வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தோட்டத்திற்கு தண்ணிர் பாய்ச்சிக் கொண்டிருந்த சுஜாவை, கற்பூர பொம்மை ஒன்று .. கை வீசும் தென்றல் ஒன்று என தனது கைபேசியில் வந்த ரிங்டோன் அழைக்கவே ஓடி வந்து எடுத்தாள்..
ஹேப்பி பர்த்டே மா, எப்டியிருக்க, என்ன ஸ்பெஷல் இன்னிக்கு, கோவிலுக்கு போய்ட்டு வந்துட்டியா, அப்பா என்ன வாங்கிக் குடுத்தார் உனக்கு,, பாட்டி இன்னிக்காச்சும் உன்ன எதுவும் சொல்லாம இருந்தாளா, என படபடவென ஆர்த்தி கேள்வி கேட்க, அம்மா தாயே, உன் எல்லாக் கேள்விக்கும் ஒன்னொன்னா பதில் சொல்றேன் இரு என மகளுடன் பேசிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்..
இன்று ஆபிஸிற்கு போவதில்லை என முடிவெடுத்திருந்தாள். கணவனுக்கு டிபன் பாஃக்ஸை கொடுத்து விட்டு, தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கினாள்.

பழைய திரைப்பட பாடல் வந்து கொண்டிருந்தது. நடிகை பத்மினி ஒரு குழந்தையை வைத்து அழகாக பாடிக் கொண்டிருந்தார். அதை ரசிக்கையில், மகள் ஆர்த்தியின் சிறு வயது நினைவுகள் வந்து போனது. எவ்வளவு எளிதாக நாட்கள் ஓடிவிட்டன!!. நேற்று பிறந்தவள் போல் தோன்றியவள் இன்று திருமணமாகி வேறு ஒரு ஊரில் இருந்து கொண்டு தன் வாழ்க்கையை தானே நடத்திக் கொண்டிருக்கிறாள். இவளை இப்படி பாரக்கத்தானே தான் இவ்வளவு நாட்கள் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்தாள்.
ஆனாலும் அந்த ஆனந்தத் தருணத்தை அவளால் அடுத்த நொடி கூட நிலைநிறுத்த முடியவில்லை. ஆர்த்திக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்பது எல்லோருக்கும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. முதல் இரண்டு வருடங்கள் , சின்ன பெண் தானே என எளிதாக தோன்றிய இந்த விஷயம், நாளாக நாளாக, கடினமான ஒன்றாக மாறியது. சம்பந்தி வேறு நச்சரிக்கவே, மகளை அழைத்துப் பேசினாள்.. ஆர்த்தி , நாம வேணா நல்ல டாக்டரா பாக்கலாமா?? .. ஆர்த்தி அடுத்த வாரம் நான் வீட்டுக்கு வர்றேன்ம்மா என்று கூறியவள் இன்னமும் வரவேயில்லை.. சற்றுமுன் பேசியபோது கூட அவள் வருகையைப் பற்றி எதுவும் கூறவில்லை.

இவளுக்குத் தான் மனம் அடித்துக் கொண்டது. அதே நினைவிலேயே அடுத்தடுத்த வேலைகளைத் தொடங்கினாள்.. அடுத்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென ஆர்த்தி வந்து நின்றாள். ஹாலில் உட்கார்ந்திருந்த அவளின் பாட்டி , வாடி கண்ணு ..என்ன சொல்லாம கொள்ளாம வந்து நிக்கற?? மாப்ள எங்க? என்றாள்.
பாட்டி, க்ரிஷ் வேல விஷயமா டெல்லி போய்ட்டார். எனக்கு போர் அடிக்குமே ன்னு இங்க வந்துட்டேன் என்றாள். குரல் கேட்டு சுஜாவும், ராமும் ஓடி வந்தனர். அம்மா அப்பாவை பார்த்து கட்டிக் கொண்ட ஆர்த்தி , பிறகு சரிப்பா.. நீங்க இரண்டு பேரும் ஆபிஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டுடுங்க.. நாம எல்லாரும் ஒரு வாரம் ஊட்டி போய்ட்டு வர்லாம் என்றாள்.

சுஜா ஏதோ வாயெடுக்க, அம்மா நான் சொல்றத நீங்க கேக்கணும்.. இல்லாட்டி நான் திரும்பி ஊருக்குப் போய்டுவேன் என மிரட்டவே , மற்ற மூவரும் அவள் பேச்சிற்குப் பணிந்தனர்.. ஜனவரி மாத ஊட்டி மிக அருமையாக இருந்தது. பச்சை நிறமே பச்சை நிறமே எனப் பாடிக் கொண்டிருந்த ஆர்த்தியை பார்த்த ராம் .. என்னம்மா எதுக்கு திடீர்னு இப்டி டூர் எல்லாம் போட்ருக்க? அதுவும் எல்லாம் உன் செலவுல.. என்ன இதெல்லாம் எனக் கேட்டான். ஏம்ப்பா நான் எதுவுமே செய்யக் கூடாதா, எப்பவும் எல்லாம் நீங்க தான் செய்யனுமா? யாராச்சும் ரூல்ஸ் போட்ருக்காங்களா?? எனக் கேட்டாள் . பேச்சில் கலந்து கொண்ட சுஜா.. சரி இப்ப சொல்லு, இந்த ட்ரிப் எதுக்கு? . சொல்றேம்மா.
நீயும் அப்பாவும் நான் பொறந்ததுல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் என்னை பத்தியே யோசிச்சு யோசிச்சியே வாழ்ந்து கிட்டு இருக்கீங்க.. இப்பவும் எனக்கு குழந்த பொறக்கலயேன்னு கவலப்பட்டுக்கிட்டு இருக்கீங்க. அம்மா என்னடான்னா, டாக்டர் கிட்ட போகலாமான்னு கேக்கறாங்க. நீங்க இரண்டு பேருமே முதல்ல ஒன்னு புரிஞ்சுக்குங்க, லைஃப் ல ஒரு ஸ்டேஜ் க்கு அப்றமாச்சும் உங்களுக்குன்னு வாழ ஆரம்பீங்க. எவ்ளோ நாள் என்ன பத்தியே யோசிச்சு யோசிச்சு வாழந்துட்டே இருக்கப் போறீங்க? ப்ளீஸ் ம்மா, என்னப் பத்தி கவல பட்றத நிறுத்திக்கோ.

உனக்கு ரிடையர்மென்ட வேணும்னா எடுத்துக்கோ. இனிமேவாச்சும் நீயும் அப்பாவும் நிறைய இடத்துக்குப் போங்க.. லைஃப்ல ஃப்ரீ பேர்ட்ஸ் ஆ இருக்கப் பழகுங்க.. நான் வளரந்தாச்சு..என் லைஃப் மேனேஜ் பண்ற பக்குவம் எப்படி ன்னு நானே கத்துக்கறேன். உங்க மாப்ளயும் நல்லவர் தான். என் மாமியார் குழந்தை வேணும் ன்னு ஏதாச்சும் பேசினா பேசட்டும். நானும் அவரும் அத பத்தி கண்டுக்கப் போறதில்ல. குழந்த எப்ப வருதோ வரட்டும். அதுக்காக நீங்க என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறது, ட்ரீட்மென்ட்க்கு செலவு செய்றது இதெல்லாம் தேவையே இல்ல. ... எனக் கூறிவிட்டு காதில் இயர் ஃபோன் மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டாள்..
சுஜாவிற்கும், ராமுவுக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை.. குழந்தை என்று இதுவரை நினைத்திருந்த மகள் ஐந்தே நிமிடங்களில் அறிவுரைகள் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். அவளின் பேச்சில் சில உண்மைகள் இருந்தது. அவள் ஒருத்திக்காகவே இருவரும் இரவு பகல் பார்க்காமல் உழைத்தனர். திடீரென அவளைப் பற்றிக் கவலைப் படாமல் சுயநலமாக வாழ்ந்துவிட முடியுமா அவர்களால்.. ஆனால் இதுபோல் ஒருமுறை கூட குடும்பத்தோடு வெளியுலகம் வந்ததில்லையே அவர்கள்...மனம் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது !! இப்படி அன்றாட இயந்திர வாழ்க்கையை மறந்து வெளியே வந்தால் என நினைத்தனர் அவர்கள் இருவரும்..
கொஞ்சம் நமக்கான வாழ்க்கையையும் இனிவரும் காலங்களில் வாழ்ந்துதான் பார்ப்போமே என இருவரும் நினைக்க ஆரம்பித்தனர்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.