Published:Updated:

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் - கல்யாண நாள் கலாட்டாக்கள்!

கல்யாண நாள் கலாட்டாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண நாள் கலாட்டாக்கள்

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் - கல்யாண நாள் கலாட்டாக்கள்!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

Published:Updated:
கல்யாண நாள் கலாட்டாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண நாள் கலாட்டாக்கள்
திருமண வாழ்க்கையில் சில தருணங்கள் பல முறை பூக்கும். கணவனோ மனைவியோ வீட்டில் இல்லாத இரவில், அவருடைய போர்வையைப் போர்த்திக்கொள்ளும்போது மனத்தில் தோன்றும் ஒரு விநோதமான காதல்... பலரும் சுற்றியிருக்கும்போது யாரும் காணாத ஒரு நொடியில் கணவன், மனைவியை நோக்கி உதட்டைக் குவித்து முத்த பாவனை காண்பிக்கும்போது மனைவியின் முகத்தில் ஜொலிக்கும் திடீர் வெட்க சந்தோஷம்… எதிர்பாராத கணத்தில் மனைவியின் பின்பக்கம் ஒரு தட்டு தட்டிவிட்டுச் செல்லும்போது மனைவியின் உதடுகள் உதிர்க்கும் ‘எருமை மாடு...’ இவையெல்லாம் மணவாழ்க்கையில் அவ்வப்போது பூக்கும் பூக்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், திருமண வாழ்க்கையில் ஒரே ஒரு முறை பூக்கும் தருணம் ஒன்று உள்ளது. மங்கல வாத்தியங்கள் ஒலிக்க... மாப்பிள்ளை, மணப்பெண்ணின் கூந்தலை விலக்கி மல்லிகைப்பூ, மஞ்சள், ஷாம்பூ, சந்தனம், பெர்ஃப்யூம், வியர்வை என்று எல்லாம் கலந்து வீசும் மணப்பெண்ணின் வாசனையுடன் தாலிகட்டிவிட்டு, லேசாக கண்கள் கலங்க மணமக்கள் பார்த்துக்கொள்ளும்போது

அந்தக் கண்களில் தெரியும் பரிசுத்தமான அன்பு, வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே பூக்கும் பூ. ஆனால், இந்தப் பூ பூப்பதற்கு முன்பு திருமண மண்டபத்தில்தான் எத்தனை எத்தனை கலாட்டாக்கள்...

 ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

திருமண நாளன்று பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம், நம் சடங்குகள், சம்பிரதாயங்கள்… இப்போதெல்லாம் திருமணத்துக்கு முந்தைய நாள் ரிசப்ஷன் மேடையில் கேக் வெட்டும் நிகழ்ச்சியே ஒரு பிரச்னையாக மாறிவருகிறது. மாப்பிள்ளை வீட்டார் தாங்கள் கொண்டுவந்த கேக்கைத்தான் முதலில் வெட்ட வேண்டும் என்றும், பெண் வீட்டார் தங்கள் கேக்கைத்தான் முதலில் வெட்ட வேண்டும் என்றும் வலியுறுத்த… மாப்பிள்ளைக்குத் தாலி கட்டும் முன்பே தலைவலி ஆரம்பித்துவிடும். இதற்கு நடுவே ‘ஏதாச்சும் ஒரு கேக்கை வெட்டுங்கடா’ என்று சிறுவர்கள் வெறித்தனமாக கேக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்போது மாப்பிள்ளையின் அக்கா மாப்பிள்ளையின் காதில், “நம்ம கேக்கைதான் முதல்ல வெட்டணும்னு கண்டிஷனா சொல்லிடு. ஆரம்பத்துலயே விட்டுக்கொடுத்துட்டா, அப்புறம் எல்லாத்துக்கும் விட்டுக்கொடுக்கணும்” என்று ரஃப்பாகக் கூறுவார்.

அப்போது மணப்பெண் மாப்பிள்ளையின் இன்னொரு காதில் ஈர உதடுகள் உரச கிசுகிசுப்பாக, “எங்க கேக்கை முதல்ல வெட்டக் கூடாதா பேபி?” என்று கொஞ்சலாகக் கேட்கும் போது நானாக இருந்தாலும், “வெட்டுறா பொண்ணு வீட்டு கேக்கை முதல்ல…” என்றுதான் சொல்வேன்.

மாப்பிள்ளை, “இல்லக்கா… பொண்ணு வீட்டு கேக்கையே வெட்டட்டும்” என்ற பிறகு அக்காவின் கண்களில் ததும்பும் கண்ணீருக்கு சக்தி இருந்தால் அந்த மண்டபமே எரிந்துவிடும்.

கண்களைத் துடைத்துக்கொண்டு கோபமாக மேடையை விட்டுச் செல்லும் அக்கா சும்மா செல்லாமல் தன் அம்மாவிடம், “உன் மவன் அவ்ளோதான்…” என்று சொல்வதெல்லாம் வெறும் வெங்காய வெடிதான். பின்னர், திருமணம் முடியும் வரை வெவ்வேறு சடங்குகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக வரிசையாகக் குருவி வெடி, யானை வெடி, லட்சுமி வெடியை எல்லாம் வீசிவிட்டு… கடைசியாக புருஷன் வீட்டுக்குக் கிளம்பும்போது, “உன் மவன சாந்தி முகூர்த்தத்தோட மறந்துவிடு” என்று அணுகுண்டை வீசிவிட்டுதான் செல்வார்.

எனவே, சடங்குகளை சாதாரணமாக நினைக்காதீர்கள். மத்தியப்பிரதேசத்தில் ஒரு திருமண நாள் சடங்கில், அம்மாநில கலாசாரப்படி சேலை முந்தானையால் மணப்பெண்ணின் தலையையும், பாதி முகத்தையும் மூடுமாறு மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தினர். இதற்கு மணப்பெண் மறுப்பு தெரிவிக்க… பெரும் சண்டையாகி, கடைசியில் அந்தத் திருமணமே ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு சடங்குகள் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, திருமணத்துக்கு முன்பே சம்பந்தி வீட்டாரிடம் ஒவ்வொரு சடங்கு பற்றியும் விரிவாக விவாதித்துவிடுங்கள். அதில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் முன்கூட்டியே பேசி ஒருமித்த முடிவை எடுத்துவிடுங்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு மணமேடையில் வந்து, “எங்க வீட்டுல எல்லாம் இந்தப் பழக்கமே கிடையாது...” என்று ஆரம்பிக்கக் கூடாது.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் - கல்யாண நாள் கலாட்டாக்கள்!

இந்தியாவில் பெரும்பாலும் பெண் வீட்டாராலேயே திருமணச் செலவுகளும் ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. எனவே, திருமணத்துக்கு முந்தைய நாள் மாலை மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தில் வந்து இறங்கும்போதே கலாட்டாக்கள் ஆரம்பித்துவிடும். மண்டபத்தில் நுழைந்த வுடனேயே, மாப்பிள்ளைக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் இறுக்கமான முகத்துடன், கக்கத்தில் கைப்பையுடன் மண்டபத்தைப் பார்வையிடுவார். பின்னர் லேசாக உதட்டைப் பிதுக்கியபடி, “நம்ம வீட்டு ஜனங்களுக்கே மண்டபம் பத்தாதே…” என்று முதலில் ஒரு அவுட்ஸ்விங் பந்தைப் போடுவார்.

இது மாதிரியான பௌலர்களின் பந்துகளை அடிப்பதற்கென்றே பெண் வீட்டில் ஒரு பேட்ஸ்மேன் இருப்பார். அவர் உடனே, “உங்காளுங்க 300 பேர்தான் வருவாங்கன்னீங்க...” என்று அந்தப் பந்தை தடுத்தாடுவார். உடனே பௌலர், “ஏன்… அதுக்கு மேல வந்தா சாப்பாடு போட மாட்டீங்களா?” என்று ஒரு யாக்கரை வீச… பேட்ஸ்மேன் க்ளீன் போல்டாகி நடையைக் கட்ட… அடுத்த பேட்ஸ்மேன் களமிறங்குவார்.

பௌலர் நேரம் ஆக ஆக வேகமெடுத்து, “எங்க வீட்டு ஆளுங்களுக்கு பாயசம் தீந்துடுச்சு...”, “நான் எதிர்த்தாப்ல வர்றப்ப சம்பந்தி பாக்காத மாதிரி போறாரு…” என்று சராமாரியாக பவுன்ஸராக வீச… எதுவும் மேலே படாமல் தலையைக் குனிந்து தப்பிக்க வேண்டும். அதையும் மீறி, பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது உறவினர்கள் அதை ஊதிப் பெரிதாக்குவார்கள் அல்லது அவர்களே சண்டையில் இறங்க… பிரச்னை மேலும் பெரிதாகும்.

எனவே, பிரச்னைகள் எழும்போது மணமக்களின் பெற்றோர், மற்றவர்களை அந்தப் பிரச்னையில் தலையிட அனுமதிக்காதீர்கள். மணமக்களின் பெற்றோர் மட்டும் பேசினாலே பல சிக்கல்கள் சரியாகிவிடும். ஏனெனில், அவர்களுக்குத் திருமணத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணம்தான் முதலில் இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு சண்டையில் நம்மை அவமரியாதையாகப் பேசிவிட்டார்கள் என்ற ஈகோதான் முதலில் இருக்கும். எனவே, உறவினர்களால் உங்கள் பிள்ளைகளின் மணவாழ்க்கையில் பிரச்னை ஏற்படுமென்றால், அதுமாதிரியான உறவினர்கள் சொல்வதைப் புறக்கணியுங்கள். கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். வளர்ந்து வரும் கார்ப்பரேட் கலாசாரத்தால், வழக்கமான திருமணச் செலவுகளுடன் ஏராளமான புதிய ஆடம்பரச் செலவுகளும் சேர்ந்துவிட்டன.

நிறைய பணமிருந்து இதைச் செய்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், பலரும் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு முன்பு தங்கள் கெத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகக் கடன் வாங்கி செலவு செய்துவிட்டு, பின்னர் கடனை அடைப்பதற்காக சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் மணமக்களே இதுபோன்ற செலவுகளைக் கடன் வாங்கிச் செய்துவிட்டு, திருமணம் முடிந்து நிம்மதியாக வாழாமல், கடன் பிரச்னைகளில் தவிக்கிறார்கள். எனவே, கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செய்வதைத் தவிர்க்கவும்.

சில திருமணங்களில் மண்டபத்தில் இடம் போதவில்லை, சாப்பாடு போதவில்லை என்று பிரச்னைகள் எழும். இதற்கு மிக முக்கியமான காரணம், இரண்டு வீட்டிலும் சரியான கெஸ்ட் லிஸ்ட்டை தயார் செய்யாததுதான். பத்திரிகை கொடுத்த பிறகு, தோராயமாக எத்தனை பேர் வருவார்கள் என்று கணக்கெடுங்கள். அதேபோல் சம்பந்தி வீட்டாரிடமும் கேளுங்கள். இவ்வாறு கேட்கும்போது பலரும் அலட்சியமாக `இவ்வளவு பேர்தான்’ என்று சொல்லிவிடுவார்கள். அவ்வாறு இல்லாமல் பொறுமையாகக் கணக்குப் பார்த்துச் சொல்லவும். இதைவைத்து அதற்குத் தகுந்தாற்போல் மண்டபம் மற்றும் சாப்பாடு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதையும் மீறி சில நேரங்களில் சிலருக்கு சாப்பாடு இல்லாமல் போய்விடும்.

இதைத் தவிர்க்கும் வழி... முதல் நாள் மாலையிலிருந்து, மறுநாள் மண்டபத்தைக் காலிசெய்துவிட்டுச் செல்லும்வரை நம்முடன் இருப்பவர்கள் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள். அவர்களிடம், எல்லோரும் சாப்பிட்ட பிறகு, கடைசியாகச் சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டால் நிச்சயம் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். அதையும் மீறி பிரச்னை வந்தால் அதை எதிர்கொள்ள, அருகில் உடனே உணவு கிடைக்கும் ஹோட்டல் குறித்து முன்கூட்டியே விசாரித்து வைத்திருங்கள்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் - கல்யாண நாள் கலாட்டாக்கள்!

நம் திருமணங்களில் இன்னொரு முக்கியமான பிரச்னை… தாமதம். அதற்கான காரணங்களில் ஒன்று மேக்கப். முன்பெல்லாம் மணப்பெண்கள் மட்டும்தான் மேக்கப் போடுவார்கள். இப்போதெல்லாம் மாப்பிள்ளை, அவரின் குடும்பத்தார், பெண்ணின் குடும்பத்தார் என்று சகலரும் மேக்கப்புடன் மேடையில் நிற்கும்போது சீரியல் படப்பிடிப்பில் நிற்பது போலவே இருக்கிறது. இந்த மேக்கப்புக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் பெரும்பாலான ரிசப்ஷன்கள் மிகவும் தாமதமாகத்தான் தொடங்குகின்றன.

இதைத் தவிர்க்க... மேக்கப் நிபுணர்கள் திருமணத்துக்கு முன்பு ட்ரையல் மேக்கப் போடுவார்கள். அப்போதே மேக்கப்புக்கு எவ்வளவு நேரமாகும் என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

திருமண நாளன்று வெளிப்படும் ஆடம்பரம், மேக்கப், உறவினர்களால் ஏற்படும் பிரச்னைகள் போன்றவை உங்கள் மணவாழ்க்கையின் சந்தோஷத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை. எனவே, அன்று ஏற்பட்ட பிரச்னைகளை எல்லாம் அன்றோடு மறந்துவிடுங்கள். அதை, “அன்னிக்கி மண்டபத்துல உங்க அக்கா அப்படி சொன்னப்ப வாயை மூடிக்கிட்டு தானே இருந்தீங்க?” என்று வாழ்நாள் முழுவதும் தூக்கிக்கொண்டு திரியாதீர்கள். மணவாழ்க்கை யின் சந்தோஷம், அதற்குப் பிறகு நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism