Published:Updated:

`கண்காணிக்காத மாதிரி அவங்களை கவனிக்கணும்!’ - டீன் ஏஜ் பேரன்டிங் பற்றி பட்டிமன்ற ராஜா #GoodParenting

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

``இந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை என்ன செய்றதுங்கிறதுதான் பெரிய பிரச்னை. எப்படி வளர்க்கிறதுங்கிறது கேள்வி இல்லை. என்ன செய்றதுங்கிற பிரச்னை இப்போ உருவாகியிருக்கு.''

பெற்றோர், தாங்கள் பட்ட கஷ்டங்களைத் தங்கள் பிள்ளைகள் படக்கூடாதென அவர்களுக்கு அதிக செல்லம்கொடுத்து, வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்து வளர்க்கிறார்கள். அதிலும் பலர், தங்களின் சக்தியை மீறிக் கடன் வாங்கி, பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தருகிறார்கள். ஆனால், இந்த கட்டற்ற அன்பு, குழந்தைகளைப் பிடிவாதக்காரர்களாகவும் கோபக்காரர்களாகவும் வளர்க்கிறது. அவர்களிடம் அன்பு பாராட்டவும் முடியவில்லை, கண்டிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில், குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாகவும் புத்திசாலிகளாகவும் உருவாக்குவது எப்படி என்று சொல்கிறார், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா. அருவியெனக் கொட்டிய அவர் பேச்சின் தொகுப்பு இங்கே...

PATTIMANDRAM RAJA
PATTIMANDRAM RAJA

''இந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை என்ன செய்றதுங்கிறதுதான் பெரிய பிரச்னை. எப்படி வளர்க்கிறதுங்கிறது கேள்வி இல்லை. என்ன செய்றதுங்கிற பிரச்னை இப்போ உருவாகியிருக்கு. அந்தக் காலத்துல, வீட்டில் குழந்தைங்க இருந்தா, அண்ணன் பார்த்துக்குவான், இல்லைனா அக்கா பார்த்துக்குவா. இப்படித்தான் ஒரு குடும்பத்தின் கட்டமைப்பு இருந்துச்சு. அப்படியில்லைனா, அந்த வீட்டிலேயோ, வீட்டுக்குப் பக்கத்திலேயோ அத்தை, தாத்தா, பாட்டினு யாராவது இருந்தாங்கன்னா குழந்தைங்களைப் பார்த்துக்குவாங்க. வீட்டுப் பெரியவர்கள் சொல்றதை அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, குழந்தைகள்னு எல்லோரும் கேட்பாங்க.

காத்திருப்பு, ஏக்கமெல்லாம் அறியாத தலைமுறை இது!

அப்போதெல்லாம் வீடுகள்ல வசதி வாய்ப்பு பெருசா இருக்காது. பசங்களுக்குத் தீனின்னா முறுக்குத்தான். ஒரு முறுக்கு வேணும்னாகூட, அம்மாகிட்டதான் கேக்கணும். அந்த முறுக்கை அம்மா ஒரு பெரிய டப்பாவில் போட்டு, உயரமான இடத்திலோ அல்லது பரண் மேலோ வெச்சிருப்பாங்க. நாம கேட்டவுடனே கிடைக்காது. ஒண்ணுக்கு ரெண்டு மூணு தடவை கேட்டதுக்கு அப்புறம், ஒரே ஒரு முறுக்கு எடுத்துக் கொடுத்திட்டு, டப்பாவை மூடித் திரும்ப மேல வெச்சிடுவாங்க. இப்படி எல்லாமே ஏங்கிக் காத்திருந்து, கெஞ்சிக் கேட்ட பிறகுதான் சாப்பிடக் கிடைக்கும். நாங்களும் அதற்குப் பழகியிருந்தோம். அப்படித்தான் அவை எங்க கைக்குக் கிடைத்தன.

இன்றைக்கு எல்லோர்கிட்டயும் காசு கொஞ்சம் வந்துருச்சு. சாதாரண வீடுகளில்கூட பணம் சரளமா புழங்க ஆரம்பிச்சிடுச்சு. எதுவாயிருந்தாலும், என்ன விலையாகயிருந்தாலும் வாங்கிச் சாப்பிடுவது சர்வசாதாரண விஷயமாயிடுச்சு. எதற்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. எங்க காலத்துல சாப்பாடு கிடைக்கிறதே கஷ்டம். சில சமயம் சாப்பாட்டுக்காகக்கூடக் காத்திருக்கவேண்டி வரும். இன்னைக்கு சாப்பாடு செஞ்சு வெச்சிக்கிட்டு குழந்தைங்களை 'சாப்பிடு சாப்பிடு'னு சொல்லிக் கெஞ்சினாலும், புள்ளைங்க சாப்பிட மாட்டேங்குதுங்க. கேட்டா, 'போரடிக்குதும்மா... ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுங்க'னு சொல்றாங்க.

Teen Age
Teen Age

அப்பாவும் ஆசானும் சொன்னா மறுபேச்சில்லை அன்று. இன்று..?

சுதந்திரம் வந்த பிறகு நம்முடைய கல்வியிலும் வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைஞ்சு போயிடுச்சு. இந்தியப் பண்பாட்டுச் சூழலே மாறிப்போய், மேலைநாட்டுச் சிந்தனை வந்துவிட்டது. இவை நம் பிள்ளைகளின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு.

ஊடகங்களின் தாக்கம் அதிகமாகியிருக்கு. தொலைக்காட்சி, கையிலிருக்கும் கைபேசி எல்லாம் நிறைய செய்திகளைக் கொண்டுவந்து கொட்டுது. ஆனா, நாங்க படிக்கும்போது அப்பா சொல்வதுதான் வேதம். அதைவிட, ஆசிரியர் சொல்வது மிகப்பெரிய வேதம். அவங்க ரெண்டு பேரையும் எதிர்த்துப் பேசவோ, எதிர்த்து நிற்கவோ முடியவே முடியாது. ஆசிரியர் சொல்லித் தருவதைத் தாண்டி வேறெதுவும் இருக்கிற மாதிரி எங்களுக்குத் தோணவே தோணாது. ஆனால், இன்றைக்கு இருக்கிற குழந்தைகள், ஆசிரியர் ஒரு செய்தியைச் சொல்றதுக்கு முன்னாடி அவங்க சொல்றாங்க. அந்த அளவு தொலைத்தொடர்பு சாதனங்களின் வசதி இருக்கு. கூகுளில் போட்டுப் பார்த்து ஆசிரியரைவிட அதிகம் தெரிந்துவைத்துக்கொண்டு வகுப்புக்கு வர்றான். அதனாலேயே, ஆசிரியர் மீதான ஆச்சர்யமும் மரியாதையும் விலகி, ஆசிரியர் அவனுக்கு இரண்டாம்பட்சமாகப் போய்விடுகிறார். அதேபோல, அப்பாவைவிட மகன் அதிகம் தெரிந்தவனா இருக்கான்.

சமீபத்தில், 'கம்பன் கழக'த்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு ஓர் ஆசிரியர், இரண்டு ஏழாம் வகுப்பு மாணவர்களை அழைத்துவந்திருந்தார். செல்ஃபி எடுத்துக்கணும்னு பார்க்கிறாங்க. ஆனா, அந்த ஆசிரியருக்கு செல்ஃபி எடுக்கத் தெரியலை. உடனே அந்தப் பசங்க, 'ஜி, இப்படி எடுக்கக்கூடாது ஜி, போனை இப்படிப் பிடிங்க. நகம் படாம பட்டனை டச் பண்ணுங்க'னு சொல்லித் தர்றாங்க. புதிய இடத்திலேயே இந்த ஆசிரியரை இந்தளவு லூட்டி அடிக்கிறாங்களே... வகுப்புல என்ன மாதிரி லூட்டி அடிப்பாங்கன்னு எனக்குக் கவலையும் அச்சமும் வந்தது.

PATTIMANDRAM RAJA
PATTIMANDRAM RAJA

இப்படி இருக்கிற புள்ளைங்கள வகுப்பறையில் கண்டிக்க முடியாது. வீட்டுல இருக்கிறவங்களாலும் எதுவும் சொல்ல முடியாது. யாரும் எதுவும் சொல்ல முடியாத, கண்டிக்க முடியாத இந்த நிலையில, இவங்களை எப்படி வளர்ப்பது? எப்படி ஒழுக்கமுள்ளவர்களாகவும் புத்திசாலிப் பிள்ளைகளாவும் உருவாக்குவது? இன்னைக்கு இதுதான் எல்லா பெற்றோருக்கும் முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். ஆனா, எங்க காலத்துல இப்படி எல்லாம் கிடையாது. ஓங்கி ஒரு அறை விட்டா, அவனுக்கு ஆறு மாசம் இல்ல, ஆயுசு முழுக்க மறக்கவே மறக்காது. ஒரு வாரத்துக்கு அப்பாவை பார்த்துப் பார்த்து அழுவான். ஆனாலும், அவனுக்கு அப்பா மேல பிரியம், நம்பிக்கை இல்லாமப் போகாது. இன்றைய தலைமுறைக்கு அப்பா ஒரு வார்த்தை கடுமையா பேசிட்டா, அடுத்த நாள் அவன் வீட்டுக்கு வர மாட்டேங்கிறான். கடிதம் எழுதி வெச்சிட்டு எங்கேயோ ஓடிப்போயிடுறான். ஆசிரியர் ஏதாவது கண்டித்தால், 'இவர் எனக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்தினார்'னு எழுதிவெச்சுட்டு, ஏதோ ஒரு தப்பான முடிவெடுத்திடுறான். காவல்துறையில் ரிப்போர்ட்டாகிப் போயிடுது. அதனால எல்லாரும் 'நமக்கு எதுக்கு வம்பு'னு இருந்திடுறாங்க.

குழந்தை வளர்ப்புக்கு பொதுவிதி இல்லை

அப்போவெல்லாம், இப்படி இருக்கணும்... இப்படிப் பிள்ளைகளை வளர்க்கணும்னு எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனா இன்றைக்கு, ஆர்ட் ஆஃப் பேரன்டிங்னு ஒரு கோர்ஸே பெத்தவங்களுக்கு நடத்துறாங்க. எப்படி நல்ல தகப்பனாக இருப்பது, எப்படி நல்ல தாயாக இருப்பதுனு க்ளாஸ் எடுக்குறாங்க. அதற்கு, பல பெற்றோர்கள் போயிட்டிருக்காங்க. இதுல பெரிய வேடிக்கை என்னன்னா, கல்யாணமாகாதவர்கள் இந்த வகுப்புகளை எடுப்பதுதான். ஏதோ ஒரு மனையியல் படிப்பு, உளவியல் படிப்புனு படிச்சிட்டு வந்து வகுப்பு நடத்துறாங்க. உண்மையில், குழந்தை வளர்ப்பு என்பது அவரவரின் சூழ்நிலைக்கேற்ப மாறுபடக்கூடியது.

TeenAge
TeenAge

கண்காணிக்காத மாதிரி கவனிக்கணும்!

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந் தொழுகுவார்.

(பொருள்: 'மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலையில் நின்று பழகுக).

எனக்கு இப்போ, இந்தத் திருக்குறள்தான் ஞாபகம் வருது. இப்படி... நெருப்புக்கு அருகில் செல்லாமலும் நெருப்பை விட்டு மிகவும் தள்ளிப்போய்விடாமலும் இருக்கக்கூடிய ஒரு நிலையில்தான் இந்தக் காலத்து குழந்தைகளை அணுகணும். குறிப்பா, டீன் ஏஜ் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், இந்தத் திருக்குறளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளணும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளை நம்முடைய அன்பு வட்டத்துக்குள் வைத்துக்கொள்ளணும். நம்முடைய அன்பு, நம்மை மீறிய செயல்களை அவர்கள் செய்யாமல் தடுத்துநிறுத்தும் காப்புக் கவசமாக இருக்கும்.

குழந்தைகள் வளர வளர, குறிப்பாக டீன் ஏஜ் பருவத்துக்கு வர வர அவர்கள் நம்மை விட்டு விலகத்தொடங்குவார்கள். நாம் நெருங்கினாலும் விலகிச் செல்வார்கள். நம் விரலைப் பிடித்துக் கொண்டு நடந்தவன், நம் விரலை உதறிவிட்டு தனியாக நடக்கத் தொடங்குவான். அப்போதுதான் நாம் முன்பு இருந்ததைவிட மிகவும் பொறுமையோடும் கவனத்தோடும் நம் பிள்ளைகளை வளர்க்கணும்.ரொம்பவும் நெருங்கின மாதிரியும் இருக்கக்கூடாது; ரொம்பவும் விலகின மாதிரியும் இருக்கக்கூடாது. கண்காணிக்காத மாதிரி அவங்களை கவனிக்கணும். முழுக்க நம்பணும். ஆனா, முழுமையா நம்பக்கூடாது. அவங்களுக்குப் பக்கத்தில் இருக்கணும். ஆனா, அவங்களைக் கண்காணிப்பதுபோல் காண்பித்துக்கொள்ளக்கூடாது. அவங்களுக்கு நல்ல தகவல்களைச் சொல்லணும். ஆனா, அது அறிவுரைபோல் இருக்கக்கூடாது, ஆலோசனைபோல் இருக்கணும். அவர்களுக்கு சுதந்திரம் தரணும். ஆனாலும் கட்டுப்பாடாக இருக்கவும் பழக்கணும்.

Families
Families

குழந்தைங்க எப்போதும் உங்க சிந்தனையில் இருக்கணும்!

இதெல்லாம், சொல்றதுக்கு மிகவும் எளிதா இருக்கும். ஆனா, நடைமுறையில் மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். எல்லாவற்றையும்விட, அவர்கள் எப்போதும் உங்கள் சிந்தனையில் இருந்துட்டே இருக்கணும். நம்முடைய வேலைகள், தேவைகள், விருப்பங்கள், வாட்ஸ்அப் எனப் பல விஷயங்கள் நம்மை வீட்டிலிருந்து தள்ளிவெச்சிடும். குறிப்பா, இது ஆண்களுக்கு நிறையவே நடக்கும். தாய்மார்களைப் பற்றி பிரச்னை இல்லை. அவங்க எப்போதும் குழந்தைகளோடு நெருக்கமாகவே இருப்பாங்க. ஆண்களுக்குத்தான் இந்தப் பிரச்னை அதிகம். ஆனா, இது ரொம்ப முக்கியமானது. ஏன்னா, குழந்தைகள் எப்போதும் உங்க சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தால், அவங்க ஒழுக்கம் தவறிப் போக மாட்டாங்க.

கவனச் சிதறல் இல்லாத குமரப் பருவம் இருக்காதுதான், ஆனாலும்..!

குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வதைவிட வாழ்ந்துகாட்டுவது மிகவும் சிறந்த முன்மாதிரியா இருக்கும். அவர்களின் சிறந்த ரோல் மாடலாக நாம் இருக்கணும். நம்முடைய குடும்பத்தின் கஷ்டங்களை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லி வளர்க்கணும். வீட்டுப் பிரச்னைகள், கடன் பிரச்னைகள், பணிச்சூழல் சிரமங்கள், பணத்தின் அருமை ஆகியவற்றை அவர்களிடமும் சொல்லி விவாதிக்கணும். அப்போதான், அவர்களும் அதை உணர்வார்கள். இதையெல்லாம் சலிப்புத்தட்டாத வகையில் சொல்லணும்.

அந்தக் காலத்தில் இருந்ததைவிட இப்போது, முன்னேறுவதற்கு உரிய வாய்ப்புகளும் வசதிகளும், சந்தர்ப்பங்களும் நிச்சயமா மிகவும் அதிகமாக உள்ளன. அவைகுறித்த பார்வையும் தெளிவான சிந்தனையும் பிள்ளைகளுக்கு இருக்குமானால், எளிதாக ஒரு நல்ல நிலையை இப்போதுள்ள பிள்ளைகளால் அடையமுடியும்.

கவனச்சிதறல் இல்லாத குமரப் பருவம் என்பது கிடையாது. இது எல்லா காலத்திலும் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப, தகவல் தொடர்பு சாதனங்களின் வாயிலாகத்தான் இருந்துவந்திருக்கு. அதனால, ஒரேயடியா 'நாம இருந்த மாதிரியா இருக்காங்க? டி.வி, மொபைல், டேப், சோஷியல் மீடியான்னு இப்போ இருக்கிற பிள்ளைங்களை ஒண்ணுமே பண்ண முடியாது'னு சாக்கு சொல்லிட்டு பெற்றோர் விலகிக்கக்கூடாது. நெருங்கி நெருங்கிப் போய்த்தான் பிள்ளைகளை நம் வழிக்குக் கொண்டுவரணும்.

கோழி தன் றெக்கையில் தன் குஞ்சுகளை வைத்து வளர்ப்பதுபோல, நாமும் நம் பிள்ளைகளைக் கவனமா வளர்த்தால், நிச்சயம் அவர்களை நன் நெறிகளுடன் வளர்க்கமுடியும். இறை நம்பிக்கையுடன் எப்போதும் இருங்கள். உங்க பிள்ளைகளுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களையும் இறை நம்பிக்கையாளராக வளருங்கள். அது, அவர்களுக்கு மிகுதியான பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

பணத்தைச் சேர்ப்பதைவிட, உங்கள் பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, உங்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையானவற்றை இறைவன் வழங்குவார்!''

குழந்தை வளர்ப்பு பார்ட் டைம் ஜாப் அல்ல! - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைக்கு