Published:Updated:

2K kids: வேர் என நீ இருந்தாய்! - ஆதர்ச தம்பதியின் கதை

- சா.லாய்ஸ் ஜாய்சி

பிரீமியம் ஸ்டோரி

மனைவியின் முன்னேற்றத்துக்கு ஏணியாய் இருக்கும் மரியாதைக்குரிய கணவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், லீமா ரோஸின் கணவர் சார்லஸ். பன்னிரண் டாம் வகுப்புப் படித்திருந்த தன் மனைவியை அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக்கியிருப்பவர். தங்கள் 40 நாள் பச்சிளம் குழந்தைக்குத் தாயுமாகித் தன் தோள்களில் வாங்கிக்கொண்டு, கல்வி நிலையத்துக்கு மனைவியை வழியனுப்பி வைத்தவர். ஆக்கபூர்வமான தங்கள் இல்லறத்தின் கதையை நம்மிடம் பகிர்கிறார் லீமா ரோஸ்.

``கடலூர் மாவட்டம், காடுவெட்டி பக்கத்துல இருக்கிற அறந்தாங்கி கிராமம்தான் நான் பிறந்த ஊர். எங்க வீட்டுல அண்ணன், மூணு அக்கா, நான்னு அஞ்சு பிள்ளைங்க. அப்பா ஆசிரியர். நான் அஞ்சாவது படிச்சப்போ எங்க அப்பா இறந்துட்டார். ப்ளஸ் டூ படிச்சப்போ எங்க அம்மா இறந்துட்டாங்க. என் சகோதரிகள் மூணு பேருமே ஆசிரியர்கள். நானும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில சேர்ந்து படிக்க நினைச்சேன். ஆனா, நான் படிக்க வேண்டிய காலகட்டத்துல பெற்றோர் பலம் இல்லாததால, என்னைப் படிக்க வைக்க யாரும் இல்ல.

நாலு வருஷ வாழ்க்கை வீட்டு வேலைகள் லேயே போச்சு. அதன் பிறகு, எங்க திருமணம் நடந்தது.

அதுவரை, என் பார்வையில இருட்டாவே இருந்த வெளியுலகத்துல, கணவர் சார்லஸ்தான் வெளிச்சத்தைக் காட்டினார். என்னைப் படிக்கச் சொன்னார். அதற்கான முயற்சிகளை எடுத்தார். அதுக்கிடையில எங்களுக்குப் பெண் குழந்தை பிறக்க, குழந்தை பிறந்த 40 நாள்ல காரைக்கால்ல இருக்குற ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில விடுதியில தங்கிப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. குழந்தை வளர்ப்பா, கனவை நோக்கிப் பயணமானு நான் தவிச்சு நின்னப்போ, `அம்மா மட்டும்தான் குழந்தையை வளர்க் கணுமா? அப்பாவும் வளர்க்கலாம்'னு சொல்லி என்னைப் படிக்க அனுப்பி வெச்சார் என் கணவர். ஒன்றரை வயசு வரை அம்மா வுமாகி பிள்ளையை வளர்த்தார்'' - சொல்லும் போதே நெகிழ்ந்து போகிறார் லீமா ரோஸ்.

2K kids: வேர் என நீ இருந்தாய்! - ஆதர்ச தம்பதியின் கதை

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், கணவரையும் கைக்குழந்தையையும் பிரிந்திருந்தாலும், ஆங்கிலம் படிக்கக் கடினமாக இருந்தாலும், பிள்ளையைப் பெற்ற உடலில் சோர்வு இருந்தாலும்... இவை எதையுமே பொருட் படுத்தாமல் தன் இலக்கை நோக்கி ஓடியிருக் கிறார் லீமா ரோஸ். அவர் உழைப்பு, இன்று அவரை ஓர் அரசுப்பள்ளி ஆசிரியராக ஆக்கி யிருக்கிறது.

``நான் இன்னிக்கு சமூகத்துல நாலு பேர் மதிக்கிற மாதிரி இருக்கேன்னா, அதுக்குக் காரணம் என் கணவர்தான். தனி ஆளா எங்க புள்ளைய, என் மாமியார் துணையோட வளர்த்தவர். பிரசவத்துக்கு முன் குழந்தை பனிக்குட நீரை குடிச்சுட்டதால கஷ்டப்பட்டுக் காப்பாத்தினோம். `அப்படிக் காப்பாத்தின புள்ளைக்கு தாய்ப்பால்கூட கொடுக்காம அம்போனு விட்டுட்டுக் கிளம்பிப் போறாளே'னு உறவினர்கள் பேசினப்போ, `எதையும் காதுல வாங்காத, டாக்டர்கிட்ட கேட்டுட்டேன், இனி புள்ளைக்கு எந்த ஆபத்தும் இல்ல'னு எனக்கு தைரியம் சொன்னார் கணவர். நாலு சென்ட் இடத்தை வித்து என்னைப் படிக்க வெச்சார். தலை நிக்காத புள்ளையை லாகவமா தூக்குறதுல இருந்து ராத்திரியெல்லாம் முழிச்சு பால் ஆத்திக் கொடுக்குறது, ஈரத் துணி மாத்துறது, டாய்லெட் போனா அலசுறது வரை எல்லா வேலைகளையும் அவர் பண்றதை எல்லாரும் ஆச்சர்யமா எங்கிட்ட சொல்லுவாங்க'' என்று சொல்லும் தன் மனைவியை இடைமறிக்கும் சார்லஸ், ``என்னதான் நான் படிக்க வெச்சாலும், பால் குடிச்ச பச்சப் புள்ளையை விட்டுட்டுப் போன தவிப்போட பாடுபட்டு படிச்சது என் மனைவிதான்'' என்கிறார் விட்டுக்கொடுக்காமல்.

பரஸ்பரம் பலம் கொடுக்கும் அன்பு அற்புதமானது, அற்புதங்கள் செய்வது. அதை உணர்ந்த உயிர் சாட்சி... நான்.

லீமா ரோஸ் 40 நாள்களில் விட்டுச் சென்ற அந்தக் குழந்தை, இந்தக் கட்டுரையை எழுதிய நான்தான். ஆம்... இவர்கள்தான் என் அம்மா, அப்பா. `படிப்புதான் முக்கியம், எத்தனை தடைகள் வந்தாலும் தாண்டி படிச்சுப்புடணும்' என்பதை வாழ்ந்து காட்டிய என் பெற்றோர் களின் வழியில் செல்வேன் நானும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு