ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்கு நாமே! - இனிப்பைவிட இனிமையான விஷயங்கள்...

நமக்கு நாமே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்கு நாமே

விருந்து வைபவங்களில் முடிந்தவரை ஒன்றாகவே அமர்ந்து உணவு சாப்பிடு வோம். சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளையும் நினைவூட்டிக் கொள்வோம்.

‘இளையவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் வாழ வேண்டும்’ என்பது முதியவர்கள் பலரின் எண்ணம். அப்படி, உணவு, மாத்திரை, பயணம் உட்பட அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களைவிட அதிக அக்கறையுடன் உங்களை நீங்களே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்காகக் கடைப்பிடிக்கும் சிறப்பான விஷயங்கள் பற்றி பகிரலாம். நீங்கள் எழுதும் சிறந்த விஷயங்களுக்கு பரிசு உண்டு என்று அறிவித்திருந்தோம். அவற்றில் ரூ.300 பரிசு பெறும் வாசகியின் பகிர்வு...

எங்களுக்குத் திருமணமாகி 43 ஆண்டுகள் ஆகின்றன. பிள்ளைகள் இருந்தாலும் எங்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இளம் வயதிலேயே முதுமைக்குத் திட்டமிட்டதால் எளிய வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டோம்.

வெளியூர் பயணங்களில் எளிமையான வீட்டு உணவையே எடுத்துச் செல்கிறோம். பயணங்களில் லக்கேஜ் நிறைய சுமப்பதில்லை. ஊருக்குச் செல்ல வேண்டுமெனில் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான பொருள்களுக்கு கண்டிப்பாக ஒரு லிஸ்ட் முதலிலேயே எடுத்து விடுவோம். கிளம்பும் முன் அதை செக் செய்து விடுவோம்.

ஆகாத உணவுகளை அறவே தவிர்க்கிறோம். உதாரணத்துக்கு, என் கணவருக்கு 40 வயதுக்கு முன்பே பரம்பரை நீரிழிவு ஆரம்பித்துவிட்டது. காலை எழுந்தவுடன் அவரிடம், ‘இனிப்பை விட இனிமையான விஷயங்கள் எத்தனையோ வாழ்வில் உள்ளனவே அவற்றை அனுபவிப் போம்’ என்று சொல்வேன்.

நமக்கு நாமே! - இனிப்பைவிட இனிமையான விஷயங்கள்...

விருந்து வைபவங்களில் முடிந்தவரை ஒன்றாகவே அமர்ந்து உணவு சாப்பிடு வோம். சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளையும் நினைவூட்டிக் கொள்வோம்.

நகைகள் அணி வதில்லை. எனவே, பகலிலும் துணை தேடும் அவசியமும் இல்லை. வீட்டு வேலைகளை இருவரும் சமமாகப் பகிர்ந்துகொள்வதால் சிரமத்தையும் களைப்பையும் குறைத்துக்கொள்கிறோம்.

பிள்ளைகளின் சம்பாத்தியத்துக்குத் தகுந்த மாதிரி செலவினங்களை அன்றே அதிகப் படுத்திக்கொள்ளாததால் ரிட்டையர் ஆன பிறகும் எங்களால் அவர்களுக்கு முடிந்த எளிய பரிசுப் பொருள்களை அளித்து மகிழ முடிகிறது.

எல்லாவற்றையும்விட முதுமையைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. உடல் மாற்றங்களையும் மூப்பு தரும் சில உடல் தொந்தரவுகளையும் தாத்தா பாட்டி, அப்பா அம்மா எல்லாம் இப்படிதானே இருந்தார்கள் என்று இயல்பாக ஏற்றுக்கொள்கிறோம்.

அனைத்துக்கும் மேலாக மருத்துவர் ஆலோசனையின் பேரில் வாக்கிங் ஸ்டிக் போன்ற உபகரணங்கள் பயன்படுத்துவதிலும் சாலைகளைக் கடக்க வேண்டியிருந்தால் மற்றவர்களின் உதவி கேட்டுப் பெறுவதிலும் நாங்கள் தயங்குவதே இல்லை.

மொத்தத்தில் வயதாவதை வாழ்க்கையின் ஓர் அழகிய மாற்ற மாகவே உணர்கிறோம்.

- மீனாக்ஷி மோஹன், ஹைதராபாத்