Published:Updated:

மேடம் ஷகிலா - 13: ஹவுஸ் ஹஸ்பெண்டுகள் இந்தச் சமூகத்துக்குச் சொல்ல வருவது என்ன?!

ஹவுஸ் ஹஸ்பெண்டு - Ki and Ka

வீட்டு வேலைகள் செய்யும் ஆண்களை, குறிப்பாக ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருக்கும் ஆண்களை பெண்களில் பலரும் வெளிப்படையாக கேலி செய்வதும் நடக்கிறது.

மேடம் ஷகிலா - 13: ஹவுஸ் ஹஸ்பெண்டுகள் இந்தச் சமூகத்துக்குச் சொல்ல வருவது என்ன?!

வீட்டு வேலைகள் செய்யும் ஆண்களை, குறிப்பாக ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருக்கும் ஆண்களை பெண்களில் பலரும் வெளிப்படையாக கேலி செய்வதும் நடக்கிறது.

Published:Updated:
ஹவுஸ் ஹஸ்பெண்டு - Ki and Ka
ஓர் ஆண் திருமணத்திற்குப் பிறகு வீட்டிலேயே இருந்து வீட்டையும், குழந்தைகளையும் நிர்வகித்தால் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' (House Husband) என்றும், ஓர் ஆண் திருமணத்திற்கு பிறகு மனைவியின் வீட்டில் சென்று வாழ்ந்தால் 'வீட்டோடு மாப்பிள்ளை' என்றும் அழைக்கப்படுவர்.

காலங்காலமாக பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லத்தரசி என்று பெயர். அவர்களை யாரும் வீட்டோடு மருமகள் என்று செல்வதில்லை, ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த ஹவுஸ் ஹஸ்பண்ட்/வீட்டோடு மாப்பிள்ளை டேக் என்ற கேள்வி விதண்டாவாதமாக இருந்தாலும் இதற்கான பதிலில்தான் இதுவரை இந்தச் சமூகம் எதன் அடிப்படையில் இயங்கி வருகிறது என்பது புரியும். ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக ஒருவர் ஆகும்போது என்ன எதிர்வினைகளை வீட்டிலும், சமூகத்திலும் அவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

Ki & Ka
Ki & Ka

ஹவுஸ் ஹஸ்பண்ட் கான்செப்டை அடிப்படையாக கொண்டு 'Ki & Ka' என்று ஓர் இந்தி திரைப்படம் 2016-ல் வெளியானது. தனது கார்ப்பரேட் வேலையில் சாதிக்கத் துடிக்கும் இளம்பெண் கியாவும், அப்பாவின் தொழிலை எடுத்து நடத்த விருப்பமில்லாமல், வீட்டோடு இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் ஈடுபாடு உள்ள கபீரும் காதலித்து தங்கள் எண்ணங்கள் ஒத்துப்போகவே திருமணம் செய்து கொள்கின்றனர். கியா தன் வேலையில் முன்னேறுகிறாள். கபீர் வீட்டைப் பார்த்துக் கொள்கிறான். ஒரு பேட்டியில் தங்களது வித்தியாசமான திருமண உறவு பற்றி கியா குறிப்பிடுகிறாள். அதை தொடர்ந்து கபீர் மிக பிரபலம் ஆகிவிடுகிறான். தனது கணவரின் திடீர் புகழின்மீது பொறாமை கொள்ளும் கியா, அவனுடன் சண்டையிடுகிறாள். ஹவுஸ் ஹஸ்பண்ட் முறையில் உள்ள சாதக பாதகங்களை ஓரளவு இந்தப் படம் விளக்குகிறது.

ஆனால் நடைமுறையில் ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கும் ஓர் ஆணுக்கு வருமானம் இல்லாமல் இருப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என்று சமூகம் சொல்லி வைத்திருக்கின்ற ஆண்களுக்கான கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் குழப்பங்களும், தன் மனைவியின்மீது பொறாமை, கோபம் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதேபோல் படத்தில் காட்டியிருப்பது போல பெண்ணுக்கு பொறாமை வரும் அளவிற்கு ஆணைப் புகழும் முற்போக்கு சமூகம் இங்கு இல்லை.

தமிழ் சமூகத்தில் மிகப் பெரும் சிக்கல் என்னவென்றால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவியின் வீட்டில் கணவன் சென்று வாழ்வது பெருமையாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தனை ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களும் அதைத்தான் போதித்து வந்துள்ளன. குடும்பம் மற்றும் வீட்டு வேலைகளை பெண்களின் வேலையாகவும், வருமானம் ஈட்டுவது ஆண்களின் வேலையாகவும் ஏற்கெனவே முன்னோர்களால் ப்ரோகிராம் செய்யப்பட்ட #RuleList-ல் ஒரு சிறு அப்டேட்டை கூட தமிழ்ச் சமூகத்தால் சலசலப்பின்றி ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. "ஆண்கள் வேலையை ஆண்கள் செய்ய வேண்டும், பெண்கள் வேலையை பெண்கள் செய்ய வேண்டும்" என்று வீட்டு வேலையில் உதவச் சொல்லிக் கேட்கும் தாயிடம் கூறும் மகன்கள் இருக்கின்றனர்.

ஹவுஸ் ஹஸ்பண்ட் எனும் வார்த்தைதான் இந்தச் சமூகத்திற்கு புதியது என்றாலும் இந்த கான்செப்ட் முன்பிருந்தே நம் சமூகத்தில் இருக்கின்றது. தாத்தா குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள, விவசாயத்தையும் குடும்ப நிர்வாகத்தையும் ஒற்றை ஆளாய் பார்த்துக்கொண்ட அப்பத்தாக்கள் நம் குடும்பங்களில் இருந்தனர்.

Husband - Wife
Husband - Wife

பெண்கள் தொழில், வேலை என்று வெளியில் சென்று சாதிக்க விரும்புவதை போலவே ஆண்களில் பலர் குடும்பம், குழந்தைகள், வீட்டைப் பராமரிப்பது போன்றவற்றை ஆர்வத்துடன் மிக விருப்பப்பட்டு செய்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண் தொழிலில் சாதிக்கும்போது ஆண்களுக்கு இணையாக சாதிக்கிறார் அல்லது 'ஆண்களைப் போல' என்ற வார்த்தையை பெருமையாக பயன்படுத்துகிறோம். ஓர் ஆண் வீட்டை பராமரிக்கும்போது பெண்களைப்போல நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்பதை யாரும் இங்கே பாராட்டாக சொல்வதில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு பெண் ஆணைப்போல இருப்பது பெருமையாகவும், ஆண் பெண்ணைப் போல இருப்பதென்பது சிறுமைபடுத்துவதாகவும் சொல்லப்படுகின்றது.

இன்றும் பல ஆண்கள் முழுக்க ஹவுஸ் ஹஸ்பண்டாகவோ அல்லது ஏதேனும் பகுதிநேர வேலையில் இருப்பவர்கள் மற்ற நேரத்தில் குடும்பத்தை பார்த்து கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக கலை, இலக்கியம், சினிமா சார்ந்தவர்கள் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருப்பது அவர்களுக்கு பொருளாதார நிர்பந்தம் இல்லாத சூழ்நிலையையும் அதனால் தங்கள் Passion-ல் கவனம் செலுத்தும் மனநிலையையும் உருவாக்கித் தருகிறது.

ஓர் ஆண் வீட்டு வேலை செய்யும்போது அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள் தனது கணவரும் இப்படி உதவினால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவது இயல்பு. ஆனால் வீட்டு வேலைகள் செய்யும் ஆண்களை, குறிப்பாக ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருக்கும் ஆண்களை பெண்களில் பலரும் வெளிப்படையாக கேலி செய்வதும் நடக்கிறது.

ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கும் ஆண்களுக்கு நண்பர்கள் வாய்ப்பது இல்லை என்கிற நிலை இருக்கின்றது. பொதுவாக ஆண்களுக்கு அலுவலகம் அல்லது தொழில் சார்ந்த நண்பர்கள் இருப்பார்கள். ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக இருக்கும் ஆண்களுக்கு வேலையில் இருக்கும் மற்ற ஆண்களுடன் பழக நேர வித்தியாசம் ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கின்றது. அதேசமயம் அக்கம்பக்கம் இருக்கும் பெண்களிடத்திலும் மற்ற ஹவுஸ்வைஃப் போல ஹவுஸ் ஹஸ்பண்ட்கள் பழகும் சாத்தியங்களும் இல்லை. இது ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கும் ஆண்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னைகளில் ஒன்று. இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த கான்செப்ட் நம்மிடையே மிக சகஜமானப்பிறகு ஆண்களுக்கும் அண்டை வீட்டார், அபார்ட்மென்ட் குரூப்களில் இயல்பாகப் பழகும் சூழல் ஏற்படலாம். இப்போதைக்கு சோஷியல் மீடியா ஒரு சிறிய சாளரத்தை திறந்து வைக்கும்.

சூரரைப் போற்று - பொம்மி, மாறா
சூரரைப் போற்று - பொம்மி, மாறா

ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்க ஆண்கள் தயங்குவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் வருமானம் இல்லாமல் ஒரு ஆண் இருப்பதை நம் சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. "பொருளீட்டுபவன்தான் ஆண்மையுடையவன்", "ஆண்கள் அதிக நேரம் வீட்டில் இருக்கக்கூடாது", "மனைவியின் காசில் உட்கார்ந்து சாப்பிடுவது அவமானம்" என்றெல்லாம் நம் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டு மனைவியிடம் செலவுக்குப் பணம் வாங்கும் ஆண்களை மற்றவர்கள் கேலி செய்வது அந்த ஆண்களை மனரீதியாக பாதிக்கிறது.

ஆரம்பத்தில் பெரிய பிரச்னையாக இல்லாத இதுபோன்ற விஷயங்கள் பின்னால் மிகப் பெரும் பிரச்னைகளாகி சில சமயம் கணவன் - மனைவி பிரிவதற்கு காரணமாகக்கூட அமைகின்றது. மனைவி தன் வருமானத்தில் பரிசுப் பொருள்கள் வாங்கித் தருவதையே பல ஆண்களால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதேபோல் தனக்கு பண நெருக்கடி இருக்கும்போது மனைவியிடம் கேட்டு வாங்கிக்கொள்ள தயங்கும் ஆண்களும் அதிகம்.

'சூரரைப் போற்று' திரைப்படத்தில் தன் மனைவியிடம் பணம் கேட்க கதாநாயகன் தயங்கும் காட்சியை ஒரு மாஸ் ஹீரோவான சூர்யாவிற்கு வைக்க வேண்டாம் என்று தனது குழுவில் இருக்கும் ஆண்கள் சொல்லியதாக படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். தனக்கு வருமானம் இல்லாத சமயங்களில் தங்கள் மனைவியை சார்ந்திருக்கும் உதவி இயக்குநர்கள், திரைப்படத்தில் மனைவியிடம் கணவன் பண உதவி பெறுவது போல் காட்சி அமைப்பது ஹீரோயிசம் இல்லை என்று சொல்லும் நிலைதான் இங்கு உள்ளது என்று வருத்தப்பட்டார். மனைவியிடம் பணம் வாங்குவது அவமானம் என்ற கற்பிதங்களால் அதை வெளியில் தெரியக்கூடாத ரகசியம் போல் ஆண்கள் எண்ணுகிறார்கள்.

ஆண்கள் வீட்டு வேலை செய்யும்போது அவர்கள் Manly-ஆக இருப்பதாகத் தோன்றுவதில்லை என்கிற எண்ணமும் சில பெண்களுக்கு இருக்கின்றது. அதுபோக ஆண் கம்பீரமானவன் என்றும் வீடு பெருக்குவது, பாத்திரங்கள் கழுவுவது, குழந்தைகளுக்கு டயப்பர் மாட்டுவது போன்றவை கம்பீரக் குறைவு என்கிற எண்ணங்கள் பெண்களிடமும்கூட இருக்கிறது. பாலின பாகுபாடின்றி யாராக இருந்தாலும் மனிதத்தன்மை மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதே கம்பீரம் அல்லவா?!

Couple Cooking
Couple Cooking

பொதுவாகக் குழந்தைகள் தங்களோடு அதிக நேரம் செலவு செய்பவர்களுடன் ஒட்டிக் கொள்வார்கள். பெண்கள் வீட்டில் இருந்த காலத்தில் பிள்ளைகள் அம்மாக்களுடன் பிரியமாக இருந்ததுபோல், இப்போது ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கும் அப்பாக்களுடன் அதிக ஒட்டுதல் ஏற்படுகிறது. ஆனால், பெண்களுக்கு இதை ஏற்றுக்கொள்வது ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் பெண்களும் உண்டு.

இன்னமும் பெரும்பாலான குடும்பங்களில் பொருளாதார நிர்வாகம் ஆண்கள் கையில் இருக்கின்றது. அங்கே பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றிய அறிவும், அனுபவமும் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பெண்கள் வருமானம் ஈட்டுவதும், ஆண்கள் வீட்டை நிர்வகிப்பதும் புதியது என்பதால் இதுவரை சம்பாதிக்கும் ஆணே நிதி நிர்வாகம் செய்வதை பார்த்திருந்த நமக்கு இந்தப் புதிய முறையில் குடும்ப பொருளாதாரம், மாதாந்திர பட்ஜெட், சேமிப்பு போன்றவற்றை யார் கையாள்வது என்கிற குழப்பங்களும் அதனால் கருத்து வேறுபாடுகளும் ஆரம்பத்தில் உண்டாகலாம். ஆண்கள் ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கும் பெரும்பாலான குடும்பங்களில்கூட ஆண்கள்தான் பொருளாதாரம் சார்ந்த முடிவுகளை எடுக்கின்றனர்.

பெண்கள் குடும்பத் தலைவராக இருந்தால் அது குடும்பத்தை ஆபத்தில் தள்ளும் எனும் மோசமான சித்திரிப்புகள் கொண்ட 'ஆண் தேவதை' என்றொரு தமிழ்த் திரைப்படம் ஹவுஸ் ஹஸ்பண்ட் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. ஒரு பெண் வீட்டை நிர்வகிப்பதைச் சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்பவர்கள் ஒரு ஆண் அதை செய்யும்போது அவனை தேவதையாக கொண்டாட எதிர்பார்க்கிறார்கள் என்பதே சமூகத்தில் ஆண், பெண் ஏற்றத்தாழ்விற்கு மிகச் சிறந்த உதாரணம்.

இக்காலத்தில் பெண்களும் படித்து, வேலையில் இருக்கின்றனர். திருமணம் அல்லது குழந்தை பிறப்பிற்குப் பிறகு பெண்கள் வேலையை விடும்போது அதை யாரும் தியாகமாக பார்ப்பதில்லை. அதை அவர்களுடைய கடமையாக எடுத்துக்கொள்ளும் சமூகம் அதுவே ஒரு ஆண் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேலையை விட்டுவிட்டால் அதை தியாகமாக எண்ணுகிறது.

இப்படத்தில் கதாநாயகிக்கு குடும்ப பொருளாதாரத்தை நிர்வாகம் செய்ய தெரியாததாலும் பேராசையின் காரணமாகவும் ஹவுஸ் ஹஸ்பண்ட் முறை தோல்வியில் முடிந்து மீண்டும் பெண் வீட்டில் இருப்பதும், ஆண் வேலைக்குச் செல்வதுமே சிறந்தது என்று முடித்திருக்கின்றனர்.
ஆண் தேவதை படத்திலிருந்து...
ஆண் தேவதை படத்திலிருந்து...

பல்வேறு காரணங்களால் தனித்தனி குடும்பங்களாகிவிட்ட சூழலில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள பெற்றோர்களில் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டியது பலருக்கும் கட்டாயமாகியிருக்கிறது. அதனால் ஆண்கள் ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக தயாராக இருக்கின்றனர். இச்சமயத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் பிற்போக்கான விஷயங்களையும் போதிக்கின்றன.

பிற்போக்கு திரைப்படங்கள் ஒருபுறமிருக்க, ஆணாதிக்கம் அதிகமுள்ளதாக கருதப்படும் ஹரியானா மாநிலம் சௌதாபூர் எனும் கிராமத்தில் ஊரில் பெரும்பான்மையான ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார்கள். தன்னுடைய மனைவியை தனது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் மனைவியின் வீட்டிற்குக் குடிபெயர்ந்த கணவர்கள் அதிகம். மனைவியின் பெற்றோர்களும் இவர்களை உடன் வைத்துக் கொள்கிறார்கள். நாளடைவில் அங்கே வீட்டோடு மாப்பிள்ளை முறை மிக சகஜமாகிவிட்டது. இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக இம்முறையில் வாழும் அவர்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கின்றனர்.

நாம் மிகப்பெரும் #TransitionPeriod-ல் இருக்கின்றோம். கடந்த இருபது ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பனிகளின் பெருக்கமும், இணைய வளர்ச்சியும் நகரங்களில் மட்டுமல்ல கிராம வாழ்க்கை முறையையும் வெகுவாக மாற்றி இருக்கிறது. அது நமது குடும்பம், உறவுகள், பிள்ளை வளர்ப்பு எல்லாவற்றிலும் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

முன்னோர்கள் சொன்ன கதைகள், காரணமில்லாத சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டு நம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வாழ்க்கைமுறைக்கு மாறிக் கொள்வதே சிறந்தது. ஏனெனில் சமூக மாற்றம் தனி மனிதனில் இருந்து தொடங்குகிறது!