Published:Updated:

மனைவிக்கு மணிவிழா! - ஒரு கணவரின் அபூர்வ அன்பு

மனைவிக்கு மணிவிழா
மனைவிக்கு மணிவிழா

''எனக்கு 2013-லேயே அறுவது வயசு தொடங்கிடுச்சு. அப்ப ஒரு தடவை மணிவிழா நடத்தினோம். இப்போ என் மனைவிக்காக.''

உலக ஆண்கள் தினத்தில்தான் அந்த அன்புச் சம்பவம் நடந்திருக்கிறது. 'மனைவிக்கு மணிவிழா' நடத்தப்போகிறார் ஓர் அன்புக் கணவர் என்ற தகவல் தெரிந்ததும் அதை உறுதிப்படுத்திக்கொள்ள, சம்பந்தப்பட்டவருடைய தொடர்பு எண்ணை தேடிப்பிடித்து அவர்களிடம் பேசியபோது, இரவு மணி 9.30.

மனைவிக்கு மணிவிழா நடத்திய கணவர்
மனைவிக்கு மணிவிழா நடத்திய கணவர்

''ஆமாம்மா... என் வீட்டம்மாவுக்குத்தான் நாளைக்கு மணிவிழா நடத்தப்போறேன். காலையில 11 மணிக்கு வைச்சிருக்கேன். விழாவுக்கு மாலை வாங்குறதுக்காகத்தான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்திருக்கேன். நீங்க குடும்பத்தோட நாளைக்கு கட்டாயம் விழாவுக்கு வந்திடுங்கோ'' என்றவரிடம், உங்க மனைவிக்குத்தானே மணிவிழா என்று நம் சந்தேகத்தைக் கேட்டோம்.

மனைவி, நமக்கு செல்வத்தைக் கொண்டுவந்து கொடுக்கணும்னு அவசியமில்ல. கணவருக்கு பக்கபலமா இருந்தாலே போதும்.
husband - wife love
husband - wife love

''தம்பதியாத்தாம்மா மணிவிழா பண்ணப்போறோம். ஆனா, எனக்கு 2013-லேயே அறுபது வயசு தொடங்கிடுச்சு. அப்ப ஒரு தடவை மணிவிழா நடத்தினோம். இப்போ என் மனைவிக்காக. அவங்களுக்கு இந்த வருஷம்தான் அறுபது பிறக்குது'' என்று தன் மனைவி மீதான பேரன்பை வெளிப்படுத்தியவரின் பெயர் ஜெயசங்கர். அவருடைய இணையின் பெயர் சுகந்தி. 'அடடா... இவரல்லவோ புருஷன்' என்று மனதுக்குள் சந்தோஷித்தபடி, அவருடன் பேச ஆரம்பித்தோம்.

''1976-ல எங்களுக்கு கல்யாணமாச்சு. அப்போ நான், பழைய பாட்டில்கள் வாங்கி விக்கிற கடை வெச்சிருந்தேன். எங்க வீட்டம்மாவோட பிறந்த வீடு ரொம்ப வசதியானது. அவங்க அக்காவை ரொம்ப வசதியான வீட்டுல கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தாங்க. சூழ்நிலைகள் மாறுமில்லையா? அப்படித்தான் எனக்கும் சுகந்திக்கும் கல்யாணம் நடந்துச்சு.

மனைவியின் மணிவிழா
மனைவியின் மணிவிழா

எங்களுக்கு கல்யாணமான புதுசுல 200 ரூபா வாடகை வீட்ல, கூட்டுக்குடும்பமாத்தான் குடியிருந்தோம். பத்து வருஷம் அப்படித்தான் வாழ்ந்தோம். சுகந்தி மாதிரி பெண் மனைவியா வாய்க்கிறது அபூர்வம். ஒருநாள்கூட கண்ணைக் கசக்கிட்டு அவங்க அப்பாகிட்டே போய் நின்னதில்லை. என்கிட்டேயும் பிறந்த வீட்டுப் புகழ் பாடினதில்லை.

நானும், 'கல்யாணமாயிடுச்சு... நாமளும் வாழ்க்கையில முன்னேறணும்'னு முடிவெடுத்து, 100 ரூபா அட்வான்ஸ் கொடுத்து 50 ரூபாய் வாடகையில ஒரு கடையைப் பிடிச்சு, பழைய பாட்டில்கள், டின்கள் வாங்கி விக்கிற பிசினஸ் செய்ய ஆரம்பிச்சேன். மொதல்ல சைக்கிள், அப்புறம் டிரை சைக்கிள்னு மிதிச்சுக்கிட்டு தெருத்தெருவா சுத்தி வியாபாரம் செஞ்சிருக்கேன். அப்புறம் மொத்தமா வாங்கி விக்க ஆரம்பிச்சேன். மொபெட், அப்புறம் சின்ன கார்னு ரொம்ப ரொம்ப மெதுவாகத்தான் வளர்ந்தேன். இப்போ, டின் ஷீட் தயாரிக்கிற பிசினஸ்ல ஓஹோன்னு இருக்கேன்'' என்றவரிடம், தனக்கு மணிவிழா எடுக்கப்போவதைப் பற்றி உங்க மனைவி என்ன சொல்கிறார் என்றோம்.

மணிவிழாவுக்கு வந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை
மணிவிழாவுக்கு வந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை

''அவங்க சந்தோஷம், வருத்தம் எதையும் வெளிக்காட்டிக்க மாட்டாங்க. ரொம்ப நிதானம். மனைவியை வாடி, போடின்னு பேசறது மட்டுமில்லீங்க வா, போ-ன்னு ஒருமையில கூப்பிடுறதுகூட பிடிக்காது. மனைவி நமக்கு செல்வத்தைக் கொண்டுவந்து கொடுக்கணும்னு அவசியமில்ல. கணவருக்கு பக்கபலமா இருந்தாலே போதும்'' என்கிற ஜெயசங்கர், மணிவிழாவுக்கு வந்த பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதைசெய்யும் நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறார்.

''என் வீட்டம்மா ரொம்ப வெள்ளந்தி. ஆனா, அவங்க என் வாழ்க்கையில இருக்காங்க பாருங்க, அதுதான் எனக்கு பலம்'' - ஒரு நிம்மதியான தாம்பத்யத்துக்கான சுலபமான வழியைத் தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்கிறார், ஜெயசங்கர்.

husband - wife love
husband - wife love

''மணிவிழா பத்திரிகை அடிக்கக் கொடுக்கிறப்போ, அந்தக் கடையோட ஓனர்கூட, 'இதுக்கு முன்னாடி நான் இப்படியோர் இன்விடேஷன் அடிச்சதேயில்லீங்க'ன்னு நெகிழ்ச்சியா சொன்னார். நான் உடனே, 'என்னை மாதிரி மனைவி மேல மரியாதை வெச்சிக்கிட்டிருக்கிறவங்க நாட்ல நிறைய பேரு இருக்காங்க. நான் ஒருத்தன், மனைவிக்கு மணிவிழா கொண்டாடிட்டேனில்ல... இனிமே நிறைய பேர் செய்வாங்க பாருங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்'' என்றபடி சந்தோஷமாகச் சிரிக்கிறார் ஜெயசங்கர்.

வாழ்த்த வயதில்லை என்பதால், நம் வணக்கங்களைத் தெரிவித்தோம் ஜெயசங்கர்-சுகந்தி தம்பதிக்கு.

அடுத்த கட்டுரைக்கு