Published:Updated:

`27.5 மில்லியன் வியூவ்ஸ் வைரல் வீடியோ..!' - செயினில் மாட்டிய மனைவியின் கேசத்தை விடுவிக்கும் ஹாரி

Harry - Megan
Harry - Megan

மேகனுடைய ஓப்பன் ஹேர் காற்றில் அலைபாய, மனைவியின் பின்னால் நின்றுகொண்டிருக்கிற ஹாரி அடுத்த நொடி தன் கைகளால் மனைவியின் முடியை அழுத்திவிடுகிறார். முகமெல்லாம் சிரிப்புடன் கணவரை திரும்பிப்பார்க்கிற மேகன்...

இளவரசர் ஹாரியை 'மனைவியின்மீது அதிக கவனம்கொண்ட கணவர்' என்று உலகம் முழுக்க நெட்டிசன்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஹாரியும் மேகனும் அரச வாழ்க்கையில் இருக்கும்போதே பொதுவெளிகளில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொள்வது, அன்பாக அணைத்துக்கொள்வது என்றுதான் இருப்பார்கள். இந்த அணைப்பையும் அன்பையும்கூட, 'அரச வாழ்க்கை விதிமுறையை மேகன் மீறிவிட்டார், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் தங்கள் துணையுடன் கைகோத்து நடப்பது கூடாது' என ஒரு பிரச்னையாக எழுப்பப்பட்டது. சென்ற ஜனவரியில் அரச வாழ்க்கையைத் துறந்து, கனடாவுக்குச் சென்றுவிட்ட ஹாரி மற்றும் மேகனின் அன்பை வெரி க்யூட்டாக வெளிக்காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.

மிச்சேல் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிற இந்த வீடியோவில் ஹாரியும் மேகனும் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், மனைவியின் கூந்தலை ஹாரி சரிசெய்துவிடுகிற சில காட்சிகள் வருகின்றன. 24 விநாடிகள் செல்கிற அந்த வீடியோவில் மேகனின் கழுத்தில் மெல்லிய செயின் போன்ற ஒரு ஆபரணத்தை ஒருவர் அணிவிக்க, அந்த செயினிலிருந்து மனைவியின் போனி டெயிலை மென்மையாக விடுவிக்கிறார் ஹாரி. பிறகு, அதைச் சரிசெய்தும் விடுகிறார். இன்னொரு தருணத்தில், மேகனுடைய ஓப்பன் ஹேர் காற்றில் அலைபாய, மனைவியின் பின்னால் நின்றுகொண்டிருக்கிற ஹாரி அடுத்த நொடி தன் இரு கைகளாலும் மனைவியின் முடியை அழுத்தி விடுகிறார். முகமெல்லாம் சிரிப்புடன் கணவரை திரும்பிப் பார்க்கிற மேகன், தன் தலைமுடியை சரிசெய்து தன் வலது தோளின் மேல் வழியவிடுகிறார். அடுத்த நொடி தன் மனைவியின் இடதுதோளின் மேல் தன் முகத்தை வைத்து ஏதோவொன்றை பார்க்கிறார் கணவர் ஹாரி. சுற்றியிருக்கிற அத்தனை பெண்களின் முகத்திலும் மகிழ்ச்சியும் சிரிப்பும் பரவுகிறது.

இந்த வீடியோவை இதுவரை 27.5 மில்லியன் மக்கள் பார்த்திருக்கிறார்கள். 161.3 K ரீட்வீட்ஸ், 723.5 k லைக்ஸ், 165 k கமென்ட்ஸ் என நெட்டிசன்கள் ஹாரியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் இளவரசர் ஹாரிபோல கணவர் அமைய வேண்டும், டயானா மட்டும் இப்போது இருந்தால், தன் மகனைப் பற்றி பெருமிதமாக உணர்ந்திருப்பார் என்று ஹாரிக்கு சோஷியல் மீடியாவெங்கும் ஹார்ட்டின் சிம்பல்களும் பூங்கொத்து சிம்பல்களும் குவிந்துகொண்டிருக்கின்றன.

Harry - Megan
Harry - Megan
twitter.com/ddarveyy
Vikatan

நல்ல கணவராக இருப்பதென்பது, மனைவியிடம் அன்பாக இருப்பது மட்டும்தான். இது ஹாரியால் மட்டுமல்ல, எல்லா கணவர்களாலும் முடியும்தானே..!

அடுத்த கட்டுரைக்கு