`இந்த இரண்டும்தான் கணவனை மனைவியிடம் கை ஓங்க வைக்கிறது!' - குடும்ப வன்முறை குறித்து கோபிநாத்

இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும்.
`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.

Also Read
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 2
இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இரு இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்களின் மார்பகத்தை உற்றுப்பார்க்கிற ஆண்களைப்பற்றியும் பேசியிருந்தோம். இந்த இதழில் `மனைவியை கை ஓங்கும் கணவன்' பற்றிப் பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
அப்படி சக மனுஷியான மனைவியை கை ஓங்கும் கணவனின் உளவியல் என்ன, தற்போது கை ஓங்குவது குறைந்திருக்கிறதா என்பது பற்றி `நீயா நானா' கோபிநாத்திடம் கேட்டோம்.

``மனைவியை அடிப்பது வன்முறை என்பது தெரியாமலே பல தலைமுறைகள் கடந்துவிட்டன. ஆண் என்றாலே உடல் சார்ந்த வீரமும் அதிகாரமும்தான் என்று இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிறது. ஆனால், தனக்கான அதிகாரத்தை ஓர் ஆண் உருவாக்க வேண்டுமென்றால். அவன் ஏதோ ஒரு துறையில் `தி பெஸ்ட்'டாக இருக்க வேண்டும். இது எல்லா ஆணுக்கும் சாத்தியமில்லை. சிலர் குடும்பம், குழந்தை என்று இருந்தாலும் வேலையில்லாமலோ பொறுப்பில்லாமலோ சுற்றிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை சமூகம் தோல்வியின் அடையாளமாகத்தான் பார்க்கிறது. ஒருபக்கம் இயலாமை, இன்னொரு பக்கம் தனக்கான அதிகாரத்தை உருவாக்க முடியாமை, இரண்டும் சேர்ந்துகொள்ள, சொந்த வீட்டுக்குள் தன் அதிகாரத்தைக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். குறிப்பாக, தனக்கு எளிமையான டார்கெட்டான மனைவியை கை ஓங்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் தாழ்வு மனப்பான்மை மிகுந்தவர்களாக இருப்பது தெரியும்.
பெண்களின் வேலைகளைச் சுலபமாக்குகிற கிரைண்டர், மிக்சி, வாஷிங் மெஷின் போன்ற பொருள்களின் மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கிற ஆண்களைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் செய்கிற வீட்டு வேலைகள் எல்லாம் வேலைகளே கிடையாது. `அம்மி போச்சு, ஆட்டுக்கல் போச்சு, அதனால ருசியும் போச்சு' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்குப் பெண்கள் எந்நேரமும் வீட்டு வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். ஆக்கபூர்வமாக அவர்கள் எந்த வேலையும் செய்துவிடக் கூடாது. இப்படிப் பெண்களுடைய உழைப்பின் மீது உதாசீன மனநிலையுடன் இருப்பவர்களும் மனைவியை கை ஓங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.

எந்தவொரு பிரச்னையைப் பற்றிப் பேசினாலும், அது தற்சமயம் எப்படியிருக்கிறது என்பதையும் பேச வேண்டும். இங்கே பல ஆண்கள், அம்மாவை அப்பா அடிப்பதைப் பார்த்து வளர்ந்தவர்கள். அதனால், இந்தக் கால ஆண்களிடம் மனைவியை அடிக்கிற வன்முறை குறைந்திருக்கிறது என்றுதான் சொல்வேன். இன்னொரு முக்கியமான காரணமாகத் தனிக்குடித்தனத்தைச் சொல்வேன். கூட்டுக்குடும்பங்களில் ஓர் ஆணால் இயல்பாக மனைவியுடன் கிச்சனில் நிற்க முடிந்ததில்லை. மனைவியின் எல்லா வேலைகளையும் அருகிலிருந்து பார்க்கிற வாய்ப்பை கணவனுக்குத் தனிக்குடித்தனம்தான் வழங்கியது. விளைவு, ஆணுக்குள் இருக்கிற தாய்மை வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. தனிக்குடித்தனத்திலும் கணவர்கள் கை ஓங்குகிறார்கள்; கூட்டுக்குடும்பங்களில் மனைவியை கை ஓங்குகிற ஆணை தடுப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை.
ஒரு தலைமுறைக்கு முன்னால் பெற்ற குழந்தைகளையே தூக்காத தகப்பன்கள் இங்கே சர்வசாதாரணம். இப்போது, குழந்தையுடன் மனைவியின் ஹேண்ட்பேகையும் தூக்கியபடி ஷாப்பிங் செய்கிற கணவர்கள் அடிக்கடி கண்ணில்படுகிறார்கள். பல கணவர்கள் மனைவியை பியூட்டி பார்லரில் டிராப் செய்வதை நாமெல்லாருமே பார்த்திருப்போம். என் கண்களுக்கு எட்டிய தூரம் வரையில், ஆண் `கை ஓங்குகிற மனநிலையிலிருந்து' மாறியிருக்கிறான்.

ஓர் ஆண் தன் அம்மாவுக்கு மகனாக, மகளுக்கு அப்பாவாக எப்படி நடந்துகொள்கிறானோ அதுதான் அவனுடைய உண்மையான இயல்பு. அம்மா மீது அப்பா கை ஓங்குவதை இங்கே எந்த ஆணும் சகித்துக்கொள்ள மாட்டான். தன் மகள் மீது மருமகன் கை ஓங்குவதை ஆணால் தாங்கிக்கொள்ளவே முடியாது. ஆணுடைய உண்மையான இயல்புக்கு சிம்பிளான ஓர் உதாரணம் சொல்கிறேன். ரொம்ப நேரம் தூங்குகிற மகளை மனைவி கண்டித்தால், `சின்னப்புள்ள அப்படித்தான் இருக்கும்' என்பான். அதே மகள் வேலைக்குச் சென்ற பிறகு `கஷ்டப்பட்டு வேலைபார்க்கிறா. அதான் தூங்குறா' என்பான். `வார இறுதியிலாவது எனக்கு வீட்டு வேலையில் உதவட்டுமே' என மனைவி திட்டினால், `வாரம்பூரா உழைக்கிறா. இன்னிக்கு நல்லா தூங்கட்டுமே' என்று பரிவான். `கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. இப்பவாவது சீக்கிரம் எழுந்திருக்கலாமே' என்றால், `நம்ம கூட இருக்கிறவரைக்கும் அவ சந்தோஷமா இருக்கட்டுமே' என்று வக்காலத்து வாங்குவான்.
இவற்றையெல்லாம் மனைவிக்கு அப்ளை பண்ண மாட்டான் என்பது தனிக்கதை. ஆனால், ஆண் என்கிற மனிதனுடைய இயல்பு இதுதான். ஆணென்றால் ஆளுமை, அதிகாரம், வீரம் என்று நம் குடும்பங்கள் மாற்றி வைத்திருந்தன. இப்போது, பெண் மீது அதிகாரம் செலுத்துவதைவிட அன்பு செலுத்துவதே சரி என்பதை ஆண் உணர ஆரம்பித்திருக்கிறான்.

நான் உங்களுக்கெல்லாம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன். பெண்கள் இப்போது கணவர்களை அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வன்முறையாக அல்ல, செல்லமாக. ஆனால், அந்த செல்லத் தட்டலே கொஞ்சம் வலுவாகத்தான் ஆணின் முதுகில் விழுகிறது. சமீபத்தில் இதுதொடர்பான ஷோ ஒன்றைச் செய்தபோது `இப்படியெல்லாம் நடக்குதா' என்றார்கள். உண்மையில் நடந்துக்கொண்டிருக்கிறது. கடந்த 25 வருடங்களில், கணவனுக்கு உதவியாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பெண், கூடவே ஆண் செய்துவந்த பல வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறாள். அதாவது, ஆணின் பல வேலைகள் பெண் பக்கம் திரும்பிவிட்டன. வேலைகளின் அழுத்தத்தால் பெண் வென்டிலேஷன் இல்லாமல் தவிக்கிறாளோ என்று தோன்றுகிறது. ஆண் மட்டுமே குடும்பத்தை சுமந்துகொண்டிருந்த காலத்தில் அவன் கை ஓங்கிக்கொண்டிருந்தான். இப்போது, ஆணுடைய வேலைகளையும் சேர்த்து செய்துகொண்டிருக்கிற பெண் செல்லமாக, அதே நேரம் வலுவாக `கை ஓங்க' ஆரம்பித்திருக்கிறாள். இதையொரு குறியீடாகவே நான் பார்க்கிறேன். பார்ப்போம் காலம் என்ன செய்கிறது என்று...'' என்கிறார் கோபிநாத்.
இப்படி கை ஓங்கும் கணவர்களுக்கு இருக்கும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் என்ன, இவர்களைக் கையாள்வது எப்படி? - விரிவாக வழிகாட்டுகிறார் மனநல ஆலோசகர். இந்த வார அவள் விகடனில் வெளியாகியிருக்கும் அந்தக் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க