Published:Updated:

``10 வயசு ஆகுது... இன்னும் பச்சப்புள்ளதான்!” - போராட்ட தாய் மேரி சுஜா

மகன், மகளுடன் மேரி சுஜா
பிரீமியம் ஸ்டோரி
மகன், மகளுடன் மேரி சுஜா

அன்னையர் தினம் சிறப்புப் பகிர்வு

``10 வயசு ஆகுது... இன்னும் பச்சப்புள்ளதான்!” - போராட்ட தாய் மேரி சுஜா

அன்னையர் தினம் சிறப்புப் பகிர்வு

Published:Updated:
மகன், மகளுடன் மேரி சுஜா
பிரீமியம் ஸ்டோரி
மகன், மகளுடன் மேரி சுஜா

அம்மா என்றாலே அன்பு என்பதுதான் பிரதானப்படுத்தப்படும். உண்மையில், பிரசவம் முதல் பிள்ளைகளின் திருமணம் வரையிலும் பல பொறுப்புகளையும் தங்களது இயல்பாகவே ஆக்கிக்கொள்ளும் அவர்கள், அன்புக்கு இணையான வலிமையும் கொண் டவர்கள். அதிலும் மாற்றுத்திறன் குழந்தை களின் அம்மாக்கள், பல மடங்கு வலிமையான வர்கள். வாழ்க்கையில் சில காலம் போராட்டம் என்றில்லாமல், வாழ்க்கையே போராட்டம் என்றானபோதும், என் பிள்ளைக்காக எதுவும் செய்வேன் என்று நிற்பவர்கள். அவர்களில் ஒருவர்தான், மேரி சுஜா.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள வண்டாவிளையைச் சேர்ந்த மேரி சுஜா - டென்னிஸ் குமார் தம்பதிக்கு மகன் டேனி ஸ்டெனோ, மகள் டேனி ஸ்டெனிஷா என இரண்டு குழந்தைகள். குழந்தை பிறந்த பிறகு ஆரம்ப நாள்களில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவால், 10 வயதாகும் சிறுவன் டேனி ஸ்டெனோ கைக்குழந்தைபோல தன் அம்மாவின் மடியில் தவழ்கிறான். ‘என் மகனின் நிலைக்குக் காரணமான மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் மேரி சுஜாவுக்கு, வீட்டிலும் போராட்ட வாழ்க்கைதான்.

‘`என் வீட்டுக்காரர் கேரளாவுல தங்கி கொத்தனார் வேலை செய்றார்’’ என்றபடி பேச ஆரம்பிக்கும் மேரி சுஜாவின் வீடு, வண்டாவிளை கிராம நான்கு வழிச் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. தன் மகனுக்கு அவர் உணவு ஊட்டிக்கொண்டிருக்க, அண்ணன் ஸ்டெனோவுக்கு ‘கண்ணான கண்ணே...’ பாட்டு போட்டுவிட்டபடி அருகில் நிற்கிறாள் தங்கை ஸ்டெனிஷா.

“என் பையனுக்குப் பார்வை இல்லை, பேச முடியாது, நடக்க முடியாது, காது மட்டும் கேட்கும். பாட்டுப் போட்டாத்தான் சாப்பிடு வான். அதிலும் ‘கண்ணான கண்ணே’ பாட்டுப் போட்டா அமைதியாகிடுவான். மென்று சாப்பிடத் தெரியாது, அப்படியே விழுங்குற மாதிரி குழைஞ்ச சாப்பாடுதான் கொடுக்கணும்’’ என்றவர் மகனுக்கு வாய் துடைத்துவிட்டு, மடியில் கிடத்தி தூங்க வைத்தபடி தொடர்ந்தார்.

“மார்த்தாண்டத்தில ஒரு தனியார் ஆஸ்பத்திரியில, 2012-ல எனக்கு சிசேரியன் பிரசவம் மூலமா குழந்தை பிறந்தது. குழந்தை எப்பவும் தூங்கிக்கிட்டே இருப்பான், திடீர்னு நடுங்குவான். டாக்டர்கிட்ட சொன் னப்போ, ஐ.சி.யூல வெச்சிட்டு, சரியாகிடுச்சுனு கொடுத்தாங்க. வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆனதுக்கு அப்புறம் குழந்தைக்கு ஃபிட்ஸ் வர, மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அப்பவும், ‘குழந்தை நார்மலா இருக்கு, நீங்கதான் தேவையில்லாம பயப்படுறீங்க’னு சொன்னாங்க. ஆனா, திருவனந்தபுரத்துல ஒரு டாக்டர்கிட்ட ஸ்கேன் எடுத்துப் பார்த்தப்போ, குழந்தைக்கு மூளை பாதிக்கப்பட்டிருக்கு. குழந்தை பிறந்த சமயத்தில லோ சுகருக்கு உடனடி சிகிச்சை கொடுக்காததால இப்படி ஆகியிருக்கு’னு சொல்ல... உறைஞ்சு போயிட்டோம்’’ என்ற வரை, தொடர்ந்த வருடங்கள் நீதிமன்றம், எய்ம்ஸ், எக்மோர் மருத்துவமனை என்று ஏறி, இறங்க வைத்திருக்கிறது.

``10 வயசு ஆகுது... இன்னும் பச்சப்புள்ளதான்!” - போராட்ட தாய் மேரி சுஜா

``எங்க குழந்தையின் நிலைமைக்குக் காரணமான மருத்துவமனை மீது நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தோம். 2018-ல மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திச்சு, எங்க பிள்ளைக்காக கோரிக்கை வெச்சோம். அவங்க டெல்லி, எய்ம்ஸுக்கு அனுப்பினாங்க. அங்க ஒரு நரம்பு டாக்டர், ‘மூளை பாதிக்கப் பட்டிருக்கு, இதை சிகிச்சை மூலம் சரிபண்ண முடியாது, ஆயுள் முழுக்க மருந்து சாப்பிடணும்'னு சொன்னார். மனசு கேக்காம, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் சாரை பார்த்து கோரிக்கை வெச்சோம். சென்னை, எக்மோர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி னாங்க. எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டு, பார்க்க முடியாது, பேச முடியாது, உட்கார முடியாது, நடக்க முடியாது. காது மட்டும்தான் கேட்கும்னு சொன்னாங்க’’ - கலங்கும் கண் களை அழுந்தத் துடைத்துக்கொள்கிறார்.

‘`அப்போ என் பிள்ளைக்கு ஆறு வயசு. இனி எந்த மாயமும் நடந்து என் பிள்ளைக்கு சரி ஆகப் போறதில்லைங்கிற நிதர்சனத்தை ஏத்துக்கிட்டு வாழ ஆரம்பிச்சோம். பையன் 10 வயசுலயும் வீல் சேர்லதான் இருக்கான். பத்து நாளைக்கு ஒருமுறைதான் மோஷன் போவான். அப்போ என் பிள்ளை படுற கஷ்டத்தை பார்த்து எனக்குக் கண்ணீர் வரும். சத்தம் மட்டும்தான் இந்த உலகத்துக்கும் அவனுக்கும் இருக்குற ஒரே தொடர்பு என்பதால, அவன் பக்கத்துல யாராச்சும் இருந்து பேசிட்டே இருக்கணும். இல்லைனா, பாட்டு வெச்சுவிடணும். அவனுக்கு நாலு மாசக் குழந்தைக்குரிய ஐ.க்யூதான் இருக்குனு மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. கைக் குழந்தைபோல தான் பார்த்துக்குறோம். ஃபிட்ஸுக்கு தினமும் காலை, ராத்திரியில மருந்து கொடுக்குறோம். அவன் யூரின் போனா, அவன் தங்கச்சி சில நேரங்கல்ல பேம்பர்ஸ் மாத்திவிடுவா. அவனை நல்லா கவனிச்சுக்குவா.

நான் நர்சிங் முடிச்சிட்டு பி.எட் படிச்சிட்டு இருக்கும்போதே எனக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. டீச்சராகணும்னு ஆசைப் பட்டேன். ஒரு டாக்டரோட கவனக்குறைவு, எங்க நாலு பேரோட வாழ்க்கையையும் மாத்தி எழுதிடுச்சு. இந்த 10 வருஷ புது வாழ்க்கையை 100 சதவிகிதம் மனசார ஏத்துக்கிட்டு வாழ்ந்துட்டு வர்றோம்”

- தூங்கிய பிறகும் தன் பிள்ளைக்குத் தாலாட்டு பாட ஆரம்பிக்கிறார் மேரி சுஜா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism