Published:Updated:

காதல் திருமணங்களில்தான் விவாகரத்து அதிகமா... நம் சமூகத்தில் பிரிவு ஏன் இன்னும் `நார்மல்' ஆகவில்லை?

காதல் திருமணம்

மேடம் ஷகிலா - 33: திருமணங்கள் காதல், அன்பினால் இயல்பாக உருவாகாமல் சொத்து, வருமானம், அழகு, படிப்பு, ஜாதகப் பொருத்தம், சாதி, மதம் எல்லாம் பார்த்து ’உருவாக்கப்படுகிறது’.

Published:Updated:

காதல் திருமணங்களில்தான் விவாகரத்து அதிகமா... நம் சமூகத்தில் பிரிவு ஏன் இன்னும் `நார்மல்' ஆகவில்லை?

மேடம் ஷகிலா - 33: திருமணங்கள் காதல், அன்பினால் இயல்பாக உருவாகாமல் சொத்து, வருமானம், அழகு, படிப்பு, ஜாதகப் பொருத்தம், சாதி, மதம் எல்லாம் பார்த்து ’உருவாக்கப்படுகிறது’.

காதல் திருமணம்
கடந்த ஜூன் மாத இறுதியில் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இளம்பெண் விஸ்மயாவின் மரணம். விஸ்மயா ஆயுர்வேத மருத்துவ படிப்பு இறுதியாண்டு மாணவி. அவரது கணவர் கிரண்குமார் போக்குவரத்து துறை துணை ஆய்வாளராக பணியாற்றினார். திருமணமான ஓராண்டில் பலமுறை வரதட்சணை கேட்டு கணவனால் தாக்கப்பட்டிருக்கிறார் விஸ்மயா.

தன் குடும்பத்தினரிடம் தனக்கு நேரும் பிரச்னைகளை விஸ்மயா சொல்லும்போது, மாப்பிள்ளை கேட்கும் வரதட்சணையை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர். மரணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன் இறுதியாக பெற்றோர் வீட்டுக்கு சென்றபோது ’பெற்றோர் வீட்டில் இருந்தால் சமூகம் தவறாக பேசும்’ என்பதால் கணவன் வீட்டுக்கு திரும்பி செல்வதாக கூறிச் சென்றிருக்கிறார் விஸ்மயா. தன்னுடைய கணவன் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களை புகைப்படம் எடுத்து தனது உறவினர்களுக்கு இறப்பதற்கு முன்பு வாட்ஸ்அப்பில் அனுப்பி இருக்கிறார். இவ்வளவுக்கும் பிறகுதான் இறந்து போயிருக்கிறார்.

சமூகத்தைக் காரணம் காட்டி அவரது பெற்றோரும், ஒரு கட்டத்தில் அவரேகூட கணவன் வீட்டில் இருப்பதுதான் பெண்களுக்கு மரியாதை என்று கூறி மீண்டும் கணவன் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

கிரண்குமார் - விஸ்மயா
கிரண்குமார் - விஸ்மயா

விஸ்மயா முதல் முறை தன் குடும்பத்தினரிடம் வரதட்சணை கொடுமையை பேசும்போதே காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். அதே காரணத்திற்காக விவாகரத்து வாங்கி இருந்தால் விஸ்மயா உயிருடன் இருந்திருப்பார். தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையத்தில் பதிவான வழக்குகளின்படி வரதட்சணை கொடுமையினால் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 20 இளம் பெண்கள் இறக்கிறார்கள் (2017 கணக்கெடுப்பு).

ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களை பண்டமாற்று நிகழ்வுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. திருமண உறவில் பெண்களுக்கு சமத்துவம், சுதந்திரம் இல்லை என்பது இங்கே ‘Normal’ ஆக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து தன்னுடைய சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்ள விவாகரத்தின் மூலம் வெளியேறும் பெண்கள் சமூகத்தின் பார்வையில் குடும்பத்தை சிதைப்பவர்கள். பெண்கள் முன்வந்து விவாகரத்து கேட்பது கிட்டத்தட்ட கொலை குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சமூகத்தில் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கு பயந்தே பல பெண்கள் விஸ்மயாவை போல தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அடிப்பது, தவறாக பேசுவது (Physical and Verbal abuse) போன்ற குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்கள் என்றதும் மது அருந்திவிட்டு மனைவியை அடிப்பவர்கள் எல்லோரும் நடுத்தர வர்க்கம் அல்லது ஏழை மக்கள் என்கிற பிம்பம் தோன்றலாம். அதற்கு பின்னால் திரைப்படங்களின் தாக்கம் இருக்கிறது. ஆனால் படித்தவர்கள், புரோஃபஷனல்கள், பொருளாதார வசதி படைத்தவர்களும் வரதட்சணை முதற்கொண்டு பல்வேறு காரணங்களுக்காக குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு விஸ்மயாவின் வழக்கும் ஒரு உதாரணம்.

நம் நாட்டில் ஏற்பாட்டுத் திருமணங்களை ஒப்பிடும்போது காதல் திருமணங்கள் மிகக் குறைவான சதவிகிதம்தான் இன்றும் நடைபெற்று வருகின்றன. ஆனால் விவாகரத்து என்று வரும்போது ஏற்பாட்டுத் திருமணங்களுக்கு இணையாக காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் விவாகரத்து பெறுகின்றனர்.

மேலோட்டமாக பார்த்தால் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் புரிதல் இல்லாமல் சண்டையிட்டு பிரிகிறார்கள் என்பது போலவும் ஏற்பாட்டுத் திருமணங்களில் அன்பு ஆறாக ஓடுவது போலவும் தோன்றலாம். இங்கே பெரும்பாலான ஏற்பாட்டுத் திருமணங்கள் விவாகரத்தை நோக்கி செல்லாமல் இருப்பதற்கு பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சமூகத்தின் மீதிருக்கும் அச்சமும், குழந்தைகளின் எதிர்காலமும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

விவாகரத்து
விவாகரத்து

விவாகரத்தை நோக்கி தம்பதிகள் செல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வரதட்சணை, திருமணத்துக்கு வெளியில் ஏற்படும் உறவு, அல்லது அப்படி உறவு இருப்பதாக சந்தேகம் கொள்வது, அடிப்பது, வார்த்தைகளால் தொடர்ந்து காயப்படுத்துவது இவை எல்லாம் உடனே நினைவுக்கு வரும் காரணங்கள். இவை அல்லாமல் சின்ன பிரச்னை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களும் இங்கே யாரோ ஒருவரின் விவாகரத்துக்கு காரணமாக இருந்து கொண்டிருக்கின்றன.

ஆண், பெண் இருவருக்குமே திருமண உறவில் பிரச்னைகள் இருக்கிறது என்றாலும் குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

இந்தியாவில் திருமணம் மதம் மற்றும் கலாசாரத்துடன் பிரிக்க முடியாத அளவு பிணைக்கப்பட்டு இருப்பதால் திருமண உறவில் இருந்து விலகுதல் என்பது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் திருமண உறவில் இருந்து விலக, நீதிமன்றம் செல்லும் முன்பு குடும்பம், உறவினர்கள், கிராமம் என்றால் ஊர்க்காரர்கள் என யாராவது பிரச்னைகளை சுமூகமாக பேசித்தீர்க்க பல கட்ட முயற்சிகள் எடுப்பார்கள்.

பெரும்பாலும் இத்தகைய பேச்சுவார்த்தைகள் ’குழந்தைகளின் நலனை மனதில் வைத்து கணவனை அனுசரித்துப் போ’ என பெண்களுக்கு அறிவுரை என்கிற பெயரில் பயமுறுத்தி அங்கேயே முடித்து வைப்பதாகவே இருக்கிறது. பெண்கள் வீட்டினுள் அடிமையாக இருப்பதே நம் நாட்டில் குறைவான அளவு விவாகரத்து வழக்குகள் பதிவாவதற்கான காரணம்.

குடும்ப அமைப்பை பிரதானமாக கொண்ட சமூகத்தில் இது சரி என்பது போல் தெரிந்தாலும், பெண்களின் தரப்பு நியாயத்தை பேச விடாமல், அவர்களில் உணர்வுகள், சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து சமூகம் தெரிந்தே பெண்களை குடும்ப வன்முறைக்கு ஆளாக்குகிறது. பெண்களும் இதற்கு ஒத்துப்போவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பொருளாதார சுதந்திரம் இல்லாதது. தங்கள் வாரிசு என்கிற உரிமையில் மணவிலக்கின்போது ஆண்கள் குழந்தைகளை தங்களோடு வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குழந்தைகளை பிரிய முடியாத பெரும்பாலான பெண்கள் இந்த அச்சுறுத்தலினால் விவாகரத்து கோராமல் கணவனோடு சேர்ந்து வாழ்கிறார்கள்.

மற்ற வளர்ந்த நாடுகளில் விவாகரத்து பெற கணவன், மனைவி இருவரும் நேரடியாக அவரவர் வழக்குரைஞர்களிடம் செல்வார்கள். நம் நாட்டில் பல கட்ட பேச்சு வார்த்தைகளில் பலருக்கும் பதில் சொல்லி பெரும்பாலும் முகத்திலேயே முழிக்கக் கூடாது எனும் அளவுக்கு அந்த உறவு நச்சாக (Toxic) மாறிய பிறகுதான் நீதிமன்றம் செல்கிறார்கள். இந்த நேரம் விரயம் இரண்டு குடும்பம், குறிப்பாக குழந்தைகளின் மனநலனையும் பாதிக்கிறது.

விவாகரத்து
விவாகரத்து

வார்த்தைகளால் வன்முறை (#VerbalAbuse) செய்வது பற்றி சரியான புரிதல் நம் மக்களிடையே இல்லை. பொதுவாக என்ன பேசினாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு வேலையை பார் என்பது பெண்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் சொல்லும் முதல் அறிவுரையாக இருக்கிறது.

இன்றைய நகர வாழ்க்கையில் பிள்ளை வளர்ப்பு மற்றும் குடும்பத்தை பராமரிப்பதற்கு கல்வியறிவு, பொது அறிவு கட்டாயம் என்கிற சூழ்நிலை இருக்கிறது. அதற்காகவே அதிகம் படித்த பெண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்கள், திருமணத்திற்கு பிறகு தங்கள் மனைவி வீட்டின் வேலையாளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தங்களைவிட அறிவில் குறைந்தவர்கள், திறமை இல்லாதவர்கள், முட்டாள்கள், வெளியில் சென்று வருமானம் ஈட்ட முடியாதவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து பேசி ஒரு கட்டத்தில் பெண்களுக்கு தங்கள் மீதே நம்பிக்கை இல்லாமல் செய்துவிடுகின்றனர்.

பெரும்பாலும் ஏற்பாட்டுத் திருமணங்களில் பெண்களை இந்த வழியில் வீட்டுக்குள்ளேயே முடக்குவது அதிகம் நடக்கிறது. இதை கண்டுகொள்ளாமல் தங்கள் கரியர் பற்றி யோசிக்கும் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஒரு சிலரே உடல் மற்றும் மனநலன் கருதி தைரியமாக டாக்ஸிக் உறவுகளில் இருந்து வெளியேறுகிறார்கள்.

’ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நம் பண்பாடு என்று போதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யும்போது, அல்லது செய்யாமல் சேர்ந்து வாழும் போதெல்லாம் வசதியாக இந்த பண்பாட்டு கோட்பாட்டை மறந்துவிடுகிறது சமூகம். ஒரு பெண் முறைப்படி நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று வேறொரு திருமணம் செய்யும்போது அவளை ’சராசரி’ பெண்ணாக இல்லை என சமூகத்திலிருந்து விலக்கி வைத்து பார்க்கிறது.

விவாகரத்து
விவாகரத்து

சமீபத்தில் சமூக வலைதளத்தில் 30 வயதில் திருமணம் ஆகாமல் இருப்பது ‘நார்மல்’, அதேபோல் 40 வயதில் விவாகரத்து பெறுவதும் நார்மல்தான் எனும் பதிவு ட்ரெண்டிங் ஆனது. அதில் சிலர் ’புரட்சிகரமான’ கருத்தாக இருக்கிறது என கேலி செய்து இருந்தார்கள். அப்படி சொல்பவர்கள் கலாச்சார காவலர்கள் அல்ல. எவ்வளவு முற்போக்காக சிந்திப்பவர்களாக இருந்தாலும் பெண்களின் விவாகரத்து அல்லது மறுமணம் என வரும்போது அதை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை பலருக்கும் வரவில்லை.

திருமண முறிவு ஏற்பட்டு பெற்றோர் வீடுகளுக்கு திரும்பும் பெண்களை குடும்பத்தினர் சுமையாக, அவமானமாக நினைக்கும் நிலை இன்றும் உள்ளது. விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களுக்கு சிறு நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பதிலும்கூட சிக்கல்கள் இருக்கின்றன. குடும்பத்தை எதிர்த்து காதலித்து திருமணம் செய்தவர்கள், சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்கள், விவாகரத்து ஆகி தனியாக வாழ்பவர்கள் போன்றவர்களை சமூகம் வேற்று கிரக வாசிகள் போல் நடத்துகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், திருமணமாகி பெண் பிள்ளைகள் தனி வீடு செல்வதை தாங்க இயலாமல் தங்களுடைய மகள் வீட்டில் சென்று வாழ்வது அல்லது மகளை தங்களுடன் வைத்துக் கொள்ள முயற்சி செய்வதும் நடக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் மகளை விவாகரத்து வரை கொண்டு செல்லும் பெற்றோர்கள், பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவும் மகள்கள் விவாகரத்து ஆகி திரும்பும்போது அவர்களை தங்கள் சுயநலத்திற்காக மறுமணம் செய்துவைப்பதையும் விரும்புவதில்லை. இவை எல்லாம் புரிந்தாலும் பெற்றோர்கள் தங்களுக்கு நல்லது மட்டுமே செய்வார்கள் என்று நம்பிக்கொண்டு முட்டாள்களாக தங்கள் வாழ்வை நாசமாக்கி கொள்கிறார்கள் பெண்கள்.

சேர்ந்து இருக்கும்போது நல்லவையாக தெரிந்த விஷயங்கள் கருத்து வேறுபாடு உருவாகி பிரிய நேரும்போது பிரச்னைக்குரியதாக மாறிவிடுகிறது. விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நஷ்டஈடு தொகைக்காகவும் வழக்கு நடக்கும் போது ஒருவர் மீது மற்றொருவர் பொய்யான காரணங்கள் சொல்வதும் நடக்கிறது. விவாகரத்திற்கு பிறகு இன்னொரு திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது முந்தைய திருமண முறிவுக்கான காரணங்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது.

காதல் திருமணம்
காதல் திருமணம்

வளர்ந்த நாடுகளில் பெற்றோர்கள் விவாகரத்து செய்த பிறகு தாய்-தந்தை இருவரில் ஒருவருடன் வளரும் குழந்தைகளை காணவும், இறுதிவரை உரிமை கொண்டாடவும் இன்னொருவருக்கு சாத்தியம். அதேபோல் பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்ட பிறகும் தனது முன்னாள் துணையிடம் அவர்களால் இயல்பாக சந்தித்து பேச முடிகிறது. நம் நாட்டில் விவகாரத்துக்குப் பிறகு காணவே கூடாத எதிரியாக முன்னாள் வாழ்க்கைத் துணையை நினைக்கும் நிலைதான் உள்ளது. பெற்றோரில் ஒருவர் நீதிமன்றம் மூலம் குழந்தைகளை காண அனுமதி பெற்றிருந்தாலும் குழந்தையை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட வெறுப்பினால் அதை முடிந்தவரை தடுக்கின்றனர்.

திருமணங்கள் காதல், அன்பினால் இயல்பாக உருவாகாமல் சொத்து, வருமானம், அழகு, படிப்பு, ஜாதகப் பொருத்தம், சாதி, மதம் எல்லாம் பார்த்து ’உருவாக்கப்படுகிறது’. இந்த பிசினஸ் டீலில் பிரிய நேரும்போதும் லாபக் கணக்கு பார்ப்பதும், இல்லாத போது ஒருவர் மீது ஒருவர் அவதூறு சொல்லி மோசமான வாழ்க்கை நிகழ்வாக திருமணத்தையும், மணவிலக்கையும் முடித்துக் கொள்கிறார்கள்.

விவாகரத்து வழக்கு
விவாகரத்து வழக்கு

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வரும்போது அதற்காகவே காத்திருந்ததுபோல மக்கள் கேலி செய்து சிரிப்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களின் இந்த மன வக்கிரத்தை கண்டு அஞ்சுபவர்கள் விவாகரத்து மற்றும் மறு திருமணம் போன்ற வாழ்க்கை நிகழ்வுகளை வெளியே சொல்ல தயங்குகிறார்கள். மனிதன் சமூகமாக வாழ்வது பிரச்னையில் ஒருவருக்கு ஒருவர் அரவணைக்கத்தானே அன்றி அடுத்தவர் துன்பத்தைக் கண்டு புறம்பேசி சிரிப்பதற்கு அல்ல.

கருத்து வேறுபாடுகளால் ஒத்துவராது என்று புரியும்போதே தெளிவாக இருவரும் மனம் ஒத்து பிரியும் விவாகரத்துகளில் mutual consent பெரும்பாலும் அதிக மன உளைச்சல், நேர விரயம் இருப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும் மணவிலக்கு, மணவிலக்கிற்கு பிறகு தனித்து வாழ்தல், வேறு ஒரு திருமணம் செய்துகொள்ளுதல் என எந்த முடிவானாலும் சமூகத்தின் எதிர்வினையை/பக்கவிளைவுகளை விட நம்முடைய மனநலனே பிரதான நோக்கமாக இருக்கவேண்டும்.