வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பள்ளித் தோழிகளைப் பற்றி எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்டதே என்று தோன்றியது.....ஆஹா கரும்பு தின்ன கூலியா..." நானும் தோழிகளும்" சொல்லும்போதே உள்நாக்கும் தித்திக்கிறது..
தோழிகளைப் பற்றி எத்தனையோ பதிவுகள் போட்டாலும் எப்போது எழுதினாலும் புத்தம் புதிய பதிவாகவே தோன்றுகிறது. காரணம் மகிழ்ச்சி அந்தப் பால்ய கால பள்ளி நினைவுகள் கல்லூரி நினைவுகள் இப்படி ஒவ்வொன்றும் தென்றலாய் மயிலிறகின்ருடலாய் தீண்டிச் செல்கிறது
"வீட்டுப்பாடம் எழுதாமல் வந்து அவசர அவசரமாய் பக்கத்தில் இருக்கும் தோழியைப் பார்த்து எழுதியது..."
"ரிப்பன் கட்ட மறந்து அருகில் இருக்கும் தோழியின் ரிப்பனை பிளேடில் கட் செய்து அவசர அவசரமாய் பின்ன அதைப் பார்த்த..பி.டி மிஸ்(ஜாய்)திட்டியது.."

"மதிய உணவை சாப்பிட. எப்போதடா மணி அடிக்கும் டப்பாவை திறக்கலாம் என்று அவசர அவசரமாய் ஓடியது..." "பள்ளிவாசலில் விற்கும் நெல்லிக்காய் மாங்காய் கீத்துக்கு அல்பமாய் அடித்துக் கொண்டது.'. "அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் 'தங்கவேலு' சார் அவரது பீரியடில் கடைசி பத்து நிமிஷம் சினிமாவைப் பற்றி பேசுவார்.
எப்போதடா அந்த பத்து நிமிஷம் வரும் என்று காத்துக் கொண்டிருந்தது...
வரலாறு பாடம் எடுத்த ஆசிரியை காஞ்சனமாலா அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே நிகழ்வது போல் பாடம் எடுத்தது.. ஒன்றாக சினிமா போனது.. (எத்தனை எத்தனை படங்கள் செல்வி, பந்தம் , மரகதவீணை பூவுக்குள் பூகம்பம், பூக்களைப் பறிக்காதீர்கள், புதுக்கவிதை,மை டியர் குட்டிச்சாத்தான் மைதிலி என்னை காதலி.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அனுமார் வால் போல் அது நீளும்) அதுவும் தலைவர் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்...

இதோ 37 வருடங்கள் ஆனாலும் (வருடங்கள் தான் உருண்டு ஓடுகிறது) நாங்கள் இன்னமும் அதே ப்ளஸ் டூ தோழிகள்தான். எப்போ நேரம் கிடைத்து பேசினாலும் அதே அலப்பறைகள் தான் இப்பவும். அப்ப.. கடிதங்கள் . இப்ப அலைபேசி. அதுதான் வித்தியாசம்.
+2 ஒரே டெஸ்க் 5 பேர். ஒருத்தி மட்டும் எங்களுக்கு அருகில் கரும்பலகையை பார்த்தவாறு. (அதாவது வகுப்பறையின் நேரே)
அவள் தான் "மகா" என்கிற மகாலட்சுமி பெயருக்கேற்றார் போல் அழகானவள். வார்த்தைகளை நிதானமாக அளந்து பேசுபவள். அறிவுரைகளை அள்ளித் தெளிப்பவள். (தானும் அந்த அறிவுரைகளை பின்பற்றுபவள்)
"வந்தால் மகாலட்சுமியே.." என்ற பாடல் அவளுக்கு மிகப் பொருத்தம்.
அடுத்தது சைடு டெஸ்க்..
இடது பக்கத்தில் எஸ் கே என்கிற எஸ் கே சாந்தி. கைப்பந்து வீராங்கனை. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை. வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாக பேசுபவள்.
பல நேரங்களில் அமைதியாகவே இருப்பாள்.
" அமைதிக்கு பெயர் தான் சாந்தி" என்ற பாடல் இவளுக்காகத்தான் எழுதி இருப்பாரோ டி ஆர்.
அடுத்தது ஜெய் என்கிற ஜெயலட்சுமி.. குறும்புத்தனமும், சுட்டித்தனமும் கொண்டவள். மிகவும் அழகு. வாயிலிருந்துவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மற்றவர்களை சிரிக்க வைப்பதாகவே இருக்கும். எதையும் லேசாக எடுத்துக் கொள்பவள். (இப்பவும் அப்படியேதான் இருக்கிறாள்) இனிப்புகளின் காதலி! சர்வதேச உணவுகளையும் அருமையாக சமைப்பவள்.
"சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.. பாடலை இவளுக்கு டெடிகேட் செய்யலாம்.

அடுத்தது கிரேஸ் என்கிற கிரேஸ் ராஜகுமாரி.. பெயருக்கேற்றார் போல் ராஜகுமாரி தான். வாயைத் திறந்தாலே கிண்டல் , நக்கல் , நையாண்டி.. ரங்கராட்டினமாய் சூழலும் . சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்ப்பவள். பார்த்திபன் பாதி சிவா மீதி கலந்து செய்த கலவை அவள். அவள் கட்டி வரும் தாவணி காலையில் எப்படி இருந்ததோ அப்படியே மாலை வரை இருக்கும் இது அவளின் ஸ்பெஷாலிட்டி!
இளவயது (குறிப்பாக 70 ஸ்) எஸ்பிபி குரலின் காதலி! இவளுக்கு ஒரு பாடலை மட்டும் குறிப்பிட முடியாது எல்லாப் பாடல்களும்... இவளுக்கு மிகவும் பொருந்தும்.
அடுத்தது லலி என்கிற லலிதா. மிகவும் மென்மையானவள். சத்தமாக பேசக்கூட தெரியாது. பல நேரங்களில் மௌனத்தை பேச விடுவாள்."மலரே மௌனமா" என்று சத்தம்போட்டு இவளைப்பார்த்து பாடலாம்.அனைவரையும் அரவணைத்து செல்வதில் இவள் பேரரசி. பாவாடை சட்டையில் பாந்தமாய்... ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்டவள். எங்கள் குரூப்பில் இவள் தான் ஜானகி / சுசீலா/ வாணி ஜெயராம் குறிப்பாக "மேகமே மேகமே"என்ற பாடலை இவள் பாட மேகக் கூட்டங்கள் கண்ணீர் சிந்தி ஆசீர்வதிக்கும் அவ்வளவு அழகான குரல் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தனித்தனி சுவைகளில்...

பள்ளி பருவத்தில் எத்தனையோ கிண்டல்கள் கேலிகள்.. அவை அனைத்தும் இன்றளவும் தொடர்கின்றன என்றால் நாங்கள் அனைவரும் நட்பின் மீது கொண்டிருக்கும் மரியாதையை காட்டுகிறது என்றே சொல்லலாம். ஆண்கள் என்றால் தான் நட்பு என்று சொல்லும் பலருக்கும் நாங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்கிறோம் பெண்களாகிய நாங்களும் 35 வருடங்களை கடந்தும் இன்றும் நல்ல தோழிகளாய்.. மகிழ்வையும் வருத்தங்களையும் (சமமாக) பகிர்ந்து கொண்டு... கிண்டல் செய்து கொண்டு... கவலைகளைப் போக்கும் மாமருந்தாக ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறோம். வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் போராடி வாழ்க்கையை எதிர்நீச்சலுடனும், மகிழ்வுடனும்கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதோ 36 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் மார்ச் 19 அன்று சந்திப்பதாக இருக்கிறோம். (ரியூனியன்)
எங்கள் அலப்பறைகள் தொடரும்....! அதற்கு என்றுமே முற்றுப்புள்ளி இல்லை.
இந்தப்பதிவை தோழிகள் அனைவருக்கும்' பெண்கள் தின பரிசாக 'கொடுக்கிறேன்.
பி.கு(போன வருடம் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை இத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த பதிவில் நிச்சயம் புத்தம்புதிதாய் படங்களை ரிலீஸ் செய்கிறேன்.. அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ஆறு பேரில் ஒருத்தியான
-ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.