Published:Updated:

`நைட் சாட்' காதலர்களுக்கு... ஒரு அலர்ட் நோட்!

நைட் சாட்
நைட் சாட்

காதலில் வேகத்தைவிட விவேகம்தான் சிறந்தது என்பதை உணரவேண்டும். அதற்குச் சிறுவயதிலிருந்து சுயகட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது அவசியம். கட்டுப்பாடான உரையாடல்களும், பகிர்தல்களும் நிச்சயம் பிரச்னையிலிருந்து காப்பாற்றும்.

இன்றைய தலைமுறையினர், காதலில் பல புது கான்சப்ட்களை உருவாக்கி வருகிறார்கள். அதில் ஒன்று, 'எங்களுக்குள்ள ஒளிவு, மறைவே இல்ல' என்று சொல்லி, தன் பார்ட்னருடன் அளவுக்கு அதிகமான வெளிப்படைத்தன்மையுடன் அனைத்தையும் பகிர்ந்துகொள்வது. இதன் அடுத்தகட்டமாக, அந்தரங்கங்களைப் பகிர்வதும் நடக்கிறது. இதனால் ஏற்படும் பாதகங்கள் பல என்பதை, நாள்கள் நகர நகரவே புரிந்துகொள்கிறார்கள். அது பற்றிப் பகிர்ந்துகொள்கிறார், உளவியல் ஆலோசகர் பிருந்தா.

Psychologist Brindha
Psychologist Brindha

முன்பைவிட இந்தக் காலத்துக் காதலர்கள் வெளிப்படையாகப் பேசிக்கொள்வதற்கான காரணம் என்ன?

தற்போதைய காலகட்டத்தில் எதுவுமே சாத்தியம் என்கிற மனப்பான்மை அனைவரிடத்திலும் உள்ளது. இந்த உற்சாகமே அவர்களுக்குப் பல பிரச்னைகளையும் கொடுக்கிறது. மனமுதிர்ச்சி இல்லாத காரணத்தால், தங்கள் காதல், கல்யாணம் வரை நீடிக்குமா என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. அவ்வப்போது தோன்றும் எண்ணங்களைச் செயல்படுத்தவே பெரும்பாலான காதலர்கள் நினைக்கின்றனர். முன்பெல்லாம், காதலர்கள் பேசிக்கொள்வதே இமாலய சாதனையாக இருந்தது. ஆனால், ஸ்மார்ட்போன்களின் வரவால் இப்பொழுது 'தொலைவு' என்பது வார்த்தையில் மட்டும்தான் இருக்கிறது. எனவே, பேசிப் பேசியே காதல் வளர்க்கும் அவர்கள், அதுவரையிலான தங்கள் வாழ்க்கையின் மொத்தத்தையும் தங்கள் இணையிடம் பகிர்ந்துவிடத் துடிக்கிறார்கள்.

Love
Love

பெரும்பாலான காதலர்கள் இரவு நேரங்களில்தான் அதிகமாக உரையாடுகின்றனர். பக்கத்தில் இல்லாதபோதும், கூடவே இருப்பதைப்போன்று நினைத்து கற்பனை கதை பேசுபவர்கள் ஏராளம். இந்த நேரத்தில்தான் பலரும், தங்கள் வாழ்க்கையின் சம்பவங்களைப் பகிர்ந்ததுபோய், அடுத்தகட்டமாக தங்களின் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கின்றனர். இது, காதலிப்பவர்கள் உறவு கொள்வதில் தவறேதும் இல்லை என்கிற எண்ணம்வரை அவர்களை இழுத்துச் செல்கிறது.

காதலர்கள் வெளிப்படையாகப் பேசிக்கொள்வதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

Open talk among lovers
Open talk among lovers

தற்போதுள்ள ஆண், பெண் இருபாலரும் காதலிக்க ஆரம்பிக்கும்போதே 'நாம் ஐடியல் ஜோடியாக இருக்கவேண்டும்' என்கிற எண்ணத்தில், தங்களுக்குள் எந்தவித அந்தரங்க மறைவும் இருக்கக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இது, 'காதல்' என்கிற உணர்வின் வேகத்தில் எடுக்கும் முடிவு. இப்படி இருப்பதனால், பின்னாளில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் ஏதாவது சிறிய விஷயம் செய்தால்கூட பிரச்னை பெரியளவில் ஏற்படும். ஒளிவு மறைவில்லாமல் எல்லாவற்றையும் பகிர்வது பல மோசமான விளைவுகளை உண்டாக்கும். எதை, எப்போது பகிரவேண்டும் என்பதில் அதிக கவனம் தேவை. மேலும், எந்த உறவாக இருந்தாலும் கலந்துரையாடல் மற்றும் பொறுமை மிகவும் அவசியம்.

அந்தரங்கப் பகிர்தல்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

காதலிக்கின்ற காலத்தில், 'கல்யாணம் செய்துக்க போகிறவர்தானே' எனத் தங்களின் எல்லையை மீறி பெண்கள் செய்துவிடுகின்றனர். ஆனால், பிற்காலத்தில் அவர்களால் திருமணம் செய்துகொள்ள முடியாத சூழல் உருவாகும்போது, செய்வதறியாது தவிக்கின்றனர். எப்படியும் வீட்டில் திருமணத்துக்கு அனுமதி வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பலருக்கும், ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கிறது. இவர்களுடைய திருமண நம்பிக்கைக்கு முன் ஜாதி, மதம், சமுதாய நிலை போன்ற கத்திகள் குறுக்கே நிற்பது, காதலிக்கும் காலகட்டத்தில் தெரியாது. அந்தச் சூழ்நிலையை நேருக்கு நேராகச் சந்திக்கும்போதுதான், சிலர் செய்வதறியாது வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

Worried Girl
Worried Girl

ஒரு ஜோடி தொலைபேசியில் பேசுவது, குறுஞ்செய்தி, போட்டோ, வீடியோ என்று பரிமாறிக்கொள்வது இவையெல்லாம் டெக்னாலஜி உலகில் ஒரு பதிவாகத் தங்கிவிடுகிறது. டெக்னாலஜி யுகத்தில், எந்தத் தகவலும் அந்தரங்கம் இல்லை என்ற நிலையில், இந்தப் பதிவுகள் எல்லாம் அவர்கள் எதிர்பார்த்திடாத பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கையாளும் ஆயுதமாக அவற்றை அவரின் துணை பயன்படுத்தவும் நேரலாம். எனவே, ஆண்களைவிட இது பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்றது.

பதின்பருவத்தினருக்கான உங்கள் அட்வைஸ்?

ஆண், பெண் இருவரும் பூப்பெய்தியவுடன், பாலுணர்வு ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இதுதான் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்புக்குக் காரணம். பொதுவாக, மூளையின் முன்பகுதி பகுத்தறிந்து செயல்படுவதற்கு உதவும். இது, டீன் ஏஜ் பருவத்தில் முதுமையடைந்திருக்காது. உணர்வுகளைத் தூண்டிவிடும் பகுதியாக மூளையின் நடுவில் இருக்கும் 'அமிக்டாலா' செயல்படும். இதுதான் காதல் எனும் வார்த்தையையே தெய்வீகமாகப் பார்க்கும் அளவிற்கு டீன் ஏஜினரை உணர்ச்சிவசப்பட வைக்கும். இதனால்தான் இளைஞர்கள் பெரும்பாலும், அறிவுபூர்வமாகச் சிந்திப்பதைவிட உணர்வுபூர்வமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கிறார்கள். 25 வயதுக்கு மேல்தான், இந்த 'அமிக்டாலா' மூளையின் முன்பகுதியோடு இணைந்து பகுத்தறிந்து செயல்பட உதவும். எனவே, அந்த வயதுவரை பிள்ளைகளுக்குப் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

Love Couple
Love Couple

மனமுதிர்ச்சி இல்லாதபோது எடுக்கின்ற தீர்மானம் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். எனவே, காத்திருப்பு இங்கு அவசியம். மேற்கத்திய நாடுகளைப்போன்று நம் நாடும் இருந்தால் பிரச்னை இல்லை. அங்கு 'unwed mother', அதாவது திருமணத்திற்கு முன்பு தாய்மையடைந்தவர்கள் பரவலாக இருக்கின்றனர். அவர்கள் எந்தவித தடைகளும் இன்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வார்கள். ஆனால், நம் நாட்டின் கலாசாரமே வேறு. இங்கு அதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட்டால், கருக்கலைப்பு, ஆரோக்கியப் பிரச்னை, குடும்பமே உடைந்துபோவது என்று வாழ்வே சூன்யமாகிவிடும். தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதும், தற்காலிக உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும்தான் இந்த நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தும். எனவே, பகுத்தறிந்து செயல்படுவது மிகவும் முக்கியம். அதற்கான வயது வரும்வரை காத்திருப்பது அவசியம்.

`நீ அங்கே, நான் இங்கே!’ - பிரிந்திருக்கும் தம்பதிகளுக்கான சிக்கல்கள், தீர்வுகள்!
அடுத்த கட்டுரைக்கு