கட்டுரைகள்
Published:Updated:

நாங்க இப்போ வீட்டோட மாப்பிள்ளை!

செஃப் வெங்கடேஷ் பட்
பிரீமியம் ஸ்டோரி
News
செஃப் வெங்கடேஷ் பட்

செம சின்சியர் கணவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

லாக் டௌன் நாள்களில் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எப்படியெல்லாம் உதவி செய்கிறீர்கள், 24 மணிநேரமும் குடும்பத்துடன் இருப்பதை எப்படி ஃபீல் செய்கிறீர்கள் என்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த சில செலிபிரிட்டி ஆண்களிடம் கேட்டோம். ஆம்லெட் போட்டுத் தருவதில் ஆரம்பித்து பாத்ரூம் டப்பில் தண்ணீர் நிரப்பி வைப்பது வரை செம சின்சியர் கணவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த அனுபவங்கள் அவர்களின் வார்த்தைகளிலேயே...

‘`மனைவிக்கு மனசார ஒத்தாசை பண்றேன்’’ -  செஃப் வெங்கடேஷ் பட்!

``இந்த லாக் டௌன் நாள்களில் மட்டுமல்ல, திருமணமான புதுதில் இருந்தே என் மனைவிக்கு வீட்டு வேலைகளில் நான் ஹெல்ப் பண்ணிட்டுதான் இருக்கேன். இப்போ, வீட்டிலயே இருக்கிறதால இன்னும் கொஞ்சம் அதிகமா உதவி செய்றேன்.

செஃப் வெங்கடேஷ் பட்
செஃப் வெங்கடேஷ் பட்

தினமும் காலையில் எழுந்தவுடனே பெட்ஷீட்டை மடிச்சு வெச்சிடுவேன். அப்புறம் பாத்திரம் துலக்கித் தர்றது, சமையலுக்கு வெங்காயம் பூண்டு உரிச்சுத் தர்றது என் டிபார்ட்மென்ட். தோசை, ஆம்லெட்கூட ஊத்திக் கொடுப்பேன். ஈவ்னிங்ல நான் டீ போட்டுக் கொடுத்தா அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். வாஷிங் மெஷின்ல துணியைப் போட்டு, சோப் பவுடர் போட்டு ஆன் பண்ணிடுவேன். இவ்வளவு நாள் நம்மளை, குடும்பத்தை, குழந்தைகளைன்னு எல்லாருக்கும் எல்லா வேலைகளையும் பார்த்துப் பார்த்து செஞ்சவங்க மனைவிதான். இந்த லாக் டௌன் நேரத்துல கணவர்கள் நாம, வீட்டு வேலைகளில் ஜஸ்ட் ஐம்பது சதவிகிதத்தையாவது மனசார செய்யணும்னு நினைக்கிறேன், செய்யறேன்...

குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நான் கொஞ்சம் வீக்தான். என் பொண்ணுக்கு பத்து வயசாகுது. ஒரு நாளைக்கு, நான் அவகூட ஒண்ணு அல்லது ரெண்டு மணி நேரம் செலவழிச்சாலே அதிகம். குழந்தை வளர்ப்புல எனக்கு ஆளுமையோ பொறுமையோ இல்லைங்கிறதுதான் உண்மை. ஆனா, இந்தக் குறையை என் சமையலால சரி பண்ணிடுவேன். என் மனைவி ரொம்பவே ஹெல்த் கான்ஷியஸ். ஆரோக்கியமான தென்னிந்திய உணவுகள்தான் சமைப்பாங்க. பொண்ணுக்கு என்னை மாதிரியே பாஸ்தா, பீட்ஸா, கேக்தான் பிடிக்கும். ஸோ, அவளுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு தின்பண்டத்தை தினமும் செஞ்சு கொடுத்து அசத்திட்டிருக்கேன்.’’

``மனைவிகூட ஜாலியா ஒப்பந்தம் போட்டு...’’ - பாடலாசிரியர் மதன் கார்க்கி

“லாக் டௌனுக்கு முன்னாடி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் என் மனைவி, மகன்கூட நேரம் செலவழிக்க முடியும். மத்த நேரத்துல மீட்டிங், வொர்க், ஸ்கூல்னு நாங்க மூணு பேருமே பிஸியா இருக்கிறதால சேர்ந்து சாப்பிடவோ, விளையாடவோ வாய்ப்பு கிடைச்சதில்ல. என் பையனுக்கு இப்போ 10 வயசு. இந்த வயசுல அவன்கூட சேர்ந்து விளையாடவோ, ஹோம்வொர்க் சொல்லித்தரவோ நாம நேரம் ஒதுக்கிறது இல்லையேன்னு சில நேரத்துல எனக்கே குற்றவுணர்ச்சி ஏற்பட்டிருக்கு.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

ஆனா, லாக் டௌன் இதுக்கெல்லாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. நானும், என் மனைவியும் இப்போ வீட்டிலிருந்தே எங்களுடைய அலுவலக வேலைகளைப் பார்த்துட்டிருக்கிறதால காலையிலிருந்து மதியம் வரைக்கும் பையனை நான் பார்த்துக்கணும், மதியத்திலிருந்து மாலை வரைக்கும் என் மனைவி பார்த்துக்கணும்னு ஒரு ஜாலி ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். அதேமாதிரி ஸ்கூல் பாடங்களில் தமிழ், மற்ற மொழிகள், உளவியலெல்லாம் நான் சொல்லித் தருவேன். சயின்ஸ், மேத்ஸ் எல்லாம் அவங்க சொல்லித் தருவாங்க.

மூணு பேரும் ஈவினிங் மொட்டை மாடியில ஃபுட் பால் விளையாட ஆரம்பிச்சிருக்கோம். எனக்குச் சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். டின்னர் நம்ம கை மணம்தான். தினமும் என் மனைவிகூட பிடிச்ச படங்கள் பார்க்கிறேன். இந்த ஊரடங்கால நிறைய பேர் சாப்பிட உணவுகூட இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்காக வீட்டிலிருந்தபடியே நிதி திரட்டிக் கொடுத்துட்டு இருக்கோம். வேலை வேலைன்னு ஓடிட்டிருந்த நமக்கு காசு, பணம் எல்லாத்தையும்விட குடும்பமும் நம்மளைச் சுத்தியிருக்கிற உறவுகளும் ரொம்ப முக்கியம்கிற விஷயத்தை இந்த க்வாரன்டீன் நாள்கள் புரிய வெச்சிட்டிருக்கு. இதுக்குப் பிறகு நம்ம எல்லாரோட வாழ்க்கையிலேயும் ஒரு நல்ல மாற்றம் கண்டிப்பா வரும் பாருங்களேன்.’’

‘‘800 சதுர அடி மகிழ்ச்சி’’ -  நீயா நானா கோபிநாத்

‘`வீடு என்பதை வேலை முடிந்து போனதும் தூங்குவதற்கான இடம் என்ற எண்ணத்தில்தான் நம்மில் நிறைய பேர் இருந்திட்டிருந்தோம். ஆனால், அதையெல்லாம் இந்த லாக் டௌன் நாள்கள் உடைத்துவிட்டன.

வீட்டுக்கு நேரம் செலவு செய்திட முடியாத அளவுக்கு மிகப் பெரிய வேலையெல்லாம் நாம் பார்க்கவில்லை. அப்படி நாம் எண்ணிக்கொண்டிருந்தால் அது தவறானது. தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்திருக்கும் இந்தச் சூழலில் நமக்கு நேரத்தை மிச்சம் செய்து தருவதில் டெக்னாலஜி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அவற்றைத் தெரிந்து வைத்துக்கொண்டு செயலாற்றுவதில்தான் நம் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

கோபிநாத்
கோபிநாத்

வீட்டைப் பெரிதாக நாம் உற்று கவனிப்பது இல்லை. ஆனால், இப்போது என் வீட்டின் ஒவ்வோர் இடத்தையும் உற்று கவனிக்கிறேன். என் மகளுக்கு நான் வாங்கிக்கொடுத்த பூச்செடிகளை அவள் பராமரித்துவரும் அழகை நின்று நிதானித்து ரசிக்கிறேன். என் மனைவியும் குழந்தையும் வாங்கி வைத்திருக்கும் பொம்மைகளைப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி ரசித்து ரசித்து அவர்கள் வீட்டை அழகுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். நான்தான் கவனிக்கத் தவறிவிட்டேன் என்பது புரிகிறது. அதை எனக்குப் புரிய வைத்திருக்கிறது லாக் டௌன்.

காலையில் எழுந்ததும் போர்வையை நல்ல பிள்ளையாகச் சுருட்டி வைக்கிறேன். பாத்ரூம் டப்பில் தண்ணீர் நிரப்பி வைக்கிறேன். கிச்சனில் மனைவிக்கு உதவியாக சின்னச்சின்ன வேலைகளைச் செய்துகொடுக்கிறேன். நான், மனைவி, மகள், என் அம்மா, மாமியார் எனக் கூட்டுக் குடும்பமாக இருப்பதால், பழைய கிராமத்து மண்வாசனை சமையலை ருசிக்கிறேன். இப்போது சில தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து டி.வி வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், அதை எப்படி ஆபரேட் பண்ண வேண்டும் என்பதுகூடத் தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொண்டேன். ஹோல்டரில் பல்பு கழற்றி மாட்டக் கற்றுக்கொண்டேன்.

நம் அம்மாக்கள் காலத்தில் இருந்ததைவிட, இந்தக் காலத்துப் பெண்களுக்கு வேலைகள் அதிகம். மனைவி நம்மிடம் அவற்றைச் சொல்வது கிடையாது. கரன்ட் பில் கட்டுவது, டெலிபோன் பில் கட்டுவதுன்னு அந்தக் காலத்தில் அப்பாக்கள் நிறைய வேலைகள் பார்த்தாங்க. அவர்களின் இருப்பு வீட்டில் இருந்துகொண்டேயிருக்கும். இப்போது ஆண்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. ஆண்கள் ஒரு மாபெரும் வனாந்தரத்தில் வாழ்க்கையைத் தேடுகிறோம். 800 சதுர அடியில் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும் வித்தை பெண்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த வித்தை எனக்கு மட்டுமல்ல, எல்லா ஆண்களுக்குமே இப்போது புலப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்?’’

‘`பால்கனி டு திண்ணை... ஐயாதான் கிளீனிங்’’  - டாக்டர் அஷ்வின் விஜய்

``எங்க வீட்ல நான், என் மனைவி ரெண்டு பேருமே டாக்டர்ஸ். அதனால, இப்பவும் நாங்க கிளினிக் போய்ட்டு வந்துட்டுதான் இருக்கோம். ஆனா எமர்ஜென்சி கேர் மட்டும்தான் பார்க்கிறோம். ஸோ, எங்களுக்காக, வீட்டுக்காகச் செலவிட கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைச்சிருக்கு. கூடுதலா 15 நிமிஷம் தியானம் செய்றேன், வாக்கிங் போறேன், நிறைய புத்தகங்கள் படிக்கிறேன், மருத்துவத் தகவல்களை, அப்டேட்களைத் தீவிரமா அனலைஸ் பண்றேன்... இதையெல்லாம்விட முக்கியமா, அம்மா அப்பாகூட நேரம் செலவிடறேன்.

டாக்டர் அஷ்வின் விஜய்
டாக்டர் அஷ்வின் விஜய்

தற்காலிகமா வீட்டுப் பணியாள்களை நிறுத்தியிருக்கிறதால, வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இத்தனை வருஷத்துல என்னோட அறையை நான் சுத்தப்படுத்தியதா நினைவேயில்ல. ஆனா, இப்ப வீட்டு பால்கனி தொடங்கி திண்ணை வரைக்கும் ஐயா தான் கிளீனிங். இந்த லாக் டௌனை மறக்க முடியாத நாள்களாக்க ஒரு வழி சொல்லட்டுமா? ஃபேமிலி மெம்பர்ஸ்கூட உட்கார்ந்து பேசுங்க. குறிப்பா, வீட்டுப் பெரியவங்களோடு நிறைய பேசுங்க. அவங்க காலத்துக் கதைகளையும் அனுபவங்களையும் கேட்டு அதுல கொஞ்சம் மூழ்கிப் போங்க. இந்தத் தொற்று காலத்துல, வயதானவர்களோட உடல் நலன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவங்களுடைய மனநலனும் முக்கியம். அவங்களுடைய அதிகபட்ச எதிர்பார்ப்பே, பிள்ளைங்க அவங்ககூட நேரம் செலவிடணும்கிறதுதான். இது நமக்குத் தெரிஞ்சிருந்தும், இத்தனை நாள் வேலைப்பளு காரணமா அவங்ககூட நேரம் செலவிடாம இருந்திருப்போம். நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போ அம்மா அப்பாகூட நிறைய பேசிட்டிருக்கேன். நீங்களும் செய்யுங்க ப்ளீஸ்...’’