Published:Updated:

மேடம் ஷகிலா - 26: பெண்களே, மாமியார்கள் இருக்கட்டும்… நம் அம்மாக்கள் செய்யும் கொடுமைகளைப் பேசுவோமா?!

அம்மா - மகள்

காதல் ஏற்படும்போது பெரும்பாலான மகள்கள் தங்கள் அம்மாக்களிடம்தான் முதலில் சொல்கிறார்கள். சாதி, மதம் இன்னும் பலவற்றை காரணம் காட்டி அந்தக் காதலை முடித்து வைக்கவே அம்மாக்கள் விரும்புகிறார்கள்.

Published:Updated:

மேடம் ஷகிலா - 26: பெண்களே, மாமியார்கள் இருக்கட்டும்… நம் அம்மாக்கள் செய்யும் கொடுமைகளைப் பேசுவோமா?!

காதல் ஏற்படும்போது பெரும்பாலான மகள்கள் தங்கள் அம்மாக்களிடம்தான் முதலில் சொல்கிறார்கள். சாதி, மதம் இன்னும் பலவற்றை காரணம் காட்டி அந்தக் காதலை முடித்து வைக்கவே அம்மாக்கள் விரும்புகிறார்கள்.

அம்மா - மகள்
முன்குறிப்பு: பேசப்படாத அம்மா – மகள் உறவை பேசுவதற்காக இந்த கட்டுரை. இதில் சொல்லியிருப்பவை எல்லாம் நடைமுறையில் பார்க்கவில்லை எனத் தோன்றும் ஆண்கள் உங்கள் சுற்றத்தை சற்று உற்று கவனியுங்கள். இதில் குறிப்பிட்டிருக்கும் எந்த பிரச்னையையும் கடந்து வராத பெண்களுக்கும் அவர்களின் அம்மாக்களுக்கும் அன்பும் வாழ்த்துகளும்!

ட்விட்டர் ஸ்பேசஸில் ‘மாமியார் vs மருமகள்’ என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் பேசிய பெண்கள் சமையல், கடவுள் வழிபாடு, பண்டிகைகள் கொண்டாடுவது, வேலைக்கு செல்வது வரை எல்லாவற்றிலும் எப்படி தன்னுடைய தலையீட்டை மாமியார்கள் உறுதி செய்கிறார்கள் எனபது பற்றி நிறைய சொன்னார்கள்.

அவர்கள் மாமியார் கொடுமையாகச் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்கள் பலவும் ‘எனக்கு அம்மாவால் நடக்கிறது’ என்று சொன்னதும் பேச்சு திசை மாறியது. சில பெண்கள் திருமணத்திற்கு பிறகும் கூட அவர்களுடைய அம்மா அவர்களது வாழ்க்கையில் தலையிடுவது பற்றி பேசத் தொடங்கினார்கள். ஆண்கள் பலரும் ஆச்சர்யமாக கேட்டு சிரித்தனர். மாமியார் செய்கிறார் என்றதும் கொந்தளித்தவர்கள், அம்மா செய்கிறார் என்றபோது அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரிப்பதன் பின்னணி அம்மாவின் மீது ஏற்றி வைத்திருக்கும் புனித பிம்பம். அதுவே இங்கு பல விஷயங்களை உடைத்து பேச விடாமல் செய்கிறது.

பெண்களுக்கு ஊக்கமும், ஆதரவும் கொடுத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு துணையாக இருப்பவர்கள் அம்மாக்கள் என்றும் முன்னேற்றத்திற்கு தடையாக பிற்போக்குத்தனமாக இருப்பவர்கள் மாமியார்கள் என்பதும் நம் சமூகத்தின் பொதுபுத்தி.

பெண்கள்
பெண்கள்
இன்று 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தங்கள் வாழ்க்கையில் திருமணம், வேலை, குழந்தைகள், குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தவர்கள்/இருப்பவர்கள் அம்மாக்கள் என்று சொன்னால் பலருக்கும் கோபம் வரலாம்.

இந்த கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டரோடு ஒரு பெண் வீட்டில் சமைப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. ’அம்மாவின் தியாகத்திற்கு நிகரில்லை’ என்கிற கேப்ஷனோடு பலரும் பகிர்ந்திருந்தார்கள். ‘தாயே தெய்வம்’, ‘தியாகத்தின் வடிவம்’ என்று அம்மாவின் பெருமைகளைப் போற்றி பலரும் கமென்ட் செய்திருந்தார்கள். பெண்களும் தங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதி மகிழ்ச்சியாக பகிர்கிறார்கள். ஆனால், இது போன்ற விஷயங்களை ஆகா, ஓஹோ என்று பேசுவதன் மூலம் பெண்கள் மேலும் அடிமையாகிறார்கள். தாயை / தாய்மையை போற்றி புனிதப்படுத்துவது பெண்ணை நோய்மை காலத்தில்கூட ஓய்வில்லாமல் உழைக்கச் செய்கிறது என்று சொன்னால் இங்கே பெண்களேகூட ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

அம்மாக்களை இப்படி புனிதப்படுத்துவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பெண்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை பெண்களையும் இந்த அடிமைத்தனத்துக்குள் சிக்க வைக்கிறார்கள். பண்பாடு மற்றும் கலாசாரம் என்று உருவாக்கி வைத்திருக்கும் ஆண் மைய சமூகத்தின் பிற்போக்கு மற்றும் பெண்ணடிமைத்தனங்களை அடுத்த தலைமுறை பெண்களுக்கு கடத்தும் மீடியமாக இத்தகைய அம்மாக்கள் இருக்கிறார்கள்.

நம் நாட்டில் குடும்பத்தை நிர்வகிப்பது, பிள்ளைகளை வளர்ப்பது பெண்களை சார்ந்த விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் இருந்தால் அது முழுக்க தாயின் பொறுப்பாகிறது. சிறு வயதில் மிக சாதாரணமாக கூறப்படும் ‘சத்தமாக பேசாதே’, ‘வீட்டுக்குள் பாடாதே - ஆடாதே’, ‘தெருவில் ஆண் பிள்ளைகளுடன் விளையாடாதே’ போன்ற விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுக்கு சுதந்திரமாக தனித்து செயல்பட மிகப்பெரும் மனத்தடையை உருவாக்கும்.

எங்கள் வீட்டில் எப்போதும் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு அம்மாவுக்கு பாடல்கள் என்றால் பிடித்தம். ஆனால், நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் பாடும்போது, ”பாட்டு பாடி நாளைக்கு மாமியார் வீட்ல போய் பேரைக் கெடுக்காத” என்று, மாமியார் என்றால் யாரென்றே தெரியாத வயதிலிருந்தே மாமியார் பெயரை சொல்லி கண்டிப்பார். எனக்கு திருமணமான மறுநாள் சமைக்கும்போது மாமியார் பாடிக்கொண்டிருந்தார். பாடினால் மாமியார் திட்டுவார்கள் என்று அம்மா சொல்லியதை சொன்னேன்.

பாட்டி - பேத்தி
பாட்டி - பேத்தி
”பாட்டு பாடறதுக்கலாமா திட்டுவாங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். இவ்வளவு சாதாரண விஷயத்திற்காக இவ்வளவு நாள்களாகப் பயந்திருந்தேன் என்று ஆச்சர்யமாக இருந்தது. பாடுவது ஓர் உதாரணம்தான். மற்றபடி பல அம்மாக்களுக்கும் தங்கள் மகள்களுக்கு தனித்திறமை என்கிற ஒன்றே தேவையில்லாத ஆணிதான்.

பல குடும்பங்களில் பெண்கள் தாங்கள் நினைத்ததை படிக்க, தங்களது திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போவதற்கும், திருமண வாழ்க்கையில் தங்களை சுருக்கிக் கொள்வதற்கும் பெரும்பாலும் ‘நல்ல வளர்ப்பு’ என்கிற பெயரில் அம்மாக்கள் ஊட்டி வளர்க்கும் பிற்போக்குத்தனங்களே காரணம். படிப்பு, வேலை இருந்தும் அவற்றை மிக எளிதாக உதறிவிட்டு திருமணத்திற்கு பிறகு சமைப்பது, வீட்டைக் கூட்டிப் பெருக்குவது, பிள்ளைகளை கவனித்துக்கொள்வது மட்டுமே ஒரு பெண்ணை ’உயர்வானவளாக’ இந்த சமூகம் பார்க்கும் என்று இன்று அறுபதுகளில் இருக்கும் அம்மாக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இரண்டு விதமான கனவுகள் இருக்கின்றன. ஒன்று அவர்களுக்குக் கிடைக்காத கல்வியும், வேலையும் தங்கள் மகளுக்கு கிடைப்பதன் மூலம் பொருளாதார சுதந்திரம் இருக்கும் என்று ஆசைப்படுவார்கள். மகள்களின் கல்விக்காக தங்கள் கணவரிடம் சண்டையிட்ட அம்மாக்கள் உண்டு. பின்னர் அவர்களே தங்கள் மகளுக்கு திருமணம் ஆனவுடன் திடீரென்று ஐம்பது, நூறாண்டு பின்னால் சென்று கணவனுக்கு பணிவிடை செய்வதும், பிள்ளைகளுக்கு சேவை செய்வதும்தான் வாழ்நாள் லட்சியமாக இருக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள்.

அவர்களின் முற்போக்கும், இலட்சியமும் மகள்களின் திருமண நாள்வரை மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது. அம்மாக்கள் இந்த இரண்டுவிதமான விஷயங்களையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கும் பெண்கள் வீட்டைப் பார்த்துக் கொள்வதா, வேலைக்கு செல்வதா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்பொழுது பெரும்பாலான பெண்கள் வீட்டில் இருப்பதையே தேர்வு செய்கிறார்கள் அல்லது வேலைக்கு செல்ல கட்டாயம் இருக்கும் பெண்கள் வீட்டை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்கிற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.

மகள்
மகள்

ஒரு பெண் வேலைக்கு செல்வதாலேயே அவள் சுதந்திரமாக இருப்பதாக தோன்றலாம். ஆனால், அதே பெண் வேலையை முடித்து வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் குடும்ப பொறுப்பு என்கிற பெயரில் இருக்கிறது. யாரும் சொல்லாமல் பெண்களே வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதற்கு பின்னால் இருப்பதும் அம்மாக்கள் சிறுவயதிலிருந்தே சொல்லித்தரும் ’குடும்ப பொறுப்பு’ பாடம்தான்.

”இதை செய்யக்கூடாது” என்று நேரடியாக சொல்லும் கணவர் குடும்பத்தினரைவிட, ’எமோஷனலாக’ நம்மீது அக்கறை, அன்பின் பெயரில் அம்மாக்கள் செலுத்தும் ஆதிக்கம் ஆபத்தானவை.

மகள்களை Verbal Abuse செய்யக்கூடியவர்கள் பெரும்பாலும் அம்மாவாகவே இருக்கிறார்கள். ‘’அம்மாக்களுக்கு மனதில் அன்பு இருக்கிறது, வெளியில் காட்டுவது இல்லை’’ என்கிறார்கள். காட்டப்படாத அன்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அன்பு கிடைக்காமல் வெறும் வார்த்தை வன்முறைகளை மட்டுமே அனுபவிக்கும் பிள்ளைகள் எளிதாக வெளியிலிருந்து கிடைக்கும் அன்பில் ஒட்டிக் கொள்கிறார்கள். பல பதின்பருவ தவறான நட்பு மற்றும் உறவுகளும் இப்படிதான் தொடங்குகின்றன.

வகுப்புத் தோழி ஒருத்தி வார இறுதி விடுமுறைக்கு விடுதியில் இருந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள். ஊரிலிருந்த அவள் பெற்றோரிடம் சொல்லவில்லை. மறுநாள் எங்கள் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்த அவளது அம்மா என் அம்மாவிடம் தன் மகள் ‘யாருடனோ ஓடிப்போய் விட்டதாக நினைத்தேன்’ என்று சொன்னார். தனது மூத்த மகள் பதினெட்டு வயதில் தாங்கள் கைக்காட்டியவரை திருமணம் செய்துகொண்டதால் ஒழுக்கமானவள் என்றும், இளைய மகள் பிடிவாதமாக படிக்க ஆசைப்பட்டதாலேயே அவள் சரியில்லை என்றும் சொன்னார். இவ்வளவிற்கும் அந்த பெண் இப்போது யாருடனும் காதல் உறவில் இல்லை. எல்லாமே அவள் அம்மாவின் அளவுக்கு மிஞ்சிய கற்பனை மட்டுமே. மிக Toxic ஆன அம்மாக்களை பட்டியலிட்டால் அவரது பெயரையே முதலில் குறிப்பிடுவேன்.

‘’அப்பாவுக்கும், அண்ணனுக்கும் மரியாதை கொடு’’, ‘’தம்பியை அனுசரித்து போ’’, ‘’கணவனுக்கு கீழ்ப்படிந்து நடந்துகொள்’’, ‘’பிள்ளைகளுக்காக தியாகம் செய்’’ என ஆண்கள் எதிர்பார்ப்பதாக சொல்லும் அத்தனையும் அம்மாக்களின் எதிர்பார்ப்பே. வீட்டு வேலை மற்றும் சமையல் கற்றுக் கொள்ளவில்லை என்றால் ‘’மாமியார் திட்டுவாங்க’’ என்று விவரம் தெரியாத வயதில் இருந்தே மாமியாரை ஒரு பூச்சாண்டி போல் ஆக்கி வைப்பவர்கள் நம் அம்மாக்கள். அதேபோல் திருமணத்திற்கு பிறகு உடுத்தும் உடையில் இருந்து வேலைக்கு செல்வது வரை கணவர் வீட்டினர் சொல்படி நடந்துகொள்ள சொல்பவர்களும் அம்மாக்கள்தான். எங்கேயும் தவறுதலாக்கூட தன் மகள் சுதந்திரமானவளாக, சுயமரியாதையுடன் வாழ்ந்துவிடுவது அவமானம் என்று அவர்கள் நினைப்பதாக புரிந்து கொள்ளலாம் தானே?

வான்மகள் - பாவக்கதைகள்
வான்மகள் - பாவக்கதைகள்
இவர்கள் இப்படியென்றால், ”உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று அன்பின் பெயரால் சாந்தமாக பேசி இவற்றையெல்லாம் திணிக்கும் அம்மாக்கள் இன்னொரு வகை.

பண்பாடு, கலாசாரம் என்கிற பெயரில் அம்மாக்கள் செய்யும் காரியங்கள் சில சமயங்களில் ஆபத்தானதாகவும் இருக்கிறது. நெட்ஃப்பிளிக்ஸில் வெளியான ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜியில் கௌதம் மேனன் இயக்கிய ’வான்மகள்’ படத்தில் 10-12 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், காவல் துறையில் புகார் அளிக்கவும் கூடாது என்று சொல்லும் அவளது அம்மா வீட்டிற்கு அழைத்து வந்து தேய்த்து குளிப்பாட்டுவாள். அடுத்தடுத்த நாட்களிலும் அம்மாவிற்கு தோன்றும்போதெல்லாம் அந்த குழந்தையை கோபம் மற்றும் ஆதங்கத்துடன் இவ்வாறு குளிப்பாட்டுவாள். அந்த குழந்தையே தவறு செய்துவிட்டது போன்ற குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

பாலியல் வன்புணர்வுக்கு ஆளான ஒரு குழந்தையை குளிப்பாட்டுவது மூலம் அந்த குழந்தைக்கு ஏற்பட்ட பாவம், அசிங்கம் கழுவப்படும் என்பது அதன் பொருள். ஒரு படித்த நடுத்தர குடும்பமாக காட்டப்பட்டிருக்கும் கதையில் அதுவும் இந்த 2020-ல் இப்படி ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. நம் குடும்பங்களிலும் இவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கற்பு, பண்பாடு என்று சொந்த மகள்களை குற்றவாளிகளாக்கி விலக்கி வைத்து பார்க்கும் அம்மாக்களின் இத்தகைய செயல்கள் அறிவின்மை மற்றும் அடிமைத்தனத்தின் உச்சம்.

பதின்வயதில் உருவாகும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றத்தை கடந்து வந்திருக்கும் அம்மாக்கள் எல்லோரும் தங்களுடைய மகள்கள் அதே வயதில் இருக்கும்போது சரியான உரையாடல்களை நிகழ்த்துவது இல்லை. பதின்வயதில் உடைகள், ஒப்பனை, சினிமா, பாடல்கள் போன்ற விஷயங்களின்மீது ஈர்ப்பு உண்டாகும். அப்போது உரையாடல்கள் இல்லாமல் சட்டென்று திணிக்கப்படும் கட்டுபாடுகள் வெறும் அதிகாரம் செலுத்துவதாக மட்டுமே பார்க்கப்படும். அதை மீறும் பெண் குழந்தைகளை அம்மாக்கள் வார்த்தைகளால் தாக்குகிறார்கள் # VerbalAbuse. சமயத்தில் அடியும் விழுகிறது. பெற்ற அம்மாவே மகள்களை பாலியல் ரீதியான அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசுவது, அல்லது மகளின் பதின்பருவ மாற்றங்களை மிக மோசமான முறையில் அணுகுவது அந்த பிள்ளைகளின் மொத்த எதிர்காலத்தையும் பாதிக்கும்.

காதல்
காதல்
காதல் ஏற்படும்போது பெரும்பாலான மகள்கள் தங்கள் அம்மாக்களிடம்தான் முதலில் சொல்கிறார்கள். சாதி, மதம் இன்னும் பலவற்றை காரணம் காட்டி அந்தக் காதலை முடித்து வைக்கவே அம்மாக்கள் விரும்புகிறார்கள். அதோடு நில்லாமல் தொடர்ந்து அப்பெண்களை சந்தேகப்படுவது, குத்திக்காட்டி பேசுவது என வார்த்தைகளால் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

பதின்வயது பெண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசும்போது கண்டிக்கும் அம்மாக்களினால் தங்களுக்கு குழப்பம், பிரச்னைகள் வரும்போது அவர்கள் முடிவெடுக்க தெரியாமல் தடுமாறுவதும், தன்னிச்சையாக எடுக்கும் முடிவினால் ஆபத்தில் சிக்கிக் கொள்வதும் நடக்கிறது.

தம்மை பற்றி அம்மா வைத்திருக்கும் அபிப்ராயம் எத்தனை வயதானலும் பிள்ளைகளுக்கு முக்கியமானது. அப்படியிருக்க பதின்வயதில் ஒழுக்கம், படிப்பு, வீட்டு வேலைகள் சார்ந்து அம்மா மோசமாக பேசுவது அப்பெண்களுக்கு தம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. தன் தாயே தன்னை பற்றி தவறான கருத்தை முன்வைக்கும்போது காலமெல்லாம் அதை துடைக்க மகள்கள் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. மேலும் இது மற்றவர்களிடமும் வெளிப்படையான உரையாடலுக்கு தடை போடுவதாக அமைகின்றது.

இது ஒருபுறமிருக்க பிள்ளைகளை நேரடியாக திட்டவோ அடிக்கவோ செய்யாமல் மறைமுகமாக பாதிப்பு ஏற்படுத்தும் அம்மாக்களும் இருக்கிறார்கள். பிள்ளைகள் தவறு செய்யும்போது அதை அவர்களிடமே வெளிப்படையாக பேசாமல் மற்றவர்களிடம் வருத்தத்தை பகிர்ந்து கொள்ளுதல் என்கிற பெயரில் குறை சொல்லும் ’மறைமுக தாக்குதலை’ #PassiveAgressive பலரும் செய்கிறார்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு வரும்போது நேரடியாக கோபத்தை காட்டாமல் அமைதியாக இருந்துவிடுவது பெண்களின் நற்பண்பாக போற்றப்படுகிறது. ஆனால், அப்படி கோபத்தை மறைத்து வைக்கும் எல்லா பெண்களும் அதை சரியாகக் கையாள்வதில்லை. சம்பந்தபட்டவருடன் பேசாமல் இருப்பது, மற்றவர்களிடம் புறம் பேசுவது, தன்னை மரியாதைக் குறைவாக நடத்துவதாக புலம்புவது என இந்த பெண்களே தங்கள் பிள்ளைகளுக்கு மோசமான முன்னுதாரணமாகவும், தயக்கம், பயம் போன்ற மனநல பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.

பெண்கள்
பெண்கள்

மூன்றாவது வகை அம்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிள்ளைகளை பற்றிய பெருமிதம் அதிகம். அவர்களுக்கு தங்கள் பிள்ளை ’தனது காலில் தானே நடப்பது, தனது கையால் தானே சாப்பிடுவது’ போன்ற மனிதர்களின் இயல்பான விஷயங்கள் கூட மாபெரும் சாதனையாக இருக்கிறது. தனது 20 வயது மகள் லைட்டர் கொண்டு கேஸ் ஸ்டவ்வை பற்றவைக்க கற்றுக்கொண்டதை பெருமையாகக் கூறும் அம்மாக்களை கண்டிருக்கிறீர்களா?

ஒரு சுடுசொல்கூட பேசாமல் அன்பின் திருவுருவாய் இருக்கும் அம்மாக்களில் பலரும் எத்தனை வயதானாலும் பிள்ளைகளை தங்கள் கைக்குள்ளேயே பத்திரமாக ஒரு பொருளைப் போல வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஆண் பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு ஓரளவு இதை புரிந்து வெளியேறுகிறார்கள். ஆனால் மகள்கள் இதை ’தாய்ப்பாசம்’ என புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் தங்கள் அம்மாவின் தலையீடு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அம்மாக்களும் தங்களுடைய ஆசைகள் மொத்தத்தையும் மூட்டைகட்டி மகள்களின்மீது ஏற்றி விடுகிறார்கள். தங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அம்மாக்களின் சொல்படி அவர்களும் நடந்துகொள்கிறார்கள்.

இப்படி வளரும் மகள்கள் பொருளாதார சுதந்திரம் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் முடிவுகள் எடுக்கத் தெரியாமல் வாழ்வின் முக்கிய கட்டங்களான திருமணம் முதல் விவாகரத்து வரை எல்லாவற்றிற்கும் பெற்றோரின் பேச்சை கேட்டு வாழ்க்கையை பாழாக்கிக்கொள்கிறார்கள்.

அம்மாக்களே உங்கள் குழந்தைகளை வாழவிடுங்கள்!