Published:Updated:

``அம்மாவேதான் எப்பவும் நம்மைப் பார்த்துக்கணுமா... நாங்க பார்த்துக்குறோம் எங்கம்மாவை!" #MothersDay

அன்னையர் தினம்
அன்னையர் தினம்

''கொரோனாவால கிட்டகூட வர்றதில்ல... எங்கம்மா சூப்பர்உமன்!" - அனுபவம் பகிறும் செவிலியர், மருத்துவரின் குழந்தைகள்

உங்க அம்மாவை உங்களுக்கு ஏன் ரொம்பப் பிடிக்கும்?

எனச் சிலரிடம் கேட்டோம். எல்லா பதில்களின் சாராம்சமும் ஒன்றாகத்தான் இருந்தன...  

`எங்க அம்மா எங்களுக்காக எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா!'

இவர்கள் எல்லோரும் சொல்லும் அம்மாக்கள், காலை எழுவதிலிருந்து இரவு தூங்கப்போகும்வரை பிள்ளைக்களுக்காக மட்டுமே, பிள்ளைகளைச் சுற்றி மட்டுமே இயங்குபவர்கள். ஆனால் இந்த ரெகுலர் `அம்மா சென்டிமென்ட்களுக்கு' அப்பாற்பட்டு செயல்படும் அம்மாக்களும் இங்கே இருக்கிறார்கள்தானே?

``அம்மாவேதான் எப்பவும் நம்மைப் பார்த்துக்கணுமா... நாங்க பார்த்துக்குறோம் எங்கம்மாவை!" #MothersDay
வீடு, குடும்பம், பிள்ளைகள் என்பதைத் தாண்டி சமூகத்துக்காக அதிக நேரம் உழைக்கும் அப்படியான அம்மாக்களை நாம் அறிவோம்.

குழந்தைகள் மீதும் குடும்பத்தின் மீதும் எவ்வளவுதான் பாசம் இருந்தாலும், வேலை என்று வந்துவிட்டால் களத்துக்கு ஓடவேண்டிய பொறுப்புகளில் இருக்கும் ஓர் அம்மாவின் பிள்ளையிடம், `உங்க அம்மாவை உங்களுக்கு ஏன் ரொம்பப் பிடிக்கும்' என அதே கேள்வியைக் கேட்டோம். வித்தியாசமான பதில் கிடைத்தது.

அந்த அம்மா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி. அவரின் மகனும், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் எலும்பியல் துறையின் துணைப்பேராசிரியரும், மருத்துவருமான ஶ்ரீஜெய் சொல்கிறார்...

டாக்டர் ஜெயந்தி (முதல்வர்)
டாக்டர் ஜெயந்தி (முதல்வர்)

``எங்க அம்மாவை ரொம்பப் பிடிச்சுப்போக, அவங்களோட சமூகப் பொறுப்பும் நேர மேலாண்மையும்தான் காரணம். என்ன சூழல் வந்தாலும், எவ்வளவு பெரிய மருத்துவ அவசரம் வந்தாலும், கொஞ்சம்கூட தாமதிக்காமல் யோசிக்காமல் மருத்துவமனைக்குக் கிளம்பிடுவாங்க. அந்த வகையில, சொல்லப்போனா எல்லா நேரமும் அம்மா மருத்துவராதான் இருப்பாங்க. அதனாலேயே சின்ன வயசுல, அம்மாவோட நேரம் செலவிட ரொம்ப ஏங்கியிருக்கேன்.

சில நாள்களெல்லாம் `மருத்துவமனையே வீடு, சேவையே வாழ்க்கை'ன்னு அம்மா இருந்துடுவாங்க. அப்போவெல்லாம் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஆனால்...
குடும்பத்துடன் மருத்துவர் ஜெயந்தி
குடும்பத்துடன் மருத்துவர் ஜெயந்தி

எல்லாத்தையுமே புரிஞ்சுக்க சில காலம் ஆகும்ல... அப்படித்தான் அம்மாவைப் புரிஞ்சுக்க எனக்கும் கொஞ்சம் காலம் ஆனது! புரிஞ்சுக்கிட்ட பிறகு, அம்மாவுக்காக நான் மாறிக்க ஆரம்பிச்சுட்டேன். உதாரணத்துக்கு, எமெர்ஜென்சி சூழல்னா, அம்மாவோட டென்ஷன் புரிஞ்சு, அன்னைக்கு அவங்களுக்கு முழு ஓய்வு கொடுத்திடுவேன். வீணாகத் தொந்தரவு செய்யமாட்டேன். என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்ள கொஞ்சம் கொஞ்சமாகக் கத்துக்கிட்டேன். வீடுங்கிறது, எந்தச் சூழல்லயும் அம்மாவுக்கு கஷ்டமாகிடக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். இந்த விஷயத்துல, அப்பா எனக்கு சப்போர்ட்!

எவ்வளவுதான் அம்மாவை மிஸ் பண்ணினாலும், அம்மாமேல கோபமெல்லாம் வராது. மிஸ் பண்ணும்போது, `அம்மா எல்லாரையும் கவனிச்சுக்குறாங்க. அம்மாவை நாமதான் கவனிச்சுக்கணும்'னு மனசுல நினைச்சுக்குவேன்.

இந்தக் கொரோனா காலத்திலும், சூழலைப் புரிஞ்சுக்கிட்டு வீட்ல எல்லோரும் அம்மாவை நல்லா கவனிச்சுக்கிறோம். பிற நோய்த்தொற்று நேரங்கள்ல, வீட்டு வேலைகள்ல இருந்துதான் அம்மாவுக்கு ஓய்வு கொடுப்போம். ஆனா இந்தக் கொரோனா காலத்துல, உடலளவுல மட்டுமல்லாம மனசளவுலயும் அம்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்கோம். வீட்ல என்ன நடக்குது, நாங்கயெல்லாம் என்ன செய்றோம்னு எல்லாம் அம்மாவுக்கு இப்போதைக்கு எதுவும் தெரியாது.

பேத்தியுடன் மருத்துவர் ஜெயந்தி
பேத்தியுடன் மருத்துவர் ஜெயந்தி

எத்தனையோ தொற்றுநோய் பாதிப்புக் காலகட்டங்கள்ல அம்மா களத்துல இருந்திருக்காங்கன்னாலும், இன்றைய சூழ்நிலை ரொம்பவே வேறுபட்டுத் தெரியுது. அதுக்கு ரெண்டு முக்கியமான காரணங்கள் இருக்கு. ஒன்று, அம்மா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வரா பொறுப்பேத்துகிட்ட பிறகு, இவ்வளவு பெரிய ஒரு பிரச்னையை முதன்முறையா கையாள்றாங்க. மருத்துவப் பொறுப்பைத் தாண்டி, ஒருங்கிணைப்புப் பணி, மேற்பார்வைப் பணினு எல்லாம் அம்மாவை சோர்வாக்கிடுது. இரண்டு,

தொற்றுப் பரவல் அச்சம் காரணமா வீட்டிலும் அம்மா எங்ககிட்டயிருந்து சமூக இடைவெளியோடு இருக்க வேண்டியதா இருக்கு.

என்னோட ஒரு வயசு மகளுக்கு, பாட்டின்னா அவ்ளோ பிரியம். அம்மாவுக்கும் பேத்தின்னா ரொம்ப இஷ்டம். இந்தக் கொரோனா, ரெண்டு பேரையும் கோடு போட்டுப் பிரிச்சு வெச்சிருக்கு. தினமும் இரவு வீடு திரும்பும் அம்மா, பேத்தியை ஏக்கமாப் பார்ப்பாங்க. சின்ன வயசுல, என்னையும் இப்படித்தான் அம்மா பார்த்தாங்க!"

இந்த அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க?

''என்னோட இன்ஸ்பிரேஷன் நீங்கதான்மா. உங்களைப் பார்த்துப் பார்த்து, நான் பெருமைப்பட்டுக்கிட்டே இருக்கணும். Keep Inspiring!"

அடுத்த அம்மாவும், ஏற்றுக்கொண்ட வேலையின் பொறுப்புக் காரணமாக பிள்ளைகளைக்கூட பிரிந்திருப்பவர்தான். அவரின் குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?!

'நீங்க ஏன் நர்ஸ் வேலைக்குப் போனீங்க?' - கொரோனா நோய் பரவி வரும் சூழலில் வேலைக்குப் புறப்பட்ட அம்மாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு அழுதார் 12 வயதான மகள் தான்யஸ்ரீ. அவரின் அம்மா காளியம்மாள் தேனி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுகிறார். கொரோனா வார்டில் பணிசெய்யத் தன் முறை வரக் காத்திருக்கிறார். தான்யஸ்ரீயின் அப்பாவும் அரசு மருத்துவமனையில் செவிலியராகக் கொரோனா வார்டில் பணியாற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.

அம்மாவுடன் குழந்தைகள் தான்யஶ்ரீ - கபிலேஷ்
அம்மாவுடன் குழந்தைகள் தான்யஶ்ரீ - கபிலேஷ்

காளியம்மாள் கொரோனா வார்டுக்குப் பணிக்குச் செல்வதற்கு முன்பே வீட்டில் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்திவிட்டார். காரணம், தான் மருத்துவமனையில் பணியாற்றுவதால் நோய்ப் பரவலுக்கான வாய்ப்பு அதிகம். அதனால் அவரின் இரண்டு குழந்தைகளும் அம்மாவின் ஸ்பரிசத்தை இழந்து தவித்திருக்கின்றன.

லாக்டெளனில் வரும் அன்னையர் தினத்திற்கு இப்படியெல்லாம் சர்ப்ரைஸ் தந்து அசத்தலாம்! #MothersDay

தான்யஸ்ரீயிடம் பேசினோம். "கொரோனா தமிழ்நாட்ல பரவத் தொடங்கினதுமே அம்மா எனக்கும் தம்பிக்கும் அதைப் பத்திச் சொல்லிக்கொடுத்தாங்க. அது ஒரு வைரஸ், அது எப்படிப் பரவும், பரவினா என்ன நடக்கும்னு எல்லாம் சொன்னாங்க. வீட்ல நாங்க எப்படி இருக்கணும்னு கண்டிஷன்ஸும் போட்டாங்க.

குழந்தைகளுடன் செவிலியர் காளியம்மாள்
குழந்தைகளுடன் செவிலியர் காளியம்மாள்

முன்னாடியெல்லாம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் அம்மா என்கூடவும் தம்பிகூடவும் இருப்பாங்க, பேசுவாங்க, விளையாடுவாங்க, ஹோம்வொர்க் சொல்லிக் கொடுப்பாங்க. இப்போ எங்க பக்கத்துலயே வர்றதில்ல. அவங்க வேற ரூம்ல தனியா இருக்காங்க. முன்னயெல்லாம் வீட்டுல எல்லாரும் சேர்ந்து கேரம்போர்டு, செஸ் எல்லாம் விளையாடுவோம். இப்போ அதெல்லாம் விளையாடுறதே இல்ல. ஒருநாள், 'எங்ககூட விளையாடியே ஆகணும்'னு நான் அழுதப்போ, தூரமா உட்கார்ந்து ஒரே ஒருமுறை விளையாடுனாங்க.

''அம்மாவுக்கு மதர்ஸ் டே வாழ்த்துகள் என்ன?"

''இந்த வருஷம் மதர்ஸ் டேவுக்கு எங்க அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கப் போறேன்!" என்றவரிடம், ''என்ன கிஃப்ட்னு எங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்ல முடியுமா?!" என்றோம். "அம்மாவுக்கு சாக்லேட் கேக் பண்ணிக்கொடுக்கப் போறேன்" என்றார்.
குழந்தைகளுடன் செவிலியர் காளியம்மாள்
குழந்தைகளுடன் செவிலியர் காளியம்மாள்

தான்யஸ்ரீயின் தம்பி கபிலேஷிடம் பேசினோம். "பௌர்ணமி வரும்போதுலாம் பக்கத்துல ரெண்டு, மூணு வீடுகள்ல இருக்கிறவங்க சேர்ந்து மொட்டை மாடிக்குப் போய் நிலாச்சோறு சாப்பிடுவோம். இப்போ அம்மா இல்லாததால நாங்க அங்க போறதில்ல. ஆனா, எங்கம்மாவுக்காக அந்த எத்தனை நோயாளிகள் காத்திருப்பாங்க இல்ல... அவங்களை எல்லாம் எங்கம்மாதானே பார்த்துக்கணும்...'' எனும்போது குழந்தையின் குரலில் ஏக்கத்தையும் மீறிய பெருமை.

அடுத்த கட்டுரைக்கு