Published:Updated:

டிரெஸ்ஸிங்குக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது ஏன்? - காரணம் சொல்லும் ஷாரூக்

``நான் டிரெஸ் செய்வதற்கு 5 நிமிடங்கள் போதும். ஆனால், அவருக்கு 5 மணி நேரம் தேவைப்படுகிறது.''

ஷாரூக்கான்- கெளரி கான்
ஷாரூக்கான்- கெளரி கான் ( www.instagram.com/iamsrk )

பாலிவுட் செலிபிரிட்டி தம்பதிகளில், விழா மேடைகளில் ஒருவரையொருவர் செல்லமாகக் கேலி, கிண்டல் செய்துகொள்வதில் பெயர் பெற்றவர்கள் ஷாரூக் கானும் அவர் மனைவி கௌரி கானும். ``விழாக்களுக்குக் கிளம்புவதென்றால் என்னைவிட என் கணவர்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வார். உண்மையாகவே சொல்கிறேன், நான் டிரெஸ் செய்வதற்கு 5 நிமிடங்கள் போதும். ஆனால், அவருக்கு 5 மணி நேரம் தேவைப்படுகிறது. ஒரு பெரிய ரூம் முழுக்க அவருடைய வார்ட்ரோப்கள்தான் இருக்கின்றன'' - தன் கணவர் ஷாரூக் டிரெஸ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பதை, பிரபல நியூஸ் சேனல் ஒன்றின் விருது விழா மேடையிலேயே போட்டுடைத்தார் கெளரி கான்.

ஷாரூக் - கௌரி கான்
ஷாரூக் - கௌரி கான்
www.instagram.com/gaurikhan

மனைவியின் கேலியால் அழகாக வெட்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார், ``நான் விழாக்களுக்குக் கறுப்பு நிற உடைகளை மட்டுமே அணிகிறேன். அதனால், அந்த உடைகளில் ஏதாவது வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன்'' என்று தன் தாமதத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் கணவர் விழாக்களுக்குக் கிளம்புகையில், டிரெஸ் செய்ய வெகு நேரம் எடுத்துக்கொள்கிறார் என்று கெளரி கான் கேலி செய்வது இது முதல் முறை கிடையாது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில், 'மோஸ்ட் ஸ்டைலிஷ் கப்புள்' விருது வாங்குவதற்காக ஷாரூக் தம்பதி மேடையேறியபோதும், ''இங்கே ஸ்டைலிஷ் விருது வாங்கியவரைப்பற்றி ஒரு சின்ன ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். பொதுவாக பார்ட்டிக்குக் கிளம்ப வேண்டுமென்றாலே, அவர் ரெடியாக இரண்டு முதல் மூன்று மணி நேரமாகி விடுகிறது. எனக்கு 20 நிமிடங்கள் போதும்.

ஷாரூக் கான்
ஷாரூக் கான்
www.instagram.com/iamsrk

அதனால், நான் விழாக்களுக்குச் சரியான நேரத்துக்குச் சென்று விடுவேன். ஆனால், இன்றைக்கு நானே டிரெஸ் செய்துகொள்ள 3 மணி நேரம் எடுத்துக்கொண்டேன். அப்படியானால் ஷாரூக் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்'' என்று சொல்லிச் சிரித்தார். மனைவியின் பேச்சை இடைமறித்த ஷாரூக், ``நீ இன்றைக்குப் பேரழகாக இருக்கிறாய்'' என்று கூறி கௌரியை வெட்கப்பட வைத்தார். பொதுவாக நம் வீடுகளில், கணவர்கள்தான் மனைவிகளை `ஒரு புடவை கட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கிறே' என்று கேலி செய்வார்கள். ஷாரூக் கான் வீட்டில் இது தலைகீழ்போல...