Published:Updated:

`லைஃப் பார்ட்னர் பிசினஸ் பார்ட்னராகவும் இருந்தால்'-அனுபவம் பகிரும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் ஹேமா ருக்மணி

ஆ.சாந்தி கணேஷ்

`கணவர்கிட்டே இல்லாத திறமை மனைவிகிட்டே இருக்கலாம்; மனைவிகிட்டே இல்லாதது கணவர்கிட்டே இருக்கலாம்'.

Hema Rukmani
Hema Rukmani

பிரபல கார் விற்பனை நிறுவனத்தின் இயக்குநரின் மனைவியும் அந்த நிறுவனத்தின் இணை இயக்குநருமான ரீட்டா லங்கா லிங்கம், நேற்று தற்கொலை செய்துகொண்டது பொதுவெளியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தத் தற்கொலைக்குக் காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதில் வொர்க் பிரஷரும் ஒன்று. கணவனும் மனைவியும் ஒரே நிறுவனத்தை நடத்திவருகிறபட்சத்தில், வொர்க் பிரஷர் பர்சனல் வாழ்க்கையும் பாதிக்கலாம்.

அப்படி பாதிக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்று, தேனாண்டாள் ஃபிலிம்ஸின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஹேமா ருக்மணியிடம் கேட்டோம். இவர் தன் கணவர் முரளியுடன் இணைந்து பிசினஸ் செய்து வருபவர் என்பது குறிப்படத்தக்கது.

Reeta with her husband
Reeta with her husband

``என்னைப் பொறுத்தவரை கணவன் - மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து வேலைபார்க்கிறதுல நிறைய அட்வான்டேஜ் இருக்குதுன்னுதான் சொல்வேன். வேலை முடிய லேட் ஆகுதுன்னா, அதைச் சரியா புரிஞ்சுக்க முடியும். இன்னொருத்தர்கிட்டே வேலைபார்க்கிறதைவிட நம்ம லைஃப் பார்ட்னரோட சேர்த்து வேலைபார்க்கிறப்போ அது இன்னும் ஸ்மூத்தா, அர்ப்பணிப்பு உணர்வோட இருக்கும்.

வேலை விஷயமா வெளியூர் போகவேண்டி வந்தா, ஒருத்தர் இங்கே இருந்து ஆபீஸையும் வீட்டையும் பார்த்துக்கலாம். இன்னொருத்தர் பிசினஸ் டூரை வெற்றிகரமா முடிச்சுட்டு வரலாம். உதாரணத்துக்கு, என் கணவர் இங்கே சென்னையில ஷூட்டிங் வேலைபார்க்கிறப்போ நான் அவுட்டோர் ஷூட்டிங் போயிடுவேன். கணவன் - மனைவி சேர்ந்து பிசினஸ் பண்றப்போ மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம்.

பிரச்னைக்கு நீ தான் காரணம்னு லைஃப் பார்ட்னர் தலைமேலே முள்கிரீடம் வைக்காதீங்க.
ஹேமா ருக்மணி

எல்லார்கிட்டேயும் எல்லா திறமைகளும் இருக்கும்னு சொல்ல முடியாது. கணவர்கிட்டே இல்லாத திறமை மனைவிகிட்டே இருக்கலாம்; மனைவிகிட்டே இல்லாதது கணவர்கிட்டே இருக்கலாம். ஸோ, ரெண்டு திறமைகளும் ஒண்ணு சேரும்போது, அந்த பிசினஸோட சக்ஸஸ் ரேட் இன்னும் அதிகமாகும்.

கணவர்னு இல்ல, அப்பா, அண்ணன்கூட சேர்ந்து பிசினஸ் பண்ணாலும் சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். பிசினஸ் நல்லா போறப்போ ஒருத்தரையொருத்தர் பாராட்டிப்பாங்க. அதே மாதிரி தோத்துப்போறப்போவும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கணும். முக்கியமா 'நான் அப்பவே சொன்னேன். நீ தான் கேக்கலை' என்பது மாதிரி தப்பை நம்ம பார்ட்னர் மேலே போடக்கூடாது.

Hema Rukmani
Hema Rukmani

பிரச்னைக்கு நீ தான் காரணம்னு லைஃப் பார்ட்னர் தலைமேலே முள்கிரீடம் வைக்காதீங்க. ஆபீஸ்ல ஒருத்தரையொருத்தர் விட்டுக்கொடுத்துக்காதீங்க. அதேபோல, பிசினஸ்ல உங்க கணவரோ, மனைவியோ ஒரு சக்ஸஸ் கொடுக்கிறப்போ, அதை வெளிப்படையா பாராட்டவும் மறக்காதீங்க. முக்கியமா மூன்றாவது நபர் உங்க ரெண்டு பேருக்கு நடுவுல பிரச்னை ஏற்படுத்துற மாதிரி ஏதாவது சொன்னா, அதைக் காதுலகூட வாங்கக் கூடாது'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் ஹேமா ருக்மணி.