ஊரடங்கு... கண்காணிக்கும் கணவர்... வருந்தும் வாசகி! #LetsSpeakRelationship

காலம்காலமாக ஆண்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேச இங்கு யாரும் முன்வருவதில்லை.
"இந்த ஊரடங்கு காலகட்டத்தில், பல குடும்பங்களின் தினசரி செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆண்கள் வேலையிழந்து வருமானம் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். சில வீடுகளில் ஆண்கள் தங்களுடைய தொழில்களைச் செய்ய முடியாமல் முடங்கிப்போய் கிடக்கிறார்கள்.

குடும்பத்தைக் காப்பாற்ற பெண்கள் நாங்கள் கடைசி குண்டுமணி தங்கம் வரைக்கும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறோம். இதுவொரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், பல ஆண்கள் அவரவருடைய நெகட்டிவ் இயல்புகளின்படி குடிப்பது, வீட்டில் திருடுவது, குடும்ப வன்முறையில் ஈடுபடுவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தச் செயல்கள் சாதாரண நபர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மாறுபடும். செல்வத்தின் அடிப்படையில் அவர்கள் கையில் எடுக்கும் போதை வஸ்துக்களும் மாறும். இதனால், பெண்கள் நாங்கள் சந்திக்கிற பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?
30 சதவிகித வீடுகளில் மட்டுமே பெண்கள் சமமாக நடத்தப்படுகின்றனர்.உளவியல் ஆலோசகர் சிந்து மேனகா
வீட்டிலேயே இருக்கும் ஆண்களால் நாங்கள் நாள் முழுவதும் கண்காணிக்கப்படுகிறோம். கூடவே வேலையின்மையினால் ஏற்படுகிற மனஅழுத்தம், கோபம், எரிச்சல் எல்லாவற்றையும் ஆண்கள் தங்களுக்கு எளிதான டார்க்கெட்டாக இருக்கிற தங்கள் குடும்பத்துப் பெண்கள் மீது காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் செய்கிற சிறு சிறு தவறுகளையும் பெரிதாக்கி ஏளனப்படுத்துகின்றனர்.
காலங்காலமாக குடும்பத்துக்காக உடல் உழைப்பைக் கொட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்கள், அதற்கான எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காத பெண்கள், இந்த லாக்டெளன் நேரத்தில் பல்வேறு புதிய மன அழுத்தங்களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களைத் தெய்வமாக வணங்குகிற நாட்டில்தான் ஆண்களால் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா?" என வெறுமையும் விரக்தியுமாக வாசகி ஒருவர் தன்னுடைய கருத்துகளை uravugal@vikatan.com-க்கு மெயில் செய்திருந்தார்.

இதுகுறித்து உளவியல் ஆலோசகர் சிந்து மேனகா பேசுகையில், "இங்கே 30 சதவிகித வீடுகளில் மட்டுமே ஆண்கள், பெண்களை சமமாகவோ, அடிமைப்படுத்தாமலோ நடத்துகின்றனர். 70 சதவிகித வீடுகளில், ஆண்கள், சமுதாயத்தின் உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் பெண்ணியம் பேசினாலும் தன் வீட்டுப் பெண்களை தங்களுக்கு வேலை செய்வதற்காகக் கொடுக்கப்பட்டவர்கள் என்றுதான் பார்க்கின்றனர்.
திருமணம் ஆன எல்லா பெண்களுக்குள்ளும் 'நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும்', 'இதற்கு முன் நாம் வாழ்ந்ததைவிட இது சிறப்பான வாழ்க்கையா' என்ற கேள்விகள் எழவே செய்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே காலங்காலமாக ஆண்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேச இங்கு யாரும் முன்வரவில்லை.

தன் உணர்வுகளை நமக்கு மெயில் செய்திருக்கிற இந்தப் பெண் உட்பட எல்லா பெண்களுக்குள்ளுமே, 'குடும்பத்தில் நாம் எப்படிப் பார்க்கப்படுகிறோம்' என்ற கேள்வி இருக்கும். குடும்பத்துக்காகவும் கணவனுக்காகவும் தன்னை எவ்வளவு வருத்திக்கொண்டு உழைத்தாலும் அதற்கான அங்கீகாரமும் அன்பும் கிடைக்கப்பெறாத பட்சத்தில் அது விரக்தியான வார்த்தைகளாக வெளிப்படும்.
உளவியல் ரீதியாகப் பார்த்தால் இவர் பல நாள்கள் தனிமையில் இருந்திருக்கலாம். குழந்தை இல்லாதவராகவோ, குழந்தை இருந்தும் தனிமையைப் போக்கிக்கொள்ள முடியாதவராகவோ இருக்கலாம். அல்லது சூழ்நிலை காரணமாக தன் எண்ணங்களை வெளிக்காட்ட முடியாத நிலையில் தற்போது இவர் இருக்கலாம்.
அதனால், முதல் வேலையாக, தன்னுடைய குழந்தைகள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர் அல்லது நம்பிக்கைக்குரிய நண்பர் என யாராவது ஒருவரிடம் தன்னுடைய மனக்குமுறல்களை இவர் கொட்டித்தீர்க்க வேண்டும்.

அப்படி நம்பிக்கையானவர் எவரும் இல்லாதபட்சத்தில் உளவியல் ஆலோசகரிடம் பேச வேண்டும். இல்லையென்றால் அவரின் கணவர் கூறும் சிறு சிறு குறைகளும் குற்றங்களும் இவரை பெரிதும் பாதிக்கலாம். தற்போது இருக்கும் மனநிலை தொடர்ந்தால் தாம்பத்திய உறவில் விரிசல்களை ஏற்படுத்தி விடலாம். ஆனால், இவ்வளவு வருத்தத்திலும் இப்படியொரு கடிதம் எழுதுகிற அளவுக்கு இவருக்கு மனஉறுதி இருக்கிறது என்பதால், பெண்களை மதிக்காத ஆண்களிடம் இருந்தும் இவரால் மீண்டெழ முடியும்.’’
