Published:Updated:

'96' காதலை திரும்பிப் பார்க்கணுமா? - இந்த நாள் உங்களுக்குத்தான் #TextYourExDay

'ஆமாம், நீ நினைச்ச மாதிரியே உன் கல்யாணத்தப்போ நான் அந்தக் கல்யாண மண்டபத்துலதான் இருந்தேன்' என்று அதை நேரில் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம், '96' ராமைப் போல எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. #TextYourExDay

Lovers
Lovers ( Representational image )

உங்களின் முன்னாள் காதலர் அல்லது காதலியிடம் பேச ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? 'அட, நானே அவங்கள மறக்கணும்னு ட்ரை பண்ணிட்டிருக்கேன். நீங்க வேற ஏங்க பழசையெல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு' என்கிறீர்களா? உங்கள் எண்ணமும் சரிதான். ஆனால், சில மனங்கள் இருக்கின்றன. தன் காதல் பிரேக்-அப் ஆன பிறகும் காதலரிடம்/ காதலியிடம் சொல்லாமல் விட்டுப்போன சில வார்த்தைகளை எப்படியாவது அவர்களிடம் சேர்த்துவிட வேண்டுமென்று. ஆனால், அதை எப்படி அவர்களிடம் சேர்ப்பது என்ற வழி தெரியாது. அவர்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்... அடுத்த பாராவில் காத்திருக்கிறது!

#TextYourExDay
#TextYourExDay

நீங்கள் யாரையேனும் காதலித்திருக்கலாம். அந்தக் காதல் ஈடேறாத நிலையிலும், கைவிட்டுப்போன பிறகும், உங்களுக்கே உங்களுக்கான ஓர் அழகான நினைவாக இதயத்தின் ஓர் ஓரத்தில் அது உறங்கிக்கொண்டுதான் இருக்கும். நீங்கள் காதலித்தபோது உங்கள் துணையிடம் சொல்ல நினைத்து முடியாமல்போன ஒன்று, இன்றும்கூட உங்கள் மனத்தில் உறுத்திக்கொண்டிருக்கலாம். 'ஆமாம், நீ நினைச்ச மாதிரியே உன் கல்யாணத்தப்போ நான் அந்தக் கல்யாண மண்டபத்துலதான் இருந்தேன்' என்று அதை நேரில் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம், '96' ராமைப் போல எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

மனத்தில் கனத்துக்கொண்டிருக்கும் வார்த்தைகளை முன்னாள் அன்புக்கு அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டதே, 'Text Your Ex Day'. தான் தொலைத்த காதலனுக்கு/காதலிக்கு, தான் சொல்லாமல்விட்ட அல்லது சொல்ல நினைத்த விஷயங்களை இந்நாளில் பகிர்ந்துகொள்ளலாம். அந்த நாள்... அக்டோபர் 30-ம் தேதியான இன்றுதான்!

Love
Love

இந்த நாள் கொண்டாடப்படுவது நம் நாட்டில் அல்ல, அமெரிக்காவில். அவர்கள், அக்டோபர் 30-ம் தேதியைத் தங்கள் முன்னாள் காதலருக்கு/காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் தினமாகக் (National Text Your Ex Day) கொண்டாடுகிறார்கள். உணர்வுகள் அமெரிக்கர்களுக்கென்ன, இந்தியர்களுக்கென்ன உலகம் முழுவதும் ஒன்றுதானே..!

காதலில் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியும், துயரத்தில் வயிற்றைச் சுழற்றும் பட்டாம்பூச்சியும் ஒன்றே... எப்படி?!

இந்நாளை நீங்களும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, பல நாள்களாக, மாதங்களாக, காலமாகச் சொல்ல நினைத்து முடியாமல் போன விஷயத்தையோ அல்லது உங்கள் தரப்பு நியாயத்தையோ, ஒரு குறுஞ்செய்தியாக உங்கள் Ex-க்கு அனுப்பலாம். அது, உங்கள் Ex-க்கு நீங்கள் சொல்ல மறந்த, மறுத்த Thanks அல்லது Sorry ஆகக்கூட இருக்கலாம். வாழ்த்து, மனக்குமுறல், உங்கள் தரப்பு நியாயங்கள் என எதுவாக இருந்தாலும், அதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இன்றைய தினத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Love
Love

பிரேக்-அப் ஆயிடுச்சு. ஆனா, இன்னமும் அவங்களை மறக்க முடியலை. அவங்களும் அப்படித்தான்னு கேள்விப்பட்டேன். ஆனா, எப்படிப் பேசறதுன்னு தெரியலையே' என்று தவித்துக்கொண்டிருப்பவர்கள், #TextYourExDay என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் வார்த்தைகளைப் பகிருங்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!