Published:Updated:

``என் பர்சனல்ல தலையிடாத" ஆண் - பெண் உறவுக்குள் `பர்சனல் ஸ்பேஸ்' தேவையா? ~ open-ஆ பேசலாமா? - 4

உறவு

எந்த உறவாக இருந்தாலுமே அதற்கென்று ஒரு எல்லை இருப்பதைப் போல், ஆண் - பெண் உறவிலும் அதற்கான எல்லை இருக்கவே செய்கிறது. இருவரும் கலந்து பேசி அந்த எல்லைகளை வகுத்துக் கொள்வது அவசியம்.

``என் பர்சனல்ல தலையிடாத" ஆண் - பெண் உறவுக்குள் `பர்சனல் ஸ்பேஸ்' தேவையா? ~ open-ஆ பேசலாமா? - 4

எந்த உறவாக இருந்தாலுமே அதற்கென்று ஒரு எல்லை இருப்பதைப் போல், ஆண் - பெண் உறவிலும் அதற்கான எல்லை இருக்கவே செய்கிறது. இருவரும் கலந்து பேசி அந்த எல்லைகளை வகுத்துக் கொள்வது அவசியம்.

Published:Updated:
உறவு

என்றைக்கும், எல்லாவற்றுக்குமான துணை என்பதே திருமண உறவின் அடிப்படை. எந்தக் கட்டத்திலும் ஒருவரிடமிருந்து ஒருவர் தனக்கான முக்கியத்துவத்தினை விட்டுக்கொடுக்காத பண்பே இந்த உறவின் சாரம். இப்படியிருந்தாலும் கூட, திருமண உறவுக்குள் தனிப்பட்ட வெளி (Personal space) நிச்சயமாக இருக்க வேண்டும் என்கிற கருத்து தற்போது ஆழமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. `முதல் நீ, முடிவும் நீ' என்றான உறவில் என்ன தனிப்பட்ட வெளி என்கிற கேள்வியும், இதற்கு எதிராக எழுகிறது. திருமணம் மட்டுமன்றி காதல் உறவுக்கும் இது பொருந்தக்கூடியது. ஆண் - பெண் உறவுக்குள் தனிப்பட்ட வெளிக்கான தேவை மற்றும் அதனை எவ்விதம் கையாள வேண்டும் என்பதை, இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

``ஆண் - பெண் உறவுக்குள் `பர்சனல் ஸ்பேஸ்' தேவைதான் என்றாலும் அதற்கான எல்லைகளை வகுத்துக் கொள்வது அவசியம்" என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

``எந்த உறவாக இருந்தாலுமே அதற்கென்று ஓர் எல்லை இருப்பதைப் போல், ஆண் - பெண் உறவிலும் அதற்கான எல்லை இருக்கவே செய்கிறது. இருவரும் கலந்து பேசி அந்த எல்லைகளை வகுத்துக் கொள்வது அவசியம். ஒருவருக்கான வெளியை மற்றவர் சரியாகப் புரிந்து கொண்டால் பிரச்னையே இல்லை. அதனைப் புரிய வைக்க வேண்டிய கடமை இருப்பதை உணர வேண்டும். அதுவே இந்த உறவை நல்லிணக்கத்தோடு கொண்டு செல்ல உதவும். பர்சனல் ஸ்பேஸ்க்கான எல்லைகளை நிறுவுவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு விஷயத்தை நமது கண்ணோட்டத்திலேயே நம் இணையரும் பார்ப்பார் என்று சொல்ல முடியாது. அவர் வேறொரு கோணத்தில் பார்க்க வாய்ப்பிருப்பதால் அதனை சரியாகப் புரிய வைக்க வேண்டும். அதே போல் புரிந்துகொண்டு நடக்கவும் வேண்டும். இந்த உறவுக்குள் எதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டும், எதிர்பார்க்கக் கூடாது என்று இருக்கிறது. அந்த எல்லைகளைப் புரிந்துகொண்டு, கட்டுப்படுத்த நினைக்காமல் பர்சனல் ஸ்பேஸ் கொடுக்கும்போதுதான் உறவில் இணக்கம் கூடும்.

பொதுவாக உணர்ச்சி, அறிவு, உடல், பணம், காமம் ஆகியவற்றில் இந்த பர்சனல் ஸ்பேஸ்க்கான எல்லைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் உணர்ச்சி நிலைகள் வேறுபட்டதாக இருக்கும். அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவு சார்ந்து பார்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, நம்பிக்கை இருக்கும். நமது கருத்துக்கு எதிராக இருக்கிறது என்பதற்காக அக்கருத்தினை ஏளனம் செய்வதோ, தன்னுடைய கருத்தினைத் திணிப்பதோ கூடாது.

``என் பர்சனல்ல தலையிடாத" ஆண் - பெண் உறவுக்குள் `பர்சனல் ஸ்பேஸ்' தேவையா? ~ open-ஆ பேசலாமா? - 4

உடல் சார்ந்து பார்த்தால் இணையரின் விருப்பமின்றி அவரைக் கட்டியணைக்கவோ, முத்தமிடவோ கூடாது. பணத்தை எப்படி சேமிக்க வேண்டும், எதற்கு செலவிட வேண்டும் என்கிற தீர்மானம் வெவ்வேறாக இருக்கும். அதனை பரஸ்பரம் இருவரும் பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டும். அதே போன்று உடலுறவு கொள்வதென்றாலும் அதில் ஒவ்வொருவரது விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும். பிடிக்காத சூழலில் கட்டாயப்படுத்தக்கூடாது.

பர்சனல் ஸ்பேஸை இது போன்ற எல்லைகளை வகுத்துக் கொண்டு எடுத்துக் கொள்வதன் வழியே, அவர்களது அணுக்கம் மேம்படும். எல்லாவற்றுக்கும் தன் இணையரைச் சார்ந்து மட்டுமே இருக்க மாட்டார்கள். செய்கிற தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள். யாருமே பயம் இல்லாத உறவில்தான் இருக்க விரும்புவார்கள். பர்சனல் ஸ்பேஸை மறுப்பது அந்த உறவின் மீதான பயத்தை ஏற்படுத்தும்" என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``ஆண் - பெண் உறவுக்குள் தனிப்பட்ட வெளி என ஒன்று கிடையவே கிடையாது" என்கிறார் மானுடவியலாளரான மோகன் நூகுலா.

``தனக்கானது என ஒரு பொருளை மறைத்து வைக்கும் பழக்கம் உயிரினங்களின் இயல்பிலேயே இருக்கிறது. தனது பொருளை யாரேனும் எடுத்துக் கொள்வார்களோ என்கிற பதற்றத்தை நாம் விலங்குகளிடம் கூடப் பார்க்க முடியும். தனிப்பட்டது என்கிற பண்புக்கு எதிராக உருவானதுதான் ஆண் - பெண் உறவு. இந்த உறவில் நம் இணையர் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உணர்வே மேலோங்கியிருக்கிறது.

மோகன் நூகுலா
மோகன் நூகுலா

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற open society-ல் கூட மனிதர்களுக்கு No - Go territory அதாவது யாரும் உள் நுழைய முடியாத வெளி என ஒன்று இருக்கிறது. நண்பர்களால் கூட அந்த வெளிக்குள் நுழைய முடியாது. இதுவே ஆண் - பெண் உறவுக்குள் இந்த No - Go territory இல்லை என்பதுதான் இந்த உறவின் பிரத்யேக அம்சம். Absolute ownership என்று சொல்லப்படக்கூடிய அளவு கடந்த உரிமை இந்த உறவுக்குள் மேலோங்கி இருக்கிறது. ஆகவே, இந்த உறவுக்குள் `நோ' என்கிற சொல்லே கிடையாது. இன்றைக்கு நம் குழந்தைகள் சமூகத்தை எதிர்கொள்ளும்போது `நோ' சொல்லக் கற்றுக்கொடுக்கிறோம். அது உறவுக்குப் பொருந்தாது.

குடும்ப ரகசியத்தை வெளிநபர்களிடம் கூறுபவர்களை ஏமாளிகளாகப் பார்க்கிற இதே சமூகம்தான் குடும்பத்துக்குள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்கிறது. குறிப்பாக ஆண் - பெண் உறவு வெளிப்படைத்தன்மையையே பெரிய அளவில் எதிர்பார்க்கிறது. அங்கே பர்சனல் என எதுவும் இருக்கக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு இயல்பாக இருக்கிறது. வழக்கறிஞரிடமும் மருத்துவரிடமும் பொய் சொல்லக்கூடாது என்கிற கூற்றுண்டு. ஏனென்றால், அவர்கள் நமக்காக ஒன்றைச் செய்ய இறங்குகிறார்கள். நாம் கூறுகிற பொய் இருவரையுமே பாதிக்கும் என்பதால் அப்படியாகச் சொல்லப்பட்டது.

அப்படியிருக்கையில் வாழ்க்கையை முழுவதும் ஒப்புக்கொடுக்கிற இணையரிடம் பர்சனல் ஸ்பேஸ் கேட்பது சரியாக இருக்காது. உங்கள் நண்பரின் அவசரத் தேவைக்காக மாதச்சம்பளத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறீர்கள் என்றால் இதை உங்கள் இணையருடன் கலந்தாலோசிக்க வேண்டும்தானே. ஏனென்றால் அந்தப் பணத்தைக் கொண்டு வேறொரு குடும்பச் செலவை அவர்கள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அங்கே என் சம்பளம் எனக்கானது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அவரவர் சம்பாத்தியம் அவரவருக்கானது என்று சொன்னால் ஒன்றாக வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? ஒரே அறையில் தங்குவதால் மட்டுமே அது அணுக்கமான உறவாகி விடாது.

``என் பர்சனல்ல தலையிடாத" ஆண் - பெண் உறவுக்குள் `பர்சனல் ஸ்பேஸ்' தேவையா? ~ open-ஆ பேசலாமா? - 4

நான்கைந்து முறை திருமண வாழ்க்கையில் தோற்றவர்கள் கூட மீண்டும் திருமண உறவுக்குள் ஏன் செல்கிறார்கள் என்றால் அதனுள் இருக்கும் ஒருவருக்கொருவர் மீதான பற்றுதல்தான் காரணம். யாருமே விவாகரத்தை எதிர்பார்த்து திருமணம் புரிவதில்லை. ஒருவரை வாழ்நாள் துணையாக நினைப்பதாலேயே மணமுடிக்கிறோம். தங்கள் இணையருக்கு `பர்சனல் ஸ்பேஸ்' கொடுக்கிறேன் என்று சொல்வதெல்லாம் தங்களை ஒரு புரட்சியாளராகக் காட்டிக்கொள்ளும் பாவனை மட்டுமே. Joint partnershipதான் இந்த உறவின் அடிப்படையே. அதற்குள் உணர்வு ரீதியான பிணைப்பு இருக்கிறது. யாரிடமும் வெளிப்படுத்தாததை, யாருக்கும் அளிக்காத நேரத்தை தனக்காக அளித்தல் என்பதுதான் உறவை வலுப்படுத்துகிறது. பர்சனல் ஸ்பேஸ் என்பது இந்தப் பிணைப்பை உடைக்கக்கூடியது. இது காதல் உறவுக்கும் பொருந்தும்" என்கிறார் மோகன் நூகுலா.

பார்வைக் கோணம்

தமிழ்ச்செல்வன், பத்திரிகையாளர்: ``நான் உன்கூட வாழ்ந்தாலும் எனக்குன்னு என் நண்பர்களோட செலவழிக்கவும், ஒரு பயணம் போகவும் பர்சனல் ஸ்பேஸ் வேணும்னு கேட்கிற நிலை இன்னைக்கு இருக்கு. ஒரு காலகட்டம் வரையிலும் ஆண்களுக்கு அந்த ஸ்பேஸ் இருந்தது. பெண்களுக்கு அந்த ஸ்பேஸ் இல்லை. இந்த நவீன காலத்தில் இரு பாலினருமே இந்த பர்சனல் ஸ்பேஸ் எடுத்துக்குறாங்க. ஆண் - பெண் உறவுக்குள்ள பர்சனல் ஸ்பேஸ் தேவையாங்குறதே பெரிய விவாதம்தான்.

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

நவீன சமூகத்தில் ஒவ்வொருத்தரும் தனிப்பட்டவர்ங்கிற கருத்து உருவாகியிருக்கு. அதனாலதான் பர்சனல் ஸ்பேஸ் பத்தி இங்க அதிகம் பேசப்படுது. இதோட சிக்கல் என்னன்னா, அந்த ஸ்பேஸ்க்கான எல்லையை எவ்வளவு தூரம் கொண்டு போக முடியும்ங்கிறது யாருக்குமே தெரியுறதில்லை. இதனாலதான் உறவுக்குள்ள பிரச்னைகள் வருது.

பர்சனல் ஸ்பேஸ் வேணும்னு கேட்குறவங்களே கூட அவங்க அதை தன் இணையருக்குக் கொடுப்பாங்களாங்கிறது முக்கியமான கேள்வி. அதை அனுமதிக்க மாட்டோம்ங்கிறதுதான் மனித இயல்பு. கல்யாணமானதுக்கப்புறம் நண்பர்களோட செலவிடுற நேரம் ரொம்ப ரொம்ப குறையும். நண்பர்களுக்காக ஒதுக்குற கொஞ்ச நேரத்தை புரிஞ்சு ஏத்துக்கிற மனநிலை உருவாகிறதுல நிறைய சிக்கல் இருக்கு. நம்ம கேட்குற ஸ்பேஸை நம்ம இணையர் சரியா எடுத்துக்குவாங்களா அப்படின்னும் பார்க்கணும். ஆனா, அப்பப்ப அந்த ஸ்பேஸைக் கொடுக்க வேண்டியது அவசியமானதுன்னு நினைக்கிறேன். மனசு சரியில்லை, ரெண்டு நாள் வெளியூர் போறேன்னு ஆண் சொன்னா, பெண் அதை அனுமதிக்கணும்; ஃபிரெண்ட் வீட்டுக்கோ, சொந்தக்காரங்க வீட்டுக்கோ போறேன்னு பெண் சொன்னா அதை ஆண் அனுமதிக்கணும். இந்தத் தெளிவோட இருந்துட்டா பிரச்னை இல்லை. கணவன் - மனைவியானாலும் நாங்க நண்பர்கள் மாதிரிதான் இருப்போம்னு சொல்வாங்க. உண்மையில அப்படி யாராலும் இருக்க முடியாது. இந்த உறவுக்கான வரையறைகளோடு இருக்கிறதுதான் நல்லது".

வித்யா விஜயராகவன், தனியார் நிறுவன ஊழியர்: ``பர்சனல் ஸ்பேஸ் தேவைன்னாலும் சரியான கம்யூனிகேஷன் இருக்கணும். எதுவும் சொல்லாம நான் கிளம்பி எங்கயாவது போவேன். கேட்டா இது என் பர்சனல்னு சொல்றது சரியா இருக்காது. தெளிவா புரிய வெச்சிட்டு அந்த பர்சனல் ஸ்பேஸை எடுத்துக்கணும். நான் லாக்டௌன் டைம்ல மனசு சரியில்லைன்னு என் கணவர்கிட்ட சொல்லிட்டு என் ஃபிரெண்ட் வீட்டுக்குப் போய் இருந்துட்டு வந்தேன்.

வித்யா விஜயராகவன்
வித்யா விஜயராகவன்

என் கணவர் அதைப் புரிஞ்சுகிட்டு அனுமதிச்சார். அது மாதிரி நியாயமான விஷயத்துக்காக என் கணவர் வெளியூர் போய்ட்டு வர்றேன்னு கேட்டா, நானும் அனுமதிப்பேன். இந்த கம்யூனிகேஷன்தான் வேணும். ஆன்லைன் ரம்மி ஆடுறதைக் கூட பர்சனல்னு சொல்லலாம். அதுல பணத்தை இழந்து நிக்கும்போது பாதிக்கப்படுறது அவங்க மட்டுமா?

பர்சனல்னு சொல்லி ஒன்னைப் பண்ணிட்டு பிரச்னைன்னு வரும்போது மட்டும் வந்து நிக்குறது சரியா இருக்குமா? எதுவா இருந்தாலும் சரி, எங்கிட்ட கலந்தாலோசிக்காம முடிவு எடுக்குறப்போ அதுக்கு நான் எப்படி சப்போர்ட் பண்ண முடியும். திருமணம்ங்கிறது ஒரு கமிட்மென்ட். அதுக்கான பொறுப்பை ஏத்துகிட்டுதான் ஆகணும். பர்சனல் ஸ்பேஸ் எதுங்குறதுல ரெண்டு பேருக்கும் தெளிவு இருக்கணும். ரெண்டு பேர் சேர்ந்து வாழ்றப்போ ஒருத்தரை பாதிச்சாலும் அது இன்னொருத்தருக்கும் பாதிப்புதான். அப்படி இருக்கிறப்போ பர்சனல் ஸ்பேஸ்னு சொல்லி என்ன வேணா பண்ணலாம்னு நினைக்கக்கூடாது".