தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்!

மணவாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
News
மணவாழ்க்கை

முதலில் இருவரும் தூங்குவது போல் நடித்தார்கள். பிறகு, அந்தச் சிறுமி எழுந்தாள். வாசல் தெளித்து கோலம் போடுவது போல் நடித்தாள்.

தேனி மாவட்டத்தில் ஒரு சிற்றூர். கண்ணுக்கெட்டிய தூரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை. காலுக் கெட்டிய தூரத்தில், ‘இந்தப் பச்சை போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா' என்று கேட்கும் நெல் வயல்கள். வானம் நன்கு மூடியிருந்தது. மழை பெய்தால், `அன்றொரு மழை நாளில்...' என்று கவிதை எழுதும் உத்தேசத்தோடு நடந்த போதுதான் அவர்களை கவனித்தேன்.

அந்தச் சிறுவனுக்கு ஏழெட்டு வயதிருக்கும். அவனருகில் இருந்த சிறுமிக்கு ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கலாம். யாருமற்ற ஆலமரத்தடியில் அந்தச் சிறுவனும் சிறுமி யும், அம்மா அப்பா விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை.

முதலில் இருவரும் தூங்குவது போல் நடித்தார்கள். பிறகு, அந்தச் சிறுமி எழுந்தாள். வாசல் தெளித்து கோலம் போடுவது போல் நடித்தாள். பின்னர், அவனை எழுப்பிவிட்டாள். வெறும் கையில் காபி கொண்டு வந்து கொடுத்தாள். பிறகு, “நீ கடைக்குப் போய் காய்கறி வாங்கிட்டு வா” என்றாள். அவன் சற்று தூரம் நடந்துவிட்டு திரும்பி வந்து, “இந்தா காய்கறி” என்று கையில் இல்லாத பையை நீட்டினான்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்!

அவள், “நீ போய் குளிச்சுட்டு வா. நான் இட்லி சுட்டு வைக்கிறேன்” என்றாள். அவன் குளிப்பது போல் நடித்துவிட்டு வந்தான். அவள் இல்லாத இட்லியைப் பரிமாறினாள். பிறகு, இருவரும் எப்படி விளையாட்டைத் தொடர்வது என்று யோசித்தார்கள். சட்டென்று அந்தச் சிறுமி, “இப்ப நம்ம சண்டை போடலாம்...” என்று கூற… நான் ஆர்வத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

“கரெக்ட்... கரெக்ட்...” என்ற சிறுவன், “என்னத்தடி சமைக்கிற நீ?” என்றான் கோபத்துடன். “எனக்குத் தெரிஞ்சதைத்தான் சமைக்க முடியும். இஷ்டம்னா தின்னு. இல்லன்னா எங்க யாச்சும் போ” என்றாள் அவள். “என்னடி எதிர்த்துப் பேசுற...” என்று அவன் அவள் ஜடையைப் பிடித்து இழுத்து அடிக்க... அச்சிறுமி அழுதபடி, “இனிமே உன்கூட வாழ முடியாது. நான்

எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். இன்னும் ஒரு வாரத்துல டைவர்ஸ் நோட்டீஸ் வரும்” என்று கூறிவிட்டு நடந்து செல்ல... எனக்குள் அதிர்ச்சி.

கையில் இல்லாத பெட்டியைத் தூக்கிக்கொண்டு, கண்களைக் கசக்கியபடி சென்றுகொண்டிருந்த சிறுமியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். தமிழ்நாட்டின் மேற்கில்... எங்கோ ஒரு மூலையில் உள்ள சிறிய ஊரில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுமிக்கு டைவர்ஸ் என்ற வார்த்தை தெரிந்திருக்கிறது.

`மரணம் மட்டுமே நம்மை பிரிக்க முடியும்' என்று தம்பதியர் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சமூகத்தின் மாபெரும் வீழ்ச்சியை மனத்தில் அடர்த்தியாகக் கவிந்த துக்கத்துடன் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

எங்கே தவறு நிகழ்ந்தது?

விவாகரத்து வழக்குகள் குறித்து ஒரு வழக்கறிஞரிடம் பேசினேன். திருமணமாகி ஒரு வருட காலத்திலிருந்து ஐந்து வருட காலத்துக்குள் விவாகரத்து கேட்பதாகக் கூறினார். தொடர்ச்சியாகத் தம்பதியருக்குள் ஏற்படும் சண்டைகளே ஒருகட்டத்தில் விவாக ரத்தில் முடிகிறது. பல விஷயங்கள் குறித்த புரிந்துணர்வின்மையும் அறியாமையுமே சண்டைகளுக்கு காரணம்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்!

கணவர்களின் கவனத்துக்கு...

1990-க்குப் பிறகு பிறந்த பெண்களின் வாழ்க்கை முறை மிகவும் மாறியிருக்கிறது. படிக்கிறார்கள் என்று வீட்டில் பெண்கள் வேலை செய்து பழக்கப்படுத்தப்படவில்லை. மேலும் ஆடைகள், பழக்கவழக்கங்கள், ஆண்களுடன் சகஜமாகப் பழகுதல் என்று நிறைய மாறிவிட்டார்கள். தங்கள் கரியருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் அறியாமல் அமெரிக்காவில் வேலை செய்யும் இளைஞன் கூட, `நன்கு படித்த, வேலைக்குச் செல்லும், அவசியமென்றால் வேலையை விட்டுவிடத் தயாரான, குடும்பக் கடமைகளைப் பொறுப் பாக ஆற்றும் அழகிய, பெரியவர் களிடம் மரியாதை செலுத்தும் குடும்பப்பாங்கான பெண் தேவை' என்று விளம்பரம் கொடுக்கிறான்.

முதலாவதாக, புதிய தலைமுறைப் பெண்களில் பெரும்பாலானோருக்கு வீட்டு வேலை செய்து பழக்கமில்லை. எனவே, திருமணமான புதிதில் இது தொடர்பாக அடிக்கடி சண்டைகள் வரும். கணவர்கள் கட்டாயம் வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனைவிகள் வேலைக்குச் செல்லாவிட்டாலும் பிறந்த வீட்டில் வேலை செய்து பழக்கமில்லை என்பதால் ஆரம்ப காலத்தில் கொஞ்சம் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்காக எல்லாம் பிரச்னை செய்து கொண்டிருக்காதீர்கள்.

மற்றொரு வழக்கறிஞர், தன்னிடம் விவாகரத்து கோரி வரும் பெண்களில் 60 சதவிகிதத்தினர் ஐடி துறையினர் என்றும், அவர்களின் கரியர் தொடர்பான பிரச்னைகள்தாம் இதற்கு காரணம் என்றும் கூறினார். இது தொடர்பாக ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள், உங்கள் கரியருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்களோ அதே அளவு மனைவிகளும்

தங்கள் கரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். குடும்பத்துக்காகத் தங்கள் கரியரை விட்டுக்கொடுக்க பெரும்பாலான பெண்கள் தயாராக இல்லை. இதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் தான் திருமணம் செய்துகொள்ளலாம். அதை விட்டுவிட்டு, திருமணத்துக்குப் பிறகு

`நீ வேலையை விடு' என்றால், பெரும்பாலான பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அடுத்ததாக… பெண்கள் தன்னை மனைவியாக நடத்தும் ஆண்களைவிட காதலியாக நடத்தும் ஆண்களையே பெரிதும் விரும்புகின்றனர். மற்றவர்களைவிட நாம்தான் அவனுக்கு முக்கியமான ஆளாக இருக்க வேண்டும் என்றும், அவனால் உலகில் அதிகமாக நேசிக்கப்படும் நபராகத் தானே இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு மாறாகக் கணவர்கள், ‘என் நண்பர்கள்தாம் முக்கியம்... ஆபீஸ்தான் முக்கியம்… நீ எனக்கு முக்கியமில்லை…' என்று நடந்துகொண்டால் பிரச்னைதான்.

மனைவிகளின் கவனத்துக்கு...

நீங்கள் ஒரே தலைமுறைக்குள் வெகுவாக மாறிவிட்டீர்கள். நீங்கள் சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி வழியாக மதுரை செல்லாமல், கோயம்பேடிலிருந்து தடாலடியாக ஒரே ஜம்ப்பில் மதுரைக்குத் தாவிவிட்டீர்கள். ஆனால், நம் ஆண்கள் மெள்ள நடந்து இப்போதுதான் திண்டிவனத்தைத் தாண்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்படியெல்லாம் பெண்கள் மாறிவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு தன்னை மாற்றிக் கொள்ள ஆண்களுக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்!

கணவன் - மனைவி உறவு தொடர்பான ஓர் ஆய்வு, ஓர் ஆண் தன் மனைவியால் காதலிக்கப் படுவதைக் காட்டிலும் மதிக்கப்படுவதையே மிகவும் விரும்புகிறான் என்று கூறுகிறது. ஒரு மனைவி, கணவனின் சம்பாத்தியம், உருவம், திறமை, அந்தஸ்து, வெற்றி போன்றவற்றின் அடிப்படையில் அவனை குறைத்து மதிப்பிட்டால், தாழ்வாகப் பேசினால் மறக்க மாட்டார்கள். ஆணின் தன்மானத்தை, சுயமரியாதையைச் சீண்டும் காரியங்களை அவர்கள் பரிபூரணமாக வெறுப்பார்கள். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் ஆண்களை மட்டம் தட்டாதீர்கள்.

கணவன் - மனைவி இருவரின் கவனத்துக்கு...

அடிப்படையாகக் கணவன் - மனைவி இருவரும் வேறுவேறு நபர்கள் இருவரின் ரசனைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் வெவ்வேறாகத்தான் இருக்கும். அதில் நியாயமானவற்றைச் சகித்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையைப் பேச அனுமதியுங்கள். அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர் நீங்கள் எதிர்க்கருத்துகளைச் சொல்லும்போது அவர்களுக்குப் பெரிதாகக் கோபம் வராது. சொல்வதில் நியாயம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அலுவலகத்துக்குச் செல்கிறோம். சக ஊழியர்களுடன் பிரச்னை ஏற்படுகிறது. அங்கெல்லாம் நம்மில் 90 சதவிகிதத்தினர் எதற்கு பிரச்னையைப் பெரிதாக்கிக்கொண்டு என்று சண்டையை வளர்த்தாமல், ஒரு கட்டத்தில் விட்டுக்கொடுத்து மௌனமாகி விடுகிறோம். ஆனால், நம் வாழ்நாள் முழுவதும் உடன் வாழப்போகும் வாழ்க்கைத் துணைக்காக நாம் ஏன் விட்டுக்கொடுக்கக் கூடாது?

ஆக, விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மை யும் இருந்தால் பெரும்பாலான பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடலாம்.

விட்டுக்கொடுத்துப் பாருங்கள்... வித்தி யாசத்தை உணர்வீர்கள்.

- தொடரும்