Published:Updated:

` கைகொடுக்கும் நைட் கேர் சென்டர்கள்!' -வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதம்

ஜெனரல் ஷிஃப்ட் வேலைபார்க்கிற அம்மாக்களுக்கு டே கேர் ஒரு வரப்பிரசாதம். நைட் ஷிஃப்ட் வேலைபார்க்கும் அம்மாக்களின் பிள்ளைகளுக்கும் நைட் கேர்!

நைட் கேர்
நைட் கேர்

நமக்கெல்லாம் 'டே கேர்' தெரியும். 'நைட் கேர்' தெரியுமா? கூடிய சீக்கிரம் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் பயன்படுத்தவும் போகிறோம். 

Day Care
Day Care

குடும்பங்களின் மேம்பாட்டுக்காகப் பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள். அதன் தொடர்ச்சியாகக் குழந்தைகளை வளர்க்கிற பொறுப்பு அம்மாவை அல்லது அப்பாவைப் பெற்றவர்களின் கைகளுக்குப்போனது. இந்த வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, டே கேர் கொடுத்தது. ஆனால், அது மாலை 6 அல்லது 6.30 மணி வரைக்கும்தான் கைகொடுக்கும். புகழ்பெற்ற பள்ளிக்கூடங்களின் அருகில் இருக்கின்ற டே கேர் சென்டர்கள் மட்டும் இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும்.

வேலை முடிந்து குழந்தையை டே கேரிலிருந்து பிக்கப்  செய்வதற்காகச் சென்றால், நம் பிள்ளை ஹோம்  வொர்க் முடித்து, டின்னரும் சாப்பிட்டுவிட்டு சொப்பு  வாயில் சின்னக் கொட்டாவியுடன் நமக்காகக் காத்திருக்கும்.  ஸோ, பகலில் வேலைபார்க்கிற அம்மாக்களுக்கு இந்த வகை டே கேர் சென்டர் வரப்பிரசாதம். இதுவே பிபிஓ போன்ற நிறுவனங்களில் நைட் ஷிஃப்ட் வேலைபார்க்கும் அம்மாக்களின் பிள்ளைகளுக்கு... அதற்குத்தான் வந்திருக்கிறது நைட் கேர். 

இந்த வகை நைட் கேர் சென்டர்கள் வாரத்தின் ஏழு நாள்களும் இயங்கும். ஜெனரல் ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட் என வேலைபார்க்கும் அனைத்து அம்மாக்களுக்காகவும் 24 மணி நேரமும் இயங்கிக்  கொண்டிருக்கும். இந்தியாவில் நைட் கேர் சென்டர்களை நடத்தி வருகிற பிரியா கிருஷ்ணன், ஹைதராபாத்தில் தான் முதன்முதலில் நைட் கேர் சென்டர் ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு, மற்ற மெட்ரோபாலிட்டன் சிட்டிகளிலும் நைட் கேர் சென்டர்களுக்கான தேவை இருந்ததால் அங்கும் தன்னுடைய  கிளைகளைத் தொடங்கியிருக்கிறார்.

தற்போது சென்னையிலும் இவருடைய நைட் கேர் சென்டர்ஸ் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. சில கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக நைட் கேர் சென்டர்ஸ் ஆரம்பித்திருக்கின்றன.

டே கேர்
டே கேர்

''குழந்தைகளுக்கான மெத்தென்ற தலையணை, கண்களை உறுத்தாத நைட் லேம்ப்,  அவசரத்துக்கு மெடிக்கல் சென்டர், வாகன வசதி, பெட் டைம் ஸ்டோரிக்கான கதைப்புத்தகங்கள் என அவர்களுடைய வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்குமோ, அத்தனையும் இந்த நைட் கேர் சென்டர்களில் இருக்கும்.

இரவு 9 மணி முதல் காலை 9 மணிவரை, இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை அல்லது இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை நைட் கேர் சென்டர்களில் மூன்று ஷிஃப்ட்டாக குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறோம்'' என்கிறார் பிரியா கிருஷ்ணன்.