Election bannerElection banner
Published:Updated:

அவர்கள் தொணதொணப்பு அல்லர்... துன்பங்களின்போது மனது தேடும் மாமருந்து... யார் அவர்கள்?

parents
parents

அவர்களால் உங்களுக்கு பிசிக்கல் சப்போர்ட், ஃபைனான்ஸியல் சப்போர்ட் கொடுக்க முடியவில்லை என்றாலும், தங்களுடைய இறந்தகால வெற்றி, தோல்வி அனுபவங்களை உங்கள் நிகழ்காலத்துக்குள் கடத்துவார்கள்.

பக்கத்தில் இருக்கையில் 'தொண தொணப்பு' என்று சலித்துக் கொள்பவர்களுக்கு பெற்றோரின் அருமை பிரிவில்தான் தெரியும். வேலை காரணமாகப் பெற்றோர்களைப் பிரிந்திருந்தவர்கள்கூட, இந்த லாக்டெளன் நேரத்தில் பெற்றோருடன் சேர்ந்திருந்தார்கள். அதனால், பெற்றோரின் அருமையை உணர்ந்தும் இருப்பார்கள். தொடர்ந்து சில மாதங்கள் ஒருவர் தனிமையில் இருந்தால், ஒரு குடும்பத்தில் இணைந்து வாழ்வதற்கான தகுதி அவருக்கு வந்துவிடுமாம். சரி, பெற்றோருடன் அல்லது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறபோது, நமக்கு மனதளவில் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும், அதிலும் குறிப்பாக லாக்டெளனுக்குப் பிறகு..? உளவியல் நிபுணர் சிந்து மேனகாவிடம் கேட்டோம்.

parents
parents
வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் ஊர்சுற்றிகள்... லாக்டௌன் காலத்தில் என்ன செய்கிறார்கள்?

நம்மால் இவர்களை விட்டுப் பிரிந்து இருக்க முடியாது என்கிற எண்ணத்தைவிட, இவர்களால் நம்மைவிட்டுப் பிரிந்து இருக்க முடியாது என்கிற எண்ணம் கொடுக்கிற பாசிட்டிவிட்டி பெரியது. வாழ்தல் மீது ஆசை ஏற்படுத்துகிற உணர்வு அது.

பெற்றோரும் குடும்பமும் நம்முடைய நிரந்தர உறவு. அது பாசிட்டிவ்வாக இருந்தாலும் சரி, கொஞ்சம் பிரச்னைகளுடன் இருந்தாலும் சரி, 'இது நம்ம இடம். நமக்குப் பாதுகாப்பாதான் இருக்கும்' என்கிற உணர்வைக் கொடுக்கும்.

உளவியல் நிபுணர் சிந்து மேனகா
உளவியல் நிபுணர் சிந்து மேனகா

தூங்கி எழும்போது, நம் பெற்றோர் நமக்கு இருக்கிறார்கள் என்கிற ஆழ் மனது எண்ணம், நம்மை அடுத்து என்ன என்பதை நோக்கி யோசிக்க, பயணிக்க வைக்கும். படிப்பதற்காக, வேலைக்காகப் பெற்றோரைவிட்டுப் பிரிந்து இருப்பவர்கள் பெற்றோரின் புகைப்படத்தை தங்களுடன் வைத்திருப்பதன் உளவியல் பின்னணி இதுதான்.

நாமெல்லோரும் தற்போது லாக்டெளன், பொருளாதார நெருக்கடி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் பெற்றோரை தங்களுடன் வைத்திருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அனுபவத்தில் இருந்து, ஏன் அவர்கள் செய்து தோற்றுப்போன தொழிலில் இருந்துகூட உங்களுக்கு 'வாட் நெக்ஸ்ட்?'டுக்கான வழி கிடைக்கலாம். அவர்களால் உங்களுக்கு பிசிக்கல் சப்போர்ட், ஃபைனான்ஷியல் சப்போர்ட் கொடுக்க முடியவில்லை என்றாலும், தங்களுடைய இறந்தகால வெற்றி, தோல்வி அனுபவங்களை உங்கள் நிகழ்காலத்துக்குள் கடத்துவார்கள். அதனால் உங்கள் பெற்றோருடன் நிறைய பேசுங்கள்.

parents
parents
எந்த வயதுக் குழந்தையிடம் எந்தெந்தப் பிரச்னைகளைப் பேசலாம்? - பெற்றோருக்கு வழிகாட்டல்

இயற்கை நம் எல்லோருடைய வாழ்க்கைக்கும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு பாஸ் பட்டனை அழுத்தி வைத்திருக்கிறது. வேலை காரணமாகப் பெற்றோருடன் ஒரு வேளை உணவைக்கூட சேர்ந்து சாப்பிட முடியாத நிலைமையில் இருந்த நாம், இப்போது மூன்று வேளையும் குடும்பத்துடனும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுகிறோம். அதை இனிமேலும் தொடருங்கள். குறிப்பாக உங்கள் பெற்றோருடன். அது மிகப்பெரிய மன பலத்தை உங்களுக்குக் கொடுக்கும்.

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது வேகமான உலகத்தில். அதனால் நம் மனமும் மூளையும் வேகமாகத்தான் சிந்திக்கும், செயல்படும். அதுவே சென்ற தலைமுறையினருடன் சேர்ந்து வசிக்கையில், ஒரு பிரச்னை வந்தால் 'அது ஏன் வந்தது', 'அதிலிருந்து எப்படி மீண்டு வரலாம்' என்று யோசிப்பதற்கான மனநிலையில் உங்களைத் தக்க வைப்பதற்கான நிதானம் கிடைக்கிறது.

parents
parents

தற்போது நாமெல்லாம் ஒரு கடினமான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதால், தற்கொலை எண்ணங்கள் வராமல் தடுப்பதற்கும் பெற்றோருடன் சேர்ந்து இருப்பது உதவும்.

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், லாக்டெளன் என்றவுடனே எல்லோரும் அவரவர் நாட்டுக்கு, வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று தவித்தோம் இல்லையா? அதற்குக் காரணம், பாதுகாப்பு உணர்வு. 'என் வீட்டுக்குப் போய்விட்டால் போதும். என் பெற்றோருடன் சேர்ந்துவிட்டால், என் குடும்பத்துடன் சேர்ந்து விட்டால் நான் பாதுகாக்கப்பட்டு விடுவேன்' என்கிற உணர்வு. அந்த உணர்வு இனியும் தொடர வேண்டும், குறிப்பாகப் பெற்றோர்களுடன்..!"

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு