Published:Updated:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி, ரத்த தான முகாம் - அசத்திய ஒடிசா மணமக்கள்!

`சுயமரியாதைத் திருமணத்தில் சின்ன ட்விஸ்ட்' - ஒடிசா ஜோடியின் ஆஹா கல்யாணம்!

ஒடிசா மணமக்கள்
ஒடிசா மணமக்கள்

ஒடிசாவைச் சேர்ந்த பிப்லப் குமார் - அனிதா ஜோடி, சமீபத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டது. சடங்குகள் ஏதுமின்றி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், இணையர் இருவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்று, தங்களின் இணையேற்பு விழாவை மேற்கொண்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம்
அரசியலமைப்புச் சட்டம்

மேலும், திருமணத்துக்கு வருகை தந்திருந்தவர்களிடமிருந்து 36 யூனிட் ரத்த தானம் பெற்று, தன்னார்வ அமைப்பிடம் அதை ஒப்படைத்துள்ளனர். இதற்காக, மண்டபத்திலேயே ரத்த தான முகாம் அமைக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்தவுடன், தம்பதி சகிதமாக இவர்களும் ரத்த தானம் செய்துள்ளனர்.

தங்களின் திருமணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியவர்கள், "நாங்கள் இருவருமே நாத்திகர்கள். அதனால் எங்கள் திருமணம் எந்தச் சூழலிலும் ஜாதகப் பொருத்தங்களை மையமாக வைத்து அமையக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். முழுக்க முழுக்க, அன்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் பெரியவர்களின் ஆசிபெற்று, இணையேற்று உள்ளோம்" எனக் கூறியுள்ளனர்.

பிள்ளைகளின் விருப்பம்தான் எல்லாமும் என நினைப்பவர்கள் நாங்கள்
மணமகளின் தந்தை
`அக்காக்களுக்கு கல்யாணம், ஆதரவற்றவர்களுக்கு பசியாற்றல்!' - அறந்தாங்கி டீக்கடை ராதிகாவின் கதை

மணமகளின் தந்தையும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியுமான மோகன் ராவ், ``எங்கள் இரு குடும்பங்களுக்கும் எந்தவித சாஸ்திர சம்பிரதாயங்கள் மீதும் நம்பிக்கை கிடையாது. `பிள்ளைகளின் விருப்பம்தான் எல்லாமும்' என நினைப்பவர்கள் நாங்கள். அதனாலேயே, இந்தத் திருமணத்துக்கும் இதற்கான இவர்களின் புதுமையான ஏற்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்" எனப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

திருமணம்
திருமணம்
இந்தத் திருமணத்துக்கு, மனிதநேயம் மற்றும் பகுத்தறிவுவாத அமைப்பு (HRO) மற்றும் தன்னார்வ ரத்த தானம் செய்பவர்களின் சங்கம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.