Published:Updated:

`எதையோ தொலைத்த மாதிரி இருக்கு; அருகிலேயே இரு!’- தங்கைக்கு நாஞ்சில் சம்பத்தின் உருக்கமான கடிதம்!

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

"அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தால் என் கண்ணுக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. விடிவு காலம் வருவதற்கு முன்னால் முடிவு காலம் வந்துவிடும் போல் தெரிகிறது."

ஆரூயிர்த் தங்கை லீலாவுக்கு அன்புடன் அண்ணன் சம்பத் எழுதுவது:

நலம் தான்! நாடுவதும் அதைத் தான்!

உனக்கும் அத்தானுக்கும் மாறி மாறித் தொடர்பு கொண்டும் உங்கள் இருவரிடமும் பேச முடியவில்லை. உன்னைத் தொடர்பு கொண்டு உன்னிடமும் மகன் நிரஞ்சனிடமும் கொஞ்சம் நேரம் அளவளாவி விட்டால் ஒரு வாரம் உற்சாகம் என்னில் உறைந்து போகாமல் இருக்கும். அலைப்பேசி பயன்பாட்டிற்கு வந்ததற்குப் பிறகு தொடர்பு கொள்வது தொட்டு வரும் தூரத்தில் ஆனால் உன்னைத் தொடர்பு கொள்ளும் போது ஒருக்காலும் நீ கிடைப்பதில்லை. மிஸ்டு காலைத் தேடுகிற பழக்கமும் உனக்கு இல்லை. எத்தனை முறை சொல்லியும் நீ திருந்துவது மாதிரி தெரியவில்லை.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

எனக்கு வருகிற போனில் அவசியமானதைப் பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். நானாகத் தொடர்பு கொள்வது என்பது உன்னிடத்திலும், மகள் மதிவதனியிடத்திலும் மகன் சரத்திடமும்தான். வாரம் ஒருமுறை நிரஞ்சனிடம் பேசாவிட்டால் அந்த வாரம் எதையோ தொலைத்தது மாதிரி எதையோ பறி கொடுத்தது மாதிரி பரிதவித்த நிலையில் பொழுதைக் கடத்த வேண்டியது வரும். அதைக் கடந்து செல்லும் போது வலிக்கத்தான் செய்கிறது. இனியாவது இதைப் புரிந்து கொண்டால் சரி. இப்போது இம்மடல் எழுதுவதற்குக் காரணம் இன்று (ஆகஸ்ட் 15) ஆஸ்திரேலியா போகிறேன். ஆஸ்திரேலியா கலை இலக்கிய பண்பாட்டுக் கழகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முத்தமிழ் விழாவில் இயல்தமிழ் குறித்து உரையாற்றப்போகிறேன். இசைத்தமிழ் குறித்து தமிழிசை தடம் பதித்த மம்மது அவர்களும் ஓவியத் தமிழ் குறித்து ஓவியர் மருது அவர்களும் என்னோடு சேர்ந்து உரையாற்ற இருக்கிறார்கள்.

ஏதோ மணக்காவிளையில் பிறந்து யாராலும் வெல்ல முடியாத சொற்பொழிவாளன் என்ற தகுதியை இடையிறாத முயற்சியில் எட்டியதற்குப் பிறகு பல நாடுகளுக்குச் செல்லுகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். சிங்கப்பூர், குவைத், அபுதாபி, பஹ்ரைன், துபாய், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளுக்கு இதுவரை போய் வந்துட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு இப்போதுதான் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. எனது தகுதிக்கு இது பெரிய அங்கீகாரம்தான் குளிர் தூங்கும் ஆஸ்திரேலியாவின் குளிரைத் தாங்கிக் கொள்வேனோ? தெரியவில்லை. அதற்கான ஸ்வெட்டர்களை எல்லாம் சென்னை சென்றதற்குப் பிறகு இன்றுதான் வாங்கவேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன். ஆகஸ்ட் 15 இரவில்தான் பயணம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்றிறங்கி விமானம் மாற வேண்டும். இடதுகால் வலி இன்னும் என்னை விட்டு விலகவில்லை. தொடர்ந்து மேற்கொண்டு வரும் உடற்பயிற்சியால் என்னைத் தக்க வைத்துக் கொள்கிறேன்.

மணக்காவிளை
மணக்காவிளை

கடந்த 10 ஆம் தேதி காரைக்குடி நகரில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் பாவேந்தர் முழக்கம் திங்கள் கூட்டத்தில் ‘இன்னும் இருக்கிறான் பாரதிதாசன்’ என்ற தலைப்பில் உணர்ச்சிக் கோலம்போட்டுவிட்டு அன்றிரவு சாத்தரசன்பட்டி பனிமய அன்னை தேவாலயத் திருவிழாவில் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவது ‘சொத்துபத்துக்களா? சொந்த பந்தங்களா?’ என்ற தலைப்பில் கற்றறிந்த பேராசிரியர்கள் ஆறு பேர் வாதிட்டார்கள். தீர்ப்பு வழங்கும் போது நடுவராக இருந்த நான் 'சொந்த பந்தங்களே!' என்று தீர்ப்பு வழங்கினேன். அப்போது உன்னைத் தான் நான் நினைத்துக் கொண்டேன்.

ஐந்து அண்ணன்மார்களோடு பிறந்த உனக்கு எங்கள் அருகில் இருக்க கொடுத்து வைக்கவில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து நீ ஊருக்கு வர வேண்டுமென்றால் அதற்கு நீ தனியாகத் திட்டமிட வேண்டும். நகைக்கடையே கதி என்று இருக்கிற அத்தானுக்கு அது பற்றி எந்தக் கவலையும் இல்லை. அம்மா கண்ணை மூடுகிற கடைசி நிமிடம் வரை பிள்ளையைத் தூரத்தில் கொடுத்திட்டமே என்று புலம்புவாள். நீ போய் லீலா வீட்டுல 2 நாள் இருந்துட்டு வாயேன்னு சொன்னால் சம்பந்தி வீட்டில போய் எல்லாம் நிக்கப்படாது என்று சொல்லியே சாகும் வரை உனது வீட்டில் வாசம் செய்யாமலே அம்மா போய்ச் சேர்ந்து விட்டாள். அப்பாவிற்கு முன்பு அம்மா சேர்ந்ததற்குக் காரணம் உன்னைக் குறித்த கவலைதான். அத்தையோடு இருக்க வேண்டும். அத்தையைக் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிற எங்கள் பிள்ளைகளுக்கு உனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

குடும்பத்துடன் நாஞ்சில் சம்பத்
குடும்பத்துடன் நாஞ்சில் சம்பத்

ஒரே தங்கையாக கடைசியாகப் பிறந்த உன்னை இனியாவது ஊரில் குடியமர்த்தத் திட்டமிட்டு இருக்கிறேன். எனது முடிவை அத்தான் ஒத்துக் கொள்ளமாட்டார். உன் ஒரே மகன் நிரஞ்சனுக்கு இங்கே வருவது என்றால் அவன் அடைகிற ஆனந்தத்திற்கு எல்லையில்லை. அவனுக்கு இங்கே உள்ள மீனும் பலகாரமும் என்றால் அலாதிப் பிரியம். நிரஞ்சன் பற்றிக்கொள்வதற்கு அங்கே கொம்பும் இல்லை அவனைப் பற்றி கவலைப்படவும் அங்கே யாரும் இல்லை. நீயும் சர்க்கரை நோயால் சங்கடப்படுகிறாய் உடற் பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும்தான் சர்க்கரை நோயை மட்டுப்படுத்தும். அதை உரிய நேரத்தில் செய்வதற்கு அங்கே உனக்கு உகந்த சூழல் இல்லை. இங்கே உனக்கு எள் என்றால் எண்ணெய் கொண்டு வரவும் தேனென்றால் தித்திப்பு கொண்டு வரவும் மலர் என்றால் மாலை கொண்டு வரவும் ஐந்து அண்ணன்களும் ஐந்து அண்ணிகளும் உனது மருமக்களும் தயாராக இருக்கிறார்கள்.

அத்தானை வழிக்குக் கொண்டு வரவேண்டியது உன் பொறுப்பு. அத்தானுடைய உடல் நிலையும் சொல்லும் படியாக இல்லை. எல்லாம் இருந்தும் உன்னை ஒரு வெறுமை சூழ்ந்திருப்பது எனக்கு எப்போதும் வேதனையைத் தந்து கொண்டு இருக்கிறது. மகன் சரத் பெயரில் என் வீட்டருகில் இருக்கிற ஆறுசென்ட் காலி மனையில் ஒரு வீடு உனக்காகக் கட்டி உன்னை இங்கே அழைத்து வரலாம் என்று எண்ணுகிறேன். அத்தான் நிரந்தரமாக வராவிட்டாலும் வாரம் ஒருமுறை அவர் வந்து போகட்டும். மிகுந்த யோசனைக்குப் பிறகே சொல்லுகிறேன். யோசித்துப் பார்.

கடிதம்
கடிதம்

கடந்த 8 ஆம் தேதி கருணாநிதி அண்ணன் பைக்கில் மணலிக்கரைக்குச் சென்ற போது யாரோ ஒருவன் குறுக்கே பாய அண்ணன் கீழே விழுந்ததில் நினைவு இழந்துவிட்டான். தம்பி ஸ்டாலினுக்கு யாரோ தகவல் சொல்ல கார்மல் மருத்துவமனையில் சிகிச்சை. முகத்தில் 4 இடங்களில் தையல் போட்டு அண்ணன் வீட்டில் ஓய்வில் இருக்கிறான். ஒருநாள் வந்து அண்ணனைப் பார்த்து விட்டுப் போனால் அவன் மகிழ்ச்சி அடைவான். அந்தச் சாக்கில் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள். குழந்தைப் பேறுக்கு தாய்வீடு சென்ற தம்பி சீதாராமின் மருமகள் ஆணியையும் குழந்தையையும் ஆவணித் திங்களில் அழைத்து வரவேண்டும்.

எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற மகன் M.D. படிக்க ஆசைப்படுகிறான். கொடுமை என்னவென்றால் அதற்கும் நீட் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கிடைக்கும். மதிப்பெண் குறைந்தால் தனியார் மருத்துவக் கல்லூரி தாளார்களைத்தான் ஏந்த வேண்டும். கேட்கும் காசை ஊர் தாலி அறுத்தாவது கொடுக்க வேண்டும். அவனை 5 1/2 வருடம் விடுதியில் விட்டு கட்டணம் செலுத்தி படிக்க வைத்ததில் எனது பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரம் போல் ஆகிவிட்டது. இடத்தை விற்றுவிடலாம் என்றால் மத்திய அரசின் தனியார் காடுகள் எல்லைக்குள் நமது இடம் சிக்கிவிட்டது. உரிமை உள்ள நிலம் உறு பசியைத் தீர்க்கக் கூட உதவாது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தால் என் கண்ணுக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. விடிவு காலம் வருவதற்கு முன்னால் முடிவு காலம் வந்துவிடும் போல் தெரிகிறது.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

அக்டோபர் திங்கள் 27 ஞாயிறன்றுதான் தீபாவளி வருகிறது. மகள் மதிவதனியும் மாப்பிள்ளையும் பேரன்களும் சனிக்கிழமை இங்கே வந்து சேருவது மாதிரி அவர்களுக்குத் தொடர் வண்டியில் பயணச்சீட்டு பதிவு செய்து விட்டேன். நீட் தேர்வுக்காக் பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கிற மகன் சரத்தும் சனிக்கிழமை வந்து விடுகிறான். அத்தானும் நீயும் நிரஞ்சனை அழைத்துக் கொண்டு சனிக்கிழமையே வந்துவிடுங்கள். 'நாங்கள் வரும் போது நிரஞ்சன் சித்தப்பா வருவானா?' என்று மாக்ஸிம் கார்க்கி பேசும்போதெல்லாம் கேட்கிறான். நிரஞ்சனும் அந்த ஆசையில்தான் மூழ்கியிருக்கான். ஆஸ்திரேலியா பயணப்படுவதற்கு முன்னால் உன்னைத் தொடர்பு கொள்கிறேன். நிரஞ்சனுக்கு நான் என்ன வாங்கி வர வேண்டும் என்பதை அவனிடம் கேட்டுச் சொல். அரிசிச் சோறை தவிர்த்து விடு. காய்கறி நிறைய எடுத்துக் கொள். காலையில் இல்லாவிட்டாலும் மாலை பொழுதிலாவது நடைப்பயிற்சி மேற்கொள். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று பாரதி சொன்னது போல் ஒவ்வொரு நாளும் பூவாய் மலர்ந்திடு.

இப்படிக்கு

உனக்கு ஒன்று என்றால் துடித்துப் போகிற அண்ணன்.

அடுத்த கட்டுரைக்கு