Published:Updated:

இதோ இருக்கு `வானத்தைப் போல' குடும்பத்து வீடு! - நாச்சியார் கூட்டுக் குடும்பக் கதை #RelationshipGoals

தினமும் 25 பேர்களுக்கு சாப்பாடு. ஒரே வரவுசெலவு, டி.வி, போன் இருந்தாலும் தினமும் நடுஹாலில் கூட்டமாக அமர்ந்துகொண்டு கதைபேசி, பாட்டுபாடி, அரட்டை அடித்து லயிப்பது என இவர்கள் வாழும் கலகல வாழ்க்கையில், சொர்க்கம் இருக்கிறது.

Naachiyar Family
Naachiyar Family ( நா.ராஜமுருகன் )

வயதான பெற்றோரை பாரமெனக் கருதி, முதியோர் இல்லத்தில் சேர்ப்பது; உற்றார் உறவினர்களைத் துச்சமாக நினைத்து விலக்கிவைப்பது என 'உறவுகள்' என்னும் கன்னியில் இருந்து அறுபட்ட நூலாக நம்மில் பலர் ஆகிவிட்டோம். உச்சபட்ச கொடுமையாக, மனைவி-குழந்தையோடு சேர்ந்து வாழ்வதையே இப்போது 'கூட்டுக்குடும்பம்' என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம். இந்த சூழலில், 15 பேர் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக, ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்றால், அது ஆச்சர்ய செய்திதானே?!

Naachiyar Residence
Naachiyar Residence
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம் குளித்தலை பக்கமுள்ள தண்ணீர்ப்பள்ளியைச் சேர்ந்த 95 வயது நாச்சியாள், மகன்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேத்தி என்று 14 பேரோடு ஒரே வீட்டில் வாழ்ந்துவருகிறார். தினமும் 25 பேர்களுக்கு சாப்பாடு, ஒரே வரவுசெலவு, டி.வி, போன் இருந்தாலும் தினமும் நடுஹாலில் கூட்டமாக அமர்ந்துகொண்டு கதைபேசி, பாட்டுப்பாடி, அரட்டை அடித்து லயிப்பது என்று இவர்கள் வாழும் கலகல வாழ்க்கை, ஒரு சொர்க்கம்!

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, நாம் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, மொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து நம்மை வரவேற்று நெகிழவைத்தார்கள். "வாங்க தம்பி. இவ்வளவு வேகாத வெயில்ல எங்களைப் பார்க்க வந்தீங்களா? வெயில் தாழ்ந்து வந்திருக்கிருக்கலாமில்ல" என்று நாச்சியாள் பாட்டி நம்மை கரிசனத்தோடு விசாரித்தார்.

Nachiyar Family Next Generation
Nachiyar Family Next Generation
நா.ராஜமுருகன்

தண்ணீர், மோர், காபி என்று ஆளாளுக்கு உபசரித்து, அசரடிக்கும் அன்பில் நம்மை திக்குமுக்காட வைத்தார்கள்.

"எப்படி நடக்கிறது இந்த கூட்டுக்குடும்ப அதிசயம்?" என்றபடி, நாச்சியாரின் இரண்டாவது மகன் தங்கராஜிடம் கேட்டோம்.

"எங்க பூர்வீக தொழில் நெசவுத்தறி. எங்கப்பா பேரு நாராயணசாமி. அம்மா நாச்சியாள். அவங்களுக்கு என்னையும் சேர்த்து மொத்தம் அஞ்சு ஆண் பிள்ளைங்க, நாலு பெண் பிள்ளைங்கன்னு மொத்தம் ஒன்பது பிள்ளைங்க. அப்பா 1997-ல் தவறிட்டார். அவர் காலத்திலேயே, 'எனக்குப் பிறகும் எல்லோரும் ஒத்துமையா இருக்கணும். அப்பதான் என் ஆத்மா சாந்திய டையும்'னு அடிக்கடி சொல்வார். இருந்தாலும் ஊர்லேயே அஞ்சு மகன்களுக்கும் அஞ்சு வீடுகளைக் கட்டி வச்சுட்டு போனார்.

Thangaraj (Naachiyar's Son)
Thangaraj (Naachiyar's Son)
நா.ராஜமுருகன்

வியாபார நிமித்தமா தம்பி தியாகராஜன் கரூர்ல இருக்கான். அண்ணன் வெங்கடாசலம் பக்கத்து தெருவுல இருக்கிறார். இன்னொரு தம்பி ராஜாராமனும் பக்கத்து தெருவுல இருக்கிறார். நானும் தம்பி தியாகராஜனும் எங்க பூர்வீக வீட்டுல இருக்கிறோம். நான், மனைவி வசந்தா, மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், அவங்க மனைவி இந்திராணி, நிர்மலா, அவங்க பிள்ளைங்க மதன், கவின், லட்சிதன்னு 9 பேர் இருக்கிறோம். அதேபோல், தியாகராஜன் குடும்பத்துல, தியாகராஜன், அவனோட மனைவி ஷோபா, அவங்களோட பையன் தினேஷ்குமார்னு மூணுபேர் வசிக்கிறாங்க. எங்களோடதான் எங்கம்மா நாச்சியாரும் இருக்காங்க.

Vikatan
தவிர, சமீபத்தில் தவறிய எங்க அக்கா தனலட்சுமியோட கணவர் லட்சுமணனும் எங்ககூடதான் இருக்கிறார். ஆக, 15 பேர் ஒரே வீட்டுல கூட்டுக்குடும்பமா வாழுறோம். ஒரே வரவுசெலவு, ஒரே சமையல், ஒரே டி.வி-ன்னு ஒத்துமையா வாழுறோம். அதேபோல், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களை மத்த அண்ணன்கள், அக்காக்கள் குடும்பமும் சேர்ந்து, இந்த வீட்டுலதான் கொண்டாடுவோம். அப்போ, 60பேருக்கு மேல கூடுவாங்க. வீடே ஜேஜேனு கூட்டமா இருக்கும்.
தங்கராஜ்
Women of Naachiyar Residence
Women of Naachiyar Residence
நா.ராஜமுருகன்

எங்கம்மா, அப்போ குழந்தையாயிருவாங்க. எல்லாரையும் தன்னைச் சுத்தி உட்காரவச்சுட்டு, மனசுக்கு புடிச்ச, 'மலர்ந்தும் மலராத பாதிமலர்போல'னு 'பாசமலர்'ல வர்ற பாட்டை ராகம்போட்டு பாடுவாங்க. நாங்க, 'இது என்ன கவிதை. நல்லா படிக்கிறீங்க'ன்னு கிண்டல் பண்ணுவோம். இப்படி கேலியும் கிண்டலுமாக வீடே களைகட்டும். அப்போ அம்மா, 'நாம மறுபடியும் பொறப்போமானு தெரியாது. ஆனா, கிடைச்ச இந்த ஒரு வாழ்க்கையையும் ஒற்றுமையா வாழணும். என் காலத்துக்குப் பிறகும் நீங்க ஒத்துமையா இருக்கணும்'னு சொல்வாங்க. எல்லாரும் என் பேச்சை தட்ட மாட்டாங்க. நாங்க யாரும் எங்கம்மா கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டோம். இதுதான் எங்க கூட்டுக்குடும்பம் இப்போதும் தொடரும் ரகசியம்!" என்றார்.

எங்க வீட்டுல டி.வி இருக்கு. ஆனால், அதை அதிகம் பார்க்க மாட்டோம். எல்லார் கையிலும் செல்போன் இருக்கு. ஆனா, அதை பேசுறதுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம். மத்தபடி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மொத்தக் குடும்பமும் ஹால்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம்.
நாச்சியார்
Naachiyar
Naachiyar
நா.ராஜமுருகன்

அடுத்து பேசிய நாச்சியார்,

"எங்களோட ஒன்பது பிள்ளைகளையும் சின்ன வயசில் இருந்தே பக்தியோடும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாகவும் வளர்த்தோம். அதோட, கூட்டுக்குடும்பத்தோட அருமையை கிளிப்பிள்ளைகளுக்கு சொல்றாப்புல சொல்லிச்சொல்லி வளர்த்தோம். அதோட பலனை இப்போதும் அனுபவிக்கிறேன். என் மூத்த மகன் வெங்கடாசலத்துக்கு இப்போ 75 வயசு. ஆனா, என் பேச்சை அவன் ஒருதடவைகூட மீறுனதில்லை. தங்கராஜ் உள்ளிட்ட மத்த பசங்களும் அப்படித்தான். அதேபோல், எங்க வீட்டுல டி.வி இருக்கு. ஆனால், அதை அதிகம் பார்க்க மாட்டோம். எல்லார் கையிலும் செல்போன் இருக்கு. ஆனா, அதை பேசுறதுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்.

மத்தபடி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மொத்தக் குடும்பமும் ஹால்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். நான் பேரன், பேத்திகள், மகள் வழியில் கொள்ளுப்பேத்திகள் வரை பார்த்தாச்சு. பேரன், பேத்திகள், கொள்ளுப்பேத்திகளை அமர வச்சு கதைகள் சொல்லுவேன். அதுக்காகவே விடுமுறை நாள்கள்ல எல்லா பசங்களும், 'பாட்டியைப் பார்க்க போறேன்'னு இங்க வந்துருவாங்க. கூட்டுக்குடும்பமா வசிச்சா, குடும்பச் செலவுகள் குறையும்; உறவுகள் பலப்படும். இப்போ, சிலர் அற்ப காரணத்துக்கெல்லாம் விவாகரத்து வரை போறாங்க. குடும்ப மானமும் முச்சந்தியில வந்து நிக்குது. கூட்டுக்குடும்பமா வாழ்ந்தா, பெரிய பிரச்னை வந்தாகூட, அதை பேசி தீர்த்து சுமுகமாக்கிடலாம். அதை என் பிள்ளைகள் தொடங்கி என் கொள்ளுப்பேத்திகள் வரை உணர்த்தியாச்சு. இனி நான் நிம்மதியா போய் சேருவேன்" என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.

Indrani (Senthil Kumar's Wife)
Indrani (Senthil Kumar's Wife)
நா.ராஜமுருகன்

தங்கராஜின் மூத்த மருமகள் இந்திராணி நம்மிடம்,

"வீட்டுல ஒரே சமையல்தான். ஆனால், அதுக்காக எல்லாரும் சேர்ந்து சமைப்போம். நாச்சியாள் பாட்டி கீரை ஆய்ஞ்சு கொடுப்பாங்க. எங்க வீட்டுல 15 பேர் இருந்தாலும், தினமும் மூணுவேளையும் 25 பேர்களுக்கு கொள்ளுறாப்புல சமைப்போம். ஏன்னா, தினமும் விருந்தாளி வருவாங்க. அவங்களை சாப்புட வச்சு அனுப்பதான் அப்படி சமைப்போம். அதேபோல், விசேஷ நாள்களில் திருச்சிக்கு ஜவுளி எடுக்கப் போவோம்.

மொத்த குடும்பமும் ரெண்டு மூணு வாகனங்கள்ல போவோம். கூட்டம் இல்லாத கடையையும் கூட்டமாக்கிருவோம். காலையில் ஏழு மணிக்கு கிளம்பினா, ஜவுளி எடுத்து முடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்ப இரவு 11 மணியாயிரும். அந்த ஒருநாளும் திருவிழாபோல அவ்வளவு ஆனந்தமா இருக்கும். அந்த ஆனந்த உணர்வை வெறும் வார்த்தைகளில் உணர்த்திவிட முடியாது" என்றார்.

Suresh Kumar, Nirmala
Suresh Kumar, Nirmala
நா.ராஜமுருகன்

அடுத்து பேசிய, தங்கராஜின் இரண்டாவது மகனான சுரேஷ்குமாரும் அவரின் மனைவி நிர்மலாவும்,

"நாங்க ஒத்துமையா இருக்கிறதைப் பார்த்து இந்த கிராமமே வியக்கும். 'எங்க குடும்பமும் ஒருகாலத்துல இப்படிதான் ஒத்துமையா இருந்துச்சு. ஆனா, இப்போ... ஏக்கப்பெருமூச்சுவிடுவாங்க.

பலர், 'எப்படி கூட்டுக்குடும்பமா வாழுறது?'னு டிப்ஸ் கேட்பாங்க. 'உறவுகளை அரவணைச்சு, அவங்ககிட்ட தித்திப்பா பேசுறதுதான் அந்த டிப்ஸ். மத்தவங்ககிட்ட அனுசரிச்சுப்போவணும்'னு சொல்வோம்.
சுரேஷ்குமார்
குடும்ப நிம்மதியை அதிகரிக்கும் ஃபைனான்ஷியல் பிளானிங்!

எங்க குடும்பம் மொத்தமா வெளியில் கிளம்பினா, 'வானத்தைப்போல குடும்பம் வருதுடா'னு எல்லாரும் சொல்வாங்க. அதைக் கேட்க அவ்வளவு அலாதியாக இருக்கும். இந்த கூட்டுக்குடும்ப கலாசாராத்துக்கு பழையபடி எல்லாரும் மாறணும். எங்க பிள்ளைங்களையும் கூட்டுக்குடும்பத்தின் பெருமையை, அவசியத்தை உணர்த்தியே வளர்க்கிறோம். கூட்டுக்குடும்பமாக வாழுங்க சார், லைஃப் நல்லா இருக்கும்" என்று முடிக்கிறார்.

நாச்சியார் வீட்டில் ஆனந்தம் ஆர்ப்பரிக்கிறது.