Published:Updated:

``நீ எனக்கு மட்டும்தான்" - ஆண் பெண் உறவில் பொசசிவ்னெஸ் ஏன்? |OPEN-ஆ பேசலாமா? - 1

உறவு

ஆண் - பெண் உறவில் பொசசிவ்னெஸை தவிர்க்கவே முடியாது. ஒரு சட்டகத்துக்குள் உறவைக் கொண்டு வந்து வைப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆண் - பெண் சேர்ந்து வாழ்தல் என்பதே இயற்கைக்கு முரணானது.

``நீ எனக்கு மட்டும்தான்" - ஆண் பெண் உறவில் பொசசிவ்னெஸ் ஏன்? |OPEN-ஆ பேசலாமா? - 1

ஆண் - பெண் உறவில் பொசசிவ்னெஸை தவிர்க்கவே முடியாது. ஒரு சட்டகத்துக்குள் உறவைக் கொண்டு வந்து வைப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆண் - பெண் சேர்ந்து வாழ்தல் என்பதே இயற்கைக்கு முரணானது.

Published:Updated:
உறவு

ஆண் - பெண் உறவினால் தான் உலகத்தின் உயிரினத் தொடர்ச்சியே இருக்கிறது என்பதோடு உயிர்களின் இயக்கத்தின் ஆதரமாகவும் இது திகழ்கிறது. தவிர்க்கவே இயலாத இந்த உறவு எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததோ அதற்கு நேரெதிராக சிக்கலானதும் கூட. ஆண் - பெண் உறவுச்சிக்கலின் காரணிகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே இருப்பவை; தொடர்ந்து நிலைத்திருப்பவையும் கூட. இந்த உறவு குறித்த தொடர்ச்சியான உரையாடல்கள் வழியான தெளிவை உண்டாக்குவது எக்காலத்துக்கும் தேவையான ஒன்றே. அதன் அடிப்படையில் சமகாலத்தைய ஆண் - பெண் உறவு சார்ந்த உரையாடலை முன் வைப்பதே இத்தொடரின் நோக்கம்.

என்னவளுக்கு / என்னவனுக்கு அனைத்துத் தருணங்களிலும் நானே முதன்மையாக இருக்க வேண்டும்; அவரின் அன்பும், அக்கறையும் எனக்கே அதிக அளவில் வழங்கப்பட வேண்டும் என்கிற உணர்வுதான் பொசசிவ்னெஸ். இந்த உறவின் அற்புதமான உணர்வுகளில் ஒன்றான பொசசிவ்னெஸ் அதன் எல்லையைக் கடக்கையில் நஞ்சாக மாறுகிறது. தன் காதலி/ மனைவி தன்னைத்தவிர வேறு எந்த ஆணுடனும் நட்பாகக்கூடப் பழகக்கூடாது; தன் காதலன் / கணவன் தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் பழகக்கூடாது என்கிற எண்ணம் மேலோங்குகையில், அந்த உறவு சீர்கெட்டுப் போகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, இன்ன பிற உயிர்களுக்கும் இந்த உணர்வு இருக்கிறது. இன்ன பிற குடும்ப உறவுகளுக்கிடையிலும், நண்பர்களுக்கிடையிலும் கூட பொசசிவ்னெஸ் இருக்கிறது. ஆண் - பெண் உறவில் பொசசிவ்னெஸை தவிர்க்க முடியுமா என்பது பற்றி, இந்த முதல் அத்தியாயத்தில் உரையாடுவோம். 

``உறவின் மீதான பாதுகாப்பின்மை மற்றும் பயம் காரணமாகத்தான் இந்த உணர்வு அபரிமிதமாக எழுகிறது" என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்... 

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

``பொசசிவ்னெஸ் எல்லோருக்கும் இருக்கிறது. அது பொருள், அக்கறை, மற்றும் நேரம் ஆகியவற்றில் எதைச்சார்ந்து இருக்கிறது என்பதுதான் முக்கியம். மனிதர்கள் மீது மட்டுமல்ல பொருள்கள் மீதும் நாம் பொசசிவாக இருப்போம். குறிப்பிட்ட சதவிகிதத்தினர், தனது பைக் அல்லது அவர்களுக்கு அணுக்கமான ஒரு பொருளை இன்னொருவருக்குப் பயன்படுத்தத் தர மாட்டார்கள். ஏனென்றால் நமது பொருளை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி விடுவார்களோ என்கிற பயம்தான். பைக் மீது பெரும் காதல் கொண்டிருப்பவர்கள் அதன் மேல் சிறு கீறல் விழுவதைக்கூட தாங்கிக் கொள்ள இயலாதவர்களாக இருப்பார்கள். அந்த அணுக்கத்திலிருந்துதான் பொசசிவ்னெஸ் உருவாகிறது. அடுத்தது, அக்கறை சார்ந்தது. நமக்கு அணுக்கமானவரிடம் இருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய அக்கறை இன்னொருவருக்குச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை. மாமியார் - மருமகள் சண்டையில்கூட வெளிப்படும் உளவியல் இதுதான். அடுத்தது அவர்களின் நேரத்தை நமக்காக எந்தளவுக்குக் கொடுக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் இருக்கிறது. அக்கறை என்பது வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் செயலில் வெளிப்படுத்த வேண்டுமெனில், நமக்காக எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பது முக்கியம். தனக்குத் தர வேண்டிய நேரத்தை வேறு யாருக்காவது கொடுத்து விடுவார்களோ என்கிற உணர்வும் இதனுள் அடக்கம். 

ஆண் - பெண் உறவில் பொசசிவ்னெஸ் ஏற்படுவதற்கு அடிப்படை காரணமே, எங்கே அவர்கள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விடுவார்களோ என்கிற பயம்தான். தனக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வில் அவர்களின்  இணையர் அவர்களை விட்டுச் சென்று விட்ட சம்பவத்தை கேள்விப்படுகையில் தனக்கும் இது போன்று நடந்து விடுமோ என்கிற பயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தன்னைவிட தன் இணையர் மீது இன்னொருவர் அதிக அக்கறை காட்டுவதன் மூலமும், செக்ஸ், சமையல் என ஏதேனும் ஒரு விதத்தில் நம்மை விட அவர்களை திருப்திப்படுத்தி விட்டார்கள் எனில் நம்மை விட்டுப் போய் விடுவார்கள் என்கிற பயம் ஆட்டிப் படைக்கும்போது தான் பொசசிவ்னெஸ் உச்சகட்டத்துக்குச் செல்கிறது. அந்த உறவின் மீதான பாதுகாப்பின்மையே இந்த பயத்துக்குக் காரணமாக இருக்கிறது. பொசசிவ்னெஸின் உச்சக்கட்டம் என்பது சந்தேகமாக மாறி குரூர மனநிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. மொபைல்போனை வாங்கி வாட்ஸ் ஆப், மெசெஞ்சர் ஆகியவற்றைப் பரிசோதிப்பது கூட இம்மனநிலையின் வெளிப்பாடுதான்.

பொசசிவ்னெஸ் தவிர்க்க முடியாதது என்றாலும் அதனை சரியாகக் கையாள நாம் கற்றுக் கொள்வது முக்கியம். முதலில் நமது உறவின் மீதான நம்பிக்கை, புரிந்துணர்வையும் வளர்த்துக் கொண்டாலே இந்த பயம் ஏற்படாது. ஃபோன் செய்து எடுக்கவில்லை என்றால் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கலாம், ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு வேறு வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது பேச முடியாத ஏதேனும் ஒரு சூழலில் கூட இருக்கலாம். அவர்களே திரும்பக் கூப்பிடும் வரை காத்திருக்கலாம் என்கிற தெளிவுதான் முக்கியமானது. அதே போல், தன் இணையர் தனது மேல் அதிக பொசசிவ்வாக இருக்கும் நிலையில் அந்த உணர்வை மேலும் தூண்டும்படியாக நாம் நடந்து கொள்ளக்கூடாது. முடிந்த வரையிலும் அதனைத் தவிர்ப்பதும் முக்கியம். 

உறவில் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க முடியுமா என்பது கேள்விக்குரியதுதான். அது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்து மாறுபடும். எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டுமெனில் அதனை புரிந்து ஏற்றுக்கொள்கிற மனநிலை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவருடன் நட்பின் நிமித்தம் ரெஸ்டாரன்டுக்கோ, காபி ஷாப்புக்கோ போயிருக்கலாம். இதனைத் தெரிவிக்கையில் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருப்பவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அந்தப் பக்குவம் இல்லாதவர்களிடத்தில்தான் எதற்குப் பிரச்னை என இதனை வெளிப்படுத்தாமல் விட்டு விடுவார்கள். இது அவர்களுக்குத் தெரிய வருகையில் பிரச்னை மேலும் பெரிதாகி விடுகிறது. தவறு செய்யாதவர்கள்கூட ஒன்றை மறைக்கிறார்கள் என்றால் அதில் தவறு இருப்பதாகவே பொருள் கொள்ளப்படும். இதுதான் பிரச்னை.

பெண் - ஆண்
பெண் - ஆண்
Representational Image

உறவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உருவாகி விட்டாலே இந்தப் புரிந்துணர்வு ஏற்பட்டு விடும். எத்தனை பேருடன் பழகினாலும் தன்னுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்கிற நம்பிக்கை வேண்டும். அதே போல், உறவில் சமத்துவம் இருக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ ஆதிக்கம் செலுத்தக் கூடியவராக இருந்து `நான் யாருடன் வேண்டுமானாலும் பழகுவேன், ஆனால் நீ பழகக்கூடாது’ என்று சொல்லும்போது அந்த உறவு பாழாகி விடும். ஏதோ சில உதாரணங்களை வைத்துக் கொண்டு பெண்களே இப்படித்தான், ஆண்களே இப்படித்தான் என பொதுவான பார்வையை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நம் இணையர் மீது நம்பிக்கையில்லாத போது அவர்கள் என்ன செய்தாலும் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலைக்கு ஆளாக நேரிடும். ஆகவே, இன்றைய சூழலில் ஆண் - பெண் இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள், உடன் பணிபுரிகிறவர்களுடன் பேசிப் பழகுவது இயல்பான ஒன்றுதான். அதனை சிக்கலாக மாற்றிக் கொள்ளக்கூடாது. சிக்கலாக்கும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது" என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம். 

``நமது திருமண அமைப்பே இயற்கைக்கு எதிரானது" என்கிற மானுடவியல் ஆய்வாளரான மோகன் நூகுலாவின் கருத்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. 

மோகன் நூகுலா
மோகன் நூகுலா

``ஆண் - பெண் உறவில் பொசசிவ்னெஸ்ஸை தவிர்க்கவே முடியாது. ஒரு சட்டகத்துக்குள் உறவைக் கொண்டு வந்து வைப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆண் - பெண் சேர்ந்து வாழ்தல் என்பதே இயற்கைக்கு முரணானது. Survival of the fittest என்கிற சார்லஸ் டார்வினின் கூற்றுப்படி இயற்கைத் தேர்வுதான் உயிர்களுக்கிடையே நிகழ்கிறது. உயிர் வளம் மிகுந்திருக்கும்போது இயல்பாகவே உணவாகட்டும், பெண்ணாகட்டும் அதனை அடைவதில் ஆணுக்குப் போட்டியிருக்கும்.

உதாரணத்துக்கு 5 ஆண் சிங்கங்கள் இருக்கிற இடத்தில் ஒரு பெண் சிங்கம் இருக்கிறதென்றால் அங்கு நிலவும் போட்டியில் எந்தச் சிங்கம் வெல்கிறதோ அதுவே அப்பெண் சிங்கத்தை அடையும். இதுதான் இயற்கைத் தேர்வு. அதற்கான மாற்றாகக் கொண்டு வரப்பட்டதுதான் நமது திருமண அமைப்பு முறை. நாம் நாகரிகத்தை நோக்கி நகர்ந்த பிறகு நமக்கென மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்ட பிறகு மனித இனத்துக்கு திருமண அமைப்பு என்பது ஏற்புடையதுதான்.

உறவு
உறவு

நம் சமூக அமைப்பில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சிந்தனை வலுப்பெற்றிருக்கிறது. தன்னுடைய இணையர் இன்னொருவருடன் உறவு கொள்வதையோ, அதிக அக்கறை செலுத்துவதையோ எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை நிலைத்திருக்கிறது. ஆனால், இதற்கு விதிவிலக்காக நிறைய பழங்குடிச் சமூகங்கள் இருக்கின்றன. அங்கு விருந்தினராகச் செல்கிற அந்நிய ஆடவருடன் அங்குள்ள பெண்கள் இயல்பாக பாலுறவு கொள்கிறார்கள். அது அவருடைய கணவருக்குத் தெரிந்தே நடந்தாலும் அவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. அப்பெண்கள் அதனைப் பணத்துக்காகவோ, லாப நோக்கிலோ செய்யவில்லை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு சமூக மதிப்பீட்டின்படியும் இந்த எண்ணம் மாறுபட்டதாக இருக்கும். ஆண் - பெண் உறவில் பொசசிவ்னெஸ்ஸின் உச்சம் திருமண எல்லை மீறிய உறவு.

இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்? 

பிபிதா
பிபிதா
jishnu_ponnappan

பிபிதா, பத்திரிகையாளர்

``ஆண் - பெண் உறவுக்குள்ள பொசசிவ்னெஸ் எல்லாம் தேவையில்லை. நல்ல புரிந்துணர்வோட ரெண்டு பேரும் இருந்தாலே போதும். நம்மளைவிட இன்னொருத்தங்ககிட்ட அணுக்கமா இருக்காங்கன்னா அதுக்கு என்ன காரணம்னு யோசிக்கணும். நம்மகிட்ட பேச முடியாததை இன்னொருத்தங்ககிட்ட பேசுறாங்கன்னா, அதுக்கு நாமதான் பொறுப்பு. நம்மகிட்ட வெளிப்படையா எல்லாத்தையும் பகிர்ந்துக்குற சூழலை நாம உருவாக்கலை. என்ன நடந்தாலும் ஒளிவு மறைவில்லாம நேரடியா சொல்லிட்டா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும். ஒன்னை மறைச்சு பின்னாளில் அது தெரிய வர்றப்போதான் பெரிய பிரச்னையாகுது. வெளிப்படையா இருக்கணும். யாரும் யாரையும் கட்டுப்படுத்த நினைக்காம வாழ்க்கையைப் பகிர்ந்துக்க நினைச்சாலே இந்த பொசசிவ்னெஸ்ஸைக் கடந்துடலாம்''.

சூர்யா, ஐடி ஊழியர்

``பொசசிவ்னெஸ் இயல்பான உணர்ச்சிதான்... அது தவிர்க்கவும் முடியாதது. நம்ம விரும்புறவங்க நமக்கே நமக்கானவங்க என்கிற உணர்வு டாக்சிக்கா மாறாத வரைக்கும் அழகானதுதான். முதல்ல இதைப்பத்தி வெளிப்படையா பேசணும். நம்ம எந்த விஷயத்துல பொசசிவாகுறோமோ அதைச் சொல்லிடணும். அப்படி சொல்றப்போ நம்ம இணையர் அந்த உணர்வ புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா இருக்கும்.

சூர்யா
சூர்யா

முன்னாடி இதைப்பத்தியெல்லாம் வெளிப்படையா பேச முடியாத சூழல் இருந்துச்சு. இன்னைக்கு சமூகம் மாறியிருக்கு. இது பொசசிவ்னெஸ்தான்னு கண்டுபிடிக்கிற அளவுக்கு எல்லோரும் புரிஞ்சு வெச்சிருக்கோம். அப்படிப் புரியுறப்போ எதைப் பண்ணலாம், பண்ணக்கூடாதுங்கிறதை நாமளே முடிவு பண்ணிட்டு உறவைத் தக்க வெச்சுக்கணும். எல்லோரும் இதைப் பண்றாங்களாங்குறதுதான் கேள்வி.''