Published:Updated:

”அஞ்சும் பொம்பளப்புள்ளைனு விட்டுப்போயிட்டாரு வீட்டுக்காரரு!”

மகள்களுடன் சசிரேகா
பிரீமியம் ஸ்டோரி
மகள்களுடன் சசிரேகா

- ஒரு தாயின் தன்னம்பிக்கை கதை

”அஞ்சும் பொம்பளப்புள்ளைனு விட்டுப்போயிட்டாரு வீட்டுக்காரரு!”

- ஒரு தாயின் தன்னம்பிக்கை கதை

Published:Updated:
மகள்களுடன் சசிரேகா
பிரீமியம் ஸ்டோரி
மகள்களுடன் சசிரேகா
``அஞ்சும் பொம்பளப்புள்ளையா பொறந்துடுச்சேன்னு, கடைசிப்புள்ள பொறந்தப்போ அது மொகத்தக்கூடப் பாக்காம எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு என் வீட்டுக் காரரு. ஒத்த மனுஷியா புள்ளைகள வளத்து ஆளாக்குனேன். கடைசிவரை எங்ககூட சேராமலே வாழ்ந்தவரு, போன மாசம் செத்துப்போயிட்டாரு. எந்தப் புள்ள மொகத்தப் பாக்காம அவரு போனாரோ, அதே பொம்பளப் புள்ளையதான் அவருக்குக் கொள்ளிவெக்க வெச்சேன்’’

- சசிரேகாவின் வாழ்க்கையிலும் வார்த்தையிலும் துயரமும் திடமும் பிணைந்திருக்கின்றன. இந்தப் பெண்ணின் வாழ்க்கை, தன்னம்பிக்கை பாடம். தஞ்சாவூரைச் சேர்ந்த சசிரேகாவை, அவரது வீட்டில் சந்தித்தோம்.

‘`எனக்கு 15 வயசுலேயே கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. வீட்டுக் காரரு கணேசன் கொத்தனார் வேலை பார்த்தாரு. நல்லாத்தான் வாழ்ந்தோம். அடுத்தடுத்து மூணு பொம்பளப் புள்ளைங்க பொறந்தாங்க. ஆம்பளப்புள்ள பொறக்கலைங்கிற கோபத்துல எங்கிட்ட அடிக்கடி சண்டைபோட ஆரம்பிச்சாரு. பல நாளு வீட்டுக்கே வர மாட்டாரு சொந்தக்காரங்க அவரை சமாதானம் செஞ்சு வீட்டுல கொண்டு வந்து விடுவாங்க. இதுக்கிடையில அவரு குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிட்டதால, அந்த வயசுலயே பல துயரங்களை அனுபவிக்க ஆரம்பிச்சேன்.

அதுக்கு அப்புறமும் ரெண்டு பொம்பளப் புள்ளைங்க பொறக்க, எங்க வாழ்க்கையே முடிவுக்கு வந்துடுச்சு. அதுவும் கடைசிப் புள்ள பொறந்தப்போ, ‘அஞ்சையுமே பொட்டப் புள்ளையா பெத்தியில... நீயே வெச்சு வளத்துக்க’னு சொல் லிட்டுப் போயிட்டாரு. 22 வயசுல அஞ்சு புள்ளைகள வெச்சுக்கிட்டு என்ன செய்றதுனு தெரியாம நான் தவிச்சு நின்ன நெலமைய இப்ப நெனச்சாலும் மனசு ஆறாது’’ என்றவருக்குக் காலம் போர்க்கள மாகியிருக்கிறது.

 சுபத்ரா,  சுருதி,  கலைவாணி,  சசிரேகா,  சுஷ்மிதா,  அதிசயா
சுபத்ரா, சுருதி, கலைவாணி, சசிரேகா, சுஷ்மிதா, அதிசயா

‘`சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கொடுத்து என் வாழ்க்கை இப்படி ஆகி, புள்ளைகளோட தனிமரமா நிக்கிறேனேன்னு நானும் எங்கம்மாவும் அழுதுகிட்டே இருந்தோம். ஆனா, நான் சீக்கிரமே கண்ணைத் தொடச்சுக்கிட்டு, என் அஞ்சு புள்ளைகளுக்கும் நான் பசியாத்தணுமே... வீடுகள்ள பத்து பாத்திரம் கழுவும் வேலைக்குப் போனேன். எங்கம்மா சின்னச் சின்ன ஒத்தாசை செஞ்சு எனக்குத் தொணையா இருந்தாங்க. மூணு புள்ளைகள வீட்டுல விட்டுட்டு, இடுப்புல ஒண்ணு, கையில ஒண்ணுன்னு கடைசி ரெண்டு புள்ளைகள மட்டும் என்னோடயே வேலைபார்க்குற வீடுகளுக்குக் கூட்டிக்கிட்டுப் போவேன். அங்க எங்கயாச்சும் கைப்புள்ளைய தூங்க வெச்சுட்டு வேலைய பார்ப்பேன்.

காலையில அஞ்சு மணிக்குப் போனா, சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். அதுக்கு அப்புறம் புள்ளைகளுக்கு ராத்திரி சாப்பாடு செஞ்சு கொடுத்து, நானும் சாப்பிட்டுப் படுத்தா, ஒடம்பெல்லாம் ஒரே வலியா வலிக்கும். அந்த வலி தீர்றதுக்குள்ள அடுத்த நாளு விடிஞ்சுடும். இன்னும் செத்த நேரம் தூங்கேன்னு என் கண்ணு என்னைக் கெஞ்சும். ஆனா, புள்ளைங்களும் நானும் திக்கத்து நிக்கிற எங்க நெலமை ஞாபகத்துக்கு வந்து, படக்குனு முழிப்பு வந்துடும்’’ என்பவரை அவர் கணவர் விட்டுச் சென்று 17 வருடங்கள் ஆகின்றன.

‘`அவரு போனதுலயிருந்து இன்னிக்கு வரைக்கும் நிக்காம ஒழைச்சேன், என் புள்ளைகளப் படிக்க வெச்சு ஆளாக்குனேன். சுஷ்மிதா, சுபத்ரா, சுருதினு மொத மூணு புள்ளைகளும் படிப்பை முடிச்சுட்டு இப்போ வேலைக்குப் போறாங்க. கடைசி ரெண்டு புள்ளைங்க கலைவாணியும் அதிசயாவும் படிச்சுக்கிட்டு இருக்காங்க. நான் படுற கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்த என் பொண்ணுங்க அவங்க சம்பாதிக்கத் தொடங்கினதுமே, ‘எங்களுக்காக நீ கஷ்டப்பட்டது போதும்மா...’னு சொல்லி என்னை வீட்டு வேலைக் குப் போக வேண்டாம்னு சொல்லிட் டாங்க. ரெண்டு வருஷமா நான் வேலைக்கே போறதில்ல.

என் வீட்டுக்காரரு இதே ஊருலதான் இருந்தாரு. இப்புடி பொம்பளப் புள்ளைங்க உக்கார வெச்சுப் பாத்துக்குறதுக்குக் கொடுத்து வைக்காம பிரிஞ்சு போயிட்டாரேனு அவரை நெனச்சு அப்பப்போ கலங்குவேன். ஆனா, அவரு ஒரு தடவகூட என்னையோ, என் புள்ளைகளையோ பார்க்க வரவேயில்ல. பொம்பளப் புள்ளைகள பெத்ததையே குத்தமாக்கி என்னை மாதிரி இந்த ஒலகத்துல எத்தன அம்மாக்கள் கஷ்டப் படுறாங்களோ அப்பப்போ நெனைச்சுப் பார்க்கும்போது மனசு நடுங்கும்.

ஒரு மாசத்துக்கு முன்னால, என் வீட்டுக் காரரு ரோட்டுல மயங்கிக் கெடக்குறதா சொந்தக்காரங்க வந்து சொன்னாங்க. நான் பதறியடிச்சுக்கிட்டு ஓடுனேன். பேச்சு, மூச்சில்லாம கெடந்தவரை ஆஸ்பத்திரியில சேர்த்தேன். என் புள்ளைங்க என்ன சொல்லுங்களோனு நெனச்சேன். ஆனா, அவங்க என் மனசறிஞ்சு நடந்துக்கிடுச்சுங்க. சொந்தக்காரங்க சிலர், ‘உன்ன வாழ்க்கை முழுக்கத் தவிக்கவிட்டுட்டுப் போனவனை நீ ஏன் இப்போ தாங்குற?’னு கேட்டப்போகூட, ‘அம்மாவை எதுவும் சொல்லாதீங்க’னு சொல்லிடுச்சுங்க.

ஆஸ்பத்திரியில அவரு பக்கத்துல உக்காந்து, ‘பொம்பளப் புள்ளைனு சொல்லி வேணாம்னு போனியே.... அதுக இப்போ ஆம்பளப் பசங்களுக்கு மேல என்னை பார்த்துக்குதுங்க. இதுக்கெல்லாம் உனக்குக் கொடுத்து வைக்காம போச்சே. நீ பொழச்சு வா... உன்னையும் கண்ணுக்குக் கண்ணா வெச்சு கவனிச்சுக்குங்க...’னு சொல்லி கலங்குனேன். ஆனா, அவரு கண்ணு முழிக்காமலே போயிட்டாரு’’ என்றவர், கணவரின் இறுதிச் சடங்கை மகள்களை செய்ய வைக்க ஊர்க்காரர்களிடம் ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறார்.

கணேசன்
கணேசன்

‘`சொந்தக்காரங்க, ஆம்பளப்புள்ள இல்லைனு உறவுக்காரர் ஒருத்தரை கொள்ளி வைக்க ஏற்பாடு செஞ்சாங்க. ‘முடியாது... எந்தப் புள்ள மொகத்தப் பாக்காம அவரு போனாரோ, அந்த மக அதிசயாதான் இவருக்குக் கொள்ளி வைக்கணும்’னு உறுதியா சொல்லிட்டேன். அதுக்கு ஊரும் ஒறவும் ஒப்புக்கலை. ‘இது என்னோட 17 வருஷ வைராக்கியம். கொள்ளி வைக்க வேணும்னு சொல்லித்தானே எல்லாரும் ஆம்பளப்புள்ள கேட்குறாங்க..? பொம்பளப் புள்ளையும் கொள்ளி வைக்கலாம்னு அவங்களுக்கெல்லாம் இது ஒரு உதாரணமா இருக்கட்டும்’ நான் என் முடிவுல உறுதியா இருந்ததால, அவங்க எல்லாம் எறங்கிவந்தாங்க.

இதுவரை எம்புள்ளைகள என்னன்னுகூட கேக்காத அவங்க அப்பாவை, ஆண்களோட சேர்ந்து எம் பொண்ணுங்களும் சுமந்துக்கிட்டு சுடுகாட்டுக்குப் போனாங்க. அங்க நுழைவு வாயில்ல, ‘பொண்ணுங்க உள்ள வரக்கூடாது’னு மறுபடியும் நிறுத்தினாங்க. கொஞ்ச நேர சலசலப்புக்கு அப்புறம், என் பொண்ணுங்க எங்க கதைய அவங்ககிட்ட சொல்ல, அவங்களே மனமிரங்கி எங்களை அனுமதிச்சாங்க. அதிசயா அவங்க அப்பாவுக்கு எல்லா காரியமும் செஞ்சு கொள்ளி வெச்சது. மொட்டையடிக்கவும் நாங்க தயாரா இருக்க, அங்கயிருந்த நாவிதர், ‘என் அனுபவத்துல பொண்ணுங்க இவ்வளவு உறுதியா நின்னு நான் பார்த்ததில்ல, மொட்டையெல்லாம் வேணாம்மா’னு சொல்லி கண்கலங்கினார். நாங்களும் வைராக்கியத்தை நிறைவேத்தின கண்ணீரோட வீடு திரும்பினோம்’’ என்றவர், தன் மகள்களின் திருமணம் பற்றிப் பேசினார்.

‘`கடமை முடிஞ்சிடும்னு நெனச்சுதான், எனக்கு 15 வயசுலேயே எங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அப்படி நான் என் கடமையை முடிக்கிறதைவிட, என் பொண்ணுங்களுக்கு வாழக் கத்துக்கொடுக்குறதையே முக்கியமா நெனைக்கிறேன். அவங்களை சொந்தக் கால்ல நிக்கவெச்சு தன்னம்பிக்கை கொடுக்கணும். ஆண்களுக்குத் துளியும் நாம குறைஞ்சவங்க இல்லைனு அவங்க மனசுல பதியணும். அந்தத் தைரியத்தோடதான் அவங்க கல்யாணம் பண்ணிக்கணும்’’ என்றார் அந்த வைராக்கியத் தாய்.

சசிரேகாவின் மகள்களிடம் பேசினோம். ‘`அப்பாவோட அரவணைப்பே இல்லாம வளர்ந்த எங்களுக்கு, அப்பா, அம்மானு ரெண்டு பேரோட பாசத்தையும் பாதுகாப்பை யும் அம்மா ஒத்தையாளா கொடுத்து வளர்த்தாங்க. பதிலுக்கு எங்ககிட்ட அவங்க எதிர்பார்க்குறது எல்லாம்... நாங்க சொந்தக் கால்ல நிக்கணும்ங்கிறதைத்தான். ஆம்பளப்புள்ளைங்கள பெத்தவங்களை எல்லாம்விட அதிக பெருமைய, அன்பை, நிம்மதிய நாங்க எங்க அம்மாவுக்குத் தருவோம். அவங்க கண்ணுல இனி கண்ணீருக்கே வேலையில்லாமப் பார்த்துக்குவோம்’’

- ஒரே குரலில் சொல்கிறார்கள் ஐவரும்.சசிரேகா ஜெயித்துவிட்டார்!