியை நிறுத்துவது இந்திய மனநிலை, மனைவியும் கணவனும் ஒருவருக்கு ஒருவர் எதிராளிகள் அல்ல.

ஒன்றாக ஒரே பக்கம் இருந்து வாழ்க்கை பாதையில் செல்ல வேண்டும்” என்று சொன்னார். இதை சொல்வதற்காகத்தான் அப்படி ஒரு விளையாட்டையும் துவக்கி வைத்திருக்கிறார். #Wife_Jokes, கணவன், மனைவியை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக நிறுத்துவது, ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வது போல் சித்தரிப்பது, பிரிவதை எஸ்கேப் ஆவது என்று சொல்வது என நகைச்சுவைகள்(?!) காணும்போது ஆசிரியர் சொன்னது ஞாபகம் வரும்.

Husband - Wife
Husband - Wife

அன்பு, சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல், சுயமரியாதை, சுதந்திரம் என்று எண்ணற்ற விஷயங்கள் கணவன், மனைவிக்குள் இருக்க வேண்டும் என்கிற போதனை திருமணம் செய்துகொள்ளும் அனைவருக்கும் காலம் காலமாக வழங்கப்படுகிறது.

ஆனாலும் இந்த ஈகோ சண்டைகள் முடிவுக்கு வரவில்லையே ஏன்? ”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடி வைத்தது ஈகோ சண்டைக்கும் பொருந்தும்!