கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சூடாரத்னம்மாள் (வயது 73). இவர் தன் மகன் கிருஷ்ணக்குமாருடன் (45) சேர்ந்து, ஸ்கூட்டரில் இந்தியா முழுவதும் ஆன்மிக தரிசனம் செய்து வருகிறார். வடஇந்தியக் கோயில்களில் தரிசனம் முடித்துக் கொண்ட சூடாரத்னம்மாள், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விருதுநகர் மாவட்ட கோயில்களில் இறை தரிசனத்தை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட பயணத்துக்காக ராமநாதபுரத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவரை சந்தித்தோம். அம்மாவுக்காக தன் வேலை, திருமணம் என இரண்டையும் துறந்த தன் மகன் குறித்து நெகிழ்ந்து சூடாரத்னம்மாள் பேசினார்.

``என் கணவர் இறந்த பிறகு நான் மிகவும் மனமுடைந்து விட்டேன். அந்தத் துயரத்திலிருந்து என்னை மீட்டு வெளியே கொண்டு வர, `அம்மா, நாம் ஆன்மிகப் பயணங்கள் போகலாம்’ என்று மகன் அழைத்தான். அதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என் கணவர், மகன் கிருஷ்ணகுமாருக்கு பரிசாக தந்த ஸ்கூட்டரில் கோயில்களுக்குச் செல்ல முடிவெடுத்தோம்.
அதன்படி, 2018-ம் வருடம் மைசூரில் இருந்து கிளம்பினோம். வட இந்தியாவில் உள்ள எல்லா கோயில்களுக்கும் சென்றுவிட்டோம். கொரோனா ஊரடங்கில் எங்கள் பயணம் தடைபட்டது. ஊரடங்குத் தளர்வு முடிவுக்கு வந்ததும், மீண்டும் பயணத்தை தொடங்கினோம்.

Also Read
என் மகன், என்னை சோகத்திலிருந்து மீட்க பல தியாகங்களை செய்திருக்கிறான். பெங்களூரில் பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவன் அவன். மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினான். அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, என் மன நிம்மதிக்காக என்னை ஆன்மிகப் பயணங்களுக்கு அழைத்துப்போக ஆரம்பித்தான்.
’எனக்குத் திருமணம் வேண்டாம், கடைசிவரை உன்னை பார்த்துக்கொள்கிறேன் போதும்’ என்று அவன் சொன்னபோது, நான் அதிர்ந்துவிட்டேன். எத்தனையோ முறை, அவன் வேலை குறித்தும், திருமணம் குறித்தும் பேசிவிட்டேன். ‘இந்தப் பயணங்களும், உன்னுடன் இருப்பதும்தான் எனக்கு சந்தோஷம்’ என்கிறான் உறுதியாக.

இந்த நான்கு வருட ஆன்மிகப் பயணத்தில், சிறு அசௌகர்யம், இடர்பாடுகூட எனக்கு நேர அவன் விட்டதில்லை. ’எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தீர்களோ இப்படி ஒரு புள்ளை’ என்கிறார்கள் எங்களை பார்ப்பவர்கள் எல்லோரும். ஆனால், எனக்கு அவன் தன் முடிவை மாற்றிக்கொண்டால்தான் நிம்மதியாக இருக்கும். அதுவரை எங்கள் பயணம் இன்னும் பல சாலைகளில் நீளும்’’ என்றனர் ஸ்கூட்டரை கிளப்பியபடி!