Published:Updated:

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: கி.பி 3020-லும் இருக்கப்போகும் பிரச்னை!

மணவாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
News
மணவாழ்க்கை

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

ரவு மணி 10. படுக்கை அறைக் கதவை சாத்திவிட்டு வந்த வினோத் தன் இளம் மனைவி வந்தனாவிடம், “இன்னிக்கி சண்டைய வெச்சுக்கலாமா?” என்றான். வந்தனா, “ம்... வாரத்துக்கொரு தடவையாச்சும் நம்ப சண்டை போட்டுக்கிட்டாதான் உங்கம்மாவுக்கு திருப்தியாகும்” என்றபோது ஹாலில் வினோத்தின் அம்மா பத்மாவும் அப்பா ராமநாதனும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர்.

வினோத், “இதெல்லாம் சைக்காலஜி வந்தனா… அப்படி திருப்தியாவுறதாலதான், அம்மா உன்கூட சண்டை போடாம நல்லபடியா இருக்காங்க. ஆரம்பிக்கலாமா?” என்றான். வந்தனா சிரிப்புடன், “ஸ்டார்ட் கேமரா… ஆக்‌ஷன்...” என்றவுடன் வினோத், வந்தனாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டு சத்தமாக, “ஏன்டி… அறிவுன்னு ஒண்ண உனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கானா, இல்லையா...” என்றான். வந்தனா, அறிவிருந்தா நான் ஏன் உங்களைக் கல்யாணம் பண்ணியிருக்கப் போறேன்?” என்று கத்தினாள்.

சத்தம் கேட்டு ஹாலிலிருந்த பத்மாவின் முகம் சந்தோஷமாகி ராமநாதனைப் பார்த்துச் சிரித்தார். ராமநாதன், `அய்யோ…' என்பது போல் தலையில் அடித்துக்கொண்டார். “டி.வி சவுண்டைக் குறைங்க” என்ற பத்மா கூர்ந்துகேட்டார்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: கி.பி 3020-லும் இருக்கப்போகும் பிரச்னை!

அறையில், “ஒழுங்கு மரியாதையா பேசுடி. அறைஞ்சன்னா பல்லு கில்லெல்லாம் பேந்துடும்” என்றான் சத்தமாக. வந்தனா, “எங்க அடிங்க பார்க்கலாம். நீங்க அடிக்கிற வரைக்கும் என் கை…” என்ற வந்தனா மெதுவாக, “அப்புறம் என்னடா?” என்றாள். வினோத், “பூ பறிச்சிட்டிருக்குமா?” என்று கிசுகிசுப்பாகக் கூற… வந்தனா சத்தமாக, “ம்… பூ பறிச்சிட்டிருக்குமா?” என்றாள். “என்னாடி… எதிர்த்து எதிர்த்துப் பேசுற… என்னாத்த பொண்ண வளர்த்திருக்காங்க” என்றான்.

ஹாலில் ராமநாதன், “பத்மா… போய் கேளுடி… பெரிய சண்டையாயிடப் போகுது…” என்றார். பத்மா, “இருங்க... ஏன் அவசரப்படுறீங்க? அப்பப்ப நாலு வார்த்தை நறுக்குனு கேட்டாதான் அவ அடங்கி ஒடுங்கி இருப்பா” என்ற பத்மாவின் முகத்தில் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.

உள்ளே வந்தனா, “என்னைப் பத்தி எது வேணும்னாலும் பேசுங்க… எங்க வீட்டைப் பத்தி பேசுற வேலை மட்டும் வச்சுக்காதீங்க…” என்றாள். “பேசுனா என்னடி பண்ணுவ?” என்ற வினோத், வந்தனாவின் உதடுகளை இறுக்கமாக லாக் செய்ய…வந்தனாவால் பதில் சொல்ல முடியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹாலில் பத்மா, “என்னங்க… சத்தத்தையே காணோம்? சண்டை முடிஞ்சிடுச்சா?” என்றார்.

பெட்ரூமில் வந்தனா உதட்டைத் துடைத்துக் கொண்டே, “எங்க பேசுங்க பார்ப்போம்” என்றாள். வெளியே பத்மா, ``ஏங்க… அவன் அப்ப கேட்டதுக்கு, இவ இவ்ளோ லேட்டா பதில் சொல்றா…” என்றார். “நான் என்னத்தடி கண்டேன்…” என்றார் ராமநாதன் சலிப்பாக.

உள்ளே வினோத், “என்னடி… ரொம்ப ஓவராப் பேசுற… அப்படியே விட்டன்னா” என்ற பிறகு முழு திருப்தியடைந்த பத்மா, “டேய் வினோத்து… தூங்குற நேரத்துல அவள எதுக்குத் திட்டிக்கிட்டிருக்க?” என்று கதவைத் தட்டினாள்.

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: கி.பி 3020-லும் இருக்கப்போகும் பிரச்னை!

“ஒண்ணுமில்லம்மா. ஒரு சின்ன சண்டை.”

“அவ சின்ன பொண்ணு. அவளுக்கு என்னடா தெரியும்? சும்மா சும்மா அவளத் திட்டிக்கிட்டு… பேசாம படுறா…”

உள்ளே வந்தனாவிடம் வினோத், “எங்கம்மா சொல்றதால விடுறேன்…” என்று கூற, வெளியே பத்மாவின் முகமெங்கும் சந்தோஷம்.

இது நான் கற்பனையாக எழுதியது. இதைப் படித்துவிட்டு விவரம் தெரியாத சில கணவர்கள், “சூப்பர் ஐடியா” என்று மனைவியிடம் கூறி வாங்கிக் கட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள், “என்னைத் திட்டித்தான் உங்கம்மாவை சந்தோஷப்படுத்தணுமா?” என்று உங்கள் முடியை உலுக்கி எடுத்துவிடுவார்கள். ஏனெனில், விளையாட்டாகக்கூட தன் மாமியார் முன்னால் தாழ்ந்துபோவதை அவர்கள் விரும்பவே மாட்டார்கள். இது பல நூற்றாண்டு காலமாக யாருக்கும் வெற்றி தோல்வியின்றி தொடரும் யுத்தம்.

திருமணமானவுடன் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் - மனைவி பிரச்னைக்கான முதல் காரணம், மாமியார் - மருமகள் சண்டைகள்தாம். இந்த உலகில் எவ்வளவோ மாற்றங்கள், எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்த பிறகும், இந்தப் பிரச்னை மட்டும் ஏன் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது?

முதல் காரணம், நம் அம்மாக்கள் தனக்கு குழந்தை பிறந்தவுடனேயே அவர்களை இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறார்கள். தனது சொந்த சுகங்களையெல்லாம் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளைப் பார்த்து, பார்த்து வளர்க்கிறார்கள். இந்த ஓவர் பாசமும் தியாகமும், அர்ப்பணிப்புமே பின்னாளில் அதிகாரமாக மாறுகிறது. அந்த அதிகாரத்துக்கு ஒரு போட்டி வரும்வரையிலும் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. மருமகள் வந்தவுடன் போட்டி ஆரம்பமாகிறது.

மனைவிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தன் கணவனுக்காகக் குடும்பத்தையே விட்டுவிட்டு வந்ததாக நினைக்கிறார்கள். எனவே, கணவன் முழுக்க முழுக்க தன் மீது மட்டுமே அன்பு செலுத்துபவனாக இருக்க வேண்டும், தன் பேச்சை மட்டுமே கேட்பவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்போது பெரும்பாலும் தனிக்குடித்தனமே செல்வதால், ஆண்களும் தங்கள் குடும்பத்தை விட்டு விட்டுதான் வருகிறார்கள் என்பதைத் தற்கால பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாக… இந்தியச் சூழலில் தாயாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி… ஆரம்பத்திலிருந்தே மாமியார் மற்றும் மருமகள் குறித்த எதிர்மறையான எண்ணத்திலேயே வளர்ந்து வருகிறார்கள். எனவே, இருவரும் போர்க்களத்தில் சந்திப்பதற்கு முன்பே அவர் தனக்கு எதிரிதான் என்ற முன்முடிவு இருப்பதால், அவர்கள் இயல்பாகச் செய்யும் காரியங்கள்கூட தவறாகவே தோன்றும். இதற்கு தீர்வுதான் என்ன?

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: கி.பி 3020-லும் இருக்கப்போகும் பிரச்னை!

மாமியார்களின் கவனத்துக்கு...

திருமணமானவுடன் அம்மாக்களுக்கு மகனுடன் சிறிது இடைவெளி ஏற்படுவது உண்மைதான். அந்த இடைவெளி மருமகளால் ஏற்பட்டதாக நினைக்கிறார்கள். உண்மையில் ஆண் டீன்ஏஜுக்கு வந்தவுடனேயே பெற்றோர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்ச மாக விலக ஆரம்பிக்கிறான். உங்கள் மகனுக்கு கல்லூரி, நண்பர்கள், அலுவலகம்… என்று ஒரு புறவாழ்க்கை இருக்கிறது அல்லவா... அந்தப் புறவாழ்க்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதேபோல் உங்கள் மகனின் அக வாழ்க்கையில் மனைவி என்று ஒருவர் வருவதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கணவர் எப்படி உங்களிடம் அந்நியோன்னியமாக இருந்தாரோ, இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டீர்களோ அவற்றையெல்லாம் உங்கள் மகன் செய்தால் குமுறுவது நியாயமே இல்லை.

திருமணத்துக்குப் பிறகு, உங்கள் மகன் - மருமகளுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அது உங்கள் தலை முறையின் நியாயங்களுக்குள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனெனில், இங்கு நியாயம் என்பது தலைமுறைக்கு தலைமுறை மாறிக்கொண்டேயிருக்கிறது. அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், மருமகள் மட்டும் முந்தைய தலைமுறை மருமகள்கள் போல்… கிட்டத்தட்ட வேலைக்காரி போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் மகள் தன் மாமியார் வீட்டில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ… அதே மாதிரி நீங்கள் உங்கள் மருமகளை நடத்துங்கள். ஆனால், பலரும் மகளுக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயம் என்று வைத்திருப்பதில்தான் பிரச்னை.

உங்கள் குடும்பத்துக்குப் புதிதாக வரும் மருமகள் என்பவள், உங்கள் வீட்டில் அப்போதுதான் புதிதாகப் பிறக்கிறார். அப்போது நீங்கள் அவர்களிடம் அன்பு காட்டினால் அன்பு கிடைக்கும். வெறுப்பைக் காட்டினால் வெறுப்பே கிடைக்கும்.

மருமகள்களின் கவனத்துக்கு...

திருமணமானவுடன் கணவன் முழுக்க முழுக்க தனக்கே சொந்தம் என்ற எண்ணமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம். திருமணத்துக்கு முன்பு வரை அவர்களை வளர்த்த தாய், தந்தையிடம் கண்டிப்பாகத் தம் கணவர்களுக்கு மிகுந்த பாசமும் நன்றி உணர்வும் இருக்கும் என்ற மறுக்க முடியாத உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த உறவுகளை எல்லாம் சட்டென்று அழித்துவிட முடியாது. அது எப்போதும் தொடரும் பந்தம். எனவே, உங்கள் கணவர் அம்மாவிடம் பாசமாக இருந்தால், தன் மீது பாசமாக இருக்க மாட்டான் என்று நினைக்காதீர்கள். உங்களால் எப்படி இரண்டு குழந்தைகள் மீது சரிசமமாகப் பாசத்தைச் செலுத்த முடியுமோ, அதே போல் அம்மா, மனைவி இரண்டு பேர் மீதும் பிரியமாக இருக்க கணவனால் முடியும்.

மருமகள் எங்கே தன் மகனைப் பிரித்துவிடுவாளோ என்ற மாமியார்களின் அச்சமே பெரும்பாலான சண்டைகளுக்கு காரணம். அவ்வாறு எண்ணும் மாமியாரிடம், நான் உங்கள் மகனை உங்களிடமிருந்து பிரிக்க மாட்டேன் என்று சொல்லக்கூட வேண்டாம்… உணர்த்திவிட்டாலே போதும். பிரச்னைகள் எழாது. நிச்சயம் உங்கள் மாமியாரின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

கணவர்களின் கவனத்துக்கு...

பெரும்பாலான மனைவிகள், கணவர்கள் நியாயமாக நடந்து பிரச்னையைத் தீர்க்கவில்லை என்று புகார் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால், மாமியார் மருமகள் இருவருமே அந்த ஆண் தனது பக்கம் முழுமையாகச் சாய்வதையே நியாயம் என்று கூறுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஒரு கணவன் என்ன செய்ய வேண்டும்?

இந்த உலகில் பொது நியாயம், தனிப்பட்ட நியாயம் என்று இரண்டு நியாயங்கள் உள்ளன. ‘எனக்கு சவுண்ட் அதிகமாக வைத்து பாட்டுக் கேட்கப் பிடிக்கும்' என்பது தனிப்பட்ட நியாயம். அது மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருந்தால் ஒலியைக் குறைக்க வேண்டும் என்பது பொது நியாயம். பெரும்பாலானோர் பொதுவான நியாயத்தை ஏற்றுக்கொண்டு ஒலியைக் குறைக்கத்தான் செய்வர். அதுபோல் உங்கள் மனத்துக்கு எது பொது நியாயம் என்று தெரியும். எனவே கணவர்கள் அம்மா, மனைவி என்று பாராமல் பொது நியாயத்தின் பக்கமே நிற்க வேண்டும். சரி… ஆனால், இந்தப் பொது நியாயத்தைப் பெண்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது... தலைப்பை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

(தொடரும்)