`லாக்டௌனால் பிரிந்திருக்கும் இணையுடன் போனில் பேசும்போது...'- தம்பதிகள், காதலர்களுக்கு மனநல ஆலோசனைகள்

பொசசிவ்வாக இருக்கும் சிலர், 'நான் போன் பண்ணப்போ ஏன் எடுக்கல?' என்பதில் தொடங்கி, 'என்னவிட உன் வேலைதான் உனக்கு முக்கியமா?' என்பதுவரை இதைப் பெரிய பிரச்னையாக எடுத்துச்செல்வார்கள்.
'தனிமையிலே இனிமை காண முடியுமா?' 'முடியவே முடியாது' என்று அடித்துச் சொல்கிறார்கள், லாக்டௌனில் பிரிந்திருக்கும் தம்பதியர்களும் காதலர்களும்!

வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு வேலை காரணங்களால் பிரிந்திருக்கும் கணவன் - மனைவிக்கும், கல்லூரி விடுமுறை, வொர்க் ஃபிரம் ஹோம் என்று பிரிந்திருக்கும் காதலர்களுக்கும் லாக்டௌன் காலத்தைக் காதலோடு கடப்பது கொஞ்சம் சிரமம்தான். நேரில் கண்ணோடு கண் பார்த்துப் பேசுகையிலும், சின்னச்சின்ன ஸ்பரிசங்களாலும் உண்டாகும் உணர்வுகள் எதுவும் வீடியோ காலிலும், வாட்ஸ்அப் சாட்டிலும் ஏற்பட வாய்ப்பில்லை.
எப்போது நிலைமை சீராகி தன் இணையை நேரில் சந்திப்போம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், தொடர்ந்துகொண்டே செல்லும் லாக்டௌனால் மனஉளைச்சல் ஏற்படுவது இயல்புதான். இந்தப் பிரிவுத் துயரையும் மீறி, இவர்கள் காதலைப் பரிமாறிக்கொள்வது எப்படி? மனநல ஆலோசகர் வசந்தி பாபுவிடம் பேசினோம்.
"உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணையை எதிர்பார்க்கிறோம். அது நட்பாக, காதலாக, வாழ்க்கைத்துணையாக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக ஒரு துணை அவசியம். கஷ்டம் ஏற்படும்போது அவர்கள் நம் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி இல்லாமல்போகும் பட்சத்தில், நமக்கே தெரியாத ஒரு மனஅழுத்தத்தில் சிக்கித்தவிப்போம்.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் கணவன் அலுவலக வேலையின் காரணமாக வெளியூருக்கு சென்றிருக்கலாம். தற்போது லாக்டௌனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நிறுத்தம் காரணமாக வீட்டுக்குத் திரும்பி வரமுடியாத நிலையில் இருக்கலாம். இதனால் வீட்டில் குழந்தைகளுடன் தனித்திருக்கும் மனைவிக்கு 'அவர் பாதுகாப்பாக இருப்பாரா?', 'அவருக்கு சரியான உணவு கிடைக்குமா?' போன்ற எண்ணங்களால் ஒருவித பயமும், கவலையும் ஏற்படும்.

இன்னொரு பக்கம் கணவருக்கும் 'அவளும், குழந்தையும் எப்படி இந்தச் சூழலைத் தனியாகச் சமாளிக்கப்போகிறார்களோ...' என்ற பரிதவிப்பு ஏற்பட்டும். இதனால் அந்தத் தம்பதிக்கு இடையில் ஒருவித இறுக்கமான மனநிலையும், மனஉளைச்சலும் ஏற்படலாம்.
லாக்டௌனில், இப்படித் துணையைப் பிரிந்திருப்பதால் ஏற்படும் மனஉளைச்சலில் சிக்கித்தவிப்பவர்கள், தனிமையை அதிகமாக உணரும் நேரங்களில், தங்கள் துணையுடன் வாய்ஸ் அல்லது வீடியோ காலில் பேசலாம்.

அப்படிப் பேசும்போது, உங்கள் துணைவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப பேசவேண்டும். எப்போதும் உங்களுக்குள் உள்ள பிரச்னைகளைப் பற்றியே புலம்பக்கூடாது. இந்த நேரத்தில் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவையும், இந்த நிலை சீராகும் என்ற நம்பிக்கையையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளலாம்.
நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உங்கள் கணவன்/மனைவியிடம் உறுதிசெய்து, அவர்களுக்கு நிம்மதியான மனநிலையை ஏற்படுத்த வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் செய்யும் வேடிக்கையான செயல்களை வீடியோ அல்லது புகைப்படங்களாக எடுத்து, தொலைவில் இருக்கும் உங்கள் இணைக்கு அனுப்பலாம். இதனால் அவருக்கும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும் தனிமையிலிருந்து ஆசுவாசம் கிடைக்கும்.

இதுபோல, லாக்டௌன் காலத்தில் பிரிந்திருக்கும் காதலர்களும் தங்களது இன்ப, துன்பங்களை நேரில் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிப்பார்கள். காதலர்கள் இருவரும் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்கள் என்றால், பணிச்சுமை, அலுவல் ரீதியான கால்கள், வீடியோ மீட்டிங்குகள் காரணமாக ஒருவர் மற்றொருவருக்கு நேரம் ஒதுக்கிப் பேசுவதில் சிக்கல் ஏற்படும். ஒருவர் போன் செய்யும்போது மற்றொருவர் எடுத்துப் பேச முடியாத சூழல் ஏற்படலாம்.
பொசசிவ்வாக இருக்கும் சிலர், 'நான் போன் பண்ணப்போ ஏன் எடுக்கல?' என்பதில் தொடங்கி, 'என்னவிட உன் வேலைதான் உனக்கு முக்கியமா?' என்பதுவரை இதைப் பெரிய பிரச்னையாக எடுத்துச் செல்வார்கள். இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் காதலர்கள் அருகில் இருக்கும்போதும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். ஆனால் அப்போது, அவர்கள் நேரில் சந்திக்கும் தருணத்தில் ஒருவரை மற்றொருவர் சமாதானம் செய்யும்போது அவர்களுக்கிடையேயான ஊடல்கள் ஒரு சுமுக முடிவுக்கு வந்துவிடும்.

ஆனால் லாக்டௌனில், மொபைலிலேயே சண்டை போட்டு, ஏற்படும் பிரச்னைகளுக்கும் மொபைலிலேயே விளக்கம் கொடுக்கும்போது, அது பிரச்னையை அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது. வீடியோ காலிலும், வாட்ஸ்அப் சாட்டிலும் உரையாடுவதென்பது நேரில் பார்த்துப் பேசுவதைப்போல அவ்வளவு உணர்வுமிக்கதாக இருக்காது என்பதே இதற்கான காரணம். செல்போன் சண்டைகளினாலேயே சில காதல்கள் முடிவுக்குவந்த கதையும் உண்டு.
இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் ஏற்படாமல் இருக்க, காதலர்கள் ஒருவர் மற்றொருவரைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் இப்போது, குடும்பத்தில் எல்லாரும் வீட்டிலேயே இருப்பதால் உங்கள் காதலருக்குத் தனிமை கிடைக்காமல்போகலாம். வொர்க் ஃப்ரம் ஹோம் அதிக அழுத்தத்தைத் தந்துகொண்டிருக்கலாம். எனவே, தொடர்புகொள்ள முடியாமல்போவதை எல்லாம் புகார் ஆக்காதீர்கள். பிரிவிலும் வளரும் அன்பே வலிமையானதாக இருக்கும்.
கணவன்-மனைவியோ, காதலன்-காதலியோ... இக்கட்டான இந்தப் பிரிவு நாள்களில் நீங்கள் உங்கள் துணையிடம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மற்ற வேலைகளால் ஏற்பட்ட டென்ஷனை வார்த்தைகள் மூலம் உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவதைத் தவிருங்கள். அது, இந்தத் தனிமையில் அவரை இன்னும் பாதிக்கலாம். துணை சோர்வாக உணரும் வேளைகளில் உங்கள் வார்த்தைகள் மூலம் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதே இப்போது நீங்கள் செய்ய வேண்டியது. இவற்றை மீறி ஏற்படும் சிறுசிறு சண்டைகளையும் சீக்கிரம் சமாதானத்துக்குக் கொண்டுவந்துவிடுங்கள்.
லாக்டௌனுக்குப் பிறகு, 'ஊர் வந்து சேர பேருந்து/ரயில்/விமானப் போக்குவரத்து எப்போது இயக்கப்படும்?', 'வேலை நிலைக்குமா?', 'உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கும் இவ்வேளையில் நம் வீட்டுப் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லும்?' என்றெல்லாம் நீங்களும் உங்கள் இணையும் சேர்ந்து சந்திக்க வேண்டிய பிரச்னைகள் பல இருக்கலாம். அப்போது, உங்களுக்கு இடையில் இன்னும் அதிக புரிந்துணர்வும், 'என்ன வந்தாலும் பாத்துக்கலாம்' என்ற இல்லற நம்பிக்கையும் அவசியம். அதை இப்போதிருந்தே பலப்படுத்துங்கள்" என்றார் வசந்தி பாபு.

எப்போதுமே ஒரு சிறு பிரிவுக்குப் பிறகான சந்திப்பு மிகவும் அழகான ஒன்று. அது தரும் உணர்வுகளுக்கு ஈடே இல்லை. லாக்டௌனில் பிரிந்திருக்கும் தம்பதிகளும், காதலர்களும் இதை மனதில் கொண்டு, நீங்கள் மீண்டும் சந்திக்கப்போகும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருங்கள். காதல் கொரோனாவையும் வெல்லும்!