Published:Updated:

மாமியார் - மருமகள்... வாங்க பழகலாம்!

மாமியார் - மருமகள்
பிரீமியம் ஸ்டோரி
மாமியார் - மருமகள்

உறவுச் சிக்கல்களை விடுவிக்கும் மந்திரங்கள்

மாமியார் - மருமகள்... வாங்க பழகலாம்!

உறவுச் சிக்கல்களை விடுவிக்கும் மந்திரங்கள்

Published:Updated:
மாமியார் - மருமகள்
பிரீமியம் ஸ்டோரி
மாமியார் - மருமகள்

மாதமொரு முறை கிச்சனுக்கு லீவ் விட்டுவிட்டு மாமியாருடன் ஹோட்டலில் சாப்பிடுவது 2021-ம் ஆண்டுக்கான நியூ இயர் ரெசல்யூஷன் என அலுவலகத் தோழி மித்தாலி சொன்னாள். பஞ்சாபியான மித்தாலி தமிழ்நாட்டின் மருமகள். மொழி, உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் என அவளுக்கும் மாமியாருக்கும் எல்லாமே வேறு. ஆனாலும், அவர்களின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது எப்படி? இதற்கு மித்தாலி சொன்ன பதிலை சொல்வதற்கு முன், சீரியல்களுக்கு கனமான கன்டென்ட்களை எக்காலத்துக்கும் கொட்டிக் கொடுக்கும் இந்த மாமியார் - மருமகள் உறவைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்குத் தான் புரியும் என்பது உண்மையெனில், மாமியார் - மருமகளின் பந்தம் எத்துணை உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும்... ஆனால், பெரும்பாலான வீடுகளில் நிலைமை என்ன...

‘உன் பொண்டாட்டிக்கு என்னைக் கண்டாலே ஆகாது...’

‘உங்கம்மா எப்படா என்னை குத்தம் சொல்லலாம்னுதான் சந்தர்ப்பம் பார்த்துட்டிருக்காங்க...’

‘வயசுல பெரியவங்கங்கிற மரியாதை வேணாம்... நான் எல்லாம் என் மாமியார் கிட்ட குரலை உயர்த்தினதே இல்ல...’

‘எங்க வீட்ல நான் எப்படி இருந்தேன் தெரியுமா... இங்க வந்து...’

இவையெல்லாம் சாம்பிள்தான். ‘சேர முடியாதது... மாமியாரும் மருமகளும்’ எனச் சொல்லும் அளவுக்கு இந்த உறவுச் சிக்கலுக்குக் காரணம் என்னவென்பதை ஆராய்ந்தால், பெரும்பாலான வீடுகளில் இதன் அடிநாதமாக இருப்பது... உரிமை.

25+ வருடங்களாக அல்லல்பட்டு தான் கட்டிக்காத்து வந்த (வந்ததாக நம்பும்) சாம்ராஜ்ஜியத்தை நேற்று வந்தவள் பறித்துக்கொண்டுவிட்டால் என்ற புள்ளியில் தொடங்கும் பிரச்னை இது. மாமியாருக்கும் மருமகளுக்கும், ‘என் மகன்/என் கணவன் மீது எனக்குத் தான் முதல் உரிமை’ என்ற பொஸசிவ் னெஸ், ‘ஒருவேளை இந்த வீட்டில் அப்படி இல்லையோ’ என்ற இன்செக் யூரிட்டியாக மாறி, யுத்தமாகப் பல வீடுகளில் வெடிக்கிறது.

மாமியார் - மருமகள்... வாங்க பழகலாம்!

இதற்கெல்லாம் காரணம் மாமியாரா, மருமகளா என்ற வாதத்துக்குப் போகா மல், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

வாரந்தோறும் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான வரன் தேடும் நிகழ்ச்சி. ‘சொல்லுங்கம்மா, உங்க எதிர்பார்ப்பு என்ன?’ எனத் தொகுப்பாளர் கேட்டதும் பெற்றோர்கள், குறிப்பாக எல்லா அம்மாக்களும் சொல்வதன் சாராம்சம் இதுதான்... ‘எங்களையும் எங்க வீட்டையும் அனுசரிச்சுப் போற மாதிரி ஒரு நல்ல பொண்ணா இருக்கணும்’.

நமது இந்தியக் குடும்பங்களின் ஆன்மாவே ‘அட்ஜஸ்ட்’ பண்ணி போவதில்தான் உள்ளது. என்றாலும், வரப்போகும் மருமகள் தங்களை, தங்கள் குடும்பத்தை அனுசரித்துப் போக வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும் அதே நேரத்தில், தாங்களும் வீட்டுக்கு வரப்போகும் மருமகளை அட்ஜஸ்ட் செய்துகொள்வோம் என அவர்கள் சொல்வதைக் கேட்பது அரிது. காரணம், மருமகள்தான் எல்லாவற்றுக்கும் ‘அட்ஜஸ்ட்’ ஆக வேண்டும் என்ற பொதுபுத்தி.

எதற்கெடுத்தாலும் குத்தம் சொல்லும் மாமியாரை பெற்ற மற்றொரு தோழி சொன்னது இது, “என் மாமியார் எதிர்பார்ப்பது, அவங்க மருமகளாகயிருந்தபோது எப்படி இருந்தாங்களோ அதே போன்ற ஓர் அடிமையின் பிரதியைத் தான்”.

தான் மருமகளாகயிருந்தபோது அனுபவித்த கஷ்டங்களை தன் மருமகள் அனுபவித்துவிடக் கூடாது என நினைக்கும் மாமியார்களின் எண்ணிக்கை குறைவு. பத்துப் பொருத்தங்களும் பார்த்து, சீரும் சிறப்புமாகக் கல்யாணம் முடித்து, ஆசையுடன் வீட்டுக்கு அழைத்து வரும் மருமகளை, நாளாக ஆக வாழ்நாள் எதிரியாக நினைக்க ஆரம்பிப்பது துயரம்.

பிரச்னை சில மாமியார்களிடம் மட்டும்தானா... இல்லை, சில மருமகள்களிடமும்தான். திருமணமான உடனேயே, ‘இதெல் லாம் இனி என் உரிமையாக்கும்’ என நிலைநாட்டுவதில் அவர்கள் காட்டும் முனைப்பிலிருந்து, ‘எனக்கான ஸ்பேஸ் இவங்க கொடுக்கறதே இல்லை’ எனக் குமுறுவதுவரை, மருமகள்களும் மாமியார்களுக்குத் தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனக் காட்டுகிறார்கள். உயிர்ப்பான பந்தமாக மாற வேண்டியது உரசல்கள் நிறைந்ததாக மாறக் காரணம்... இருதரப்புமே.

மித்தாலியின் மாமியாருடனான உறவு வொர்க் அவுட் ஆனதற்கான பல காரணங்களுள் முக்கியமானதாக அவள் சொன்னது... “கல்யாணமான புதுசுல, என்னை அவங்களுக்குப் பிடிக்கலைனு நானும், எனக்கு அவங்களைப் பிடிக்கலைனு அவங் களும் நாங்களாகவே முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, இதைப் பத்தி மனம் திறந்து பேசினதில்ல. அவங்களோட பிறந்தநாள் வந்தப்போ, அவங்களுக்கு சுடிதார் கிஃப்ட் பண்ணினேன். அவங்க அதுவரை சுடிதார் போட்டதேயில்ல. சர்ப்ரைஸ் ஆன அவங்களுக்கு, ‘இவ நம்ம சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறா, நம்மை புரிஞ்சுப்பா’னு முதன்முறையா தோணுச்சாம்.

ஆறு வருஷமா ஒரே வீட்டில்தான் இருக்கோம். எல்லாரையும்போல எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரும்தான். ஆனா, அதை வளர விடாம சமாளிக்கிறதுதான் எங்க சாமர்த்தியம். இந்த உலகத்துல ஃப்ரெண்ட்ஸ், கொலீக்ஸ், புள்ளைங் கனு எத்தனையோ பேர்கிட்ட நாம விட்டுக்கொடுத்துப் போறோம். மாமியார்கிட்ட மட்டும் ஏன் வீம்பு காட்டணும்? அவங்ககிட்ட நாம அன்பு காட்டினா, நிச்சயமா அதை நமக்கு அவங்க திரும்பத் தருவாங்க’’ - மித்தாலியின் முகத்தில் புன்னகை அகல்வதேயில்லை.

‘இதையெல்லாம் படிச்சா ஏதோ சரின்னுதான் தோணுது... ஆனா, இதுவரை போட்ட சண்டையில ஏற்கெனவே விழுந்து கிடக்குற இடைவெளியை என்ன பண்றது..’ என்று சொல்லும் மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும்...

பிரச்னைகளை சரிசெய்து உறவை சுமுகமாக்கிக் கொள்ளும் தீர்வின் தொடக்கப்புள்ளி, நம் மனதில்தான் இருக்கிறது. அதை தேடிச் சென்று அடைவது மட்டுமே சவால்!

மாமியாருக்கு சில வார்த்தைகள்!

  • புதிய மனிதர்களும் சூழலும் பழக புது மருமகளுக்குக் கால அவகாசம் தேவை. அதைக் கொடுங்கள். வந்த வுடனேயே அவள் உங்கள் வீட்டுக்குத் தகுந்தபடி மாறிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம்.

  • ‘எம்புள்ளைகிட்ட எனக்கில்லாத உரிமையா?’ எனும் அம்மாக்களே... பெத்த பிள்ளையே ஆனாலும் அவருக்கென ஒரு வாழ்வு அமைந்த பின் உங்களின் அதிகார எல்லைகளை வரையறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

  • ‘வயசுல மூத்தவ, நான் ஏன் அனுசரித்துப் போகணும்?’ என்று எண்ணுவதைவிட, ‘அவள் சொல்வது நம் குடும்பத்துக்கு நல்லதா...’ என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கலாம்.

  • மருமகளின் சமையலை குறைசொல்வது வேண்டாம். குறிப்பாக, ‘நான் செஞ்சது மாதிரி இல்ல’ போன்ற ஒப்பீடுகள் வேண்டவே வேண்டாம்.

மருமகளுக்கு சில வார்த்தைகள்!

  • மணமானதுமே புகுந்த வீட்டின் சூழலுக்கு நீங்கள் முற்றிலும் மாறிவிட வேண்டும் என மாமியார் எதிர்பார்ப்பது எப்படி நியாயம் இல்லையோ, அதேபோல உங்களை உங்களின் இயல்புகளோடு அவர்களும் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதும் நியாயமில்லை.

  • ஒரு டிகிரி முடித்திருப்பது, நட்பு வட்டம் இருப்பது, வேலைக்குப்போவது என்று உங்களுக்கென ஓர் அடையாளம், சுயம், பொழுதுபோக்கு எல்லாம் இருக்கிறதுதானே... இவை எதுவும் கிடைக்கப் பெறாமல், குடும்ப நலனே தன் நலன் என்றே வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்த உங்கள் மாமியாருக்கான அடிப்படை மரியாதையைக் கொடுக்கத் தயங்காதீர்கள்.

  • அவரின் பிறந்தநாள், திருமணநாள் முதலியவற்றை நினைவில்வைத்து வாழ்த்துங்கள், அவருக்குப் பிடித்த பொருளாக யோசித்து வாங்கிப் பரிசளியுங்கள். ‘எனக்காக என் மருமகள் இதெல்லாம் செய்தாள்’ என்ற சந்தோஷத்தை உங்கள் மாமியாரை உணரவையுங்கள்.

  • உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையில் மாமியாரின் குறுக்கீடு இருப்பதை நீங்கள் விரும்பாதது போல, உங்கள் கணவருக்கும் அவரின் அம்மாவுக்கும் இடையேயான உறவில் உங்களின் அநாவசிய குறுக்கீடு இல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism