Published:Updated:

``100 நாளுக்குள்ள காதல் வராதா..?!" - கேரளா பியர்லி, ஸ்ரீனிஷ் சொல்லும் லவ் தியரி

Srinish and Pearle
Srinish and Pearle

`வீட்டுக்குள்ள இருக்குறப்போ நிறையபேர் பிக் பாஸ் கேம் ஷோக்காகதான் இப்படிப் பண்ணுறாங்கனு நெனச்சுட்டு இருந்தாங்க. நடிச்சா எவ்வளவு நாளுக்கு நடிக்க முடியும். ஆனா, கடைசில எங்களுக்கு எல்லோருமே ஆதரவாதான் இருந்தாங்க’

``பிக் பாஸ் போறதுக்கு முன்னாடி வரை, கல்யாணமே வேண்டாம். சந்தோஷமா சிங்கிளாவே இருந்துட்டு, கொஞ்ச நாளைக்கு அப்புறம் ரெண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து, அவங்களோட என் வாழ்க்கையைச் செலவிடலாம்னுதான் நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் நினைச்சதைவிட ரொம்ப அழகான வாழ்க்கையையே எனக்குக் கொடுத்திருக்கு பிக் பாஸ்" என கலகலவென பேசத் தொடங்கினார் மலையாள பிக் பாஸ் முதல் சீஸனின் ரன்னர் அப் பியர்லி மானி.

Malayalam Bigg Boss couple
Malayalam Bigg Boss couple

2018-ம் வருடம், `லாலேட்டன்' என்று செல்லமாக அழைக்கப்படும் மோகன்லால் தொகுத்து வழங்க, மலையாள பிக் பாஸ் முதல் சீசன் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்ட கேரள நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர்லி மானி மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த், பிக் பாஸ் வீட்டுக்குள் காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் கியூட் காதல் பயணத்துக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கிலும் உள்ளனர். அவர்களின் அன்பான உலகத்துக்குள் நம்மையும் சிறிது நேரம் பயணிக்க வைத்த சுவாரஸ்யப் பகிர்வு இதோ..

Srinish and Pearle
Srinish and Pearle

பிக் பாஸ் போவதற்கு முன்பே, ஸ்ரீனிஷை தெரியுமா?

என் அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோரும் ஸ்ரீனிஷாட ரொம்பப் பெரிய ரசிகைகள். ஸ்ரீனி ஏற்கெனவே என்னை டி.வி.ல பார்த்துட்டு, அவங்க அம்மாகிட்ட `யாரும்மா இந்தப் பொண்ணு. ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கா'னு சொல்லிருக்காங்க. அதுக்கு அப்புறம் இன்ஸ்டாகிராம்ல என்னை பின்தொடர்ந்துட்டுதான் இருந்திருக்காங்க. ஆனா, தனிப்பட்ட முறைல தெரியாது. பிக் பாஸ் வீட்டுலதான் பார்த்தோம்.

என்னுடைய நடிப்புத் திறமையைப் பார்த்து என்னைப் பிடிச்சிருந்தா, அவங்க என் ரசிகர்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டுல நான் நானா இருந்ததைப் பார்த்துட்டு, என்னை வாழ்த்துறவங்க எல்லோரும் என் குடும்பத்துல ஒருத்தர்தான்.
பியர்லி

திருமணம் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்த உங்களுக்கு, ஸ்ரீனிஷ் எப்படி ஸ்பெஷலானார்?

அம்மாவுக்கு நான் பிக் பாஸ் போறது கொஞ்சம்கூடப் பிடிக்கல. தனியா நூறு நாள் நான் எப்படி இருப்பேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஆனா, எல்லாத்தையும் மீறி தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனேன். உள்ள போய் கொஞ்ச நாள்லயே `ஹோம் சிக்' ஆயிட்டேன். வீட்டை ரொம்பவே மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அந்த நேரத்துல என்கூட ஆறுதலா இருந்தது ஸ்ரீனி மட்டும்தான். ஆரம்பத்துல நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா, நான் தனிமையில இருந்த நேரத்துல என்னை சிரிக்க வெச்சது ஸ்ரீனி. இதுபோல சின்ன சின்ன விஷயங்கள்தான் வளர்ந்து காதலாகிடுச்சு. நான்தான் முதல்ல காதலை ஸ்ரீனிகிட்ட சொன்னேன். அவங்களும் டக்குனு ' ஓகே' சொல்லிட்டாங்க" என்று பியர்லி சொல்லி முடிப்பதற்குள் ஸ்ரீனிஷ் பேசத் தொடங்கினார்.

Pearle Maaney and Srinish Aravind
Pearle Maaney and Srinish Aravind

அவங்களுக்கு முன்னாடியே நான்தான் புரொபோஸ் பண்ணிட்டேன். ஆனா, இது பிக் பாஸுக்கே தெரியாது. ஒருநாள் அவங்க ரொம்ப அப்செட்டா இருந்தாங்க. அந்த நேரத்துல நான் அவங்களுக்கு கைகுலுக்குறதுபோல என்னோட மோதிரத்தை போட்டுவிட்டேன். அப்புறம் காதுல என்னோட விருப்பத்தை சொன்னேன். அவங்களால அந்த நேரத்துல சரியா ரியாக்ட் பண்ண முடியல. இதுக்கு அப்புறம்தான் அவங்க புரொபோஸ் பண்ணாங்க. இதை யாருக்கும் சொல்லிடாதீங்க பிக் பாஸ்னு கேமரா பார்த்துக் கேட்டோம். ஆனா, எதைச் சொல்ல வேண்டாம்னு சொன்னோமோ அந்த வேலையைச் சிறப்பா செஞ்சு முடிச்சிட்டாரு நம்ம பிக் பாஸ். இப்போ வரைக்கும் அந்த மோதிரம் பியர்லி விரல்லதான் இருக்கு.

குறும்பான பொண்ணு, சமைக்கத் தெரியாதுன்னு நெனச்சேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள்கூட ஸ்விக்கி, ஸோமேட்டோ ஆப்ஸ்லாம் உபயோகிக்கவே இல்ல. பியர்லிதான் எல்லாம்!
ஸ்ரீனிஷ்

உங்கள் காதல் பற்றித் தெரிந்ததும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் என்ன சொன்னார்கள் பியர்லி?

Srinish and Pearle Hindu wedding
Srinish and Pearle Hindu wedding

ரெண்டு வாரம் என் காதலை வெளிப்படுத்தாம மனசுக்குள்ளேயேதான் வெச்சிட்டு இருந்தேன். ஆனா, என் கண்கள் எல்லாத்தையும் காட்டிகொடுத்திருச்சு. அதேபோலத்தான் ஸ்ரீனியும். சில நேரங்கள்ல நாங்க பேசிக்கவே மாட்டோம். ஆனா, அவங்க ஒரு பார்வை பார்த்தாலே போதும். நான் சந்தோஷமாகிடுவேன். இதுல எங்களுக்கு எந்தவித கேம் பிளானும் இல்லை. 100 நாளைக்குள்ள காதல் வரக் கூடாதுன்னு எதுவும் இல்லையே. எல்லாமே ரொம்ப இயற்கையா நடந்துச்சு. ஆனா, வீட்டுக்குள்ள இருக்குறப்போ நிறையபேர் பிக் பாஸ் கேம் ஷோக்காகதான் இப்படி பண்ணுறாங்கனு நெனச்சுட்டு இருந்தாங்க. நடிச்சா எவ்வளவு நாளுக்கு நடிக்க முடியும். ஆனா, கடைசில எங்களுக்கு எல்லோருமே ஆதரவாதான் இருந்தாங்க.

வீட்டுக்குள் என்ன மாதிரி பேசிப்பிங்க பியர்லி?

வீடியோ கேம்ஸ், டோரா, பாப்பாய், சோட்டா பீம்னு கார்ட்டூன்ஸ் பத்திதான் நிறைய பேசினோம். குரல் மாத்திப் பேசிட்டு விளையாடிட்டு இருந்தோம். சீரியஸான டாபிக் எதுவும் பேசவே இல்லை. கல்யாணம் பத்திகூட ஒரே ஒரு முறைதான் பேசினோம். அதுவும் புரொபோஸ் பண்ணுன அந்த நாள் மட்டும்தான்.

பியர்லி நெறைய ஜங்க் உணவுகள் சாப்பிடுவாங்க. அது மட்டும்தான் அவங்ககிட்ட எனக்குப் பிடிக்காது.
ஸ்ரீனிஷ்
Srinish, Pearle with their parents
Srinish, Pearle with their parents

வீட்டைவிட்டு வெளியே வந்ததும் உங்களின் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் ஸ்ரீனிஷ்?

பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்குறப்போவே கேமரா பார்த்து எங்க அப்பா அம்மாகிட்ட ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சு வெச்சு, எங்களோட விருப்பத்தைச் சொன்னோம். என் அம்மா நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் `எப்போ கல்யாணம்'னுதான் முதல்ல கேட்டாங்க. சீக்கிரமா அவங்க வீட்டுல போய் பேசுறோம்னு சொல்லி எனக்குப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. இதைவிட பியர்லி வீட்ல ரொம்ப ஃபாஸ்ட். ஒரு வாரம் கழிச்சு நான் பியர்லி வீட்டுக்குப் போனேன். ரொம்ப கோவமா இருப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா, அவங்க அம்மா என் கையைப் பிடிச்சு அவங்க சொந்த மகனைப் பார்த்து சொல்லுறதைப்போல 'வா மோனே'னு கூப்பிட்டு, சீக்கிரம் வீட்டுல வந்து பேசுங்கன்னு சொன்னாங்க. பெரியவங்க எல்லா சம்பிரதாயத்தையும் முறைப்படி செஞ்சிட்டு இருக்க, நாங்க ரெண்டு பேரும் `டும் டும் டும்' நாள்களை எண்ணிட்டு இருந்தோம்.

Srinish Pearle Christian wedding snap
Srinish Pearle Christian wedding snap

திருமண நாள் எப்படி இருந்தது ஸ்ரீனிஷ்?

வார்த்தையில சொல்ல முடியாத அளவுக்கு நாங்க ரெண்டு பேருமே அவ்வளவு சந்தோஷமா இருந்தோம். நாங்க மட்டுமல்ல, எங்களுக்கு ரொம்பவே ஆதரவா இருந்த எங்களோட ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள்னு எல்லோருமே ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. பியர்லிக்கு தனி ஆர்மி குழு இருக்கு. அவங்களையும் கல்யாணத்துக்கு அழைச்சிருந்தோம். பெங்களூரு, மும்பையிலயிருந்து சுமார் 300 பேர் வந்து எங்களை வாழ்த்தினாங்க. இவங்க ஆசீர்வாதத்தோடு கல்யாணம் பண்ணணும்னு எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஆசை. எல்லாமே பாசிட்டிவா நடந்துச்சு.

Srinish with his mom
Srinish with his mom
தமிழ் மீடியாவுல வேலை செய்றதுக்காகவே தமிழ் மொழியைச் சரளமா பேசுறதுக்குக் கத்துக்கிட்டு இருக்கேன்.
பியர்லி
``நான் மாடலிங் செஞ்சப்ப ரியாக்‌ஷன் வேற‌‌‌... ஆனா, இப்ப..?!'' - அண்ணன் கெளதம் மேனன் பற்றி உத்ரா மேனன்

இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ரகசியம் ஏதாவது இருக்கா?

கார்ட்டூன்ல வர்ற மாதிரி, நாங்கதான் ஹீரோஸ். மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்குறவங்க வில்லன்ஸ். நம்ம கண்முன்னாடி ஏதாவது தப்பு நடந்தா நாம தட்டிக் கேட்கணும். அதேபோல நாம யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்கக் கூடாதுனு நானும் பியர்லியும் அடிக்கடிப் பேசிப்போம். அப்படித்தான் உண்மையான வாழ்க்கையிலும் இருக்கோம். ஆனா, இதை வெளில சொன்னதில்லை.

தமிழ் பிக் பாஸ் சீசன் 3-ல் உங்கள் ஃபேவரைட் போட்டியாளர் யார்?

`வனிதா’ - இருவரும் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில்!

"முதல் சீஸனில் காதல் கல்யாணமே நடந்தது... ஆனால், இரண்டாவது சீஸன்?!" - மலையாள 'பிக்பாஸ்' அப்டேட்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு