பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கைத்தலம் பற்றினோம்!

கைமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்
பிரீமியம் ஸ்டோரி
News
கைமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்

கேரளாவிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்குப் போனோம். ‘20 லட்சம் ரூபாய் செலவாகும்.

ழக்கம்போல அன்றும் கட்டுமான வேலை செய்துகொண்டிருந்தார் நாராயணசாமி. உயரமான கம்பி ஒன்றைத் தூக்கிப் பொருத்தவேண்டும். அப்படிச் செய்யும்போது அந்தக் கம்பி, தலைக்குமேலே சென்றுகொண்டிருந்த மின்கம்பியில் உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்தது. இரண்டு கைகளையும் நீக்கவேண்டிய அளவுக்கு விளைவுகள் பெரிதாகின. வாழ்க்கை இருண்டது. காதலித்த பெண்ணின் குடும்பம் நிராகரித்தது. தன்னை நிராகரித்த காதலை ஜெயிக்க வேண்டும்... உயிருக்குயிராகத் தன்னை நேசிக்கும் பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் தன்னம்பிக்கையுடன் போராடி ஜெயித்திருக்கிறார் நாராயணசாமி.

கைத்தலம் பற்றினோம்!

நாராயணசாமிக்கு, தமிழகத்தின் முதல் கைமாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தமிழக மருத்து வத்துறை வரலாற்றில் பெரிய மைல்கல். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பத்தாண்டுக்காலக் காதலிலும் வென்று, காதலி நதியாவை கடந்த ஆண்டு கரம்பிடித்தார். இந்தத் தம்பதிக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

“என் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம் போடிகாமன்வாடி. வீட்டுல எல்லோரும் கூலித்தொழில் செய்றவங்கதான். பத்தாவது முடிச்சதுமே கொத்தனார் வேலையில் சேர்ந்துட்டேன். அந்த கரன்ட் ஷாக் சம்பவம் நடந்தப்போ கைகளில் வலி இருந்தாலும், சுயநினைவோடுதான் இருந்தேன். உடனே திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில என்னைச் சேர்த்தாங்க. அங்க தவறான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டதுல கைகளில் பெரிய பாதிப்பு உண்டாச்சு. அடுத்து கோயம்புத்தூர்ல நடந்த மேல்சிகிச்சையில என் ரெண்டு கைகளையும் நீக்கவேண்டியதாப்போச்சு. அதனாலயே, நதியா வீட்டில் எங்க காதலுக்கு பலத்த எதிர்ப்பு. எப்படியாவது கைகளைப் பொருத்திக்கணுங்கிற வெறி... மனசுல வைராக்கியம்.

மனைவி, குழந்தையுடன் நாராயணசாமி
மனைவி, குழந்தையுடன் நாராயணசாமி

கேரளாவிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்குப் போனோம். ‘20 லட்சம் ரூபாய் செலவாகும். யாராச்சும் கை தானம் செய்ய முன்வந்தால் உடனே பொருத்திடலாம்’னு சொன்னாங்க. அதற்கான பண வசதி இல்லை. அப்போதைய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய்யைச் சந்திச்சு உதவி கேட்டேன். அவர் மூலமா சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குப் போனேன். ‘கை தானம் கிடைச்சாதான் ஆபரேஷன் செய்ய முடியும்’னு சொன்னாங்க. ‘மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் கொடுங்க. நான் கேரளாவுல ஆபரேஷன் பண்ணிக்கிறேன்’னு மூத்த மருத்துவர் ரமாதேவி மேடம்கிட்ட கோபமா பேசினேன்.

‘கை தானம் செய்ய இதுவரை ஒருவர்கூட முன்வரலை. உன் மாதிரி தைரியமான பேஷன்ட்டும் எங்களுக்குக் கிடைக்கலே. கொஞ்சம் பொறுமையா இரு. இலவசமா ஆபரேஷன் செய்து முடிக்கிறோம். உன்னைப் பார்த்து, கை இல்லாதவங்க சிலர் தைரியத்துடன் கை தானம் பெறவும், கை தானம் செய்யவும் முன்வருவாங்க. உன்னோட தைரியம் எங்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு’ன்னு ரமா தேவி மேடம் பொறுமையா எடுத்துச் சொன்னாங்க. பிறகு, மூணு வருஷமா இதே வேலையாவே சென்னை மற்றும் கேரளாவுக்குத் தொடந்து அலைஞ்சேன். இந்த நிலையில மூளைச் சாவு ஏற்பட்ட சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் கைகளை தானம் செய்ய அவர் குடும்பத்தினர் முன்வந்தாங்க. என்னுடைய ரெண்டு கை மூட்டுக்குக் கீழ்ப்பகுதியில், வெங்கடேசன் ஐயாவோட கைகள் எனக்குப் பொருத்தப்பட்டுச்சு” என்று, கைகளை நம்மிடம் காட்டும் நாராயணசாமியின் முகத்தில் மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கிறது.

மிகச் சவாலான அறுவை சிகிச்சை என்பதால் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து ஓராண்டுக்காலம் மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டில் மருத்துவக் கண்காணிப்பிலேயே நாராயணசாமி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலங்களில், நாராயணசாமி–நதியாவின் காதல் கதையில் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதை வெட்கத்துடன் பகிர்கிறார் நதியா.

“எங்க ரெண்டு குடும்பத்துக்கும் வேண்டப்பட்ட ஒருவரின் கல்யாணம் 2009-ம் ஆண்டு பழநியில் நடந்துச்சு. அதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட, பிறகு அடிக்கடி போன்ல பேசினோம். எங்க காதலும் வளர்ந்துச்சு. இந்த விஷயம் ஆறு வருஷம் கழிச்சு என் வீட்டில் தெரிஞ்சப்போ பயங்கர எதிர்ப்பு. ஒருகட்டத்துல என் வீட்டிலும் ஏத்துக்கிட்டாங்க. மின் விபத்துல அவருக்குக் கைகள் நீக்கிய பிறகு அதைக் காரணமா சொல்லி, மீண்டும் எங்க காதலுக்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு. ஆனா, நான் உறுதியா இருந்தேன். இதனால, ரெண்டு வருஷம் அவர்கூட பேசவும், சந்திக்கவும் முடியாத அளவுக்குக் கண்டிப்பான சூழல் எனக்கு.

கைமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்
கைமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்

ஒருநாள் என் பெற்றோர் ஒரு நிகழ்வுக்காக இவர் ஊருக்குப் போயிருந்தாங்க. அன்னிக்கு இவருக்கு போன் பண்ணிப் பேசினேன். உடனே அவர், நாமக்கல் மாவட்டத்துல இருக்கிற என் ஊரான பிளிகல்பலயத்துக்கு வந்துட்டார். ரெண்டுபேரும் சந்திச்சுப் பேசினோம். ரெண்டு வருஷம் கழிச்சு இவரைக் கையில்லாத நிலையில் பார்த்ததும் உடைஞ்சுபோயிட்டேன். ‘நீ வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு சொன்னார். ‘எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்களோடுதான்’னு சொல்லி அழுதேன். பிறகு, இவர் வீட்டிலிருந்து என் வீட்டில் வந்து பேசினாங்க. ‘முதல்ல பையனுக்கு மறுபடியும் கைகளைப் பொருத்திட்டு வந்து பொண்ணு கேளுங்க’ன்னு என் வீட்டில் கோபமா சொல்லிட்டாங்க. அதுக்காகவே ரொம்ப வைராக்கியமா கை வைக்கணும்னு போராடினார். கைகள் பொருத்தப்பட்டு டிஸ்ஜார்ஜ் ஆனதுமே எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டார்” - உரையாடலுக்கு இடைவெளி விடும் நதியாவின் முகத்தில் விரியும் புன்னகை நாராயணசாமியின் முகத்திலும் பிரதிபலிக்கிறது.

நாராயணசாமியின் தன்னம்பிக்கை மற்றும் எதிர்கால நலன்கருதி, சிகிச்சை முடிந்ததும் இவருக்குத் தமிழக அரசால் திண்டுக்கல் மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி வழங்கப்பட்டது.

“எனக்கு ஆதரவா டாக்டர் ரமா தேவி மேடமும் நதியா வீட்டில் பேசினாங்க. பெரும் முயற்சிக்குப் பலனா நதியா வீட்டில் சம்மதம் கிடைச்சுது. டிஸ்ஜார்ஜ் ஆன அடுத்த மாதமே ரமாதேவி மேடம் தலைமையில் எங்க கல்யாணம் நடந்துச்சு. அதில், சில டாக்டர்களும் ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களும் கலந்துகிட்டாங்க” என்று நெகிழ்ச்சியாகக் கூறும் நாராயணசாமி, மடியிலுள்ள குழந்தையைக் கொஞ்சியவாறே நதியாவை அரவணைத்துக்கொள்கிறார். அவரின் கையைப் பற்றிக்கொண்டு சிரிக்கிறது குழந்தை!